இயக்குனர் பாண்டிராஜ் IN DOWNLOAD மனசு



ஆசைப்பட்டு நடக்காதது!

ஆசைப்பட்டது நிறைய கிடைக்கலை. குழந்தைகளின் ஆசை சின்ன வயதில் மாறிக்கிட்டே இருக்கும். எனக்கு சாக்பீஸ் வச்சு ப்ளாக்போர்டில் எழுதி எழுதி அழிச்சு பாடம் நடத்த ஆசை. நான் வாத்தியாரை ஹீரோவா பார்த்திருக்கேன். ப்ரேயரில் கம்பீரமா நின்னு, கொடியேத்தும்போது விறைப்பா சல்யூட் அடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். ஆனால், அது நடக்கவே இல்லை. அதுக்கு பதிலா ஒரு டீச்சரைத்தான் கல்யாணம் கட்டியிருக்கேன். அந்த வகையில் சந்தோஷம்தான்!

சினிமாவை எப்படிப் பார்க்கணும்?

ஒரு படம் சிரிக்க வைக்கணும். ரசிக்க இடங்கள் இருக்கணும். ஏதாவது ஒரு கேரக்டரிலாவது மனசு போய் உட்காரணும். நாலு இடத்தில் நெஞ்சை அடைக்கணும். ரெண்டு இடத்தில் கண்ணீர் பொங்கணும். அதிலிருந்து ஒரு விஷயமாவது ‘நச்’னு தெரிஞ்சுக்கணும். எனக்குத் தெரிஞ்சு இதுதான் சினிமானு நினைக்கிறேன். இதில் நான் எப்படினு நானே சொல்லக்கூடாது!.

இப்ப பாதிச்சது...

்தஞ்சாவூர் விவசாயி டிராக்டர் வாங்கி, தவணை கட்டலைனு போலீஸ்கிட்ட அடிவாங்கின காட்சி..! பொங்கிட்டேன். மண்ணுக்கும், மயிருக்கும் கிடைக்கிற மரியாதை கூட இந்த நாட்டில் விவசாயிக்கு கிடையாது. இப்படிப் போனால் சீக்கிரத்திலேயே எல்லோரும் மண்ணைத் திங்க வேண்டிய காலம் வரும். இங்கே பணம் சேர்த்து வைக்கிறவன் பணக்காரன் கிடையாது. மனசார, வயிறார, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாப்பாடு போடறவன்தான் பணக்காரன். அவன்தான் விவசாயி. எங்க விவசாயம் கந்தக பூமியில் நடக்குது. எங்க நிலம் ஜப்திக்கு வந்தபோது ஊரே வேடிக்கை பார்த்தது. இப்ப ஊர்ல நிலம் வாங்கி, விவசாயம் பண்ணி சாப்பிடணும்னு ஆசைப்படறேன். அதுக்கான வேலைகள் நடக்குது.

கல்யாணம்...

சினிமாவுக்கு வந்தால் வயசு ஓடிக்கிட்டே இருக்கும். அப்பா, அம்மா நமக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணினா, ஒருத்தனும் பொண்ணு தரமாட்டான். ‘சினிமாக்காரன்னா டைவர்ஸ் பண்ணிட்டு ஓடிடுவான்’னு பேர் இருக்கு. எங்க பக்கம் உள்ளூரில்தான் பெண் கொடுத்து, பெண் எடுப்பாங்க. ‘நல்ல மாடு உள்ளூரிலேயே விலை போகும்’னு வசதியா ஒரு பழமொழி வேற சொல்வாங்க.

நமக்கே நாம நல்ல மாடு இல்லையோனு சந்தேகம் வந்திடும். பார்க்கிறதே நம்மை மங்கலா பார்ப்பாங்க. ஏதோ கூட நாலு பெண்களோட பொறந்ததாலே, எனக்குப் பொண்ணு கொடுத்திட்டாங்க. அப்ப பொண்ணு கொடுக்காதவங்க எல்லாம் நான் மனைவியை சந்தோஷமா வச்சிருக்கிற தினுசைப் பார்த்திட்டு, ‘அடடா, மிஸ் பண்ணிட்டோமே’னு நினைக்கிறாங்க. எனக்கு டீச்சர் போதும். ேஹப்பி அண்ணாச்சி!

கேட்க விரும்பும் கேள்வி...

நூறு நாள் வேலைவாய்ப்பு தந்தாங்க. நல்ல விஷயம், பயன்பட்டது. காசு கிடைக்குது. ஆனா, மேற்பார்வைனு கமிஷன் வாங்குறாங்க. 120 பேர் வேலை பார்த்தா, 125 பேர்னு கணக்கு காட்டுறாங்க. யாருமே ஒரு சொட்டு மண் அள்ளிப் போடறது இல்லை. வாங்குகிற காசுக்கு மக்களுக்கான பணிகள் நடக்கலை. உட்கார்ந்து கதை பேசுறாங்க. மூணு மணி நேரம் வேலை பார்த்தாலே அதிகம். குழந்தைகள் சட்டி பானை வச்சு விளையாடுகிற மாதிரி ஆகிப்போச்சு. ஊரும் நாடும் நல்லாயிருக்க விவசாயிகள் இவர்களைப் பயன்படுத்துற மாதிரி பண்ணலாம்ல?

