அட்டகாசத் தொடர் 3



ரகசிய விதிகள்

அரவமணி நல்லூர் கோயிலைப் பற்றி கல்யாணி ஆசையுடன் விவரித்ததை கிரிதர் உன்னிப்பாகக் கவனித்தார்.‘‘முக்கியமா நாம கவர் பண்ணப் போற கோயில்களைப் பத்தி யாருமே இதுவரைக்கும் கவர் பண்ணியிருக்க மாட்டாங்க சார்... தெரியாத கோயில்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வத்தோட மக்கள் பார்ப்பாங்க!’’

கல்யாணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, முரளிதரன் பக்கம் திரும்பினார் கிரிதர்.‘‘நல்லா வருமா முரளி..?’’‘‘வாரம் ஒண்ணுன்னு மொதல்ல நாலு கோயிலை கவர் பண்ணுவோம் சார்... பிக் அப் ஆகலைன்னா மாத்திருவோம்!’’‘‘பட்ஜெட்..?’’பதில் சொல்ல விஜய் ஆர்வத்துடன் முன்வந்தான். ‘‘சார்! நானும் கல்யாணியும் போனா போதும் சார்... ஒரே ஒரு கேமரா எடுத்துக்கறோம்!’’கிரிதர் ஆமோதித்துத் தலையசைத்தார்.

‘‘முரளி... தேவையான பணம் கொடுத்து அனுப்புங்க!’’‘‘தேங்க்ஸ் சார்!’’‘‘நம்ம காரு, நம்ம டிரைவரு... வசதியான ஹோட்டலா பார்த்து தங்குங்க. ஆல் தி பெஸ்ட்...’’ என்று கிரிதர் எழுந்தார்.மூவரும் வெளியே வந்தார்கள். முரளிதரன் விஜய்யை சந்தேகத்துடன் பார்த்தார்.
‘‘ஒரு கேமரா போறுமா விஜய்..?”

“லைவ் இல்லையே... ரெக்கார்ட் பண்ணதை எடிட் பண்ணிதான ஒளிபரப்புவோம்..? தனியா சமாளிச்சுருவேன் முரளி சார்’’ என்றான் விஜய்.“எப்ப போறீங்க..?”“சன்ரைஸ் இல்லேன்னா, சன்ஸெட் லைட்டிங் வேணும் சார்!’’“நாளைக்கு எடுக்கணும்னா, இன்னிக்கு ஈவினிங்கே போயிடலாம்...” என்றாள் கல்யாணி.“எத்தன நாள்..?”

“ரெண்டு நாள் போறும் சார். வந்ததும், பைலட் எபிஸோடை ரெடி பண்ணி உங்களுக்குப் போட்டுக் காட்டறேன்...”வாக்கு கொடுத்தபடி இரண்டு நாட்களில் அந்தத் தொலைக்காட்சி நிலையத்துக்குத் திரும்பப்போவதில்லை என்பது கல்யாணிக்கு அப்போது தெரியாது.
கேமராவை வெளியே எடுத்துச் செல்வதற்கான அனுமதிக்காக அலுவலகத்தின் நடைமுறைகளை கவனித்துவிட்டு, விஜய் வீட்டுக்கு போன் செய்தான்.
“அம்மா, உனக்கு ரெண்டு நாள் விடுதலை...”

“எந்த ஊருக்குப் போறே..?”“அரவமணி நல்லூர். மூணு செட் டிரஸ் எடுத்து வெச்சிரும்மா...”அடுத்து, மதிய உணவு இடைவேளையின்போது சந்திப்பதாக நந்தினிக்கு செய்தி அனுப்பினான். வழக்கமான காஃபிக் கடையில் காத்திருப்பாள் என்று பதில் வந்தது. சொன்னபடி நந்தினி காத்திருந்தாள். விஜய்க்குப் பிடித்த மயில் கழுத்து நிறப் புடவையில் ஜொலித்தாள்.

திருத்திய புருவங்கள். திருகி இழுக்கும் விழிகள். முத்தமிடச் சொல்லும் நேர் நாசி. இயல்பிலேயே ரோஜா நிற இதழ்கள். ஆரோக்கிய ஈறுகள் தெரிய விரியும் சிரிப்பு. இப்படிக் கொள்ளை அழகுடன் இருந்தால், அவளைப் பார்த்ததும் மனசும், விரலும் ஏன் பரபரக்காது?

