தோஷம் நீங்கிய சப்தகன்னியர்சப்த கன்னியர் பக்தி ஸ்பெஷல்

குளித்தலை


தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் மூன்று சிவஸ்தலங்களை ஒரேநாளில் காலை, பகல் மற்றும் மாலை  வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் ஒன்று, திருஈங்கோய்மலை காவிரி வடகரைத்  தலம். மற்ற இரண்டு - திருவாட்போக்கி, கடம்பந்துறை. அவ்வகையில் திருக்கடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம்  செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது.

சிவன் கோயில்கள் எல்லாம் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிதான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோயில் வடக்கு  நோக்கியிருப்பதுபோல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கியிருக்கும் கோயில் இது ஒன்றுதான். வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரமும்,  கோபுரத்திற்கு வெளியே பதினாறு கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. ஐந்து நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால்  ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

வெளிப் பிராகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து  சென்றால் இறைவனின் கருவறையை அடையலாம். இறைவன் கடம்பவன நாதரின் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச்  சிலைகள் இருக்கின்றன. சப்தகன்னியர்களின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவரின் பின்னால் சப்தகன்னிகைகளின்  உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. தங்கள் பிரம்மஹத்தி தோஷ சங்கடம் நிவர்த்தியான தலமாதலால் தங்களை வழிபடும்  பக்தர்களின் சங்கடங்களை சடுதியில் தீர்த்தருளும் வரப்ரசாதியாக இத்தேவியர் உள்ளனர்.

உட்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், அறுபத்து மூவர் மூலவர் மற்றும் உற்சவத் திருமேனிகள்,  விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜ மூர்த்திகள் உள்ளன. ஒரு  நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி. கண்வ முனிவரும்,  தேவர்களும் இத்தலத்து இறைவனை பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். பிரம்மா,  மகாவிஷ்ணு, முருகர், சப்தகன்னியர்கள், அகத்தியர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

தூம்ரலோசனன் என்ற அசுரனிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை  வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின்  பலம் குறைந்தது. எனவே அம்பிகை, சப்தகன்னியர்களை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன்  அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்யாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் அசுரன் ஒளிந்து கொள்ள, அங்கு வந்த சப்த  கன்னியர்களும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர்.

அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து  விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின்  கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு, சாப விமோசனம் பெற சப்தகன்னியர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு  கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர்கள், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி ஈசனிடம்   முறையிட்டனர். ஈசனும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம். இத்தலம்,  அருணகிரிநாதர் பாடல் பெற்ற திருப்புகழ்த் தலமுமாய் விளங்குகிறது. இங்கு முருகப்பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு  வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். திருப்புகழில் இவரைப்பற்றி ஒரு பாடல் உள்ளது. இவ்வாலயம் காலை 6 முதல்  பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய ஒரு  பதிகம் 5ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது: இக்கோயில் குளித்தலையில் இருந்து 2 கி.மீ., கரூரிலிருந்து 23 கி.மீ., திருச்சியிலிருந்து 55 கி.மி.  தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம், திருச்சி - கரூர் - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.