விஸ்கி ஆகுது தேங்காய்ப்பால்!



தரங்கம்பாடி தமிழனின் கண்டுபிடிப்பு

தேங்காய்ப்பால் ஊற்றி ஆப்பமோ, இடியாப்பமோ சாப்பிட்டிருப்போம். அல்லது சமையலுக்குப் பயன்படுத்திக் கூட பார்த்திருப்போம். ஆனால், அதிலிருந்து விஸ்கி தயாரிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ரசாயனங்கள் எதுவும் கலக்காமல்,

இயற்கையாகவே தேங்காய்ப்பாலிலிருந்து விஸ்கி தயாரித்திருக்கிறார் தரங்கம்பாடியைச் சேர்ந்த ஆதித்ய சுந்தரபாண்டியராஜ். இதற்கான காப்புரிமையையும் உலகளவில் பெற்றுவிட்டார் இந்த மனிதர்!

‘‘எங்க அப்பாவுக்கு ஆப்பமும் தேங்காய்ப்பாலும் ரொம்பப் பிடிக்கும் சார். அவர் ஆப்பம் சாப்பிடுற நாள்ல ரொம்ப நேரம் தூங்கிடுவார். ‘மயக்கமா இருக்கு’னு சொல்வார். அதனாலதான் தேங்காய்ப்பாலை ஆய்வு பண்ண ஆரம்பிச்சேன். ஆனா, அது விஸ்கி தயாரிக்க வழிகாட்டிடுச்சு!’’ - என சிரிக்கும் ஆதித்யா, தரங்கம்பாடியில் டூரிஸ்ட் வழிகாட்டியாகப் பணியாற்றுகிறார்.

‘எனக்கு சொந்த ஊர் பக்கத்துல பொறையார் கிராமம். அப்பா தேவராஜ் தரங்கம்பாடியில இரும்புக் கடை நடத்திட்டு இருந்தார். நான் பிளஸ் 2 முடிச்சிட்டு ஐ.டி.ஐல டீசல் மெக்கானிக்கல் படிச்சேன். அப்போதான் இந்த ஆய்வைத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அஞ்சு வருஷம்... லட்சக்கணக்கான ரூபா செலவுகளுக்குப் பிறகு இந்த விஸ்கியைக் கண்டுபிடிச்சேன். அப்பாவும் அண்ணனும் ரொம்ப உதவினாங்க.

சின்ன வயசுல இருந்தே வேதியியல் பாடத்துல ரொம்ப ஆர்வம். பிளஸ் 2ல தொழிற்படிப்பு படிச்சாலும் வேதியியல் பாடத்தை நூலகத்துக்குப் போய் படிப்பேன். பதினெட்டாம் நூற்றாண்டு அகராதியிலயே விஸ்கி தயாரிப்பு பத்தி போட்டிருக்கு. அதெல்லாம் வாசிச்சதாலதான் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமாச்சு.

‘ட்ரான்க்யூபார் கோகனட் விஸ்கி’னு இதுக்கு பெயர் வச்சோம். 2006ல இந்திய அளவுல காப்புரிமை அங்கீகாரம் கிடைச்சது. ஆனா, இன்னைக்கு வரை இங்க என்னால ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க முடியலை. அதான் வருத்தமா இருக்கு!’’ என்றவர் இந்த விஸ்கி தயாரிப்பு ஃபார்முலாவை மட்டும் டாப் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்.

‘‘இதைத் தயாரிக்க எட்டு மாசமாகும். இந்த எட்டு மாச ப்ராசஸ்லதான் தேங்காய்ப்பால் அப்படியே விஸ்கியா மாறுது. இதே தேங்காய்ப்பால்ல விஸ்கி தயாரிக்க ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் முயற்சி பண்ணிப் பார்த்திருக்காங்க. அது முடியலை. நான் அதை சாத்தியப்படுத்தி இருக்கேன். ஸ்காட்ச் விஸ்கி எப்படியோ அதே மாதிரிதான் இதுவும். அவ்வளவு தரமா இருக்கும். அரசு அனுமதி இருந்தா, ஒரு லிட்டரை ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம். அது கிடைக்காததால இப்போ சாம்பிள் பாட்டிலா மட்டும் தயாரிச்சி வச்சிருக்கேன்!’’ என்கிற ஆதித்யாவைத் தொடர்கிறார் அவரது அண்ணன் ஆனந்த்.