“என்னடா! முழுங்கற மாதிரி பார்த்திட்டே இருக்க..?” என்று இமைகளைப் படபடத்தாள்நந்தினி. “சிவன் சாப்பிட்ட வெஷம் போல முழுங்காம தொண்டைலயே வெச்சுக்கிட்டு அப்பப்ப ருசி பார்ப்பேனே தவிர, நான் ஏன் முழுங்கறேன்..?” என்று விஜய் அவள் புறங்கையில் விரல்களால் தட்டினான்.

“உன் சினிமாக் கவிதைலாம் கேக்க நேரமில்ல கண்ணா... ஆபீஸ்ல அரை மணி நேரம் பர்மிஷன் சொல்லிட்டு வந்திருக்கேன். கம் டு தி பாயின்ட்...”
“டப்புனு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு என்கூட வர்றியா..?”“எங்க..?”“அரவமணி நல்லூர்...”“அங்கென்ன ஜல்லிக்கட்டா? ‘துள்ளி வர்ற காளையத் துரத்திப் பிடிக்கப் போற துடிப்பான இளைஞன்’னு உன்னைப் பத்தி மைக்ல சொல்வாங்களா..?”“கோயில் போறோம், நந்து...”“நீயும் கல்யாணியுமா..?” “ம்ம்... சூரிய வெளிச்சத்துலதான் கேமரா வேலை. அப்புறம் நிலா வெளிச்சத்துல ஃப்ரீயாதான் இருப்பேன். கோயிலை ஒட்டி ஆறு ஓடுதாம். நீ வந்தா அப்படியே ஆத்தங்கரையில...”“கோயில் பிரசாதத்தை நிலாச் சோறு தின்னலாங்கறியா..?”

“நான் எவ்ளோ ரொமான்டிக்கா பேசறேன்..? கரப்பான்பூச்சி மேல மருந்து அடிக்கற மாதிரியே மூஞ்சிய வெச்சுக்கிட்டுப் பேசறியே..?”
“திரும்பி வந்து நீ என்ன சொல்லுவேனு எனக்குத் தெரியும். அந்த ஊர்ல ஒரே ஒரு ஹோட்டல்தான் இருந்தது. அந்த ஹோட்டல்ல ஒரே ஒரு ரூம்தான் இருந்தது.

வேற வழியில்லாம, நானும் கல்யாணியும் அந்த ஒரே ரூம்ல தங்க வேண்டியிருந்தது. அங்க அடிக்கடி கரன்ட் வேற கட் ஆச்சா...”
“ஏய், ஏய், ஏய்... அந்த கும்பமேளா மேட்டரை இன்னுமா ஞாபகம் வெச்சிட்டிருக்க..? சத்தியமா அங்க ஒரு ரூம்தான் கெடைச்சுது. ரெண்டு லட்ச ரூபா கேமராவை பத்திரமா வெச்சுக்க வேற வழியில்லாமதான் ஒரே ரூம்ல தங்கினோம்.. கேமராவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, தரைலதான்டி தனியாப் படுத்துக் கெடந்தேன்...”

“எதுக்குப் பதறணும்..? நான் சந்தேகப்படலியே..?”“பிரச்னையே வேண்டாம்னுதான இப்ப உன்னையும் வரச் சொல்றேன்...”
நந்தினியின் போன் சிணுங்கியது. எடுத்தாள். “நூறு ஆயுசு கல்யாணி, உனக்கு...” என்றாள்.
“கல்யாணியா... அவ உனக்கு ஏன் போன் பண்றா..?” விஜய் தவித்தான்.

