முகங்களின் தேசம்: 14



பனி மூடிய வீடு

‘பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல்’ என்ற கட்டைக்குரல் செய்தியை அடிக்கடி வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கேட்டிருப்போம். ஜம்முவிலிருந்து காஷ்மீர் சமவெளிக்குச் செல்லும் முக்கியமான சாலைக்கு ‘மொகல் சாலை’ என்று பெயர். அது பூஞ்ச் நகரிலிருந்து கிளம்பி நகர் செல்கிறது. கிட்டத்தட்ட அதுதான் பாகிஸ்தான்-இந்தியா எல்லை. குண்டுகள் வந்து விழும் தொலைவு. ஆகவே, ராணுவரீதியாக அது மிகவும் முக்கியத்துவம் உடையது.

சென்ற 2014 ஜூலை முப்பதாம் தேதி நானும் நண்பர்களும் ஒரு காரில் பூஞ்ச் நகரிலிருந்து கிளம்பி நகர் சென்றோம். காஷ்மீர் என நினைக்கையில் மனதில் தோன்றும் பனிப்பொழிவு, கம்பளி ஆடை எதையும் நினைவில் கொள்ளவேண்டியதில்லை. நாங்கள் சென்ற அந்தப் பருவத்தில் அங்கே வெயில் கொளுத்தியது. மரங்கள் குறைந்த பகுதி.

இமயமலையே அங்கு மண்ணை அள்ளிக் குவித்தது போலத்தான் இருக்கும். அதை வெட்டிச் சரித்துப் போடப்பட்ட பாதையாதலால் புழுதிமயம். மண்ணாலான சிலைகளைப் போலிருந்தது எங்கள் முகம்ஆனால் மேலே செல்லச் செல்ல கொஞ்சம் குளிர்காற்று வரத் தொடங்கியது. சரிவுகளில் ஊசியிலைக் காடுகளின் பசுமையும் தோன்றியது. பூஞ்ச்சிலிருந்து நாங்கள் செல்லவேண்டிய இடம், ‘ஏழு ஏரிகள்’. 

காஷ்மீரின் மிக அழகான இடங்களில் ஒன்று என்றது கூகுள். ஆனால் அப்படி ஒரு இடம் இருப்பது பூஞ்ச்சில் எவருக்கும் தெரியவில்லை. அறுபது கி.மீ தொலைவுதான் என்று கூகுள் சொன்னது. ஆனால்  அங்கெல்லாம் சுற்றுலா என்ற பேச்சே இல்லை.  எவருக்கும் எந்தத் தகவலும் இல்லை.

பூஞ்ச்சில் ஒரு வயதான முஸ்லிம் பெரியவர் நினைவுகூர்ந்து, அவர் இளமையில் அந்த ஏரிக்கரைக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார். நீலநிறமான நீர் நிறைந்த அழகிய ஏரிகள். மிகமிகத் தனிமையான இடம். ‘‘மலையுச்சியில் நிறைந்துள்ள ஏரிகள் அவை’’ என்றவர், நெற்றியில் கை வைத்து ‘‘அல்லாவின் இடம்!’’ என்றார். 

புகழ்பெற்ற மொகல் சாலையில் நகர் நோக்கிக் கிளம்பினோம். மொகல் சாலை மிக அபாயகரமானது. உள்ளூரின் தேர்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டமுடியும். நிலையற்ற மண்ணாலான சாலை.  பல இடங்களில் அதலபாதாளத்தின் விளிம்பு வழியாக உடைந்து சரிந்த பாறைகளை மெல்லச் சுற்றிக்கொண்டு சென்றோம். 

மொகல் சாலையில் ‘பீர் கி கலி’ என்ற இடத்தை அடைந்தபோதுதான் குளிர் வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக குளிர் அதிகரித்தது.  சுற்றிலும் மஞ்சள்நிற அலைகளாக இமயமலையின் வளைவுகள். சாலையோரமாக  ஒரு பெரிய பனிப்பாளத்தைக் கண்டோம். வெயிலில் காய்ந்து கிடந்ததற்கு அந்தப் பனி ஒரு பெரிய பரவசத்தை அளித்தது.

வண்டியை  நிறுத்தி இறங்கி அதைப் பார்த்தோம். மேலே சரிவிலிருந்து இறங்கி சாலையை மூடியிருந்த பனிப்பாளத்தின் அடிப்பக்கம் உருகிச் சென்றுவிட, மேலே குடை போல நீட்டிக்கொண்டிருந்தது. அதன் அடிப்பக்கத்தில் சென்று நின்றோம்.  எஸ்கிமோக்களின் பனி வீடு போல் தோன்றியது. குளிர் நடுக்கியது.

