மூச்சை ஒழுங்குபடுத்தினால் எண்ணங்கள் சீராகும்!குறளின் குரல்-84

பஞ்ச பூதங்களில் ஒன்று காற்று. காற்றில்லாமல் மனித வாழ்க்கை இல்லை. உயிரே காற்றால்தான் உடலில் நிலைக்கிறது. அந்தக் காற்றைப் பற்றி  வள்ளுவர் ஐந்து குறட்பாக்களில் பேசுகிறார். ஓர் இடத்தில் `புயல்` என்றும், நான்கு இடங்களில் `வளி’ என்றும் காற்றைக் குறிப்பிடுகிறார்.

‘ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.’ (குறள் எண் 14)

வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வரும் திருக்குறள் இது. புயலாக வீசிப் பின் மழையாகப் பொழியும் நீர்வளமானது குன்றினால், உழவர்கள் ஏர்
பிடித்து உழ மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

‘அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கரி.’ (குறள் எண் 245)

அருளுடைமை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது. அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது. காற்று உலவும் வளம் மிக்க இப்பேருலகமே  இதற்குச் சான்று என்கிறார்.

‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.’ (குறள் எண் 941)

மருந்து என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. உடலில் ரத்த, வெப்ப, காற்று ஓட்டங்கள் சீராக இருத்தல் வேண்டும். இவை அதிகமானாலும்  குறைந்தாலும் நோய் வரும் என்கிறார் வள்ளுவர். வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற சொற்களால் மருத்துவ நூல்கள் இந்த மூன்றையே  குறிக்கின்றன. காமத்துப்பாலில் இரண்டு இடங்களில் காற்று குறிப்பிடப்படுகிறது. காதலர் இடையே காற்றுக் கூட ஊடாடாது என்றும் அவர்கள் இறுகத்  தழுவும்போது காற்று நுழையும் வகையில் சிறிய இடைவெளி இருந்தாலும் தலைவி துன்பமடைவாள் என்றும் கற்பனை நயத்தோடு பேசுகிறார்  வள்ளுவர்.

‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.’ (குறள் எண் 1108)

 காற்றுக் கூட இடையே போகாத அளவு இறுகத் தழுவிக் கொள்வதே காதலர்களுக்கு இனியதாம்.

‘முயக்கு இடை தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.’ (குறள் எண் 1239)

  இறுகத் தழுவிய தழுவலைக் காதலன் சற்றுத் தளர்த்தினான். அப்போது அவர்களிடையே காற்று நுழைந்தது. அதைப் பொறுக்க மாட்டாமல்  தலைவியின் குளிர்ந்த கண்கள் நிறம் மாறின எனக் காதலியின் உணர்வு பற்றிப் பேசுகிறது வள்ளுவம். காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டம் என இந்த உடலைப் பற்றிப் பேசுகிறார் பட்டினத்தார்.

‘ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றத் துருத்தியை சோறிடும் தோற்பையை பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றித் திரிந்துவிட்டேன் இறைவா கச்சி ஏகம்பனே!’
-என்கிறது உடலை மெய் எனக் கருதிப் பராமரித்தது குறித்த பட்டினத்தாரின் கழிவிரக்கப் பாடல்.

சித்தர்கள் உடலைப் பொய் என்று கண்டறிந்தார்கள். ஆன்மாவே என்றும் வாழும் உண்மை. ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா!’  என்பதும் சித்தர் வாக்கு. காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டமாக அல்லது காற்றடைத்த தோல் பையாக இருப்பது மனித உடல். பொய்யான மனித  உடலை மெய் என்ற சொல்லால் அழைப்பதுதான் விந்தை! பிராணாயாமம் நம் ஆன்மிகத்தின் அடிப்படை. அன்றைய அவ்வையார் தொடங்கி இன்றைய  வேதாத்ரி மகரிஷி, ரவிசங்கர்ஜி வரையில் மூச்சுப் பயிற்சியை வலியுறுத்தாத ஆன்மிக நெறியாளர்கள் யாருமில்லை. மூச்சுப் பயிற்சியே  பிராணாயாமம். மூச்சென்பது என்ன? காற்று தான்.

