கவிதைக்காரர்கள் வீதி




வாய் திறந்தால் மெட்டுக்
 கட்டிப்
பாடி விடுகிறது
கூடு கட்டத் தெரியாத
குயில்!
- பாலாமிர்தன், சென்னை-77.

மனம் போல்
கிளை விரித்திருக்கிறது
மரம்
இலை போல்
ஆங்காங்கே
அமர்ந்திருக்கின்றன
பறவைகள்
பறவை போல்
தரையிறங்குகிறது
பழுத்த இலை
மரம் போல்
நின்று ரசிக்கிறேன்
நான்
- தளபதி கோபால்,மோகனூர்.

பறவையொன்றின்
புறப்பாட்டில்
குலுங்கி நிற்கிறது
மரக்கிளை
- கீரன் செல்லதுரை,புதுக்கோட்டை.

நான் கிறுக்கிய சுவற்றில்
அப்பா எழுதி
வைத்திருக்கிறார்
எந்தெந்த வேளைகளில்
எத்தனை எத்தனை
மாத்திரையென்று.
- கவி கண்மணி, கட்டுமாவடி. 

தேரோட்டம் முடிந்து
எல்லாம்
விற்றுத் தீர்ந்த பின்னே
தொடங்குகிறது
பலூன்காரர் வீட்டில்
திருவிழா.
- தாயுமானவன் மதிக்குமார், சிங்கப்பூர்.

எந்த பவுடர் பூசினாலும்
மணக்கிறது 
குழந்தையின் வாசனையில்...
- க.விக்னேஷ், காரைக்குடி.