இவர்தான் ‘ஆடை கட்டி வந்த நிலவு’!



ஐந்தே ஆண்டுகளில் சுமார் 250 திரைப்படப் பாடல்களை எழுதி புகழின் உச்சத்திற்குச் சென்று, திடீரென்று  தன் 29 வயதில் உதிர்ந்து போனவர் பட்டுக்கோட்டையார். ‘பட்டுக்கோட்டை இருந்திருந்தால் இந்தக் கண்ணதாசன் இல்லை’ எனக் கவியரசரே சொல்லும் அளவுக்கு பாட்டு உலக சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர்.

அவர் இறப்பை நினைக்கும் போதெல்லாம் தமிழார்வலர்கள் நெஞ்சில் இடறுவது, நிர்க்கதியாய் நின்ற அவரின் மனைவியும் ஆறு மாதக் குழந்தையும்தான். இப்போது எப்படியிருக்கிறது பட்டுக்கோட்டையாரின் குடும்பம்? பட்டுக்கோட்டைக்கு ஒரு ஸ்பெஷல் விசிட்!

பட்டுக்கோட்டையார்  என்று அழைக்கப்பட்டாலும், அவரது சொந்த  ஊர்  பட்டுக்கோட்டையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்  ‘சங்கம் படைத்தான் காடு’ (பேச்சு வழக்கில் செங்கப்படுத்தான்காடு).

ஐந்து   ஏக்கர்  தென்னை, மா, எலுமிச்சை  வளர்ந்து நிற்கும்  தோப்பின் நடுவே இருக்கும் வீட்டில்  வசித்து வருகிறார், பட்டுக்கோட்டையாரின்  துணைவியார்  கௌரவம்மாள். கவிஞரின்   மறைவுக்குப்  பின்  ஆறு  மாதக்  குழந்தையான  குமாரவேலுவுடன்  இங்கு வந்தவர்... இன்னும் கணவரின் நினைவுகளைப் பசுமையாய் தக்க வைத்தபடி வாழ்கிறார்...

‘‘கவிஞர்  பாட்டு எழுத சான்ஸ்   கேட்டு  சேலம்  மாடர்ன்  தியேட்டர்ஸ்  படிகள்ல காத்துக் கிடந்த  காலம்... இசை  அமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதன் எதிர்பார்த்த  மாதிரி  பாடலை  பெரிய பெரிய கவிஞர்களாலேயே தர முடியலை. ‘அண்ணே... பாட்டு  எழுத  புது கவிஞர் ஒருத்தர் வெளியே  காத்து நிக்கிறார்’னு விஸ்வநாதன் கிட்ட மேனேஜர் சொல்லியிருக்கார். ‘பேரு வாங்கினவங்களாலேயே முடியலை... புதுசா வந்தவங்ககிட்ட எல்லாம்  அல்லாட  எனக்கு  நேரமில்லை’னு சொல்லிட்டாராம். ரெண்டு நாள் ஆகியும், பாட்டு உருவாகலை. மேலாளர், ‘இந்தப் பல்லவியப் பாருங்க... பிடிக்கலைன்னா விட்ருங்க’னு ஒரு சீட்டைக் கொடுத்திருக்கார்.

‘குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளந‌ரிக்குச் சொந்தம்... குள்ளந‌ரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்... தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்... சட்டப்படி பார்க்கப் போனா  எட்டடிதான் சொந்தம்’ - இதுதான் அந்தப் பல்லவி. இது, ‘பாசவலை’  படத்தில் வந்துச்சு. அதுக்கு முன்னாடியே நாலு படங்கள்ல பாட்டு எழுதியிருந்தாலும், அதுதான் கவிஞருக்கு பேரு வாங்கித் தந்த படம். ‘ஏன்யா... எல்லாரும்  ஆறடினுதான்  எழுதுவாங்க... நீர் எட்டடினு எழுதியிருக்கீரே... அது என்ன கணக்கு?’னு விஸ்வநாதன் கேட்டாராம். ‘என்னை  மாதிரி ஆளுகளுக்கு எட்டடி வேணுமில்ல...’னு கவிஞர் சிரிச்சாராம். ஆமா, அவங்க நல்ல  உயரம்!’’ - சொல்லும்போது சிலிர்க்கிறார் கௌரவம்மாள்.

இவர்கள் குடும்பத்துக்கென்று சொற்பமாய் சில சொத்துக்கள் இருந்திருக்கின்றன. இத்தனை வருடமாய் அதில் இம்மி அளவும் கரையாமல், யார் கையையும் நம்பாமல் கட்டுக்கோப்பாய் குடும்பத்தை நடத்தியிருக்கிறார் கௌரவம்மாள். மகன் குமாரசாமி நன்கு படித்து அரசு வேலையில் இருக்கிறார். அனைவரும் நலம். கணவரின் இழப்பைத் தவிர கௌரவம்மாளிடம் வேறு சோகக் கதைகள் இல்லை. Very strong Lady!