உடலின் உள்ளே சென்று வெளியே வரும் காற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரண்டு விஷயங்களைச் சாதிக்கலாம் என்பதை நம் முன்னோர்  கண்டறிந்தார்கள். ஒன்று மனத்தைக் கட்டுப்படுத்தலாம். இன்னொன்று நிறைந்த ஆரோக்கியத்தை அடைந்து அதன்மூலம் வாழ்நாளை நீட்டிக்கலாம்.  மூச்சுக் காற்றை நெறிப்படுத்துகிற போது மனமும் தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுகிறது என்கிறது யோக சாஸ்திரம். மூச்சுக்கும்  எண்ணங்களுக்கும் இடையே ஓர் இடையறாத தொடர்பு இருக்கிறது. அதனால்தான் மூச்சைப் போலவே எண்ணங்களையும் நம்மால் நிறுத்த  இயலுவதில்லை. ஆனால் மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் எண்ணங்களைச் சீரமைத்துவிட முடியும்.

மனிதர்களின் வாழ்நாள் குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன. இதயத் துடிப்பின் எண்ணிக்கைதான் வாழ்நாள் என்றும், மூச்சுக் காற்றின்  கணக்குத்தான் ஆயுள் என்றும் பலவகைக் கோட்பாடுகள் உள்ளன. ஒருவன் பிறக்கும்போதே இத்தனை தடவை அவன் மூச்சுவிட வேண்டும் என்று  நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பது ஒரு நம்பிக்கை. அத்தனை மூச்சுகளை அவன் சுவாசித்து முடித்ததும் அவனது நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்  படியான இறுதி மூச்சை சுவாசித்து அவன் உலகிலிருந்து விடைபெறுகிறான். இப்போது ஒரு மூச்சுக்கும், இன்னொரு மூச்சுக்கும் இடையே உள்ள கால  இடைவெளியை நீட்டிப்பதன் மூலம் ஆயுட்காலத்தையும் நீட்டித்து விட முடியும் அல்லவா? மூச்சுகளின் எண்ணிக்கை அப்படியேதான் இருக்கும்.

ஆனால் இடைவெளிகளின் காரணமாக ஆயுள் கூடும். பிராணாயாமத்தில் மூச்சைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூச்சுகளின் இடையேயான  இடைவெளிதான் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நாள்தோறும் முறையாகப் பிராணாயாமம் செய்வது நீண்ட ஆயுளைத் தரும் என்கிறது யோக  சாஸ்திரம். சந்தியாவந்தனம் உள்ளிட்ட தினசரி ஆன்மிக வழிமுறைகளிலும் சரி, பூஜை புனஸ்காரம் முதலிய சிறப்பு ஆன்மிக நிகழ்வுகளிலும் சரி,  தொடக்கத்தில் பிராணாயாமம் இல்லாமல் சங்கல்பமே இல்லை. முக்தியைத் தேடுகிற மனிதன் முதலில் ஆரோக்கியத்தோடு நீண்டநாள்  வாழவேண்டும் என்பதே நம் ஆன்மிகத்தின் அடிப்படை. இகத்தைத் துறந்து பரத்தை அடைவதல்ல நோக்கம்.

இகத்திலும் பரத்திலும் நன்மைகாண வேண்டும் என்பதே நம் ஆன்மிகத்தின் லட்சியம். ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!’ என்கிற பழமொழியும் கூட  பிராணாயாமத்தின் சிறப்பைத்தான் பேசுகிறது. மூச்சுக் காற்று உள்ளபோதே அதைக் கட்டுப்படுத்தி, கெட்ட எண்ணங்களைத் தூற்றி வெளியேற்றி, நல்ல  எண்ணங்களைக் காப்பாற்றிச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உட்பொருள். ராமாயணத்தில் காற்று ஒரு முக்கியப் பங்கு  வகிக்கிறது. காற்றின் புதல்வன்தான் அனுமன். அந்த ‘வாயு’ குமாரன் இல்லாவிட்டால் ராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற ஒரு பகுதியே  இருந்திருக்காது.

ராமாயணத்தைத் தத்துவக் களஞ்சியமாகக் காண்பவர்கள் சீதை என்னும் ஜீவாத்மாவை ராமன் என்னும் பரமாத்மாவுடன் இணைத்து வைக்க அனுமன்  என்னும் குரு உதவுவதாக வியாக்கியானம் செய்கின்றனர். வஞ்சகப் பொன்மானாய் வந்தான் மாரீசன். பொன்மானைக் கண்டு ஆசைகொண்டாள் சீதை.  பொன்மானின் பின்னால் போனான் ராமபிரான். போக்குக் காட்டி அவனை நெடுந்தூரம் இழுத்துச் சென்றது அது. வந்திருப்பது வஞ்சக மான் என்றுணர்ந்து  ராமன் அம்பெய்தான். சாகும்போது மான் மாரீசனாக உண்மையான அரக்க வடிவு கொண்டது. மாரீசன் ராமனின் குரல் போல் தன் குரலை மாற்றிக்  கொண்டான்.

