வந்தாச்சு ரெடிமேட் பிரசார மேடை!



தேர்தல் நெருங்குகிறது... பிரசாரங்கள் தூள் பறக்கும். ஒவ்வொரு கட்சியும் சாலை சந்திப்புகளில் சினிமா செட்டிங் போல பெரும் பொருட்செலவில் மேடை அமைப்பார்கள். அடுத்த நாளே அது கழற்றி எடுக்கப்படும்.

மறுநாள் இன்னொரு கட்சி வந்து இன்னொரு மேடை போடும். இதற்காக அடிக்கடி குழி தோண்டி, கொம்பு நட்டு சாலைகள் வீணானதுதான் மிச்சம். ஆனால் கேரளாவில் இந்தக் கதையே இல்லை. அங்கே இப்போதெல்லாம் பெரும்பாலும் ரெடிமேட் மேடைகள்தான். கனரக வாகனங்களே மேடைகளாகி கலக்கியெடுக்கின்றன கேரள மண்ணை!

இந்த ரெடிமேட் மேடைகளைத் தயாரித்து வாடகைக்கு விட்டு பரபரப்பாகியிருப்பது கொச்சியைச் சேர்ந்த ‘சிம்பனி நிறுவனம்’தான். இதன் நிர்வாகி பிரவீன் அமைதியாகப் பேசுகிறார். ‘‘எங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை சார். சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்குற ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்தான் எங்களோடது. 15 வருஷமா அந்த ஃபீல்டுதான். கடந்த 2012ம் வருஷம்தான் இப்படியொரு ஐடியா வந்தது. அப்போ பிரவம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல்ல முதன்முதலா ‘ரெடிமேட்  மேடை’யை அறிமுகப்படுத்தினோம்.

பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தல்... இந்த சட்டமன்றத் தேர்தல்ல இந்த மேடைக்கு ஆதரவும் வரவேற்பும் அதிகமாகியிருக்கு. தேர்தல் செலவுகளை கறாரா கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்தான் இதுக்குக் காரணம். இந்த ரெடிமேட் மேடைகள் கட்சிகளோட செலவைக் குறைக்குது. எங்களுக்கும் வருமானம் தருது!’’ என்கிறார் பிரவீன்.

கனரக வாகனங்களையே கலக்கல் மேடைகளாக மாற்றியிருப்பதுதான் இவர்களின் ப்ளஸ். இதை எங்கு வேண்டுமானாலும் நிமிடங்களில் நகர்த்திச்செல்லலாம். ஒரே நாளில் பத்து இடங்களில் மீட்டிங் என்றாலும் இந்த ஒரே மேடை போதும். காலி இடம் பார்த்து வண்டியை நிறுத்தி, ரெடிமேட் படிக்கட்டுகளை பக்கவாட்டில் பொருத்திவிட்டால் போதும்... ஸ்பீக்கர், மைக், கம்போடியத்துடன் கூடிய மேடை ரெடி!

‘‘இது ஒரு வாகனம்னு கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு எல்லா பக்கமும் வேட்பாளரின் படம், கட்சி யின் சின்னம், தேர்தல் வாக்குறுதி கள்னு ஃப்ளக்ஸ்களை அமைச்சிருக்கோம். எந்தக் கட்சி, எந்த வேட்பாளர்னு சொல்லிட்டா இந்த ஃப்ளெக்ஸ்களை நிமிடங்களில் மாற்றி அப்டேட் பண்ணிக்க முடியும். இப்படி ஒரு மேடையை பாரம்பரிய முறைப்படி சவுக்குக் கட்டை, பலகை வச்சுக் கட்டற நேரத்தையும் செலவையும் இந்த மேடை மிச்சப்படுத்துது. வேட்பாளர்கள் தவிர சுமார் பத்து பேருக்கும் மேல இதில் சேர் போட்டு உட்கார இடமிருக்கு. எத்தனை பேர் வேணும்னாலும் ஏறி இறங்கலாம்.

போதுமான லைட்டிங்கும் இருக்கு. தனியா எதையும் தேட வேண்டியதில்லை. மீட்டிங் எங்கேனு போன்ல சொல்லிட்டா அந்த இடத்தில் டாண்னு மேடை ரெடியா நிக்கும். யாருக்கும் எந்த வேலையும் இல்லை. சுற்றுச்சூழலுக்கும் இந்த கான்செப்ட் நன்மை செய்யுது. காரணம், கட்டைகளாலும் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸாலும் செய்யப்பட்ட மேடைகளைப் பிரிக்கும்போது சில பொருட்களை வேண்டாதவைனு கழிச்சு அந்த இடத்திலேயே போட்டுட்டுப் போயிடுவாங்க. இது அங்கேயே ரொம்ப நாள் கிடக்கும்.

தோண்டிய  குழிகள்  மூடாமல் கிடக்கும். கொசுக்கள் பெருகவும் குப்பைகள் தேங்கவும் இது காரணமாகிடும். ரெடிமேட் மேடை விஷயத்தில் அப்படி ஒரு பிரச்னையே இல்லை. நாங்க அந்த இடத்திலிருந்து எதையும் எடுத்தும் பயன்படுத்துறதில்லை... வேண்டாம்னு அங்கே ஒரு துளி குப்பையைக் கூட போட்டுட்டு வர்றதில்லை!’’ என்கிற பிரவீன், ‘‘இந்த ரெடிமேட் மேடைகள் மேடையாக மட்டுமில்லாமல் ஒரு தியேட்டராகவும் செயல்படும்’’ என்கிறார்.

‘‘கட்சிகள் தங்கள் சாதனைகளை வீடியோ காட்சியாவும் இதில் காட்டலாம். அதுக்கான மல்டிமீடியா வசதிகள் இதிலேயே இருக்கு. மேடை தேவைப்படாத தினங்கள்ல இதில் வேட்பாளர் பேச்சை ஒலிக்க விட்டு தொகுதியைச் சுத்தி ஓட விட்டு ஒரு விளம்பர  ஊர்தியாவும் பயன்படுத்தலாம்!’’ என்கிறார் பிரவீன்.

இந்த ரெடிமேட் மேடைக்கு ஒரு நாள் வாடகை 18 ஆயிரம் ரூபாயாம். ஆனால், நாள் முழுக்க எத்தனை இடத்தில் மீட்டிங் நடத்தினாலும் எப்படியெல்லாம் பயன்படுத்தினாலும் இதே கட்டணம்தான். தொழிலாளர் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகிற கேரளாவில் இந்தச் சிக்கன மேடைக்கு செம கிராக்கி.

‘‘இருக்கிற மேடைகள் எல்லாம் 10 நாள் 15 நாள் புக்கிங்ல போயிட்டிருக்கு. அதனால கூடுதலா நிறைய மேடைகளை உருவாக்கும் முயற்சியில இப்போ இறங்கியிருக்கோம். இந்தத் தேர்தல்ல முடிஞ்ச வரை மேடை கட்டுகிற வேலையே இல்லாத அளவுக்கு ரெடிமேட் மேடைகளை இறக்கிடணும்னு நினைச்சிருக்கோம்...

பார்க்கலாம்!’’ என்கிறார் பிரவீன் நம்பிக்கையாக!காலி இடம் பார்த்து வண்டியை நிறுத்தி,  ரெடிமேட் படிக்கட்டுகளை பக்கவாட்டில் பொருத்திவிட்டால் போதும்...  ஸ்பீக்கர், மைக், கம்போடியத்துடன் கூடிய மேடை ரெடி!

- பிஸ்மி பரிணாமன்