என்ன சொல்கிறது, என் ஜாதகம்? எதிர்காலம் நல்லபடியாக அமையும்!



?இருபத்தியொன்பது வயதாகும் என் மகளுக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? கடும் முயற்சி செய்தும் அமையவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு  முன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் தடைபட்டது. தயவு செய்து உரிய வழி சொல்லுங்கள்.
-பத்ரிநாதன், திருப்பதி.

நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் தடைபட்டதற்கான காரணத்தை நீங்கள் குறிப்பிடவில்லை. உத்திரட்டாதி நட்சத்திரம், மீனராசி, விருச்சிக லக்னத்தில்  பிறந்திருக்கும் உங்கள் மகளின் பிறந்த தேதி மற்றும் நேரத்தினை வைத்து கணித்துப் பார்த்ததில், தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து  கொண்டிருக்கிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன், கேதுவுடன் இணைந்திருப்பதும்,  ஜென்மலக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்றிருப்பதும் பலவீனமான அம்சங்கள் ஆகும். எனினும் சுக்கிரன் 10ல் அமர்ந்திருப்பதால் கவலை இல்லை.

அளவிற்கதிகமான முன்னெச்சரிக்கை எண்ணமும், கற்பனையான வீண் பயமுமே இவரது திருமணம் தாமதமாவதற்கான காரணிகள் என்பது புரிகிறது.  இவருடைய ஜாதக பலத்தின்படி இவர் உத்யோகம் பார்க்கின்ற துறையைச் சேர்ந்தவரே மாப்பிள்ளையாக அமைவார். எப்படிப்பட்ட கணவராக  அமைவாரோ என்ற பயத்தினைத் துறந்து தைரியமாக அவரது திருமணத்தை நடத்துங்கள். தற்போது நடந்து வரும் புதன் தசை முடிவதற்குள்  திருமணத்தை நடத்திவிட வேண்டியது அவசியம்.

அடுத்து வரும் கேது தசையில் உத்யோக ரீதியான முன்னேற்றத்தினைத்தான் காண இயலுமே தவிர, திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு  இல்லை. 02.07.2020 வரை புதன் தசையின் காலம் இருந்தாலும், அதுவரை பொறுத்திருக்காமல் நேரத்தினைஉணர்ந்து உடனடியாக செயலில்  இறங்குங்கள். மேற்சொன்ன காலத்திற்குள் இவர் திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயாகிவிடுவது நல்லது. அதன் பின்பு வரக்கூடிய தசை, புத்ர  பாக்யத்தைத் தடை செய்யக்கூடும். கணவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை.

கிழக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். தெய்வ சாந்நித்தியம் நிறைந்த உலகின் மிகச்சிறந்த திருத்தலத்தில் வசிக்கும் நீங்கள் உங்களுக்குக்  கிடைத்திருக்கும் சௌகரியத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சனிக்கிழமைதோறும் அதிகாலையில் உங்கள் மகளை திருப்பதி கோவிந்தராஜப்  பெருமாள் சந்நதிக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்யச் சொல்லுங்கள். விமோசனம் பிறக்கும். வருகின்ற அக்டோபர் மாதத்திற்குப் பின் உங்கள்  மகளின் திருமணம் முடிவாகிவிடும்.

?ஜாதகம் பார்த்த இடத்தில் தகப்பனும், மகனும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று  தெரியவில்லை. பணி ஓய்வு பெற்று வந்த பணமெல்லாம் எங்கள் குடும்பத்தாரின் வைத்திய செலவிற்கே சரியாகிவிட்டது. மகன் ஐ.டி.வேலையை  விட்டுவிட்டு சாதாரண வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். நிம்மதி இல்லாத வாழ்க்கை. ஏதாவது நல்லவழி சொல்லுங்கள்.
-மூர்த்தி, தாராசுரம்.

 உங்கள் உடல்நிலை, மனைவியின் உடல்நிலை, மகனின் உடல்நிலை என்று வரிசையாக பாதிக்கப்பட்டதன் தாக்கமும், விரக்தியும் உங்கள் கடிதத்தில்  வெளிப்படுகிறது. அஸ்வினி நக்ஷத்திரம், மேஷராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூரிய
தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் சூரியன் நீசம் பெற்றிருப்பதால் கடந்த நான்கு வருடங்களாக  அவர் தன் வாழ்வில் சரியான முடிவு எடுக்க இயலாமல் மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது.