“நீ சந்தேகப்பட்டது கரெக்ட்தான், கல்யாணி. உன் மேல அவனுக்கு நம்பிக்கையில்லையாம். என்னையும் துணைக்குக் கூப்புடறான்...”
“அடப்பாவி... ரெண்டு பேரும் சேர்ந்து என்னைக் கழுவுல ஏத்தறீங்களா..? கல்லு... இவ சொல்றதை நம்பாத. உன்னைப் பத்தி நான் அப்படி சொல்லவே இல்ல...” என்று விஜய் குனிந்து நந்தினியின் போனில் கூவினான்.போனை பின்னுக்குத் தள்ளினாள், நந்தினி. ‘‘நீ போன் பண்ணதும், இங்க பையனுக்கு ஒரே பதற்றம்...” என்றபோது, அவள் கண்களில் குறும்பு பொங்கி வழிந்தது.

“நீ ஒரு ஹெல்ப் பண்ணு கல்யாணி. கேமராவைக் கையில எடுத்துட்டா, இதுக்கு வெயில் தெரியாது... பசி வராது... தாகம் எடுக்காது... தலைல தட்டி நேரங்காலத்துல சாப்பிட வையி, போறும். தேங்க்ஸ் மச்சி...’’ என்று போனை வைத்தாள். “நீங்க ரெண்டு பேரும் எப்படி கூட்டு சேர்ந்தீங்க..?”“எல்லாம் உன் மேல இருக்கற அக்கறைதான்...”“தூக்கத்துலயும், கனவுலயும் உன்னையே நெனைச்சு உருகிட்டிருக்கறவனை என்னல்லாம் சொல்லிக் கலாய்ச்சிட்ட..?”
“அதான் தலகாணிலாம் எச்சிலாவுதா..?”

“ஐய்ய்யோ.. எங்கம்மாகூடயும் பேசினியா?” “அவங்கதான் போன் பண்ணாங்க. சீக்கிரம் மஞ்சக் கயித்தோட வந்து சேரு, இவன் தொல்லை தாங்காம தலகாணிலாம் அழுதுனு சொன்னாங்க...”விஜய் தன் கன்னத்தில் வலிக்காமல் தட்டிக்கொண்டான். “ஒண்ணு தெளிவாப் புரியுது... இந்த தேசத்துல எல்லாப் பொம்பிளைங்களும் எனக்கெதிரா ஒரு சதி பண்ணிட்டிருக்கீங்க!”நந்தினி கலகலவென சிரித்தாள்.

“உனக்கு முன்னாலயே கல்யாணி போன் பண்ணி அரவமணிநல்லூர் வர்றியானு கேட்டுட்டா... எங்க ஆபீஸ்ல இப்ப ஆடிட் நடக்குது. அசைய முடியாது...”அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கையைப் பற்றி உயர்த்தி தன் உதடுகளால் ஒற்றினாள். “ஒழுங்காப் போயிட்டு, ஒழுங்கா வந்து சேரு...”“நான் என்ன கனவு கண்டேன்னு சொல்லவேயில்லியே..?”

“உனக்கு என்ன மாதிரி கனவு வரும்னு எனக்குத் தெரியும்... கெளம்பு!” என்று நந்தினி எழுந்தாள்.விழுப்புரத்திலிருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அரவமணி நல்லூர். மாலை வெயில் மஞ்சளாகத் தேய்ந்துபோன வேளை. அந்த இன்னோவா கார், ஆற்றை ஒட்டியிருந்த பாலத்தைக் கடந்தது.  பாறையும், மண்மேடுமாக இருந்த சாலையில் ஊர்ந்து சென்றது. ஒரு புளிய மரத்தடி நிழலில் நின்றது. கண்ணாடியை இறக்கி, பெட்டிக்கடையில் விஜய் விசாரித்தான்.

“கோயிலைப் பார்த்துக்கறவங்க எங்க இருக்காங்க..?”“நடராஜரைப் பார்க்க வந்திருக்கீங்களா சார்..?”“ஆமாம்...”“அதோ, அந்த மூணாவது ஓட்டு வீடு. அங்கதான் கணேசய்யர் இருக்கறாரு.. அவர்தான் கோயிலோட குருக்கள். அவரைப் பாருங்க... விவரம் சொல்வாரு!”கணேசய்யருக்கு உருண்டை முகம். நெற்றி நிறைய விபூதிப் பட்டை. கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை. அவிழ்த்தால் பாதி முதுகு வரை படரும் குடுமி. கறை படிந்த வரிசை தப்பிய பற்கள்.
சன் மியூசிக்கில் பாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர், கதவு தட்டப்படும் ஒலி கேட்டு, டி.வியை நிறுத்திவிட்டு வெளியில் வந்தார்.

