சகல நன்மைதரும் சப்த கன்னிகள்மூலப்பொருள் முழுமுதற் கணபதி
முறிந்த தந்தம் தந்தெமை காப்பான்!

1. பிராம்மி

அகல்விழி நோக்க அறியாமை அகலும்!
அச்சம் மனதில் விலகும் - பிரம்மன்
அவதாரம் நான்முக பிராம்மிபோற்றி!
கற்க கற்க கலைகள் அருள்வாள்!
கருத்தில் வாக்கில் நின்று சிறப்பாள்!
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

2. மகேஸ்வரி

அம்பிகை அம்சம் மகேசன் சக்தியிடம்
அமைதி பொறுமை பணிந்து பெறுவோம்!
வெண்மதி முகத்தில் முக்கண் உடையாள்!
வெஞ்சினம் தணிய வெற்றி தருவாள்!
வெள்ளையுடை தரித்த மகேஸ்வரி அருள
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

3. கவுமாரி

கடல்வயிறு கிழிய போரிட்ட சக்தி
கவின்மயில் குமரன் உரு கவுமாரி!
எட்டுத்திக்கு காக்கும் நீல திருமேனியாளை
எண்ண அணுகாது வெம்மை பிணி!
மழலை செல்வம் மங்கலம் பெருக
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

4. நாராயணி

தாமரைகண்கள் தங்கம் செய்யும் ரசவாதம்!
தளிரிணை செல்வம் பெருக்கும் நாளும்!
சங்கு சக்கர திருக்கர நாராயணி அருட்பார்வை
சருமநோய் தீரும் விஷம் முறியும்!
காவல் தேவி கருணை வெல்ல
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

5. வராகி

தடைகள் கடந்து பகையை அழித்து
இன்பங்கள் வழங்கி பக்தரை காப்பாள்!
ஹரிஹரசக்தி அம்சம் வராகி தேவி
சிந்தையில் நிறுத்த சிக்கல் தீர்ப்பாள்
சிம்மவாகினி பிரளயகாலமதில் காக்க
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

6. இந்திராணி

கற்பகமலர் தரித்த கருணை வடிவினாள்!
காமம்தீர நற்துணை இல்லறம் தருவாள்!
உயிர்பேணி சுகம் மேவும் பொன் மேனியாள்!
தேவேந்திர தேவி ரத்னமகுடம் சூடி
வெள்ளை யானை மீது வரும் ஐந்த்ரியருள
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

7. சாமுண்டி

சிவன் நெற்றிக்கண்ணில் உதித்த பத்ரகாளி!
சர்வவல்லமை ஆளும் திருசக்ர சாமுண்டி!
மரணம் நமக்கேது மனிதருக்கது வாய்க்கும்!
தேகம் ஆத்மா துயர் துடைப்பாள்
பிரேதம் மீது அமர்ந்த தேவியருள
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!
சகல நன்மை தரும் சப்தகன்னியர்
திருவருள் ஆசி பெற்றிட
பத்திரகாசி ஓசூரில் எழுந்தருளும்
பிறைசூடிய பெருமான் பாதம் பணிவோம்!

விஷ்ணுதாசன்