பாம்பு பூஜை, சாஸ்திர விரோதமா?



தெளிவு பெறுஓம்

?வீட்டில் பூஜையின்போது பயன்படுத்தும் மணியின் கைப்பிடியில் சக்கரம், அனுமன், நந்தி என வடிவங்கள் உள்ளன. இவையும் தெய்வங்கள்தானே?  இவற்றிற்கும் அபிஷேக ஆராதனை செய்யலாமா?
-சு. கௌரிபாய், பொன்னேரி.

செய்ய வேண்டும். தினமும் வீட்டில் உள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம், தீபாராதனை ஆகியவற்றை செய்து  முடித்தபிறகு இனிமேல் அன்றைய தினம் மணி அடிப்பதற்கான வேலை இல்லை என்றானவுடன் மணியின் மேல் உள்ள தெய்வ வடிவத்திற்கு  சுத்தமான ஜலம் விட்டு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், புஷ்பம் வைத்து சிறிதளவு அன்னமும், பருப்பும் நைவேத்யம் செய்து அதனைக்  கொண்டுபோய் காகத்திற்கு வைக்க வேண்டும். ஆனால் இந்த மணிக்குத் தனியாக தீபாராதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

?ஆலயங்களில் ஹோமங்கள் முதலான பூஜைகளின்போது மந்திரங்களை ஒலிபெருக்கி மூலம் அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்து மற்றவர்களுக்கு  இடையூறு செய்யலாமா? வேத மந்திரங்களை அதிக சப்தமாக மைக் மூலம் ஓதலாமா?
-விசுவம், பண்ருட்டி.

மற்றவருக்கு இடையூறு செய்யும் எந்த செயலும் தவறுதான். அதில் சந்தேகமில்லை. அந்நாளில் நாதஸ்வர ஒலியும், ஆலய மணியின் ஓசையும்  கேட்டவுடன் பொதுமக்கள் ஆலயத்தில் பூஜை நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வர். ஆனால் இன்றைய சூழலில் சாலைப் போக்குவரத்து  இரைச்சல், தொலைக்காட்சி பெட்டியின் ஒலி, அலைபேசிகளின் ஓசை என்று ஒலிமாசு மிகுந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில்  ஒலிபெருக்கி இல்லையென்றால் ஆலயம் என்று ஒன்று இருப்பதையே மக்கள் மறந்துவிடுகிறார்கள்!

ஆலயம் இருப்பதை மக்களுக்கு நினைவூட்டவே ஒலிபெருக்கி மூலம் பக்திபாடல்களை ஒலிபரப்புகிறார்கள். ஆனால் இந்த ஒலிபெருக்கியின் சப்தம்  கட்டுக்குள் இருக்க வேண்டும். ஸ்லோகங்கள், துதிகள், வடமொழி பிரார்த்தனைகள், தேவாரம், திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, திவ்யபிரபந்தம்  முதலான பாடல்களை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்யலாம். வேதமந்திரங்களை மைக் வைத்து ஒலிபெருக்கி மூலம் சப்தமாக ஒலிக்கச் செய்யக்  கூடாது. சாஸ்திரம் அதற்கு உடன்படவில்லை. உங்கள் ஆதங்கம் நியாயமானதே. காலமாற்றத்தினால் உண்டான கட்டாயத் தவறுகளில் இதுவும்  ஒன்று.

?குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் அல்லது மூத்த பிள்ளைக்கு ஆனி மாதம் திருமணம்
செய்யக்கூடாது என்கிறார்களே.. இது சரியானதா?
-ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும்(ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட  மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல்.  இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள்.

ஆனால் பொதுவாக, மூத்த பெண்ணிற்கோ அல்லது ஆணுக்கோ ஆனி மாதத்தில் செய்யக் கூடாது என்று சொல்லக் கூடாது. தலைச்சன் பிள்ளையாகப்  பிறந்தவனுக்கு (ஜேஷ்ட குமாரன்) அதேபோன்று தலைச்சனாகப் பிறந்தவளுக்கும் (ஜேஷ்ட குமாரத்தி) ஆனி மாதத்தில் (ஜேஷ்ட மாதத்தில்) திருமணம்  செய்வது கூடாது. மற்ற மாதங்களில் இதே ஜோடிக்குத் திருமணம் செய்யலாம்.

?அமாவாசை நாளில் விரதம் மேற்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும் என்று சொல்கிறார்கள். அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு தவிர  வேறு விரதம் உண்டா? குடும்ப ஒற்றுமைக்கு எந்த விரதம் மேற்கொண்டால் நல்லது?
-ஆர்.செல்வம், பரப்பனங்காடி, கேரளா.