(உலகின் முதல் குரல்மாற்றுக் கலைஞன் - மிமிக்ரி கலைஞன்! - மாரீசனாகத் தான் இருக்க வேண்டும்!) ‘சீதா லட்சுமணா! என்னைக் காப்பாற்றுங்கள்!’  எனப் பொய்க்குரலால் கூவியபடி மாண்டான். அந்தக் குரல் சீதையின் செவிகளை எட்டியது. அவள் இன்னதென்றறியாது பதற்றமடைந்தாள். அதன்பின்  நடந்த ராமாயணக் கதையை நாம் அறிவோம். ஆனால் இச்சம்பவமே வேறு கோணத்தில் வித்தியாசமாக சொல்லப்படுகிறது. பொய்க்குரலால் கூவிய  மாரீசன் இறந்ததும் ராமன் உண்மையை அறிந்தான் அல்லவா? சீதையை ஏமாற்றவே இந்த மாரீச நாடகம் என்பதையும் அவன் அந்தப்  பொய்க்குரலைக் கேட்டு உணரத்தானே செய்திருப்பான்? எனவே இப்போது ராமன் உரத்த குரலெடுத்துக் கூவுகிறான்.

‘சீதா! லட்சுமணா! முன்னர் ஒலித்த குரலை நம்பவேண்டாம். நான் நலமாகத்தான் இருக்கிறேன்!’ என சீதையின் செவிகளில் தன் குரல் எட்டும்படி  தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்துகிறான். ராமன் செயலைக் கண்டு தேவர்கள் திகைக்கிறார்கள். இப்போது ராமன் கூவும் குரல் சீதையின்  காதில் விழுந்தால் தொடர்ந்து ராமாயணம் எப்படி நடக்கும்? சீதை எப்படி லட்சுமணனை விரட்டுவாள்? தனித்திருக்கும் சீதையை ராவணன் எப்படி  வந்து கவர்வான்? இதெல்லாம் நடந்தால் தானே தேவர்கள் பல்லாண்டுகளாக எதிர்பார்க்கும் ராவண வதம் நடக்கும்? யோசித்த தேவர்கள் காற்றுக்  கடவுளானா வாயுதேவனிடம் உதவி வேண்டினார்கள்.

ராமனின் குரல் சீதையை எட்டாதவாறு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். வாயுதேவன் அவர்கள் வேண்டுகோளுக்கு உடன்பட்டான்.  அடுத்து என்ன நடந்தது தெரியுமா? அந்தக் கானகத்தில் காற்று எதிர்த்திசையில் அடிக்கத் தொடங்கியது! ராமனின் குரலை அப்படியே அள்ளி அது  எதிர்த் திசைக்குக் கொண்டு சென்றது. அதனால்தான் ராமனின் குரல் சீதையின் செவிகளில் விழவே இல்லை என்கிறது அந்தக் கதை. சிவனை  வழிபடும் சைவர்கள் சிவபெருமான் பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். ஐந்து திருத்தலங்களில் சிவன் பஞ்ச பூத வடிவங்களில்  காட்சி தருகிறான். பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றாக சிவன் காட்சிதரும் இடம் காளஹஸ்தி.

தமிழில் தெற்குத் திசையிலிருந்து வரும் காற்று தென்றல் என்றும் வடக்குத் திசையிலிருந்து வரும் காற்று வாடை என்றும் சொல்லப்படுகிறது.  செடிகொடிகளும் மரங்களும் மண்ணிலிருந்தும் காற்றிலிருந்தும் சத்தை எடுத்துக் கொள்கின்றன. மாலை நேரங்களில் மனிதர்களைப் போலவே  தாவரங்களும் பிராண வாயுவை உண்டு கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. ஆனால் பகல் பொழுதுகளில் அவை கரியமில வாயுவை உண்டு  பிராண வாயுவை வெளியேற்றுகின்றன என்கிறது விஞ்ஞானம். காற்று எப்போதும் முன்னேற்றத்தின் அறிகுறி. அதனால்தான் ஒருவருக்கு ஏதேனும்  ஒரு துறையில் வெற்றி வந்தால், ‘உங்கள் பக்கம் காற்றடிக்கிறது போல் இருக்கிறதே’ என்கிறோம். வள்ளுவர் சொல்லும் வாழ்வியல் கருத்துகள்  காற்றோடு போய்விடக் கூடாது. அதை நாம் கருத்தில் வாங்கிக் கொண்டு நடைமுறையில் பின்பற்ற வேண்டும்.

 
(குறள் உரைக்கும்)