அருகே ஒரு சிறிய வீடு தெரிந்தது. காஷ்மீரின் பழங்கால வழக்கப்படி கட்டப்பட்ட வீடு அது. மலைச்சரிவில் கழிகளை நாட்டி, அப்படியே சரித்து நீட்டி கூரையாக ஆக்கி, அடியில் குடியிருப்பார்கள். கூரை கூம்பு வடிவமானது அல்ல. ஆப்பிள் மரத்தின் தடிகளை நெருக்கமாக சரிவாக அடுக்கியது. மேலே சுள்ளிகளை ஒரு அடி உயரத்துக்கு செறிவாக அடுக்கி, அதன் மேல் மண் போட்டு சமப்படுத்தியிருப்பார்கள்.

குளிர் காலத்தில் மலையிறங்கி வரும் பனி, இதன்மேல் வழிந்து இறங்கி உறையும். ஆனால் கூரை மிகக் கனமானது, சுள்ளிகளால் குளிர் தடுப்பு செய்யப்பட்டது என்பதனால் வீட்டுக்குள் குளிர் வராது. மேலே மைனஸ் அளவுக்கு குளிர் இருந்தாலும், பனிக்கட்டி ஒரு குளிர்தடுப்பானாகச் செயல்பட்டு உள்ளே ஜீரோவுக்கு மேலேதான் குளிரை அனுமதிக்கும். உள்ளே கணப்பும் எரிந்தால், பிளஸ் பத்து டிகிரி வரை வெப்பம் இருக்கும்.

அதாவது வெளிக்கும் உள்ளுக்கும் பதினைந்து டிகிரி வரை வெப்ப வேறுபாடு இருக்கும். அது அந்த குளிருக்கு மிகமிக வெதுவெதுப்பாகத் தெரியும்.அந்த வீடு முகமது அயூப் என்பவருக்குரியது.

அயூப் அப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக ஆடு மேய்க்கும் குடியைச் சேர்ந்தவர். கல்வியறிவற்றவர். மலைப் பழங்குடியினர். குளிர்காலத்தின் தொடக்கம் வரை அங்கே இருப்பார். குளிர் கடுமையாகும் ஜனவரியில் மலையிறங்கி ஜம்மு அருகே சென்றுவிட்டு, மீண்டும் மார்ச் மாதம் திரும்பி வருவார்.

அவரிடம் அந்த ஏரிகளைப் பற்றி விசாரித்தோம். அவர் ஏழு ஏரிகளைப் பற்றி அறிந்திருந்தார்.  பலமுறை அங்கு சென்றிருந்தார். ‘‘அந்த ஏரி இருபது கி.மீ நடந்து செல்லவேண்டிய இடம். அற்புதமான இடம், பார்த்தாக வேண்டிய இடம்’’ என்றார். அவரும் அதையே சொன்னார், ‘அது அல்லாவுக்குரிய இடம்.

’எங்களை தன் இல்லத்துக்கு அழைத்தார் அயூப். நாங்கள் அங்கே சென்றபோது அவரது மனைவியும் இரு மருமகள்களும் ஒரு மகளும் அவர்களின் ஆறு குழந்தைகளும் அங்கிருந்தனர். அவரது அண்ணன் மகன் யூனுஸ் மற்றும் குழந்தைகள் அருகே ஒரு வீட்டில் இருந்தனர். குட்டிப்பெண் ஒன்றுக்கு பெயர் வைக்கப்படவில்லை, குடியா என அழைத்தனர். ‘பொம்மை’ என்று பொருள்.

பெரிய மரத்தூண்கள் கொண்ட ஒற்றை அறையே அந்த வீடு. அதன் மூலையில் அடுப்பு. அதுவே கணப்பு. அருகிலேயே விறகுக் குவியல். விறகடுப்பு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதாக இருந்தது. அவரது பீபி எங்களுக்கு டீ போட கெட்டிலை அதன்மேல் வைத்தாள். நாங்கள் ‘‘டீ வேண்டாம், கஹ்வா வேண்டும்’’ என்றோம்.

பெண்கள் வாய் பொத்திச் சிரித்தனர். ‘‘சரி, கஹ்வா’’ என்றார் அயூப் முகத்தின் சுருக்கங்கள் மலர, கண்கள் சுருங்க, சிரித்தபடி.‘‘நாங்கள் கன்னியாகுமரியிலிருந்து வருகிறோம்’’ என்றபோது அயூப் திகைத்து, பின்பு சிரித்தார். ‘‘காஷ்மீர் - கன்னியாகுமரி’’ என்றார். எங்கும் எழுதப்பட்டிருக்கும் புகழ்பெற்ற வாசகம் அது. ‘‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு. நானும் நீங்களும் இந்தியர்கள்’’ என்றோம். ‘‘ஆம், இந்தியர்கள்’’ என்று சொல்லி சிரித்தார்.

