கமல் கொடுத்த கிஃப்ட்... செம ஜாலி கார்த்தி!



‘‘சினிமா போட்டோஷூட்டோட லைஃப் அதிகபட்சம் ஒரு மாசம்தான். ஆனா, விளம்பரப் பட ஷூட் அப்படி இல்ல. தினசரியில தொடங்கி வார, மாத இதழ்கள்னு தொடர்ச்சியா அந்த விளம்பரங்கள் வந்துக்கிட்டே இருக்கும். பிரபலங்களோட ஒவ்வொரு நொடியும் ரொம்ப மதிப்புமிக்கது. செட்டுக்குள் அவங்க என்ன பரபரப்புல வருவாங்களோ, அதே வேகத்துக்கு நாங்களும் ரெடியா  இருக்கணும்.

அப்போதான் நாங்க அவங்க குட்புக்ல இடம்பெற முடியும். வெளிநாடுகள்ல ரசனைகள் வேறுமாதிரி இருக்கும். ஆனா இங்க நிறைய க்ளையன்ட்ஸ், ‘ஆர்ட்டிஸ்ட் சிரிக்கற மாதிரி போஸ் கொடுத்தாதான் கஸ்டமர்ஸ் கடைக்கு வருவாங்க’னு சொல்வாங்க. இந்த எதிர்பார்ப்புகளை சர்வதேச தரத்துல தர்றது சவாலான வேலை. அந்த சவாலில் ஜெயிச்சுட்டா, எல்லார் மனசிலும் நாம இருப்போம்!’’

- தொழில் ரகசியங்களை ரொம்பவே ஜாலியாக பகிர்ந்துகொள்ளும் எஸ்.முத்துக்குமார், தென்னிந்திய விளம்பரப் பட உலகின் மோஸ்ட் வான்டட் புகைப்படக்காரர். கோலிவுட், டோலிவுட் பிரபலங்களை க்ளிக்கிய அனுபவங்களைக்  கேட்டால்... ஒவ்வொரு வார்த்தையிலும் மின்னுது தெறி ஃப்ளாஷ்!

கார்த்தி - காஜல்

இவங்க காம்போ சூப்பர்ப் கெமிஸ்ட்ரி. ‘தி சென்னை  சில்க்ஸ்’ ஷூட் அது. காஜலை ஷூட் பண்றப்போ, கொஞ்சம் டென்ஷனா  இருந்தாங்க. வாய் நிறைய சிரிப்பு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா,  அவங்க முகத்துல சிரிப்பு மிஸ் ஆக, இதை எப்படி அவங்ககிட்ட சொல்லலாம்னு  யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த டைம்ல திடீர்னு காஜல் முகத்துல ஒரு ஃப்ரெஷ்  புன்னகை.

அவங்க எதிரே கார்த்தி சார் இருந்தார். உடனே நான் கார்த்தி  சார்கிட்ட, ‘‘சார்! நீங்க இருந்தாதான் காஜல் சிரிக்கறாங்க. ஸோ,  ஷூட் முடியற வரை நீங்க இங்கேயே இருங்க’’னு கேட்டதும் சிரிச்சுட்டார்.  காஜல்கிட்ட எதாவது ஒரு கமென்ட் அடிச்சு சிரிக்க வச்சுக்கிட்டே இருந்தார்  கார்த்தி சார். லவ்லி மொமன்ட்!

ஏ.ஆர்.ரஹ்மான்

போட்டோஷூட் அன்னிக்குதான் ரஹ்மான் சார் லண்டன்ல இருந்து வந்திருந்தார். கோல்ட் அண்ட் டைமண்ட் கடை ஒன்றின் ஷூட் அது. ரஹ்மான் சார் கண்ணுல களைப்பு தெரிஞ்சுது. அவர் வந்ததில் இருந்து நான் ஷாட் எடுத்துக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் ‘இவ்வளவு ஷாட்ஸா?’னு வாய் விட்டே கேட்டார்.

குடுத்த தேதியை நாங்க சரியா பயன்படுத்தலைனா அடுத்து அவரோட டேட் எப்போ கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஸோ, அவரோட டயர்டையும் பொருட்படுத்தாம அவரை பிழிஞ்சு எடுத்தது வருத்தமா இருந்தது. ஆனா, அவர் கிளம்பறப்போ என்னைப் பாராட்டிட்டு போனார். ஜென்டில்மேன்!

