இறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்!



மன இருள் அகற்றும் ஞானஒளி-41

நம்முடைய முன்னோர்கள்தான் எத்துணை தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்! எதையும் நம்மால் தொடர்ந்து பின்பற்றுவது என்பது கடினமான  ஒன்று என்பதை தங்களுடைய அனுபவத்தின் மூலம் அறிந்து வைத்திருப்பவர்கள். உதாரணமாக இந்த பரபரப்பான போட்டிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த  உலகத்தில், ஒன்றைத் தொடர்ச்சியாக  மேற்கொள்வதில் நமக்கு எவ்வளவு சிரமம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அக, புறப்  பிரச்னைகளால் மனிதன் காற்றில் அலைக்கழியும் தென்னை ஓலை போல அல்லல்படுகிறான். இதிலிருந்து தப்ப வேண்டுமா? மனம் ஆனந்தமயமாக  இருக்க வேண்டுமா? மிகச் சரியான உபாயத்தை தந்து அருளியிருக்கிறார் பெரியாழ்வார்:

‘‘மண்ணில் பிறந்து மண்ணாகும்
    மானிடப் பேரிட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்
    ஏழை மனிதர்காள்
கண்ணுக்கு இனிய கருமுகில்
    வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம்
    அன்னை நரகம் புகாள்!’’

இந்த பாசுரத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் பெரியாழ்வார்? இல்லற சம்சாரக் கடலில் தத்தளிக்கும் மனிதர்களே இறைவனின் பக்தர்களே  உங்களால் குடும்பம், அதற்கான தேவைகள், அதை எப்படி நிறைவேற்றுவது என்பதிலேயே சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதுவும்  இன்றைய யதார்த்த உலகத்தில் பிள்ளைகளில் ஸ்கூல் அட்மிஷனுக்காகவும், வீட்டு லோனுக்காக பேங்கிற்கு அலைவதிலுமேயே மொத்த  வாழ்க்கையையும் செலவிட வேண்டியதாக இருக்கிறது! இதில் நம்மால் எப்படி பரம்பொருளான நாராயண நாமத்தை சொல்ல முடியும்?

அல்லது இந்தப் பிரச்னைகளுக்கு இடையே ஞாபகப்படுத்தி நினைவில்தான் வைத்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் குழந்தை பிறந்த உடனேயே  அந்தக் குழந்தைகளுக்கு கேசவன், தாமோதரன், நாராயணன் என்றெல்லாம் பரந்தாமனின் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். அப்படி நாராயணன் பெயரை  சூட்டுவதனால் என்ன நன்மை கிடைக்கும்? பரம்பொருளான நாராயணனை பெற்றோர்கள் கூப்பிடுகிறார்களோ இல்லையோ, மகன் நாராயணன் பெயரை  அடிக்கடி கூப்பிடுவதால் அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு சொர்க்கம்தான் வாய்க்கும், நரகம் கண்டிப்பாக கிடையாது.

ஏனெனில் தன் பிள்ளையை நாராயணன் கேசவன், தரன் என்று அடிக்கடி அழைக்கும்போதே அந்த ஆண்டவனுடைய அருள் தானாக கிடைக்கும்  என்று அறுதியிட்டு சொல்கிறார் பெரியாழ்வார். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெரியாழ்வாருக்குத் தோன்றியிருக்கிறது இந்த  சிந்தனை! பெரியாழ்வாரைப் போலவே அப்பர் பெருமானும் இறைவனின் திருநாமப் பெருமையை எண்ணி எண்ணி வியப்பால் நம்மை விழியகல  வைக்கிறார்:

‘‘கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன்றன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி, நீ பாதிரிப் புலியூர் அரனே!’’

இந்த தேவாரப் பதிகத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார், அப்பர் பெருமான்? ‘என் தாயின் வயிற்றில் கருவாகக் கிடந்த நாள் முதல் உன்னையே  (இறைவனையே) சிந்திக்கும் எண்ணம் உடையவனாக இருந்தேன். நான் உருக்கொண்டு உலகில் வந்து உதித்தபின் உன்னுடைய ஒப்பில்லாத  திருப்பெயரை பயின்றேன். உன் திருவருளால் என் வாயால் சிவாய நம என்று கூறும் பேறு பெற்றேன்.

திருப்பாதிரிப் புலியூர் இறைவா, எனக்கு சிவகதி தருவாய்’ என்று அந்த பார்வதி சமேத பரமேஸ்வரனிடம் விண்ணப்பம் செய்கிறார் திருநாவுக்கரசர்  என்கிற அப்பர் பெருமான். பெரியாழ்வார் பாசுரமும் சரி, அப்பர் பெருமானின் தேவாரப் பதிகமும் சரி, இரண்டும் விவரிக்கும் இறைவனின்  திருநாமத்திற்கு அப்படி என்ன சிறப்பு? பரிபாடலில் கடுவன் இளவெயினார் படைத்த பாடல் ஒன்றைப் பார்ப்போம்:

‘‘வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களும் அளியும் நீ;
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ யாதரின்
உறைவு முறைவது மிலையே!’’

‘வேதங்களின் உட்பொருளாய் உள்ளாய்! ஐம்பூதங்களில் அவற்றின் உட்பொருளாய் விளங்குகிறாய்! எல்லாப் பொருளும் நீயே! அந்தராத்மாவாக
எல்லாவற்றிலும் நீயே உள்ளே நின்று ஊடுருவியிருக்கிறாய். நின் அருளை என்னவென்று எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்கும் இந்தப்  பாடலிலிருந்தே அந்தச் சிறப்பை நாம் அறிந்துகொள்ள முடியும்!

(தொடரும்)
ஆழ்வார்க்கடியான்
மை.பா.நாராயணன்