கடக லக்னத்துக்கு சந்திரன் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் 33
ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குபவரே சந்திரன்தான். சந்திரனை ‘சர்வகலாபிதம்’ என்பார்கள். எங்கெல்லாம் மங்களகரமான விஷயங்கள் நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம் சந்திரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை. அப்படிப்பட்ட மனதை ஆளும் கிரகமும் சந்திரனே.
எனவே, ஜோதிடத்தில் சந்திரனை ‘மனோகாரகன்’ என்று அழைக்கின்றனர். பணத்தால் செல்வந்தனாக இருந்தாலும் மனதால் ஏழையாக இருப்பவர்கள் பலர். அவர்களுக்கெல்லாம் சந்திரன் பலவீனமாக இருப்பார். இப்படிப்பட்ட சந்திரனே கடக ராசிக்கு அதிபதியும் ஆளுபவரும் ஆவார். பெரும்பாலான ஆட்சியாளர்கள், ஆளுமைமிக்க பதவியில் இருப்பவர்கள் என எல்லோரும் கடக லக்னக்காரர்களே!
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், திறமைகளை வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாது பல்வேறு வேலைகளுக்கு தாவிக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களை எப்போதும் கவனித்து அந்த இடத்திற்கு நகரத் துடிப்பார்கள். கடக லக்னத்தைப் பொறுத்தவரை மூன்று கிரகங்கள் முக்கியமானவை. முதலாவதாக, சந்திரன். இரண்டாவதாக, செவ்வாய். மூன்றாவதாக, குரு.
இதில் சந்திரன் ஏற்கனவே இந்த லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். சூரியன், சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ராசி மண்டலத்தில் ஒரே வீடு மட்டும் சொந்தமாகும். அதுபோல சந்திரன் கடகத்திற்கு மட்டுமே அதிபதியாக வருகிறார். மனோகாரகனாக மட்டுமல்லாமல், தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் சந்திரன் வருகிறார். எனவே இவர்களுக்கு தாயின் ஆசியும், அரவணைப்பும் எப்போதும் உண்டு. தாய்வழிச் சொத்துக்கள் வந்தபடி இருக்கும். இவர்களுக்கு ஏதேனும் ஒரு கலையில் திறமை கைகூடும்.
இனி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த இடத்தில் சந்திரன் தனித்து இருந்தால் என்ன யோகங்களைத் தருவார் என்று பார்க்கலாம்... கடக லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்திலேயே சந்திரன் தனியாக நின்று கொண்டிருந்தால், வசீகரத்தோடும், ஈர்ப்பு சக்தியோடும் இருப்பார்கள். நான்கே நிமிடத்தில் பேசுபவரின் மனதை அறிந்து கொள்வார்கள்.
எதிரியின் எதிரியை நண்பர்களாக மாற்றிக் கொள்வார்கள். அன்பான செய்கைகளாலும், அனுசரணையான பேச்சாலும் எல்லோரையும் கவர்ந்து விடுவார்கள். எதில் நுழைந்தாலும் அதில் தன்னையொரு முக்கிய அதிகாரமாக நிலைநிறுத்த முயற்சிப்பார்கள். இவர்களின் மனம் சரியில்லையெனில் உடம்பும் சரியில்லாமல் போகும். பௌர்ணமி சந்திரனைப் போல் பல விஷயங்களை முன்னின்று நடத்தி முடிப்பார்கள்; சமயங்களில் அமாவாசையைப் போல் வேறு சிலரை ஏவியும் முடிப்பார்கள்.
கடக ராசிக்கு இரண்டாம் இடமான சிம்மத்தில் வாக்கு ஸ்தானத்திற்கு உரியவராக சூரியன் வருகிறார். அதில் சந்திரன் தனித்து அமர்ந்தால், சூடாகவும் சுவையாகவும் பேசுபவர்களாக இருப்பார்கள். சட்டென்று கோபம் தலை தூக்கும்; ஆனால் தண்ணீர் தெளித்த பால் போல அடங்கி, அடுத்த கணமே சாந்தமாக மாறுவார்கள். யாரையாவது பிடித்துவிட்டால் தலைமேல் தூக்கிக் கொண்டாடுவார்கள். வெறுப்பு ஏற்பட்டால், நாசூக்காக நகர்த்தவும் தயங்க மாட்டார்கள். விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். யார் எந்த உதவிகள் கேட்டாலும் சட்டென்று செய்வார்கள்.