கமல்

‘ஹேராம்’ பட ஷூட்ல இருந்து கமல் சார் எனக்கு அறிமுகம். ‘மருதநாயகம்’ போட்டோ ஷூட் அப்போ நட்பு இன்னும் அதிகமாச்சு. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘தசாவதாரம்’னு அடுத்தடுத்து அவரோட டிராவல் அமைஞ்சது.   பல வருஷமாகவே என்னோட க்ளையன்ட்ஸ்ல நாலஞ்சு பேர் அவங்க விளம்பரத்துல கமல் சாரை நடிக்க வைக்கணும்னு விரும்பினாங்க. இதை கமல் சார்கிட்டே கேட்டேன். அவர் நடிக்கறதுக்கான சரியான சூழல் அமையாமல் இருந்தது.

‘போத்தீஸ்’ கேட்டப்போ மறுபடியும் கமல் சார்கிட்ட ஒரு தடவை கேட்டுப் பார்க்கலாம்னு யதேச்சையா கேட்டேன். ரைட் டைம் ஆகிடுச்சு. கமல் சாருக்கு புது விஷயங்கள் பிடிக்கும்னு லேட்டஸ்ட் எக்யூப்மென்ட்ஸ் ஷூட்டுக்காக வாங்கியிருந்தேன். நடிக்கும்போதே மானிட்டரை அவர் பார்த்துக்கற மாதிரி வசதி பண்ணியிருந்தேன். அதை ரொம்பவே பாராட்டினார்.

ரெண்டு நாள்ல 1500 க்ளிக் பண்ணினேன். இவ்ளோ க்ளிக் இதுவரை வேற யாரையும் நான் பண்ணினது இல்ல. ஷூட் முடிஞ்சு கிளம்பறப்போ, ‘லேட்டஸ்ட் போட்டோகிராபி எக்யூப்மென்ட்ஸ் என்னென்ன? எங்கே வாங்கணும்?’ங்கற புத்தகம் எனக்கு கிஃப்ட் பண்ணினார். 

சூர்யா

சரவணா ஸ்டோர் என்னோட க்ளையன்ட். அவங்களுக்காக சூர்யா சாரை ஷூட் பண்ணியிருந்தேன். செட்டுக்குள்ள என்ட்ரி ஆனதிலிருந்து செம வேகத்தில இருந்தார். டக்டக்னு வருவார். ஜாலியாகவே வொர்க் பண்ணுவார். எனர்ஜியான பர்சனாலிட்டி! அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கமுடியும்.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுலை வச்சு லேட்டஸ்டா ஐதராபாத்ல உள்ள ஆர்.எஸ். பிரதர்ஸ் ஷூட் பண்ணிக் கொடுத்தேன். சின்ன வயசில இருந்து படு புரொஃபஷனல் மாடல். அப்போ இருந்து ரகுலை கிட்டத்தட்ட 70 ஷூட் பண்ணியிருப்பேன். இன்னிக்கு டோலிவுட்ல பெரிய இடத்துல இருந்தாலும், அதே பழைய ரகுலா பழகுறாங்க. அதே எனர்ஜி பின்றாங்க! இப்போ தமிழ்ல ஒரு படம் கமிட் ஆகியிருக்காங்க. கோலிவுட்ல இந்த வருசம் அவங்கதான் டாப் ஹீரோயினா வருவாங்க.

நித்யா மேனன்

பட்டுச்சேலை ஷூட் பண்றப்போ, மாடல் நகரக்கூடாது. சேலையின் சரிகை, புட்டா, பல்லுனு எல்லாமே மிளிர்ந்தால்தான் ஸ்டில் கரெக்டா வரும். ‘போத்தீஸ்’ விளம்பர ஷூட் அது. நித்யா மேனனை நிற்க வச்சிட்டோம். எப்பவுமே ஷூட் அப்போ, பின்னணியில் மியூசிக் மெலிதா இழையோடும். பொம்மை மாதிரி நித்யா நின்னால்தான் நாங்க எதிர்பார்க்குற போஸ் கிடைக்கும். ஆனா, பாடல் கேட்டதும் நித்யா ஆட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குத் தெரியாம மியூசிக் சவுண்டை கம்மி பண்ணினோம். எனர்ஜியான பொண்ணு நித்யா!

கே.விஸ்வநாத்

விஸ்வநாத் சாரை வச்சு அங்கவஸ்திரம் ஷூட் பண்ணினேன். அவருக்கு 80 ப்ளஸ் வயசு இருக்கும். இந்த வயசிலும் துறுதுறுன்னு எனர்ஜியா இருக்கார். நூத்துக்கணக்கான படங்கள் பண்ணினவர் அவர். ஒவ்வொரு எக்ஸ்பிரஷனிலும் அந்த அனுபவம் தெரிஞ்சது. நிஜமாகவே பிரமிச்சிட்டேன்.

- மை.பாரதிராஜா

அட்டையில்: கமல்ஹாசன்/ ஸ்பெஷல் படம்: முத்துக்குமார் /
படம் நன்றி: போத்தீஸ்


போட்டோகிராபர்
எஸ்.முத்துக்குமார்