கேதார கௌரீ விரதம் - தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம். சில குடும்பங்களில் அமாவாசை நாளில்  முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தசியிலேயே அதாவது தீபாவளி அன்றே இந்த விரதத்தை கடைபிடிக்கும் பழக்கமும்  உள்ளது. இந்த விரதத்தை மேற்கொண்டு பார்வதிதேவி, சிவபெருமானின் உடலில் சரிபாகத்தினைப் பெற்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன.  தம்பதியருக்குள் உண்டாகும் கருத்து வேற்றுமைகள் காணாமல் போய், என்றென்றும் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை நமக்கு  அருளியதுதான் இந்த கேதார கௌரீ விரதம். ஐப்பசி மாத (தீபாவளி) அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக இந்த விரதத்தைத் துவங்கி சரியாக  21வது நாளாக அமாவாசை அன்று முடிக்க வேண்டும்.

பெரும்பாலான பெண்களுக்கு நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் இறுதி நாளான தீபாவளி - அமாவாசை நாளன்று 21 என்ற  எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கொம்பு, சந்தனவில்லை, விபூதி உருண்டை, அதிரசம், வடை ஆகியவற்றை நோன்புசட்டியில்  வைத்து நோன்பு எடுக்கும் பழக்கம் உருவாயிற்று. ஆண்களும், பெண்களும் ஒன்றாக இணைந்து இந்த நோன்பு மேற்கொள்ள ஆலயத்திற்குச்  செல்வதைக் காணலாம். கௌரீ சமேத கேதாரீஸ்வரராக விளங்கும் அர்த்தநாரீஸ்வரரை நோக்கி மனமுருகி பிரார்த்தனை செய்வதே இந்த கேதார  கௌரீ விரதத்தின் நோக்கம். இந்த விரதத்தினை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை நிச்சயம் கூடும்.

?சிவாலயங்களில் நவகிரஹங்கள் உள்ளன. அதுபோல பெருமாள் கோயில்களில் நவகிரஹங்கள் இல்லையே, அது ஏன்?
-பாஸ்கரன், பெருமாள்பட்டு.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சந்நதியோ, தனியாக உருவ வழிபாடோ செய்யப்படவில்லை.  தனிமனிதருக்கு ஜாதகம் எழுதும் பழக்கம் தோன்றிய பின்னர் பரிகார பூஜைகள் செய்வதற்காகவும், விளக்கேற்றி வழிபடுவதற்காகவும்  உருவாக்கப்பட்டதே நவக்கிரக சந்நதி. சைவ சமயத்தைப் பொறுத்தவரை இறைசக்தியின் பல்வேறு வடிவங்களான விநாயகர், முருகன், துர்க்கை,  லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள் என கடவுளர்கள் மட்டுமல்லாது இறைவனுக்கு தொண்டாற்றிய நாயன்மார்களைக்கூட தெய்வங்களாக வணங்கும்  பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

ஆனால் வைணவ சமயம் அனைத்தும் நாராயணனே என்பதை அறுதியிட்டு சொல்கிறது. உலகத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம்  பெருமாளே என்று உறுதியாக உரைக்கிறது. ஆதலால் பழமை வாய்ந்த பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை.  எனினும் தற்காலத்தில் புதிதாக உருவாகும் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவதைக் காண முடிகிறது.

?சமீபத்தில் பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் கைது என்று பத்திரிகையில் செய்தி வந்தது. பாம்பு அம்பிகையின் அம்சம்தானே, இதில் என்ன  தவறு உள்ளது?
-ஆர். கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

விஷ ஜந்துக்களை வைத்து பூஜை செய்வது என்பது சாஸ்திர விரோதமே ஆகும். கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவற்றிற்கு மட்டுமே  பிரத்யட்சமாக செய்ய விதி உண்டு. அதாவது சாத்வீக குணம் கொண்ட பசு, யானை, குதிரை ஆகியவற்றை மட்டுமே உண்மையான ஸ்வரூபத்தில்  வழிபட இயலும். இவை அனைத்தும் தாவரங்களை மட்டுமே உண்டு உயிர்வாழும் தாவர உண்ணிகள் ஆகும். இதிலும் ஒரு சிலர் கோபூஜையை  மட்டுமே ஏற்றுக்கொள்வர். மற்ற இரண்டையும் அரசர்கள் முதலான க்ஷத்ரியர்கள் செய்யலாம் என்று சொல்வார்கள்.

