நியூஸ் வே



உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம், மத்தியப் பிரதேச மாநிலம் முகுந்த்பூரில் துவக்கப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் செலவில் 25 ஹெக்டேர் பரப்பில் இது அமைந்துள்ளது. இது அமைந்திருக்கும் விந்திய மலைப் பகுதியில்தான் உலகின் முதல் வெள்ளைப்புலி கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 76ம் ஆண்டுக்குள் இங்கு எல்லா வெள்ளைப்புலிகளும் வேட்டையாடப்பட்டன. இப்போது இங்கு 3 வெள்ளைப்புலிகள் புதிதாகக் கொண்டுவந்து விடப்பட்டுள்ளன. மேலும் 9 புலிகள் வரப் போகின்றன.

பிரதமர் மோடியின் சவூதி அரேபியா பயணத்தின் ஹைலைட், அங்கிருக்கும் இந்தியத் தொழிலாளர்களுடன் உரையாடிய நிகழ்ச்சி. அவர்களை சந்திக்கச் சென்ற மோடி, பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் நெருங்கி அமர்ந்து சமோசா, பப்ஸ், ஜூஸ் சாப்பிட்டார். ‘‘உங்கள் வியர்வையின் வாசம்தான் என்னை இங்கே அழைத்து வந்தது’’ என உருகிய மோடி, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஹெல்ப்லைன் பற்றிக் குறிப்பிட்டார்.

‘‘போனில் மோடி ஆப் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். அது, பிரதமரே உங்கள் பாக்கெட்டில் இருப்பதற்கு சமம். 24 மணி நேரமும் உங்கள் குறைகளைப் பார்த்து தீர்த்து வைப்பதற்காகவே இருக்கிறேன்’’ என நெகிழ்ந்தார்.

‘தோழா’ முடித்துவிட்டு ரிலாக்ஸாக குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்று வந்திருக்கிறார் நாகார்ஜுனா. மனைவி அமலா, மகன்கள் நாகசைதன்யா, அகில் என அனைவருமே ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் விளையாடி மகிழ்ந்து திரும்பியிருக்கிறார்கள்.

மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் ஏழு ஐ.பி.எல் போட்டிகளுக்காக மைதானத்தைப் பராமரிக்க 40 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும். மும்பை, புனே, நாக்பூர் என மூன்று நகரங்களில் 19 போட்டிகள் நடக்கின்றன. ‘மாநிலமே தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் தேவையா?’ என லோக் சத்தா அமைப்பு வழக்கு போட, ‘தண்ணீர்ப் பிரச்னை இல்லாத வேறு மாநிலங்களுக்கு போட்டியை மாற்றலாமே’ என கோர்ட் கேட்டிருக்கிறது.

ஹாரருக்கும் நயன்தாராவுக்கும் ரொம்பவே ராசியாகிவிட்டது போல. மோகன் ராஜா இயக்கும் படம் உள்பட இப்போது 3 திகில் படங்களில் நடித்து வருகிறார் நயன். இதனிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் ‘கத்தி’ ரீமேக்கிலும் கலக்குகிறார்.

மும்பையை ரவுண்ட் அடிப்பது அக்‌ஷய் குமாருக்கு பிடித்த ஹாபி. ஷூட்டிங் இல்லையென்றால் தன் மனைவி ட்விங்கிள் கன்னாவின் ஷூட்டிங்கிலும் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பார். சமீபத்தில் அப்படி மனைவியின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அக்‌ஷய் வர, ஜான் ஆப்ரஹாமும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள... களைகட்டியது அந்த மதிய வேளை!

பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. முதல் தயாரிப்பு, ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம்தான். ‘அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்’ என சிவகார்த்திகேயன் வாழ்த்தி ட்வீட்டியிருக்கிறார்.

‘ரெமோ’வை ஜூனில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு அனிருத் இசை.  சிவகார்த்திகேயனை ஒரு பாடல் பாட வைக்கும் ஐடியாவில் இருக்கிறார் அனிருத்!

மீண்டும் நான்கு படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி விட்டார் வடிவேலு. அவருக்கு தொடக்க எனர்ஜி கொடுத்திருப்பவர் விஷால்.

ஜெயம் ரவி - ஹன்சிகா என ‘ரோமியோ ஜூலியட்’ கூட்டணியின் ‘போகன்’ படப்பிடிப்பு சென்னையில் பரபரக்கிறது.  சண்டைக் காட்சியின்போது ரவியின் கன்னத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட, ‘சினிமா அவ்ளோ ஈஸி இல்ல... கன்னத்தில் இருக்கறது மேக்கப்பும் இல்ல’ என ஃபீலிங் போட்டோ போஸ்ட் பண்ணியிருக்கிறார் ரவி.

சோனம் கபூரை வாய் ஓயாமல் புகழ்கிறார் இலியானா. ‘‘லேட்டஸ்ட் ஃபேஷனில் கலக்குகிறார் சோனம். அவர் செய்வதில் பாதி விஷயங்களைக்கூட என்னால் செய்ய முடியவில்லை’’ என ஏக்கத்தோடு சொல்கிறார்.

கமலின் உதவியாளரும் ‘தூங்காவனம்’ பட இயக்குநருமான ராஜேஷ் எம்.செல்வா அப்பாவாகிவிட்டார். அவரின் பெண் குழந்தைக்கு ஹோஷிகா மிருணாளினி என கமலே பெயர் சூட்டியிருக்கிறார்.

ராதிகா ஆப்தேவின் ஃபேவரிட் பர்ஃப்யூம், Ralph Lauren Romance. ராதிகாவின் ஃபேவரிட் கலர், கறுப்பு. ‘கபாலி’ ரிலீஸுக்காக பொண்ணு இப்போ வெயிட்டிங்!

டேனியல் பாலாஜியை விஜய்யே போன் போட்டு அழைத்திருக்கிறார். ‘‘நீங்க பிரமாதமான நடிகர். என்னுடைய அடுத்த படத்தில் நடிங்க’’ என்றாராம். உருகிவிட்டார் டேனியல்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளால்  மறக்க முடியாத ஆண்டாகிவிட்டது 2016. அண்டர் 19 உலகக் கோப்பை, மகளிர் டி20  உலகக் கோப்பை, வேர்ல்டு டி20 கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம். ஆண்கள் அணியினருக்கு அணிந்து விளையாட டி-ஷர்ட் கூட வெஸ்ட்  இண்டீஸ் கிரிக்கெட் போர்டால் ஸ்பான்ஸர் செய்யப்படவில்லை.

ஆனால், அவர்கள் கொல்கத்தாவிலுள்ள அன்னை தெரசா  அறக்கட்டளைக்கு சத்தமில்லாமல் நன்கொடை வழங்கிவிட்டுச்  சென்றிருக்கிறார்கள். இதற்கிடையே, கேப்டன் டேரன் சமியின் பெயரை தங்கள் நாட்டு ஸ்டேடியத்துக்கு வைப்பதாக அறிவித்திருக்கிறார், வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான செயின் லூசியா நாட்டு பிரதமர் கென்னி ஆண்டனி. தாய்நாட்டின் பாசத்தில் நெகிழ்ந்துவிட்டார் சமி.