உத்யோக ரீதியாக அவர் வேறுசில முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அரசு தரப்பு தேர்வுகள், குறிப்பாக குரூப்-4 தேர்வு  முதலானவற்றை எழுதிவரச் சொல்லுங்கள். 32வது வயதில் துவங்கும் சந்திரதசை பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய  ஜாதகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விவரங்களும், அனுப்பியிருக்கும் ஜாதகமும் முரண்படுகின்றன. நீங்கள் பிறந்த நேரமும் அதில் துல்லியமாகக்  குறிப்பிடப்படவில்லை. தோராயமாக சொல்லும் நேரத்தினைக் கொண்டு ஜாதகத்தை சரியாகக் கணிக்க இயலாது.

எனினும் உங்கள் பிள்ளையின் ஜாதக அமைப்பினைக் கொண்டு பார்க்கையில் நிம்மதியான வாழ்விற்கு நீங்கள் இன்னமும் இரண்டு வருடம் காத்திருக்க  வேண்டும் என்பது புலனாகிறது. தகப்பனும் மகனும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. தற்போதைய  சூழலில் அவர் உங்களுடன் இருப்பதுதான் நல்லது. ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று  அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுங்கள். தினமும் அதிகாலை சூரிய உதயகாலத்தில் உங்கள் துணைவியாருடன் இணைந்து சூரியஒளி படும்  இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.

?சற்று மன வளர்ச்சி குன்றிய என் மகனின் ஜாதகத்தை அனுப்பி உள்ளேன். இவனது எதிர்காலம் எவ்வாறு உள்ளது? ஏதேனும் பரிகாரம் செய்ய  வேண்டுமா?
-சசிகுமார், நாகர்கோவில்.

 இருபத்திஐந்து வயது கடந்த நிலையில் உங்கள் மகனின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று ஆவலோடு கேட்டிருக்கிறீர்கள். திருவாதிரை  நட்சத்திரம், மிதுன ராசி, கன்யா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி  நடந்துகொண்டிருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கும், ராசிக்கும் அதிபதியாகிய புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்து சற்று  போராட்டமான வாழ்க்கையைத் தந்துள்ளார். ஜென்ம லக்னத்தில் வக்கிர நிலையில் குரு அமர்ந்திருப்பது மனநிலை மாற்றத்தைத் தந்திருக்கிறது.

ஏழில் சுக்கிரன் உச்சபலத்தோடு வக்கிர சஞ்சாரத்தில் இருப்பது சற்று சோதனையைத் தரும். எனினும் தற்போதைய தசாபுக்தி பலத்தின்படி அவர்  சுகமான சூழலை அனுபவித்து வருகிறார். 17.05.2021 முதல் துவங்க உள்ள சனிதசை அவரது வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும். சனிதசை துவங்கும்  காலத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். அவரது மனநிலையைப் பற்றி கவலைப்படாது ஆசிரமங்கள், காப்பகங்கள், தொண்டு  நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியோடு அவரை நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு அனுப்புவது நல்லது.

அவரால் இயன்ற சிறுசிறு பணிகளைச் செய்வது அவரது மனநிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்கள் ஊரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில்  திங்கட்கிழமை தோறும் ராகுகால வேளையில் உங்கள் பிள்ளையை அழைத்துச் சென்று அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு கலந்து அகல் விளக்கு  செய்து அதில் நெய் ஊற்றி பருத்தி நூலினால் ஆன திரியை ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள். அவருடைய எதிர்காலம் நல்லபடியாக அமையும்.

?எனது பேரன் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டுச் சென்று ஐந்தரை வருடமாகிறது. எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை.  அவனுக்கு 67 வயதில் தாயார் மட்டும் இருக்கிறாள். எனக்கும் 94 வயதாகிறது. எனது பேரன் திரும்ப வருவானா?
-ஏ.எஸ்.தீக்ஷிதர், திருவானைக்காவல்.

 ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் உங்கள் பேரனின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளார்.  அதிலும் லக்னத்திற்கு அதிபதியாகிய குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளார். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீனலக்னத்தில் பிறந்துள்ள  உங்கள் பேரனின் ஜாதகபலம் நன்றாகவே உள்ளது. தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருவதால் நற்பலன்களையே அனுபவித்து  வருகிறார். அவருடைய ஜாதகத்தில் ஜீவனஸ்தானத்தில் புதனும், சுக்கிரனும் இணைந்திருப்பதால் நல்லதொரு தொழிலைச் செய்துகொண்டிருப்பார்.

கையில் காசு பணத்திற்கு குறை ஏதும் இருக்காது. தனாதிபதி செவ்வாய் 11ல் உச்சம் பெற்றிருப்பதால் கை நிறைய காசு புழங்கிக் கொண்டிருக்கும்.  தொலைதூரத்தில் நல்லபடியாக வசித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் பிதுர் ஸ்தானம் பலமற்று இருக்கிறது. அவரது தந்தையைப்  பற்றி நீங்கள் கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. தந்தையைப் பற்றிய சிந்தனைகளும், எண்ணங்களும் அவரை வீட்டைவிட்டு வெளியேறச்  செய்திருக்கலாம்.

