அப்பா... மகனே... சிவாஜி சென்டிமென்ட்!



நான் உங்கள் ரசிகன் 29

நான் இயக்குற படங்கள்னு இல்ல... வேற ஒரு படத்தோட ஷூட்டிங்ல விஜயகாந்த் இருந்தா கூட தைரியமா போய் அவரை சந்திக்க முடியும். மதிப்பும் மரியாதையுமா வரவேற்பார். அவரோட உதவியாளர்களிடம் தன்னோட கண் அசைவினாலேயே நமக்கு ஒரு சேர் எடுத்துப் போட வச்சிடுவார். ‘டீ கொண்டு வாங்க’னு சொல்லிடுவார்.

நாம சொல்ல வந்த விஷயத்தை பொறுமையா காது கொடுத்துக் கேட்பார். இன்னிக்கு அரசியல் ரீதியா அவர் தனிக்கட்சியாவும், நான் வேறொரு கட்சியிலும் இருந்தாலும் எங்க ரெண்டு பேரோட நட்பு இன்னிக்கும் அப்படியே தொடருது. அவர் மகன் ஹீரோவா நடிச்ச ‘சகாப்தம்’ல என்னையும் நடிக்க கேட்டிருந்தாங்க. ‘‘அந்தக் கேரக்டருக்கு மனோபாலா சாரைக் கூப்பிட்டுக்குங்க!’’னு விஜயகாந்தும் சொல்லிட்டார். தேதிகள் இல்லாததால என்னால அதில் நடிக்க முடியாமப் போச்சு. விஜயகாந்த் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ மட்டுமல்ல... நல்ல ஒரு மனிதர்!

சத்யராஜின் ‘நூறாவது நாள்’ தெறி ஹிட் அடிச்சு ஓடிக்கிட்டிருந்த டைம்... நான் டைரக்ட் பண்ற ‘பிள்ளை நிலா’வில ஒரு சின்ன சீன் இருந்தது. சத்யராஜ்கிட்ட நடிக்கக் கேட்டேன். ‘‘தேதி இல்லையே தலைவரே... ஆனா, நைட் பன்னிரண்டு மணிக்கு வர்றேன். உங்களுக்கு ஓகேவா?’’னு கேட்டார்.

ஜெய்சங்கரும் இதுக்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ராத்திரி 12 மணியில இருந்து 3 மணி வரை அவரோட சீனை முடிச்சுக் குடுத்துட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு அடுத்து நடிக்கும் படத்தோட ஷூட்டிங்குக்கு சரியான நேரத்துல போய் நின்னார் சத்யராஜ். முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவங்க எவ்வளவு தூரம் உழைக்கணும்னு எல்லாரும் தெரிஞ்சுக்கறதுக்காக இதைச் சொல்றேன்.

சத்யராஜ்  டைரக்டர் மணிவண்ணனோட ஆளுனு சொல்லிட்டிருந்த காலகட்டத்துல, நானும் கலைமணியும் சத்யராஜை வச்சு படம் பண்ண விரும்பினோம். எங்களைப் பார்த்ததும், ‘‘என்ன தலைவரே! இந்த காம்பவுண்ட் பக்கம் வந்திருக்கீங்க?’’னு கலாய்ச்சார் சத்யராஜ். ‘‘நாங்களும் அதே பாரதிராஜா பட்டறையில இருந்துதான் வந்திருக்கோம்’’னு பதிலுக்கு நானும் சொல்ல, சிரிச்சுட்டார். அப்படி அமைஞ்சதுதான் ‘மல்லுவேட்டி மைனர்’ படம்.

இந்தப் படம் பண்ற டைம்ல சத்யராஜ் ஹீரோ இமேஜ்ல செம பீக்ல இருக்கார். ‘மல்லுவேட்டி மைனர்’ படத்துல அவரோட கேரக்டர் கொஞ்சம் வில்லங்கமானது. பெண் வீக்னஸ் உள்ள கேரக்டர். வேற எந்த ஹீரோவும் இமேஜ் போயிடும்னு அதைச் செய்யத் தயங்குவாங்க. இந்தக் கதையை சத்யராஜ் பண்ணுவாரோ, மாட்டாரோனு ஒரு சின்ன தயக்கம் எனக்கும் இருந்தது. அப்பா வச்சிருந்த வைப்பாட்டிங்களுக்கு மகன் பென்ஷன் அனுப்புற மாதிரி ஏடாகூடமான சீன்கள் நிறைய வச்சிருந்தேன் அதுல.