“நாங்க கே.ஜி. டி.விலேர்ந்து வரோம். ‘அறிவோம்... கொண்டாடுவோம்’னு புராதனக் கோயில்களை கவர் பண்ணி ஒரு புரோகிராம் பண்றோம். நம்ப கோயில்தான் மொதல் கோயில். நீங்க விவரங்கள் குடுத்தா நல்லா இருக்கும்...”“உக்காருங்கோ..” என்று ஊஞ்சலைக் காட்டினார். “உங்க பேரு..?”“என் பேரு விஜய். நான் கேமராமேன். இது கல்யாணி. இவங்கதான் நிகழ்ச்சியை வழங்கப்போறவங்க.. இது பன்னீர். கேமரா அசிஸ்டென்ட். இது ப்ரகாஷ். எங்க டிரைவர்...”

“சந்தோஷம். கமலம்... ரெண்டு சொம்பு மோர் கொண்டு வா..!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.பன்னிரண்டு வயதுப் பெண் ஒன்று உள்ளறையிலிருந்து தலையை மட்டும் நீட்டியது. “இந்தக்காவை டி.வில பாத்துருக்கோமே..!” என்று இரட்டைப் பின்னல்கள் துள்ள ஓடி வந்தது. “உங்க டிவில எப்பக்கா கபாலி படம் போடுவீங்க..?”“இன்னும் படமே ரிலீஸ் ஆகலியேம்மா..!”

மடிசார் மாமி கொடுத்த மோர் அமிர்தமாயிருந்தது. “கோயிலைப் பாக்கறேளா..?”அவர்கள் குழுவாக அவருடன் நடந்தார்கள். இருபதடி உயரத்துக்கு கனமான மதில் சுவர். அங்கங்கே காரையும் சுண்ணாம்பும் உதிர்ந்திருந்தன. மதில் சுவரின் மீதிருந்த நந்தி பிம்பங்கள் சில சிதைந்திருந்தன.
குருக்கள் பெரிய பெரிய சாவிகளைத் திருகி, கோபுரக் கதவில் ஒரு உள்கதவைத் திறந்தார். வெவ்வேறு சன்னதிகளுக்குக் கூட்டிப்போனார்.
அழுது வடியும் மங்கலான மஞ்சள் பல்புகள். சன்னதிகளில் மண் அகல்களில் தேய்ந்த தீபச்சுடர்கள்.

“பராமரிப்பு இல்லியோ..?” என்றாள் கல்யாணி.“இந்த ஊரைச் சேர்ந்த சில பெரிய மனுஷா, வெளியூர்லயோ, வெளிநாட்டுலயோ செட்டிலாயிருக்கா பாருங்கோ... அவா அப்பப்ப அனுப்பற பணத்துலதான் வெளக்குக்கு எண்ணெயே வாங்க முடியறது. இவ்வளவு பெரிய கோயிலை தினம் பெருக்கி, சுத்தம் பண்ணி, தூய்மையா வெச்சுக்கறதுக்கே ஆள் படை போறல!”“நம்ப புரோகிராம் வந்ததும், கோயிலுக்கே விடிவு காலம் பொறக்கும்,...பாருங்க, ஐயரே...”

“ஒன் வார்த்தை பலிக்கட்டும்மா..”பொதுவாக கோயிலின் அமைப்பை உள்வாங்கிக்கொண்டான், விஜய். எந்தெந்த கோணத்தில் காட்சி அமைய வேண்டும், அதற்கு எங்கெங்கு கேமரா வைக்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக்கொண்டான். “காலைல வெளிச்சத்துல வீடியோ எடுப்போம். இந்தக் கோயிலோட ஸ்தல புராணத்தையும், வேற முக்கிய சேதி இருந்தா அதையும் அப்ப சொல்லுங்க, ஐயரே...”
“நல்லது...”