காரணம் யானை, குதிரை இரண்டும் அவர்களது படைகளில் முக்கியப் பங்கு வகித்தன. நாய் என்பது பைரவ ஸ்வரூபம் என்று நாயைக் கட்டி வைத்து  பிரத்யட்சமாக பூஜை செய்வதும் கூடாது. புலி ஐயப்பனின் வாகனம் என்பதற்காகவும், சிங்கம் அம்பாளின் வாகனம் என்பதற்காகவும் அவற்றை வைத்து  பூஜை செய்ய இயலுமா? குரங்கு ஆஞ்சநேய ஸ்வரூபம் என்பதற்காக குரங்கைக் கட்டி வைத்து பூஜிப்பது என்பது அபத்தமானது. பாம்பு என்பது விஷ  ஜந்து. இந்த விஷ ஜந்துவை வைத்து பூஜை செய்வதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதனால்தான் சிங்கம், புலி, நாய், பாம்பு முதலானவற்றை சிலைகளாக, காவல் தெய்வங்களுக்கு அருகில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.  சர்ப்பபலி சாந்தி என்று பூஜை சாஸ்திரத்தில் உண்டு. இந்த பூஜையிலும் நிஜமான சர்ப்பத்தை பயன்படுத்தமாட்டார்கள். கோதுமை மாவினால் சர்ப்பம்  போன்ற வடிவத்தைச் செய்து அதில் அனந்தன் முதலான சர்ப்பங்களை ஆவாஹனம் செய்வதுடன் 168 முட்டைகளை அதாவது மாவினால்  செய்யப்பட்ட சிறு உருண்டைகளையும் வைத்து பூஜிப்பார்கள். இவற்றை ஹோமத்தில் இட்டு அவற்றிற்கு உரிய மந்திரங்களைச் சொல்லி சாந்தி  செய்வார்கள்.

நாக சதுர்த்தி மற்றும் நாகபஞ்சமி நோன்பு நாட்களில் விரதம் இருந்து புற்றுக்கு பெண்கள் பூஜை செய்து வணங்குவார்கள். நாகத்தினால் தன்  கணவனுக்கும், பிள்ளைகளுக்கும், உடன்பிறந்த சகோதரர்களுக்கும் எந்தத் தீங்கும் நேரக்கூடாது என்பதே பெண்களின் பிரார்த்தனையாக அமையும்.  நேரடியாக ஒரு பாம்பை வைத்து பூஜை செய்வது என்பது மூடநம்பிக்கையே. அம்பாளின் தலைக்கு மேல் நாகம் இருக்கிறதே, ராகு-கேது என்பவை  நாகம்தானே என்றெல்லாம் வாதம் செய்யலாம். அவற்றின் உண்மையான தாத்பர்யத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த ஐம்புலன்களாலும் உண்டாவதே காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்யங்கள். இந்த தீய குணங்களை  உள்ளடக்கியதாக உருவகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே ஐந்து தலையினைக் கொண்ட நாகம். விஷத்தன்மை கொண்ட இந்த ஐந்து குணங்களையும்  விடுத்து ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தினால் இறைவனை எளிதாக அடையலாம் என்பதற்காக உருவகப்படுத்தப்பட்டதே அம்பிகையோடு காட்சி  தரும் நாகம். சிவபெருமானின் கழுத்திலும், மஹாவிஷ்ணுவின் படுக்கையாக ஆதிசேஷனாகவும், சுப்ரமணியரின் பாதங்களிலும், விநாயகரின்  தொப்புளைச் சுற்றியும் என நம் இந்து மதத்தில் நாகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நவகிரஹங்களில் ஐந்து தலை நாக ரூபத்தில் இருக்கும் கேதுவையே ஞானகாரகன் என்று போற்றுகிறார்கள். அதாவது ஐம்புலன்களையும்  அடக்குபவனே ஞானத்தைப் பெற முடியும் என்பதை பாம்பின் உருவ அமைப்பினைக் கொண்டு விளக்கி
யிருக்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் விஷத்தன்மையைக் கொண்ட உண்மையான நாகப்பாம்பை வைத்து பூஜை செய்வது  சட்டவிரோதம் மட்டுமல்ல, சாஸ்திர விரோதமும் கூட.

?ஆனித் திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை வழிபடுவதன் காரணம் என்ன?
-ஆர். சுவாமிநாதன், கும்பகோணம்.