ஆனா கதையைக் கேட்டதும், ‘‘ரொம்ப ஜாலியான கதையா இருக்கே’’னு நம்பிக்கை கொடுத்தார். ‘‘தலைவரே! நீங்க டைரக்ட் பண்றீங்க. கலைமணி அண்ணே கதை எழுதியிருக்கார். அப்புறம் அதுல நடிக்க எனக்கு என்ன தயக்கம்... ஜாலியா பண்ணிடலாம்’’னு சத்யராஜ் சொன்னதும் சந்தோஷமாகிட்டேன். அந்தப் படத்தோட விளம்பரத்துல சத்யராஜ் தன் வேஷ்டியோட ஒரு முனையை கையில  தூக்கிப் பிடிச்சது மாதிரி இருக்கும். பழ.கருப்பையா சார் அப்போ அப்படித்தான்  இருப்பார். அவரைப் பாத்துத்தான் சத்யராஜுக்கு அந்த கெட்டப் கொடுத்தோம்.

படத்துல சத்யராஜுக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி டான்ஸ். ஷோபனா மிகப்பெரிய கிளாஸிகல் டான்ஸராச்சே... ‘‘நீங்க சத்யராஜோட ஒண்ணா ஆடுறீங்க. அவர் ஒரே ஷாட்ல ஆடி, டான்ஸ்ல உங்களை தோக்கடிச்சிடுறார்’’னு ஷோபனாகிட்ட கதை சொன்னேன். அவங்க டக்குனு தன்னோட செருப்பை எடுத்து அவங்க தலையிலயே ‘‘ஐயோ... ஐயோ...’’னு அடிச்சிக்கிட்டாங்க. ஆனா, சத்யராஜ் சார் அதை ரொம்பவே யதார்த்தமா எடுத்துக்கிட்டார்.

‘‘என்னங்க! உங்க அத்தையே (பத்மினி) எங்க தலைவர்கிட்ட (எம்.ஜி.ஆர்) தோத்துப் போகலையா?’’னு சத்யராஜ் கேட்க, ஷோபனா சிரிச்சிட்டாங்க. படத்தோட க்ளைமேக்ஸ்ல மனைவி மேல உள்ள பாசத்தையும் அன்பையும்  எமோஷனலா சத்யராஜ் சொல்ற சீனை ஒரே ஷாட்ல வச்சிருந்தேன். எக்ஸலன்ட்டான ஒரு ஆக்டிங்! இன்னிக்கும் நானும் சத்யராஜும் சந்திக்கும்போது ஒரு மணி நேரமாவது பேசிக்குவோம். சினிமா, உலக நடப்புகள்னு எங்க பேச்சு பல டாபிக்ல சுத்திச் சுழலும்.

நடிகர் திலகம் சிவாஜி - சரோஜாதேவியை வச்சி நான் இயக்கின படம், ‘பாரம்பரியம்’. அதனால சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி போய், நானும் அவர் பிள்ளையாட்டம் பழகிட்டேன். சிவாஜியை ‘அப்பா’ன்னுதான் கூப்பிடுவேன். அதுக்கப்புறம் பிரபுவை வச்சு, ‘மூடுமந்திரம்’ பண்ணினேன். ‘அன்னை இல்லம்’ல கீழ் ஃப்ளோர்ல சிவாஜி அப்பாவும், மாடியில் பிரபுவும் இருந்தாங்க. நான் பிரபுவைப் பார்க்கப் போகும்போதெல்லாம் வீட்டின் பின் பக்க வழியா மாடிக்கு போயிடுவேன்.