“காலைல வரோம்..” என்று கும்பிட்டான் விஜய்.பக்கத்தில் இருந்த திருக்கோவிலூரில் ஓரளவு நாகரிகமாக இருந்த ஹோட்டலில் அறை எடுத்தார்கள்.
தன் அறைக்கான சாவியை கல்யாணியிடமிருந்து பறித்தான் விஜய். “கும்பமேளா ரூமை வெச்சு, இன்னும் என்னை வம்பு பண்ணிட்டிருக்கீங்க இல்ல, ரெண்டு பேரும்..?”“பாவம், கார்பெட் தூசில ராத்திரி பூரா சுவாசம் விட்டுக்கிட்டு நீ அங்க தரைல பொரண்டு கெடந்ததை யார் நம்பறாங்க..? குட்நைட் கண்ணா..” என்று கல்யாணி கண்ணடித்துவிட்டு தன் அறைக்குப் போனாள்.

விஜய் விலையுயர்ந்த கேமராவை கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு, நந்தினிக்கு போன் செய்தான்.அது ஹோண்டா கார். அடர்கறுப்பு நிறம். பெண்ணையாற்றின் கரையை ஒட்டி இரவின் இளங்குளிரில் பார்க்கிங் விளக்குகளை மட்டும் ஒளிரவிட்டுக்கொண்டு, தவழ்ந்து வந்தது. காற்றில் கிளைகளை வீசிக்கொண்டிருந்த வேப்ப மரத்தடியில் நின்றது. பார்க்கிங் விளக்குகளையும் அமர்த்தி, இருளில் ஒன்றிப் போனது. இன்ஜினை அமைதிப்படுத்திவிட்டு, டிரைவர் இருக்கையில் இருந்தவன், பின் இருக்கையில் இருந்தவனிடம் கோயில் கோபுரத்தைக் காட்டினான்.
“அந்தக் கோயில்தான்..”

பின் இருக்கையில் இருந்தவன் அந்த இருட்டிலும், ஜெர்கினும், தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தான். “ஒரே ஒரு குருக்கள்தானே..?”“ஆமா... காலைல ஒரு மணி நேரம், சாயந்திரம் ஒரு மணி நேரம்தான் கோயிலே தொறந்திருக்கும்...” என்றான் காரோட்டி.
“ஈவ்னிங் டயம் மட்டும் சொல்லு...”“நாலு, நாலரைக்குத் தொறப்பாரு... அஞ்சு, அஞ்சரைக்கு மூடிடுவாரு!”“நாளைக்கு வர்றோம்...”

“பக்கத்துல திருக்கோவிலூர்ல ரூம் கெடைக்கும்...”“முட்டாள்... மோப்ப நாய் மொதல்ல அங்கதான் வரும். நூறு கிலோமீட்டர் சுத்துவட்டாரத்துலயே தங்கக் கூடாது. செங்கல்பட்டுக்குப் போயிருவோம். மொதல்ல இருட்டுலயே ஒரு மேப் போடுவோம். வண்டி வேண்டாம். சத்தம் கேக்கும். நடக்கலாம், வா...”இருவரும் காரிலிருந்து இறங்கினார்கள். இருட்டில் கலந்தார்கள்.

‘‘எங்க தலைவர் ஆனாலும் ரொம்ப மோசம்...’’‘‘ஏன்..?’’‘‘ஃபேஸ்புக் அக்
கவுன்ட்டைக்கூட பினாமி பேர்லதான் வச்சிருக்காரு!’’

உங்க டிவில எப்பக்கா கபாலி படம் போடுவீங்க..?”

“இன்னும் படமே ரிலீஸ்
ஆகலியேம்மா..!

‘‘வர்ற எலெக்‌ஷன்ல அந்தக் கட்சித் தலைவர் தனியாதான் நிக்கப் போறாராம்...’’
‘‘நிஜமாவா?’’‘‘ஆமாம்!
அந்தக் கட்சிக் காரங்ககூட யாரும்
நிக்கப் போறதில்லையாம்!’’

‘‘தலைவர் ஏன் அந்த வேட்பாளர் மேல கோபமா இருக்காரு..?’’
‘‘நான் படிக்காதவன், பெரிய ரௌடின்னு பொய் சொல்லி சீட்
வாங்கிட்டாராம்!’’

(தொடரும்...)

சுபா

ஓவியம்: அரஸ்