கடைசியாக அழுதது...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி! மூணு வருஷமா படம் ரிலீஸே இல்லை. ‘இது நம்ம ஆளு’னு ஒரு படம் எடுத்தேன். ‘குடும்பப் படம் எடுக்கலாம். குடும்பத்தோட படம் எடுக்கக் கூடாது’னு அப்புறம்தான் நினைச்சேன். ‘பசங்க 2’ ரொம்ப நாள் கழிச்சு வருது. தியேட்டரில் மக்கள் கையைப் பிடிச்சிட்டு, ‘குழந்தைகளைக் கூட்டிட்டு வந்திருக்கோம், பாருங்க’னு கையைக் காட்டிச் சொல்றாங்க. கண்ணீர் தாரை தாரையா வழியுது. சிறந்த பாராட்டு, ‘உங்க படம் எங்க பிள்ளைகளுக்கு பாடமா இருக்கு’னு சொன்னதுதான்.

சென்டிமென்ட்...

‘மெரீனா’ படத்துல தயாரிப்பாளர் ஆகிட்டேன். அப்படி ஆக வேண்டிய நிலை. அதில், ‘எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - பாண்டிராஜ்’னு டைட்டிலில் வரும்போது கேமரா கடற்கரை காமராஜர் சிலைக்கு மேல ஆரம்பிச்சு, கீழே இறங்குது. கீழே ஒரு பிச்சைக்காரர் படுத்துக் கிடக்கிறார். அதே மாதிரி, ‘மெரீனா’ முதல் நாள்... நான் போறதுக்கு முன்னாடி சில காட்சிகளை கேமராமேன் எடுத்து வச்சிருந்தார்.

போட்டுப் பார்த்தா அதுவும் தூங்குகிற ஒரு பிச்சைக்காரர். நான் இப்படி ஆகிடுவேன்னு காட்டுறாங்களா, இப்படி ஆகணும்னு நினைக்கிறாங்களா, இல்ல அந்தப் பிச்சைக்காரன் நானேவானு ஒரே குழப்பம். ஆனா, படம் ஹிட். எங்க அம்மா ஊரிலிருந்து கிளம்பும்போது நிறைகுடத்தோட எதிரே வந்தாங்க. இங்கே சென்னை வந்ததும் நல்ல மழை. மழை எனக்குப் பிடிக்கும்!

கற்ற பாடம்...

்பஸ் வசதி இல்லாத கிராமத்திலிருந்து, கையெழுத்துகூட போடத் தெரியாத, ஆட்காட்டி விரலை மையிட நீட்டுகிற பெற்றோரை விட்டுட்டு எந்த நம்பிக்கையில் சென்னைக்கு வந்தேன்? 650 ரூபாயோட வந்தேன். கூட வந்தவங்க தெறிச்சு ஓடிட்டாங்க. ‘நம்பிக்கை இருந்தால் ஜனாதிபதி விருது வரைக்கும்கூட போயிடலாம்’னு என் வாழ்க்கையே சொல்லுது.

இப்ப அடிக்கடி நல்லது கெட்டதுக்கு ஊருக்குப் போறேன். சினிமாவில் End Card போடுற காலம் எப்பயாவது வரும். அப்ப ‘என்னடா பாண்டி திரும்பிட்டான்’னு ஒரு வார்த்தை பேசிடக் கூடாது. ‘நீ என்னவா ஆக வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறாயோ, அதுவாக ஆகிறாய்’னு பகவத் கீதை சொல்லுதே... நிஜமோ!

மறக்க முடியாத மனிதர்கள்...

என் அண்ணன் வெகுளியா, பொறுமையா இருப்பார். வாய் விட்டு எதையும் கேட்கமாட்டார். எல்லா வசதியும் செய்து கொடுத்தாலும், அவரா கேட்டதே இல்லை. அடிக்கடி அவரைத் திட்டுறதால, எனக்கு அவரைப் பிடிக்காதுனு நினைக்கிறார். கோபத்தோட இன்னொரு முகம் பிரியம்னு இதைப் படிச்சிட்டு அவர் தெரிஞ்சிக்கணும்.

சேரன் சார்... நாலைஞ்சு வருஷமா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லை. ஆனா, தினமும் நாலைந்து தடவை அவரைப் பத்தி பேசிடுவேன். ஒரு கலைஞனுக்கான போராட்ட குணத்தை அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன். நிறைய தடவை அவரை நான் சந்திக்க விரும்பியும் அவர் விரும்பலை. அவரது அலைபேசி அழைப்பிற்குக் காத்திருக்கேன்.

என்னை நம்பி 1000 ரூபாய் கொடுக்க எல்லோரும் யோசிச்ச காலத்துல, என்னை வச்சு பல கோடி போட்டு படம் எடுத்த நம்பிக்கை மனிதர் சசிகுமார். பின்னாடி எத்தனையோ படம் பண்ணியிருக்கலாம். ஆனா முதல்பட இயக்குநர் மேல சசிகுமார் வச்ச நம்பிக்கை அலாதியானது. அந்த நம்பிக்கை, ஏழாவது படம் பண்ணும்போது கூட எனக்குக் கிடைக்கல. இதுவரைக்கும் நான் படம் பண்ணின தயாரிப்பாளருக்கு திரும்பப் படம் பண்ணுவேனான்னு தெரியாது. ஆனா, சசிகுமார் சார் கூப்பிட்டா, என்ன படம் பண்ணிக்கிட்டு இருந்தாலும் அப்படியே போட்டுட்டு அவர்கிட்ட போய் நிப்பேன்.

- நா.கதிர்வேலன்