நெஞ்சிலிருந்து பறந்துவிடாது!‘தமிழ்நாட்டில் பிள்ளையார் எப்படி பிரசன்னம் ஆனார்?’ என்ற கட்டுரை காரண காரியங்களோடு விளக்கியது. அட்டையில் வண்ண மயிலுடன் அழகு  முருகன், உட்புறம் வைகாசி விசாக நட்சத்திரத்தில் அவதரித்த அறுபடை நாயகனின் மகத்துவங்கள் எல்லாம் இதழின் மகுடத்தில் வைரங்களாக  ஜொலித்தன.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

சுயநலமே நன்மை, தீமைகளை முடிவு செய்கிறது. தன் எண்ணம் நிறைவேறாவிட்டால் நல்லவரும் தீயவரே. தன் எண்ணம் நிறைவேறினால் தீயவரும்  நல்லவரே. தன்னைப்போலவே பிறரையும் நினைத்தால் எல்லோரும் சமமே. என்றெல்லாம் ரத்தினச் சுருக்கமாய் புரிய வைத்தன பொறுப்பாசிரியரின்  தலையங்கம்.
- A.T.சுந்தரம், சென்னிமலை.

தெளிவு பெறுஓம் பகுதியில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?’ என்ற வினாவிற்கு மணிவாசகரை மேற்கோள் காட்டி,  அவருடைய திருவாசகத்திலிருந்து ‘உலகத்தில் உள்ள எல்லா நாட்டினரும் காணும் இறைவனும் தென்னகத்தில் உள்ளோர் கூறும் சிவனும் ஒன்றே’  என்ற விளக்கத்தையும் சொன்னது அருமை.
- K.சிவக்குமார், சீர்காழி.

‘வடிவேலன் அருள் பொங்கும் வைகாசி’ கட்டுரை, முருகப்பெருமானுக்கும் வைகாசி மாதத்திற்குமுள்ள ஆன்மிகத் தொடர்புகளைச் சுருக்கமாக  அதேசமயம் தெளிவாகவும் எடுத்துரைத்தது. முருகனின் புகழ்பாடி அவனருள் வேண்டும் விஷ்ணுதாசனின் பாடல்கள் அருமை.
- இரா.வளையாபதி,
தோட்டக்குறிச்சி, கரூர்.

அறுபடை வீடுகளுக்குரியவனாம் அழகன், தமிழ் அழகன், முருகன் போன்றே வைகாசி சிறப்பிதழும் பலப்பல அழகுகளுடன் வாசகர்கள் மனதில் பதிந்து  போனது.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

வள்ளி மணவாளனின் அட்டைப்படம் நல்ல தரிசனம். திருப்புகழ்த் திலகம் மதிவண்ணனின் இலக்கியத்தேன், திகட்டாத இறைச்சுவை அளித்தது.  ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ இளைஞர்களின் பொறுப்பை ஆணித்தரமாக உணர்த்துகிறது. ஹரிபிரசாத் சர்மாவின் ‘தெளிவு பெறுஓம்’ பதில்கள் பேரின்பம்.  எந்தக் கேள்விக்கும் புத்தியில் நிலைக்கும்படியான பதில்கள்!
- வைரமுத்து பார்வதி, ராயபுரம்,

‘முக்கண்ணிலிருந்து முருகன்’ என்ற தலைப்பில் அபூர்வ முருகன் திருத்தலங்கள் பற்றிய தகவல்கள், ‘வடிவேலன் அருள் பொங்கும் வைகாசி’ கவிதை  என வழங்கி முருக பக்தர்கள் நெஞ்சில் பஞ்சாமிர்தம் வார்த்து விட்டீர்கள். கருட பகவானை வணங்குவதன் மகிமையை, கருட சேவை வைபவம்  கொண்டாடுவதன் தாத்பரியங்களை விவரித்து எழுதப்பட்ட கட்டுரை நெஞ்சிலிருந்து என்றும் பறந்து விடாது!
-த.சத்தியநாராயணன், சென்னை-72.

தெரிந்த ஊர்தான். ஆனால் இதுவரை அறிந்திடாத பல புது தகவல்களை நாமக்கல் கோயில் கட்டுரை தீர்த்து வைத்தது. முக்கண்ணிலிருந்து தோன்றிய  முருகன் எங்களின் அகக்கண்ணை திறந்துவிட்டான். பெரிய திருவடிப்பற்றி ஒரு பெரிய (கருடப்) புராணமே தந்து அசத்தி விட்டீர்கள்.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைக் குறள் வழி நின்று காட்டிய திருப்பூராரின் விளக்கம் மிக அருமை. அவர் எண்ணத்தில் உருவான வண்ணங்கள்  ஒளி மிகுந்து மிளிர்கின்றன.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.