எனினும் தற்போது நேரம் நன்றாக இருப்பதால் அவர் தன் தாயாரைத் தேடி வருவதற்கான வாய்ப்பு உண்டு. 03.08.2019ற்குள் உங்கள் பேரன் வீடு  திரும்புவார். அவருடைய ஜாதக அமைப்பின்படி அவர் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய  அவசியமில்லை. அகிலாண்டேஸ்வரி உங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயம் செவிமடுப்பாள். உங்கள் ஆயுட்காலத்
திற்குள் நிச்சயம் பேரனைக் காண்பீர்கள்.

?34 வயதாகும் என் மகனுக்கு திருமணத்திற்காக கடும் முயற்சி செய்தும் தடைபட்டுக்கொண்டே போகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? அவனது  எதிர்காலம் எப்படி இருக்கும்?
-கண்ணன், குரோம்பேட்டை.

 உங்கள் மகனின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் இணைந்துள்ள செவ்வாயும், கேதுவும் திருமணத்தடையை உண்டாக்குகிறார்கள். ரோகிணி நட்சத்திரம்,  ரிஷபராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற சனி ஆறிலும், குரு பகவான் எட்டிலும் அமர்ந்துள்ளனர்.  அவருடைய ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி துவங்கி உள்ளது. 11.05.2018 முதல் நல்ல நேரம் ஆரம்பித்து உள்ளதால் இந்த நேரத்தில்  நீங்கள்அவரது திருமணத்தை நடத்த இயலும். எனினும் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் உச்ச பலத்துடன் உள்ள கேது பகவான்  ஆட்சி பலத்துடன் உள்ள செவ்வாயுடன் இணைந்து தடை செய்து வருகிறார்.

தலையில் நாகத்துடன் உள்ள நரசிம்ம மூர்த்தியின் படத்தினை வைத்து செவ்வாய்தோறும் உங்கள் மகனை பூஜை செய்து வணங்கிவரச் சொல்லுங்கள்.  கராள நரசிம்மர் என்ற அந்த திருவுருவ வழிபாடு, கேதுவினால் உண்டாகும் தோஷத்தினைப் போக்கவல்லது. அழகான பெண்ணாக இருக்க வேண்டும்  என்ற எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு பெண் தேடுங்கள். அழகில் குறை இருந்தாலும் அறிவிற் சிறந்தவளாக மருமகள் வெகு விரைவில் வந்து  சேர்வார். இந்த வருட இறுதியில் உங்கள் மகனின் திருமணம் நிச்சயமாகிவிடும். கவலை வேண்டாம்.

?என் மகளின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவான் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி  ஆகிவிடுகின்றன என்று உள்ளூர் ஜோதிடர் கூறுகிறார். அவர் சொல்வது உண்மைதானா? என் மகளின் எதிர்காலம் எப்படி உள்ளது? என் மகளின்  ஜாதகப்படி நாங்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
-மாரிமுத்து, கொன்றைக்காடு.

 உங்கள் ஜோதிடர் சொன்ன கருத்து உண்மையே. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில்  பன்னிரண்டில் செவ்வாய், இரண்டில் சனி-கேதுவின் இணைவு, எட்டில் ராகு என்று ஒருசில இடைஞ்சல்கள் இருந்தாலும் இந்த தோஷங்கள்  அனைத்தையும் ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவானின் பார்வை சரிசெய்துவிடும். அதனால் நீங்கள் மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் அவரது கல்விநிலை உயர்வடையும். தைரியக் குறைவு, அவருடைய பலவீனம். மகளை நல்ல தைரியசாலியாக வளர்க்க வேண்டிய  கடமை உங்களுக்கு உள்ளது. அவருடைய ஜாதகப்படி நவகிரஹங்களில் உள்ள குருபகவானை வணங்கி வாருங்கள். அதேபோல செவ்வாய்தோறும்  ராகுகாலத்தில் விஷ்ணு துர்க்கைக்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு வருவதும் உங்கள் மகளின் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும். உங்கள் மகளின்  13வது வயது முதல் 31வது வயது வரை  செவ்வாய்க்கிழமை தோறும் தவறாது துர்க்கை வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. எட்டாம்  இடத்து ராகுவினால் உண்டாகும் சிரமங்கள் முற்றிலுமாகக் குறைந்து உங்கள் மகளின் வாழ்வு சிறக்கும்.

சுபஸ்ரீ சங்கரன்