முதலில் குழந்தை... அப்புறம் காதல்!



விநோத ரஸ மஞ்சரி

அமினா ஹார்ட் என்ற பெண்ணும் ஸ்காட் ஆண்டர்சன் என்பவரும் 2013ம் ஆண்டுதான் முதல் முறையாக சந்தித்தார்கள். ஆனால், அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு அப்போது ஒரு வயது. என்ன குழம்புகிறீர்களா? ஆம், பார்க்காமலே காதல் கேள்விப்பட்டிருப்போம்... இது பார்க்காமலே பிறந்த குழந்தை. அதனால் என்ன, இப்போது தன் குழந்தையின் அப்பாவைத் தேடிக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அமினா!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் அமினா... ஏற்கெனவே இருமுறை மணமானவர். ஆனால் பிள்ளைப்பேறு விஷயத்தில் அவருக்கு ஒரு விநோதப் பிரச்னை.  x-linked myotubular myopathy எனும் குறைபாடு காரணமாக இவரால் ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது.

துரதிர்ஷ்டவசமாக அமினாவின் திருமண வாழ்வில் கரு தங்கிய இரண்டுமே ஆண் குழந்தைகள். அவை பிறந்து சில நாட்களில் இறந்தன. இதனாலேயே அவரின் திருமண வாழ்க்கைகள் நிலைக்கவில்லை.

பார்த்தார் அமினா... ‘கல்யாணமும் வேண்டாம், கணவனும் வேண்டாம்’ என உயிரணு தானம் மூலம் ஒரு பெண் குழந்தையைக் கருவில் சுமந்து பெற்றெடுத்தார். லைலா எனப் பெயர் வைத்தார். ‘உனக்கு நான் எனக்கு நீ’ என தன்னந்தனியாக அவளை வளர்க்கவும் தயாரானார். ஆனால், தேவதை போல வளர்ந்த குழந்தை லைலாவைக் கொஞ்சும்போதெல்லாம் அமினாவுக்குள் ஆவல்...

இவளின் அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று.‘‘உயிரணு தானம் விஷயத்தில் மருத்துவமனைகள் அப்பாக்களை காட்டிக் கொடுப்பதில்லை. சட்டமும் அதை அனுமதிப்பதில்லை. இருப்பினும் அரும்பாடு பட்டு தேடினேன். ஸ்காட் ஆண்டர்சன்தான் லைலாவின் அப்பா எனக் கண்டுபிடித்தேன். லைலாவின் முதல் பிறந்த நாளன்று அவரை அழைத்தேன். நேரில் பார்த்ததுமே என் மனதைப் பறி கொடுத்துவிட்டேன்!’’ என்கிறார் அமினா வெட்கத்தோடு.

அப்புறமென்ன... இரண்டு வருட டேட்டிங் வாழ்க்கை முடிந்து தற்போது திருமண பந்தத்தில் நுழைந்திருக்கிறார்கள் இவர்கள். ஸ்காட் ஆண்டர்சனுக்கு ஏற்கனவே மணவாழ்வில் லூக், ஜியே, பெய்லி என மூன்று ஆண் பிள்ளைகளும் பெல்லி என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் பெரியவனுக்கு 22 வயது. இது எதுவுமே இவர்கள் இணைவதைத் தடுக்க முடியவில்லை. அதாங்க காதல்!

- ரெமோ