தெளிவுடையவன் பிறர் விமரிசனங்களைப் பொருட்படுத்துவதில்லை!



மகாபாரதம்-87

யுதிஷ்டரிடம் பேசி வந்த சஞ்சயன் நேரே அஸ்தினாபுரம் வந்தார். தன் வருகையை மன்னனுக்குத் தெரிவித்தார். தடையின்றி உள்ளே வர  உத்தரவானதும் திருதராஷ்டிரனிடம் வந்து கை கூப்பினார். பாண்டவர்கள் நலம் விசாரித்ததை சுருங்கச் சொன்னார். ‘‘அவர்கள் யுத்தம் என்று தெளிவாக  இருக்கிறார்கள். துரியோதனனும் அவர்களுக்குரிய பங்கை தர மாட்டான் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கோபமாக இல்லை.  அமைதியாக இருக்கிறார்கள். ஆழ்ந்து யோசித்து பேசுகிறார்கள். அந்த அமைதிதான் எனக்கு பயமாக இருக்கிறது.

போர் என்று வந்தால் நாங்கள் ஜெயிப்போம் என்ற உறுதி அவர்களிடம் தெரிகிறது. யுதிஷ்டர் முழுவதும் பேசவில்லை. கிருஷ்ணரை பேசச்  சொல்கிறார். கிருஷ்ணரின் பேச்சு சமாதானத்தை விரும்புவது போல் தெரிந்தாலும், பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் கிடைப்பதே அதற்கு வழி என்கிறார்.  இவற்றையெல்லாம் காணும்பொழுது உங்கள் பிள்ளையும் அவன் கூட்டத்தாரும் கொல்லப்படப் போவது உறுதி. போரில் வெற்றி என்பது போர் வீரர்கள்  எண்ணிக்கை மட்டுமல்ல. மகாரதிகளின் கூட்டம் மட்டுமல்ல. அதற்கு ஒரு வெஞ்சினம் வேண்டும். அவர்கள் மற்ற மன்னர்களோடு யுத்த ஆலோசனை  செய்தபோது திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தையே முதல் விஷயமாகப் பேசினார்கள்.

கர்ணனுடைய கேலியையே கவனம் கொண்டு பேசினார்கள். அவர்களுடைய அந்த மனவேதனையை யாராலும் மாற்ற முடியாது. போருக்கு இதுதான்  வழிவகுக்கிறது. இதுதான் போரை உக்கரப்படுத்தும். இந்த கோபத்திற்கு எதிரே எவன் ஜெயிக்க முடியும். மிகுந்த பலசாலிகளான அவர்கள்  வனவாசத்தாலும், அஞ்ஞாத வாசத்தாலும் அழுந்திக் கிடந்தார்கள். இப்போது பீறிடும் சமயம் வந்து விட்டது. திறமையும், கோபமும் போட்டி போட்டுக்  கொண்டு கௌரவர்களை வதம் செய்யப் போகின்றன. கௌரவர்கள் ஜெயிப்பதற்குண்டான வாய்ப்பு எனக்குத் தெரியவில்லை. நாளைக்கு சபையில் பலர்  அறிய இந்த உண்மையைச் சொல்லுவேன். இது துரியோதனனை பலவீனப்படுத்தட்டும்.

கர்ணனை நிலைகுலையச் செய்யட்டும். அல்லது படுகுழியில் விழ அவர்கள் தயாராகட்டும். ஏனெனில் உங்கள் சபை சொல்லுவதை அவர்கள் கேட்கப்  போவதில்லை. எனக்கு அயற்சியாக இருக்கிறது. நான் ஓய்வெடுக்கப் போகிறேன். விடைகொடுங்கள்.’’ வணங்கி விட்டு சஞ்சயன் அரண்மனையை  விட்டு வெளியேறினார். ‘‘விதுரா’’, திருதராஷ்டிரன் அலறினான். ‘‘உடனே விதுரரை கூப்பிடு. மனதும் வயிறும் கலங்கும்படியான வார்த்தைகளை  சஞ்சயன் சொல்லி விட்டுப் போகிறான். என்னால் இனி உறங்க முடியாது. விதுரனை அழைத்து வந்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை  தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். விதுரன் தர்மத்தின் பக்கம் நிற்பவன்.

அவனால் எனக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்ல முடியும். உடனே விதுரனை அழைத்து வா’’ என்று கட்டளையிட்டான். விதுரர் விரைவாக வந்து  சேர்ந்தார். திருதராஷ்டிரனுக்கு அருகே போய், ‘‘நான் விதுரன் வந்திருக்கிறேன். என்னை அழைத்தீர்களாமே’’ என்று பணிவாகக் கேட்டார். ‘‘விதுரா,  அருமை சகோதரனே, எனக்கு மனம் கலங்கியிருக்கிறது. தூங்க முடியவில்லை. என்ன முயற்சித்தாலும் உறக்கம் வரவில்லை. மாறாக இடையறாத  ஒரு பதட்டத்தில் சிக்கித் தவிக்கிறேன். என் வம்சத்தினர் வாழ்வு என்ன ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்ற காரணம்  புரியவில்லை. இன்றைய சூழ்நிலையை ஆராய்ந்து தெளிவாகப் பேசு. இம்மாதிரி நேரத்தில் ஒரு அரசன் என்ன செய்ய வேண்டுமென்று சொல்.