அவரது இல்லத்திலேயே தங்கி, மறுநாள் அந்த ஏரிகளுக்குச் சென்றால் என்ன என்று நினைத்தோம். அந்த வீடு மிக வியப்பூட்டியது. ஓர் அனுபவமாக அமையுமே என நினைத்தோம். அதை  உடைந்த இந்தியில் அயூப்பிடம் கேட்டபோது அவரது முகம் மலர்ந்தது. அதை அவருக்கு அளிக்கப்பட்ட பெரிய கௌரவமாகவே எடுத்துக்கொண்டார். எங்களுக்கு மெத்தையும் கம்பளிகளும் அளிப்பதாகச் சொன்னார்.

ஓட்டுநரிடம் சென்று அதைச் சொன்னபோது அவர் திடுக்கிட்டார். ‘‘முடியவே முடியாது’’ என  உறுதியாக மறுத்துவிட்டார்.   வாதாடிப் பார்த்தோம். ‘‘இங்கே காரை நிறுத்தமுடியாது’’ என்றார். ‘‘இது பாகிஸ்தான் எல்லை. இங்கே காரை நிறுத்த அனுமதி கிடையாது. ராணுவத்தினர் பார்த்தால் அடிப்பார்கள்’’ என்றார். 

‘‘சரி, நீங்கள் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டு அதிகாலையில் கிளம்பி வாருங்கள். நாங்கள் இங்கிருக்கிறோம்’’ என்றோம்.
‘‘புரியாமல் பேசாதீர்கள்! உங்களுக்கு நான்தான் பொறுப்பு. உங்களை இங்கே விட்டுவிட்டு நான் சென்றால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் ராணுவத்தினர்’’ என்று உறுதியாகச் சொன்னார்.நான் கோபத்துடன், ‘‘வேறு என்னதான் செய்வது?’’ என்றேன்.

‘‘இங்கே தங்கவேண்டாம். இது ஆபத்து’’ என்றார் ஓட்டுநர். ‘‘இவர்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள். இவர் புஜார் என்னும் பழங்குடி இனத்தவர். இவர்கள்தான் சன்னி தீவிரவாதிகளின் உள்நாட்டுப் படையே’’ என்றார். நான் ‘‘அயூப்பின் முகமும் கண்களும் அப்படிக் காட்டவில்லை. அவரை நம்புகிறேன்’’ என்றேன். 

‘‘கண்டிப்பாக இவர் மிக நல்ல மனிதர். பொதுவாகவே இவர்கள் நல்லவர்கள். ஆனால் மத ஆணை என வந்தால் அதை மீற மாட்டார்கள். மேலும் இவர்கள் தீவிரவாதிகளை மீறி எதுவும் செய்ய முடியாது. இவர்களுக்கு இந்திய ராணுவத்தின் பாதிப்பு ஏதுமில்லை. நீங்கள் அங்கே தங்கினால் தீவிரவாதிகள் வந்து ‘நீங்கள் யார்’ என்று கேட்டு அவரை அடிப்பார்கள். ராணுவமும் அவரை அடிக்கும்’’ என்றார்.

நண்பர் கிருஷ்ணன், ‘‘சார்! அயூப்போட மனைவி ‘அவங்களை இங்க தங்கச் சொல்லாதே’ன்னு சொல்லிட்டே இருந்தார். இவங்க பாஷையா இருந்தாலும் உருது மாதிரி இருக்கிறதனால கொஞ்சம் புரிஞ்சுது. அயூப் அவங்களை திட்டினார். நாம கிளம்பிருவோம்’’ என்றார். மற்றவர்களும் அதையே சொன்னார்கள். கிளம்ப முடிவெடுத்தோம்.  

நாங்கள் அங்கே தங்கப் போவதில்லை என்று சொல்லப்பட்டதும் அயூப்பின் முகம் மாறியது. மிகவும் பண்பட்டவர் என்பதனால் உடனே மறைத்துக் கொண்டார். நான் அக்குழந்தைகளை ஆசீர்வதித்து, எங்கள் வழக்கப்படி பணம் கொடுக்க விரும்புவதாக அவரிடம் சொன்னேன்.
அவர் மகிழ்ச்சியுடன் சிரித்தார். குழந்தைகளை முத்தமிட்டு ஐந்நூறு ரூபாய் வீதம் கொடுத்தேன். அவர்களிடம் விடைபெற்றோம். அயூப்பிடம், ‘அருகே ஷோப்பியான் நகரில் நண்பர் வந்திருப்பதாகவும், சென்று அவரையும் அழைத்துக்கொண்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாகவும், ஏரிக்குச் செல்லலாம்’ என்றும் சொல்லிவிட்டுக்  கிளம்பினோம்.