‘‘பட்டுக்கோட்டைக்குப்   பக்கத்துல  ஆத்திக்கோட்டைதான்  என்  சொந்த ஊரு. கவிஞரும் அவர் அண்ணனும் என்னைப் பொண்ணு பார்க்க வந்தாங்க. அண்ணனுக்குத்தான் பொண்ணு பார்க்கப் போறோம்னு அவர் நினைச்சி வந்தாராம். திரும்பிப் போகையில ‘பொண்ணு  எப்படி?’னு அண்ணன் கேட்க, ‘லட்சணமா இருக்கு’னு சொல்லியிருக்கார்.

‘அந்தப் பொண்ணு உனக்கு பாத்தது...’ என்று அண்ணன் கதையை மாத்த, இவருக்கு ஒரே ஆனந்தம். ‘ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ’னு என்னை நினைச்சுத்தான் எழுதினதா சொல்வார்!எங்க கல்யாணம் சென்னையில நடந்தது. சீர்திருத்தத் திருமணம். தலைமை  தாங்கியவர்  அவரோட குருவான புரட்சிக்   கவிஞர் பாரதிதாசன். மேடையில நான் அவர் பேரைச் சொல்லி ‘கட்டிக்கிட சம்மதம்’னு சொன்னாதான் ஆச்சுனு சொல்லிட்டாங்க. யாரு என்ன நினைப்பாங்களோனு ரொம்பக் கஷ்டப்பட்டு தயங்கித் தயங்கி அவரு பேரைச் சொன்னேன்.

கல்யாணமான புதுசுல அவர் ரொம்ப  பிஸி.  காலையில  போனா  இரவு  ரொம்பத் தாமதமா வருவார்.  நான் தூங்கிடுவேன்.  கவிஞர்  கோவமா ஏதாவது  திட்டுவார்.  அவர்  அண்ணன், ‘அது சின்னப்   பொண்ணுடா... திட்டாதே!’ம்பார்.  அதுக்கு, ‘சின்னப் பொண்ணாம் சின்னப் பொண்ணு... சின்னப்  பொண்ணை ஏன் எனக்குக் கட்டி வச்சீங்க? கொட்டாங்கச்சியைக் கையில கொடுங்க... விளையாடிக்கிட்டு இருக்கட்டும்’னு சொன்னார்.   அன்றிலிருந்து  என்னை  அவர் ‘சின்னப் பொண்ணு’னுதான் கூப்பிடுவார்!

தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டுதான் அவரோட அண்ணன் கல்யாணம் கட்டிக்கிட்டார். அவர் மனைவிக்கு  வளைகாப்பு. அப்போ, ‘கல்யாணப் பரிசு’ படத்துக்கு  வளைகாப்பு பத்தி ஒரு பாட்டு எழுதணும்... ‘வளைகாப்பு பத்தி  ஏதாச்சும்  எழுதி வை’னு என்கிட்ட சொல்லிட்டு அவர் வெளியே போயிட்டார்.  சொன்ன மாதிரி செய்யலன்னா கோபப்படுவார்.

அதனால,   ‘அக்காளுக்கு வளைகாப்பு... அத்தான் மொகத்துல பொன்சிரிப்பு’னு ரெண்டு வரி எழுதி வச்சேன். அதைப் பார்த்ததும்  அவருக்கு சந்தோஷம். ‘பரவாயில்லையே... நல்லா எழுதியிருக்கியே...’ என்றவர்,  அதையே பல்லவியா வச்சு, பாட்டு எழுதிட்டார். அந்தப் பாட்டுக்குக் கிடைச்ச ஊதியத்தையும் என்கிட்டயே கொடுத்துட்டார்!

தீபாவளி வந்தாலே இப்பவும் எல்லா சேனலிலும் கவிஞர் எழுதின ‘உன்னைக் கண்டு நான் ஆட,  என்னைக் கண்டு நீ  ஆட...  உல்லாசம்  பொங்கும் இன்ப தீபாவளி’ பாட்டுதான் போடுவாங்க. அதைக் கேட்கும்போதெல்லாம் என்னையும் அறியாம அழுதுடுவேன். அவரோட நான் இருந்த ரெண்டு  தீபாவளி நாட்கள்  நினைவுக்கு வரும்... மூணாவது  தீபாவளிக்கு  அவர் இல்லையே!’’ - அந்த இடுங்கிய கண்களின் ஈரம், பாரமேற்று
கிறது நமக்குள்!

தீபாவளி வந்தாலே எல்லா  சேனலிலும் கவிஞர் எழுதின ‘உன்னைக் கண்டு நான் ஆட,  என்னைக் கண்டு நீ  ஆட...   உல்லாசம்  பொங்கும் இன்ப தீபாவளி’ பாட்டுதான் போடுவாங்க. அதைக்  கேட்கும்போதெல்லாம் என்னையும் அறியாம அழுதுடுவேன்.

- பிஸ்மி பரிணாமன்