கன்னி ராசியான மூன்றாமிடம் முயற்சி ஸ்தானத்திற்கு உரியது. சந்திரன் இங்கு அமர்ந்தால் கஜினி முகமது போல தொடர் படையெடுப்பு நடத்தி வெற்றி பெறுவார்கள். அபாரமான தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள். எடுத்த விஷயத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்கள். பேச்சில் இலக்கிய ரசம் சொட்டும். முக்கியமாக தாய்மொழி மீதும், தமிழ் மீதும் தீராக் காதல் கொண்டிருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகள் மீது பெரும் பாசம் வைத்திருப்பார்கள். சங்கத் தமிழை ஆராய்ந்து பல கட்டுரைகளை எழுதி வெளியிடுவார்கள்.
துலாமாகிய தாய் ஸ்தானத்திற்குரிய நான்காம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்களுக்கு பாதகாதிபதியே சுக்கிரன்தான். அங்கு சந்திரன் சென்று அமரும்போது தாயாருக்கும் இவர்களுக்கும் சிறுசிறு பிரச்னைகள் உருவாகும். புரிந்துணர்வே குறைவாக இருக்கும். அதேபோல தாயாருக்கு அவ்வப்போது ஏதேனும் மனரீதியான சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கும். பல கட்டிடங்களைக் கட்டி ரியல் எஸ்டேட் துறையில் சாதிப்பார்கள். தங்களுக்கென்று கனவு இல்லம் ஒன்றையும் கட்டிக் கொள்வார்கள்.
தற்போதைய வியாபாரச் சந்தையில் எந்த வாகனம் புதிதாக வருகிறதோ, அதையே வாங்கிப் போடுவார்கள். வீட்டை அழகாகக் கட்டினாலும், கூட தோட்டம் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ஆணாக இருந்தால் பெண் சிநேகிதிகள் நிறைய பேர் இருப்பார்கள். ஏதேனும் ஒரு கலையை - முக்கியமாக சங்கீதத்தில் பாட்டோ அல்லது வாத்தியங்களை வாசிக்கவோ கற்று வைத்திருப்பார்கள். இவர்களிடம் அவ்வப்போது தலைகாட்டும் சோம்பலைத் தவிர்த்து விடுதல் நல்லது.
பூர்வ புண்ய ஸ்தானமான ஐந்தாம் இடம் விருச்சிகம். இங்கு சந்திரன் அமர்ந்தால் குழந்தை பிறந்தவுடனேயே வாழ்க்கைத் தரம் மேம்படும். உள்ளுணர்வு பிரமிக்கத்தக்க அளவுக்கு இருக்கும். படித்துப் பெரியாளாக வந்தாலும் சரிதான், ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியரை மறக்க மாட்டார்கள். குழந்தைகளின் மீது வெளியே பாசத்தைக் காட்டினாலும் உள்பாசம் அதிகமாகவே இருக்கும். அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிடக் கூடாது என்று நினைப்பார்கள். குழந்தைகள் எதுவும் கேட்பதற்கு முன்பே எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார்கள்.
ஆறாம் இடம் தனுசு. நோய், கடன், சத்ரு ஸ்தானமான இங்கு சந்திரன் அமர்ந்தால் அழகு, ஆடை, அலங்காரப் பொருட்களுக்காக கடன் வாங்கியாவது செலவு செய்வார்கள். ஆனாலும், கடன் என்றால் பயப்படுவார்கள். சிறியதாக ஏதேனும் உடம்பு என்றாலும் பெரியளவில் பயப்படுவார்கள். இவர்களின் சொல்லுக்கும் பேச்சுக்கும் எழுத்துக்கும் எப்போதும் ஏதேனும் எதிர்ப்பு இருந்து கொண்டேயிருக்கும்.
உடல்ரீதியாக ஒவ்வாமையாலும், வீசிங், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலும் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். இவர்களின் கொள்கைகளை எவர் ஆதரிக்கிறாரோ, அவரே எதிர்க்கவும் செய்வார். பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியோருக்கும் இவர்களின் பணம் சென்றால் மிகவும் நல்லது. அதேபோல யாரேனும் அதிகமாகப் புகழ்ந்தால் கொஞ்சம் யோசித்துவிட்டு ஒதுங்கி விடுவது நல்லது. எதிரி இருந்தால்தான் உங்களுக்கும் சுவாரசியமாக இருக்கும். சிறிய கடன்கள் இருந்தாலும் இவர்கள் கவலைப்பட வேண்டாம்.
ஏழாம் இடமான மகரத்தில் சந்திரன் நின்றால் திருமண வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் இவர்களின் புத்தி வேகத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்படுவார். திருமண வாழ்வில் கொஞ்சம் தடுமாற்றங்கள் வந்துபோகும். ஆனால், சந்திரன் தனித்திருப்பதால் வாழ்க்கைத் துணைவர் கலாரசனை மிகுந்தவராக இருப்பார்.