அண்டவெளியை ஆய்வு செய்கின்ற அமெரிக்க விஞ்ஞானிகளும் கூட அம்பலத்தில் ஆடுகின்ற ஆடலரசனை, நடராஜப்பெருமானை, ‘அஸ்ட்ரானமி’  எனப்படும் ஆகாய அறிவியலின் ஆண்டவனாக ஏற்றுக்கொள்கின்றனர். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய  ஸ்தலமாக விளங்குவது சிதம்பரம். சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டுமுறை பிரம்மோற்சவம் நடக்கும். மார்கழி  மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தை  மையமாகக் கொண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

இவ்விரு நாட்களிலும் நடராஜப் பெருமான் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து ஆடிக்கொண்டே கனகசபைக்குள் எழுந்தருளும் தரிசனக் காட்சியினைக்  காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர். ஆனித்திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில்,  அதாவது கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும்  நேரமே ஆனித்திருமஞ்சன நாள். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே புதன் கிரஹத்தின் ஆளுமை பெற்றவை.

கல்விக்கு அதிபதி புதன். அதிலும் வான அறிவியல் அறிவினைத் தருவது புதன். பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும், மேலோட்டமாக  அணுகாமல், அதனை ஆழ்ந்து ஆராயும் பக்குவத்தைத் தருபவர் புதன். அதனால்தான் அவரது ஆட்சியினைப் பெற்ற மிதுனம், கன்னி ராசிக்காரர்கள்  இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தைப் பெற்றிருப்பர். ஆக அவரது ராசிகளில் ஆன்மகாரகனாகிய சூரியனும், மனோகாரகனாகிய சந்திரனும்  சஞ்சரிக்கும் இந்த ஆனித் திருமஞ்சன நாள் நடராஜப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.

அதனால்தான் ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை தரிசிக்க வானவியல் ஆய்வாளர்கள் நிறையபேர் வருவதை நாம் இன்றும் காண  முடியும். ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே சென்னையில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம்,  வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஆலங்காயம் உள்பட அனைத்து வானவியல் ஆய்வு மையங்களிலும் இந்த ஆனி மாதத்தில்  ஆராய்ச்சியாளர்கள் ஓய்வின்றி செயல்படுவர். இந்தக் காரணங்களினால்தான் ஆனித்திருமஞ்சன நாள் இயற்கை அறிவியலின் கடவுளான நடராஜப்  பெருமானுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

?ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் ஆபாசமாகவும், பாலியல் உணர்வினைத் தூண்டுவதாகவும் இருப்பதாக என் நண்பன் குற்றம் சாட்டுகிறான். அவனது  குற்றச்சாட்டு சரிதானா?
-வேத. நாராயணன், கும்பகோணம்.

உங்கள் நண்பரின் கண்ணோட்டத்தில்தான் தவறு இருக்கிறது. ஆண்-பெண் சேர்க்கை என்பது இயற்கையின் நியதி. தாம்பத்யம் என்பது மிகவும்  புனிதமானது. மிகவும் புனிதமான ஒரு விஷயத்தை பொதுமக்கள் கூடுகின்ற ஆலயத்தில் சிற்பங்களாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். பக்தி  சிரத்தையோடு இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இந்த சிற்பங்கள் பாடத்தினைப் போதிப்பவையாகத்தான் அமையுமே தவிர, பாலியல்  உணர்வினை நிச்சயம் தூண்டாது. நவீன யுகத்தில் கலவியை கல்வியின் மூலம் போதிக்கிறார்கள். அந்நாட்களில் பாடசாலைக்குப் பிள்ளைகள்  வருவதே அபூர்வம்.

குறிப்பிட்ட குடிகளில் பிறந்தவர்கள் மட்டுமே பாடம் படித்தார்கள். மற்றவர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? ஆலயம் தவிர பிற இடங்களில் வைத்து  கற்றுத் தந்தால் கல்லாத மூடர்களின் உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாது. இதனை உணர்ந்துதான் கற்றவர், கல்லாதவர் என்ற பேதம் ஏதுமின்றி  எல்லோரும் புனிதமான தாம்பத்ய உறவினைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சிற்பங்களை ஆலயத்தின் சுற்றுப்  பிராகாரத்தில் வடிவமைத்தார்கள். இறைவனின் சந்நதியில் அறிவுதான் வளருமே தவிர, உணர்வு தூண்டப்படாது என்பதே நிஜம். உச்சந்தலையில்  ஓங்கிக் குட்டி உங்கள் நண்பருக்கு உண்மையை உணர்த்துங்கள்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா