நன்மைகள் அருள்வாள் நாமகிரித் தாயார்!நாமக்கல் ஆஞ்சநேயர்! தொடர்ச்சி

தங்கத் தேர் இழுக்கத் திரளும் பக்தர்கள்  


நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், கவசம் சாத்துதல், தங்கத்தேர் இழுத்தல் போன்றவற்றுக்கு முன்பதிவு முறையில், கட்டணம்  வசூலிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒருநாள் அபிஷேகம், வடைமாலை சாத்துதல் ஆகியவற்றுக்காக, ஐந்து பேர் வரை  பங்கேற்கலாம். இப்போதைய நிலவரப்படி தலா 6,000 வீதம், மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. முத்தங்கி  அலங்காரத்துக்கு, ஒரு நபருக்கு, 3,000 ரூபாய், தங்க கவசத்துக்கு, 5,000 ரூபாய், தங்கத்தேர் இழுக்க, 2,000 ரூபாய், வெள்ளி கவசத்துக்கு, 750 ரூபாய்  வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில், வெண்ணைய்க் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதற்கு, அப்போதைய விலை  நிலவரப்படி, கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், சந்தனக்காப்பு அலங்காரத்துக்கும், அப்போதைய விலை நிலவரப்படி கட்டணம் வசூலிக்கப்படும்.  நாமகிரித்தாயார் தங்க கவசத்துக்கு, 750 ரூபாய், நரசிம்மர் திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு, 2,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் திரளாக வழிபாடுகளில் பங்கேற்று ஆஞ்சநேயர் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

முக்கியத் திருவிழாக்கள்:

துளசி மாலை, சந்தனக் காப்பு, வெண்ணெய்க் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. தங்கத்தேர் உலா ஆஞ்சநேயர்  கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. புதிதாக வாகனங்கள் வாங்கும்போதும், மக்கள் வெளி ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும்  வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம். காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு  9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

அனுமத் ஜெயந்தி இங்கு சிறப்பு திருவிழா. மார்கழி மாதம் அமாவாசை, அனுமத் ஜெயந்தி நாட்களில் மட்டும் 2லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்  கோயிலில் கூடுகின்றனர். ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயிலில் கூட்டம் அலைமோதும். தீபாவளி, பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி,  வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு தினங்கள் என்று வருடத்தின் விசேஷ நாட்கள் அனைத்திலும் கோயில் வளாகத்தில் திரளும்  கூட்டத்திற்கு அளவேயில்லை.

உன்னதமான உக்கிர நரசிம்மர் ஆலயம்

நாமக்கல்லை திருமாலின் கோட்டை என்று பக்தர்கள் அழைக்கின்றனர். மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே  வரதராஜராகவும், மலையின் மேல் பகுதியில் நரசிம்மராகவும் திருமால் அருட்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பு. இவற்றில் நரசிம்மர்  கோயில் காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷமாகத் திகழ்கிறது. மலைப்பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயில் இது.  நாமக்கல் ஆஞ்சநேயருக்கு என்று தனி ராஜ கோபுரம் கிடையாது. பக்தர்களைப் பொறுத்தவரை நரசிம்மர் கோயிலையே ஆஞ்சநேயரின் பிரதான  கோயிலாகக் கருதுகின்றனர்.

இங்கு நரசிம்மரின் சிலை, மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையைக் குடையாமல் தனியாக  கட்டப்பட்டுள்ளது. பாறையில் பிரமாண்டமாக சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார் நரசிம்மர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக  அருட்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.  த்ரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்த நாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருட்பாலிக்கின்றனர்.

நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரிலுள்ள ஒரு சாளரத்தின் வழியே ஆஞ்சநேயரை காணமுடியும்.  ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களை பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரத்தைத் தொடுகிறது. நாமகிரி மலையின் கிழக்கு  புறத்தில் அருள்மிகு அரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஐந்து தலையுடைய பாம்பரசன் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில், திருவரங்க  கோலத்தில் திருமால் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதுவும் ஒரு குடைவரை கோயில் என்பதும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

கருணைக் கருவூலம் நாமகிரித் தாயார்!

நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரித் தாயார், தாமரைக் கண்கள் கொண்டவள். தாமரை  முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில்  கொண்டிருப்பதும் தாமரையையே. புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோயில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்  வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.

நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். கனிந்த காலத்தில் நாமகிரி  அன்னையின் கருணையால் அவர்கள் குறைகள் நீங்கப் பெற்று மகிழ்வடைகின்றனர். நரசிம்மர் கோயிலை பொறுத்தவரை நாமகிரித தாயாருக்கே  முதலிடம். இங்கு வரும் பக்தர்கள் தாமரை மலரை அர்ப்பணித்து, தாயாரை முதலில் தரிசித்து பிறகே நரசிம்மப் பெருமாளை வழிபடுகிறார்கள்.  இவர்களுக்கு அடுத்து ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும்.

இதுதான் இங்குள்ள வழிபடு மரபு. உலகம் போற்றும் கணிதமேதை ராமானுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக  நாமகிரித் தாயாரை போற்றுகின்றனர். ராமானுஜர் இங்கு வந்து நாமகிரித்தாயாரை வணங்கி அருள் பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே நாமகிரித்  தாயாரை வணங்குவதால் கலை, கல்வி, ஞானம், செல்வங்கள் கிடைக்கும். நாமகிரித் தாயார், நரசிம்மர் ஆலயங்களில் பன்னிரு முறை பக்தர்கள்  வலம் வருகிறார்கள். இப்படி வலம் வருவதால் பேய், பிசாசு, பில்லிசூன்யம், ஏவல், தீராத நோய்கள், சந்ததியின்மை போன்ற குறைகள் நீங்கும் என்பது  நம்பிக்கை.

குங்குமம் மட்டுமே பிரசாதம்

நாமகிரித்தாயார், நரசிம்மர் திருக்கோவில் காலை 6.30 முதல் 10மணி வரையிலும் மாலை 4.30 முதல் இரவு 9மணி வரையிலும் திறந்திருக்கும்.  காலைபூஜை 8 மணிமுதல் 9.30 மணிவரை நடக்கும். உச்சி காலப்பூஜை காலை 11 மணிக்கு துவங்கி 12.30 மணிக்குமுடியும். நாமகிரி த்தாயாரை,  நரசிம்மரையும் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் புடவை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு முடி எடுத்தல்  போன்ற காணிக்கைகளை செலுத்தி சுவாமியையும், தாயாரையும் வழிபடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நரசிம்மன், நாமகிரி என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள்,  நகைகளை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். நாமகிரித் தாயாருக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி  மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. பங்குனி  உத்திரத்திற்கு அடுத்தநாள் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில், கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

இதில் 13நாட்கள், கோயில் மாடவீதிகளை சுற்றி உற்சவமூர்த்திகளாக சுவாமியும், தாயாரும் வீதியுலா வருவது சிறப்பு. இது திருமாலும், தாயாரும்  மக்களை ேதடிவந்து குறை தீர்க்கும் விழாவாக கருதப்படுகிறது.  நாமகிரி தாயாரின் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், உற்சவ நரசிம்மர்  தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் உள்ளிட்ட ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண கோலத்துடன் காட்சியளிக்கிறார். இதேபோல், சித்ரா  பவுர்ணமி நாளில் நடக்கும் திருவிளக்கு பூஜை, மிகவும் சிறப்பு பெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், குங்குமம், மஞ்சள் அட்சதை, குத்துவிளக்கு, தாம்பாளம் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து பூஜை  செய்கின்றனர். இதனால் மாங்கல்யம் நிலைக்கும், இல்லறம் தழைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த விழாக்களில் கடல் அலையென மக்கள்  கூட்டம் அலைமோதுகிறது. மார்கழி மாத அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாமகிரி  என்ற பெயரில் உள்ள எழுத்துகள் மிகவும் அபூர்வமானது என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள். ‘நா’ பாவத்தை நசிக்கிறது. ‘ம’ மங்களம் அருள்கிறது. ‘கி’  காரிய சித்தி பெறவைக்கிறது. ‘ரி’ மோட்சத்துடன் வீடுபேறு அளிக்கிறது என்கின்றனர்.

மனங்களை இணைக்கும் மலைக்கோட்டை

நாமக்கல் ஆஞ்சநேயரின் பின்புலத்திலுள்ள மலைக்கோட்டை ஆன்மிகத்தோடு, வீரத்திற்கும் வித்திட்ட அடையாளங்களை சுமந்து நிற்கிறது. 16ம்  நூற்றாண்டில், மதுரை விஸ்வநாத நாயக்கரால் பாளையங்களைப் பிரித்து ஆட்சி செய்யும் முறை உருவாக்கப்பட்டது. அதன்படி தென்தமிழகத்திலும்,  கொங்கு நாட்டிலும் பாளையங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது நாமக்கல் சேந்தமங்கலத்தை பாளையமாகக் கொண்டு ஆட்சி செய்தவர், ராமச்சந்திர  நாயக்கர். கொங்கு நாட்டு பாளையங்களில் பெரியதாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்தது.

இந்த பாளையத்தின் தலைநகரான நாமக்கல்லில் ஆன்மிகச் சிறப்பு மிக்க, நாமகிரிமலையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மலைக்கோட்டை.  ஆங்கிலேயர் ஆட்சி வரும்வரை ராமச்சந்திர நாயக்கர் இங்கு ஆட்சி செய்தார். நம் மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆங்கிலேயருக்கு எதிராக  வெகுண்டெழுந்து, மாவீரன் திப்புசுல்தானுக்கு உதவியதால் பாளையத்தை சிதைத்து, கோட்டையை அழிக்க முற்பட்டது பிரிட்டிஷ் அரசு. ஆனால் எந்தக்  கோட்டையை ஆங்கிலேயர் அழிக்க முற்பட்டார்களோ, அங்கேயே முகாம் அமைத்து அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் திப்புசுல்தான்  என்பது வரலாறு.

நாமகிரிமலையின் வடக்கு, மேற்கு பகுதிகள் சமமமாகவும், கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் செங்குத்தாகவும் அமைந்திருக்கின்றன. தெற்குப் பகுதி  வழியாக கோட்டைக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோட்டை வாயிற்கதவின் அருகில் ஒரு யாளியின் உருவம்  வெளிச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் பெரிய கற்சுவர்களுடன் கோட்டையும், கொத்தளங்களும் பரந்து  விரிந்து கிடக்கிறது. கோட்டையின் மேல்பகுதியில் நின்று பார்த்தால் ஒட்டு மொத்த நாமக்கல் நகரமும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறது.

கோட்டையின் மேல்பகுதியில் பாலிகள் வெட்டப்பட்டிருப்பது அந்தக் காலத்திலேயே மழை நீர் சேமித்து வைத்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள்.  கோட்டைக்குள் இருப்பவர்கள், இந்த பாலிகளின் நீரையே பருகியுள்ளனர். இன்றும் கோடை காலத்தில் கூட, இந்தப் பாலிகளில் நீர் நிறைந்திருப்பது  வியப்பு. இதேபோல் கோட்டையின் தென் பகுதியிலும் ஆங்காங்கே பாலிகள் வெட்டப்பட்டுள்ளன. கோட்டைக்குள் அழகு மிளிர காட்சியளிக்கும்  திருமால் கோயிலும், மசூதியும் மதநல்லிணக்கத்தின் அடையாளங்கள். அதற்கருகில் பண்டையச் சின்னங்களும், பாழடைந்த கட்டிடமும் பல  நூற்றாண்டு நினைவுகளை தாங்கி நிற்கின்றன.

கோட்டையின் வடக்குப் பகுதியில் ரகசிய வழி ஒன்று உள்ளது. இது, பண்டைக் காலத்தில் ஆபத்து காலங்களில் மன்னர்கள் தப்பிச் செல்வதற்காக  ஏற்படுத்தப்பட்ட வழியாகும். வேலைப்பாடுகள் மிகுந்த மலைக்கோட்டையின் உட்பகுதி கொத்தளங்களும், ஆயுதக்கிடங்குகளும் வீரர்கள்  தங்கியிருந்தற்கான அடையாளங்களை சுமந்து நிற்கின்றன. இந்த கொத்தளத்தில் கண்ணறைகள் பல உள்ளன. அந்த அறைகளின் வழியாக வீரர்கள்,  பகைவர்களைப் பார்த்து அறிவதற்குரிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள நிலஅறைகளும், நீராழி மண்டபமும் கூடுதல் வியப்பு.

நாமக்கல் கோட்டைப் பகுதிகள் மைசூர் அரசர் ஆட்சியின்கீழ் இருந்தபோது ‘வுட்’ என்னும் ஆங்கிலத் தளபதி ஹைதர்அலியிடமிருந்து அதைக்  கைப்பற்றினார் என்றும், ஆனால், மீண்டும் ஹைதர் அலியே இக்கோட்டையைத் திரும்பப் பெற்றுவிட்டார் என்றும், இந்தியச் சிப்பாய்கள் இங்கே  தங்கியிருந்து போரிட்டார்கள் என்றும், இதுபோன்ற வீரம் செறிந்த தகவல்களுக்கு பஞ்சம் இல்லை. நாமக்கல் மலைக்கோட்டை தற்போது  தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் பாறையைச் செதுக்கி உருவாகப்பட்ட சிறிய படிக்கட்டுகள் உள்ளன. தினமும் மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து மலைக்கோட்டையை ரசிக்க மக்கள் வருகின்றனர். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அரங்கநாதரை  தொழுது, மசூதியிலும் வழிபட்டுச் செல்கின்றனர். இதேபோல் கோட்டையில் நடக்கும் விழாக்களிலும்  இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்தே  பங்கேற்கின்றனர்.

எனவே, மதங்களை மறந்து மனங்களை இணைக்கும் பெருமை இந்த மலைக்கோட்டைக்கு உண்டு. நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு  பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளன. சுதந்திரக்காற்றை சுவாசிக்க, வீரம் விதைத்து அடித்தளமிட்டதோடு, ஆன்மிக  பொக்கிஷமாகவும் விளங்கும் மலைக்கோட்டை, மெல்லமெல்ல சிதிலமடைந்து வருகிறது. எனவே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தொல்லியல்  துறை, அதனை சீரமைத்து பொக்கிஷமாய் காக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த இதயங்களின் எதிர்பார்ப்பு.

ஏழு கிணறுகள் அடக்கிய கமாலாலயக் குளம்

நாமக்கல்லில் மிகவும் பிரசித்தி பெற்றது கமலாலயக் குளம். ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது. இந்த கமலாலய  குளத்திற்கும், நாமகிரித் தயாருக்கும், நரசிம்ம மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்குமான பிணைப்பு வியப்புக்குரியது. மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை  தரிசிக்க முடியாமல் லட்சுமிதேவி தவித்தார். அதற்கான உபாயமத்தை விஷ்ணுவிடம் கேட்டாள். சைலம் என்னும் இடத்தில் தாமரை மலர்கள் பூத்துக்  குலுங்கும் குளத்தில் நீராடி ‘நரசிம்ம மூர்த்தி’ என்னும் மந்திரத்தை உச்சரித்தால் அவதாரத்தை காணலாம் என்றார் விஷ்ணு.

இப்படிப்பட்ட சூழலில் கண்டகி நதிக்கரையில் சஞ்சீவினி மலையின் ஒரு பகுதியை பெயர்த்தெடுத்து, இலங்கைக்கு புறப்பட்டார் ஆஞ்சநேயர். வரும்  வழியில் இந்த தாமரைக் குளத்தை கண்டதும் மலையை கீழே இறக்கி வைத்துவிட்டு நீராடி சந்தியாவந்தனம் செய்தார். ஆனால் அங்கிருந்து மலையை  மீண்டும் அவரால் தூக்கிச் செல்ல முடியவில்லை. விஷ்ணுவின் கட்டளைப்படி கல்லை அங்கேயே வைத்து விட்டு கடமை நிறைவேற்ற இலங்கைக்கு  புறப்பட்டார்.

அதே நேரத்தில் குளத்தில் நீராடிய பிரார்த்தித்த லட்சுமி தேவிக்கு, அந்த மலை உக்கிரநரசிம்மராக காட்சியளித்தது. உடனே தேவி, நாமகிரித்தாயார்  என்ற பெயருடன் நரசிம்மருடன் அங்கேயே அமர்ந்து அருட்பாலித்தார். இப்படி நாமகிரித் தாயாரும், ஆஞ்சநேயரும் நீராடி வழிபட்ட கமலாலயக்  குளத்திற்குள் 7 கிணறுகள் இருப்பது கூடுதல் சிறப்பு. காலசுழற்சியில் குளம் வற்றிவிட்டாலும் அதன் சுவடுகளை வழிபட்டு பிரார்த்திக்கின்றனர்  பக்தர்கள்.

சுற்றியுள்ள பிரசித்திபெற்ற திருக்கோயில்கள்

* நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அரிய மரங்களும், அற்புத தானிய வகைகளும் கொண்ட பெருமை வாய்ந்த “கொல்லி மலை” நாமக்கல்லில் இருந்து  7 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயிலும், திருச்செங்கோடு மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலும் மிகவும் பிரசித்தி  பெற்றவை.
* நாமக்கல்-துறையூர் வழியில் 7 கி. மீ. தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு  கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தந்த பெருமைக்குரியது இந்த கோயில்.
* நாமக்கல்-கரூர் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பானது.
* நாமக்கல்-சேந்தமங்கலம் வழியில் 10 கி.மீ. தொலைவில் தத்தகிரி முருகன் கோயில் உள்ளது. இங்கு தத்தாத்ரேயர் சந்நதியும் உள்ளது.
* நாமக்கல்-சேந்தமங்கலம் வழியில் முத்தக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி  கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டிடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது

நகரங்களில் இருந்து பயணிக்கும் தூரம்

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் இந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து 57 கி.மீ., கரூரிலிருந்து 43 கி.மீ.,  ஈரோடிலிருந்து 50 கி.மீ., கோவையிலிருந்து 120 கி.மீ., திருச்சியிலிருந்து 85 கி.மீ., சென்னையிலிருந்து 360 கி.மீ., பெங்களூருவிலிருந்து 250 கி.மீ.  தூரம். தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ,  டவுன் பஸ் வசதி உள்ளது.

பஸ்சில் வருபவர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லலாம். நாமக்கல்லில் ரயில்  நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பெங்களூர்-நாகர் கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- பழனி எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் ரயில்,  ஆகியன நின்று செல்கின்றன. நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. வெளிநாட்டு  பக்தர்கள் திருச்சி அல்லது கோவை விமான நிலையங்களிலிருந்து காரில் நாமக்கல் வரலாம்.

தங்குமிடங்கள்

கோயில் சார்ந்த விடுதிகளோ, சத்திரங்களோ இல்லை. ஐந்தாறு தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழக  அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 125 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டங்களில்  பங்கேற்று உதவுவதற்கும், கோயில் சிறப்பு பூஜைகளுக்கும் இணை ஆணையரை 04286-233999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

anjaneyar temple.org என்ற இணைய தளத்திலும், anjaneyar@tnhrce.org என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.  நம்பிக்கையோடு நாமக்கல் வாருங்கள். ஆபத்பாந்தவனாய் அருட்பாலிக்கும் ஆஞ்சநேயரை தரிசித்து  நலமும், வளமும், கல்வியும், ஞானமும் பெற்று  தழைத்தோங்கி வாழுங்கள்.

தீயசக்திகளை விரட்டும் எருக்கலாம் பொம்மைகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் முன்பு விற்கப்படும் எருக்கலாம் கட்டை ெபாம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. எருக்கஞ்செடியின்  அடிப்பகுதியில் கட்டையை வெட்டி, அதில் விநாயகர், குதிரை, ஆசனம் ேபான்ற சிற்பங்களை தொழிலாளிகள் கையால் ெசதுக்குகின்றனர். வீரமிகு  ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டு கோயிலுக்கு வெளியே வரும் பக்தர்கள், இந்த பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். இது ஆஞ்சநேயரை தனக்கு  துணையாக அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது.

வீட்டின் பூஜையறையில் இந்த பொம்மைகளை வைத்து பூஜை செய்தால் தீய சக்திகள் எதுவும் நம்மை அண்டாது. அவற்றை விரட்டும் சக்தி இந்த  பொம்மைகளுக்கு உள்ளது என்று பெருமிதம் கொள்கின்றனர் பக்தர்கள். பக்தர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் பொம்மைகளை, கடும் விரதம் இருந்து  செய்கிறோம். ₹50 முதல் ₹150வரையில் விற்கப்படும் பொம்மைகள் எளிய குடும்பங்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில்  இதை ஒரு திருப்பணியாக நினைத்து தலைமுறைகள் கடந்தும் ெசய்து வருகிறோம் என்கின்றனர் பொம்மை வியாபாரிகள்.

ஏணி மீது நின்று பால் அபிஷேகம்

பிரம்மாண்ட நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜைகளும் பிரம்மாண்டமாகவே நடக்கிறது. இயல்பான பூஜையை ஆஞ்சநேயரின் பாதத்திற்கு கீழ் நின்று  அர்ச்சகர்கள் செய்கின்றனர். திருவிழா நாட்களில் பால்அபிஷேகம், சந்தனஅபிஷேகம், வெண்ணெய்காப்பு அலங்காரம், வடைமாலை சாத்துதல்  போன்றவை ஏணி மீது நின்றபடி செய்யப்படுகிறது. இதற்காக ஆஞ்சநேயரின் பின்புறத்தில் 16 அடி உயரத்தில் பிரம்மாண்ட ஏணி படிக்கட்டுகள்  அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரை வழிபடும் பக்தர்கள், இந்த ஏணியையும் வழிபட்டுச் செல்வது குறிப்பிடத்தக்கது.

ஜி.காந்தி     
படங்கள்: சி. சுப்பிரமணியம்.