அருகே இருந்த கீர்போரா என்ற ஊரில் அறை போட்டோம். முழுக்க முழுக்க சன்னி முஸ்லிம்களின் நகரம். மறுநாள் காலை கிளம்பி அயூப்பை அழைத்துக்கொண்டு ஏரிக்குச் செல்லலாம் என்று சொன்னால், ஓட்டுநர் கண்ணீர் மல்க மன்றாடினார். அயூப் ஓர் நிறைந்த மனிதராக எனக்குப்பட்டார். விடுதியிலும் உணவகத்திலும் சந்திக்க நேர்ந்த அனைத்து இஸ்லாமியரும் மிக மிக நட்புடன் மட்டுமே இருந்தனர். ‘கன்னியாகுமரியில் இருந்து வருகிறேன்’ என்ற பேச்சே அவர்களை மகிழ்வடையச் செய்ததைக் கண்டேன்.

ஆனால் எங்கள் ஓட்டுநர் எங்களை எச்சரித்தார். ‘‘அதெல்லாமே ஒருபக்கம்தான். அவர்களுக்கு சிந்திக்கும் உரிமையே இல்லை. அவர்களில் பாதிப் பேர் மத அடிமைகள்; மிச்சம் பேர் பயப்படுபவர்கள்’’ என்றார்.  எதுவானாலும் ஓட்டுநரை மீறி செல்ல முடியாது. ஆகவே, ஏரிகளைப் பார்க்கச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தோம்.

காஷ்மீர் முழுக்க ஆழமான அவநம்பிக்கை இருப்பதை அந்தப் பயணத்தில் காணமுடிந்தது. ஊடுருவி வரும் தீவிரவாதிகளும் பிரிவினை அரசியல்வாதிகளும் உருவாக்கிய கசப்பு அது. அச்சம் உருவாக்கிய கசப்பு. அந்தக் கசப்பு இஸ்லாமியருக்கு இந்துக்களிடம் இல்லை. இந்தியாவிடமும் இல்லை. அவர்கள் வணிகத்தை விரும்புபவர்கள், ஆனால் அஞ்சியிருக்கிறார்கள்.

ஒரு பெட்ரோல் நிலையம் சென்று டீசல் கேட்டோம். ஓட்டுநர் ஓர் இந்து என்பதனால் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ‘‘நீங்கள் பெட்ரோல் போட்டுவிட்டுச் செல்வீர்கள். நாங்கள் ராணுவத்துக்கு பெட்ரோல் கொடுத்ததாகச் சொல்லி எங்களை அப்பாலிருந்து வருபவர்கள் அடிப்பார்கள்’’ என்றார் உரிமையாளர். நாங்கள் தொலைதூரப் பயணிகள் என்று சொல்லி கெஞ்சியபோது ஐந்நூறு ரூபாய்க்கு மட்டும் டீசல் அளித்தார்கள்.  இத்தனைக்கும் அது இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம். 

அத்தனை அச்சம் ஆள்கிறது காஷ்மீர் சமவெளியை. நாங்கள் அஞ்சியதில் தப்பில்லை. ஆனால் அயூப் எங்களுக்காக சாலையில் காத்து நின்றிருப்பாரா என்று நினைத்தபோது எங்களையே கசந்துகொண்டோம்!நாங்கள் செல்லவேண்டிய இடம், ‘ஏழு ஏரிகள்’.  காஷ்மீரின் மிக அழகான இடங்களில்  ஒன்று என்றது கூகுள். ஆனால் அப்படி ஒரு இடம் இருப்பது பூஞ்ச்சில்  எவருக்கும் தெரியவில்லை.

மொகல் சாலை மிக அபாயகரமானது. உள்ளூரின் தேர்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டமுடியும். நிலையற்ற மண்ணாலான சாலை.
இவர்கள் தீவிரவாதிகளை மீறி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அங்கே தங்கினால் தீவிரவாதிகள்  வந்து ‘நீங்கள் யார்’ என்று கேட்டு அவரை அடிப்பார்கள். ராணுவமும் அவரை  அடிக்கும்.

ஜெயமோகன்

ஓவியம்: ராஜா

(தரிசிக்கலாம்...)