ஏன்னா... வீட்டு முன் வாசல்ல சிவாஜி அப்பா உட்கார்ந்திருப்பார். சொந்த அப்பாவைப் பார்த்து பம்முற மாதிரியே அப்படி ஒரு பவ்யம் எனக்கு அவர்கிட்ட. வி.கே.ராமசாமி அண்ணன் என்னைப் பார்த்தா, ‘‘என்னமோ நீ சூரக்கோட்டையில பொறந்து வளர்ந்தவன் மாதிரி... நீ ‘அப்பா’ன்ற... அவரும் ‘மகனே’ன்றார்... ஒண்ணும் புரியலீயே!’’னு சொல்லி  அதிர அதிர சிரிப்பார். என்மேல பாசமுள்ளவர் வி.கே.ஆர் அண்ணன்.

பிரபு ரொம்ப லவ்லி கேரக்டர். கூடப் பிறக்காத சகோதரர் மாதிரி நம்மள அக்கறையா பாத்துக்குவார். வீட்ல இருந்து விதவிதமான அயிட்டங்களா எடுத்துட்டு வந்து, நம்மள வயிறார சாப்பிட வைப்பார். அவங்க வீட்டு டைனிங் டேபிள்லேயே 20, 30 பேர் உட்கார முடியும். அவங்க குடும்பத்தினர் எல்லாருமே விருந்தோம்பல்ல வியக்க வைப்பாங்க. ஊட்டியில ‘மூடு மந்திரம்’ படத்தோட ஷூட்டிங்.

 ‘‘மனோ! அப்பாவோட ‘புதிய பறவை’ இங்கே பக்கத்து லொகேஷன்லதான் படப்பிடிப்பு நடந்துச்சு. ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...’ பாட்டு அங்கேதான் ஷூட் பண்ணினாங்க. அந்த இடத்துல நானும் நடிக்க விரும்புறேன்’’னு பிரபு கேட்க, அங்கேயும் ஒரு பாடலோட பல்லவியை ஷூட் பண்ணினோம். இன்னிக்கும் சிவாஜி அப்பா வீடு சென்னையில எனக்கொரு பிறந்த வீடுனு சொல்லிக்குவேன். அந்த அளவு உரிமை எடுத்துக்கலாம் தாராளமா!

பிரபு மாதிரியே கார்த்திக்கும் நல்லா பழகுவார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்கு அப்புறம் கார்த்திக்குக்கு தேடி வந்த வாய்ப்புகள் பிரமிக்க வைக்கும். என்னோட முதல் படம், ‘ஆகாய கங்கை’யோட ஹீரோ கார்த்திக்தான். இளையராஜா இசை. ராபர்ட் - ராஜசேகர் ஒளிப்பதிவில் மணிவண்ணன் கதை எழுதின படம்.

முதல் பட இயக்குநருக்கு ஒரு ஹிட் ஹீரோ கிடைக்கிறது பெரிய விஷயம். கார்த்திக் இருந்த பிஸியில எனக்கு கால்ஷீட் கொடுப்பாரானு எனக்கே டவுட். ஆனா, நான் கேட்டதும் டேட் கொடுத்தார். ‘ஆகாய கங்கை’ ஒரு பொயட்டிக் லவ் ஸ்டோரி. அந்தப் படத்துலதான் கவிஞர் மு.மேத்தாவை அறிமுகப்படுத்தினேன். ஒரே நாள்ல நல்லா வியாபாரம் ஆச்சு.

ஆனா, படம் ஓடலை.  முதல் படம் எடுக்கற இயக்குநருக்கு நிறைய நிர்ப்பந்தங்கள் வரும். அப்படி நிறைய பேரோட தலையீடுகள் படத்தோட வெற்றியை பாதிச்சது. ‘நல்ல கதையில ஆளாளுக்கு கருத்து சொன்னால், அது சின்னாபின்னமாகிடும்’ என்பதற்கு அந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம். என்னோட முதல் படத் தோல்வி என்னை எப்படி புரட்டிப் போட்டது தெரியுமா? ‘‘என்னங்க! உங்க அத்தையே (பத்மினி) எங்க தலைவர்கிட்ட (எம்.ஜி.ஆர்) தோத்துப் போகலையா?’’னு சத்யராஜ் கேட்க, ஷோபனா சிரிச்சிட்டாங்க.

(ரசிப்போம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்

மனோபாலா