போகப் போக ‘எப்படிச் சொன்னால் இவர் புரிந்து கொள்வார்’ என உணர்ந்து விவேகத்தோடு செயல்படுவார். இந்த அமைப்பு பெற்றவர்கள், மிகச் சிறந்த தூதுவராக செயல்படுவார்கள். எப்போதுமே பெண்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே செயல்பட வேண்டும். திருமணம் செய்யும்போது வருங்கால தசாபுக்திகளை சரிபார்த்து கணக்கிட்டு மணம் முடிப்பது நல்லது.
இவர்களின் எட்டாம் இடமான கும்பம், ஆயுள் ஸ்தானமாக வருகிறது. ஆயுள்காரகனான சனியே இதற்கு அதிபதியாக வருகிறார். அதனால், தீர்க்காயுள் உண்டு. திடீர் பயணங்கள் வந்து அதன் மூலம் எப்போதும் லாபமும் வரும். மனைவி வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். வெகு தூரத்திலிருந்து அலுவலகம் வந்து போவார்கள். ஏனெனில், நகரத்தின் நெரிசல் இவர்களை எரிச்சலாக்கும். நெடுந்தூரப் பயணங்கள் என்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். எப்போதும் வீட்டில் பிரயாணத்திற்கு தயாராக ஒரு பெட்டி இருக்கும்.
மீன ராசியான பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் இருந்தால், இவர்கள் பிறந்ததிலிருந்து தந்தையின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் சொந்த உழைப்பில் முன்னேறுவார்கள். தந்தையையும் விஞ்சி சாதிப்பார்கள். ஆனாலும், சுமுகமான உறவுகள் சில சமயம் பாதிக்கவும் செய்யும். பொதுவாகப் பார்த்தால் நற்பலன்களே கிடைக்கும். குருவின் ராசியில் சந்திரன் அமர்வதால் எங்கேனும் வெளிநாடுகளுக்கு பறந்தபடி இருப்பார்கள்.
பத்தாம் இடத்திற்குரிய ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. அங்கு சந்திரன் அமர்கிறார். கடக லக்னத்திற்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. எல்லாமே பெரியளவில்தான் ஆசைப்படுவார்கள்.
வேலைக்குச் செல்வதைக் காட்டிலும் சொந்தமாக தொழில் தொடங்கவே விரும்புவார்கள். மெரைன் எஞ்சினியரிங், போர்டிங் லாட்ஜிங், புதிய நகர்கள் உருவாக்குதல் என்றெல்லாம் ஈடுபடுவார்கள்.
பதினோராம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் ரிஷபச் சுக்கிரன் வருகிறார். அங்கு சென்று சந்திரன் அமர்ந்தால், இரு வராலும் நன்மையே கிடைக்கும்.
மதியூகமும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக இவர்கள் இருப்பார்கள். சகோதரர்களோ சகோதரிகளோ பிரச்னைகள் இல்லாமல் புரிந்துணர்வோடு ஒற்றுமையாக இருப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான சயனஸ்தானத்திற்கும், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் வருகிறார். இந்த அமைப்பு பெற்றவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் இருக்காது.
ஏதேனும் யோசித்தபடி இருப்பார்கள். பழைய ஆன்மிக நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவார்கள். மறைந்துபோன செறிவான விஷயங்களைப் பற்றி எழுதிக் குவிப்பார்கள். எதையுமே ஆதாரத்தோடு சொன்னால்தான் ஒப்புக் கொள்வார்கள். அன்னதானம், கோயில் கும்பாபிஷேகம் என்றெல்லாமும் ஈடுபடுவார்கள்.
சந்திரனின் முழு ஆதிக்கத்தில் கடக லக்னம் வருவதால் குங்குமம் மணக்கும் அம்மன் கோயில்கள் எல்லாமே சிறப்பான வாழ்வைத் தரும். அதுவும் பெரும் ஞானியரால் வணங்கப்பட்டு, அவர்களால் பிரதிஷ்டை செய்த சிலைகள் எனில் சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட ஒரு கோயிலே கொல்லூர் மூகாம்பிகை ஆகும்.
கோல மகரிஷி வழிபட்டதால் கொல்லூர் என்றானது. ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சிறப்பையும் இத்தலம் பெற்றுள்ளது. சிவசக்தி ஐக்கிய சொரூபத்தை உணர்த்தும் அம்ச உருவை அவர் பிரதிஷ்டை செய்தார். மூன்று தேவியர் வடிவிலும் இவள் இங்கு அருள்பாலிக்கிறாள். கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழக முக்கிய ஊர்களிலிருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|