‘‘பொதுவா, இந்தியாவில் தயாரிக்கப்படுற வெளிநாட்டு லிக்கர், இறக்குமதியாகுற வெளிநாட்டு லிக்கர்னு ரெண்டு வகைதான் இங்கே இருக்கு. இதுல, இந்தியத் தயாரிப்புகள் எல்லாமே கரும்புக் கழிவுல கடைசியா கிடைக்கும் ‘மொலாசஸ்’ங்கிற சக்கையை வச்சு தயாரிப்பாங்க. ஆனா, நேரடி வெளிநாட்டு மதுபானங்களை தானியங்கள், சோளம், பார்லி, பழ வகைகள்னு சாப்பிடுற பொருட்களைக் கொண்டு உருவாக்குவாங்க. இதனால, ஃபாரின் சரக்கு எப்பவும் காஸ்ட்லிதான்!

அது மாதிரிதான் இந்த தேங்காய்ப்பால் விஸ்கி! இதுல போதை இருக்கும். ஆனா, ஹேங் ஓவர் மாதிரியான தொந்தரவுகள் இருக்காது. இதை பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பார்த்ததுல கேடு விளைவிக்கக் கூடிய அமிலங்கள் குறைஞ்ச அளவில்தான் இருக்குனு சான்றிதழ் கிடைச்சது. அதுக்காக, இது கெடுதலே இல்லாததுனு சொல்ல வரலை. கேடுங்கறது எவ்வளவு எடுக்கிறாமோ அதைப் பொறுத்தது!’’ என்கிறார் அவர் கவனமாக!

‘‘ஒரு லிட்டர் விஸ்கி எடுக்க குறைஞ்சது 20 தேங்காய் வேணும். ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சா வருஷத்துக்கு கிட்டத்தட்ட ஆறு லட்சம் தேங்காய்களாவது தேவைப்படும். இதனால, தென்னை விவசாயிகளுக்கு நிறைய பலன் கிடைக்கும். கோவையில ஒரு கூட்டத்துல என்னைக் கலந்துக்க கூப்பிட்டாங்க.

அங்க, ‘கள்’ இயக்கத் தலைவர் நல்லசாமி சாரோட அறிமுகம் கிடைச்சது. என்னோட கண்டுபிடிப்பைக் கேள்விப்பட்டவர், ரொம்ப பாராட்டி ‘உடனே செயல்படுத்துங்க’னு ஊக்கம் கொடுத்தார். ஆனா, என்னால அது முடியலை. கடந்த எட்டு வருஷமா பல கட்ட முயற்சி எடுத்துட்டேன். என்னால தொழிற்சாலை அமைக்க முடியாததுக்கு காரணம் தமிழகத்தோட மதுவிலக்குத் துறையின் சட்டம்தான்.

அதனால, இப்போ கோவாவுல அனுமதி வாங்கலாம்னு இருக்கேன். ஒரு யூனிட் போட ஏழு கோடியே இருபத்தியெட்டு லட்சம் ரூபாய் செலவாகும். அதிலிருந்து அறுபதாயிரம் லிட்டர் உற்பத்தி பண்ணலாம். அடுத்த வருஷம் நிச்சயம் தொழிற்சாலை தொடங்கிடுவேன். கூடவே, இந்த தேங்காய்ப்பாலை பிரிச்சு எடுத்த பிறகு அதிலிருந்து தேங்காய் எண்ணெயும் எடுக்க முடியும். அதையும் செயல்படுத்தலாம்னு இருக்கேன்!’’ என்கிறார் ஆதித்யா நம்பிக்கையாக!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ரவீந்தர்