யார் பக்கம் நிற்க வேண்டும் என்று தெரிவி. வந்த அந்தணரும் சண்டையைச் சொல்ல, போன சஞ்சயனும் யுத்தம் பற்றிய செய்தியோடு வர, என்  மனதில் கலக்கம் அதிகமாகிறது. அழிவு வந்துவிட்டதோ என்றுத் தோன்றுகிறது. நான் இப்போது செய்ய வேண்டிய தர்மத்தைச் சொல். நீ  அறிவுமிக்கவன். ஞானி. என் மீது அக்கறையுள்ளவன். துன்பத்தில் இருக்கின்ற என்னை வழிநடத்து.’’ திருதராஷ்டிரன் பணிவாகக் கை கூப்பினான்.  துன்பம் நெருங்கி வருகிறபோதுதான் சமாதானம் பற்றியும், சண்டையில்லா உலகம் பற்றியும் சிலருக்கு அக்கறை வரும். ஆனால் வந்த துன்பம் விலகி  நின்றதும் மறுபடியும் கொக்கரிப்பு ஏற்படும். தர்மம் என்பது துன்பமே வரக்கூடாது என்று பேசப்படுவது அல்ல.

துன்பம் வரும்போதும் துவளாது இருக்க தர்மம் உதவி செய்யும். விதுரன் யோசித்து பேச ஆரம்பித்தார். இந்தப் பகுதிக்கு விதுர நீதி என்று பெயர்.  சுருக்கமாகவும், தெளிவாகவும் வாழ்வின் தர்மத்தைப் பற்றி விதுர நீதி சொல்கிறது. அரசனுக்கு மட்டுமல்ல, சகலருக்கும் உரித்தானது. மகாபாரதத்தின்  சிறப்பு பகவத்கீதை. பகவத்கீதை தங்கப் பதக்கம் என்றால் விதுர நீதி வெள்ளிப் பதக்கம். பலமுறை பலமுறை படிக்க வேண்டிய விஷயம்.  திருதராஷ்டிரனை நோக்கி பணிவாகவும், உறுதியாகவும் விதுரர் பேசத் துவங்கினார். இது பேச வேண்டிய நேரம் என்று புரிந்து கொண்டு பேசினார்.  இங்கு பேசினால் ஏதேனும் பலன் ஏற்பட்டாலும் ஏற்படும் என்று பலரின் நன்மை கருதி அவர் பேசத் துவங்கினார்.

தாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறோம், இந்த வாய்ப்பை விடக்கூடாது நாமாக வந்து பேசுவதை விட  அழைக்கும்போது நாம் பேசினால் ஆழ்ந்து கவனிக்க அழைத்தவருக்கு அக்கறை இருக்கும் என்று நினைத்துப் பேசினார். ‘‘திருதராஷ்டிர மன்னனே,  பலவானை பகைத்துக் கொண்ட பலவீனன், காமுகன், திருடன், நோயாளி இவர்களுக்குத்தான் இரவில் தூக்கம் இருக்காது. இந்த நான்கில் நீங்கள் எந்த  இடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்து எனக்குச் சொல்லுங்கள். பாண்டவர்களுக்கு நீங்கள் தரவேண்டிய ராஜ்ஜியத்தை தராமல்  போனது பிசகு.

அவர்களை சூதாட அழைத்ததும், அந்த சபையில் அவர் மனைவியை உங்கள் பிள்ளைகள் அவமானப்படுத்தியதும், அதை நீங்கள் தட்டிக் கேட்காமல்  இருந்ததும் மிகப்பெரிய தவறு. உண்மையில் அந்த விஷயங்கள்தான் இப்போது உங்களை வாட்டுகின்றன. யாரிடம் எந்த பொறுப்பை விடவேண்டுமோ  அவர்களிடம் ஒரு மன்னன் பொறுப்பை விடவேண்டும். துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் போன்ற தகுதியற்ற மனிதர்களிடம் ராஜ்ய  பரிபாலனத்தை விட்டு விட்டு நீங்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். அடுத்த வேளை, அடுத்த பொழுதில் இவர்கள் என்ன கூத்து செய்வார்களோ  என்ற பயத்தோடுதானே இருப்பீர்கள். எப்படி தூங்க முடியும்.

எவன் உண்மையிலேயே தனக்கு என்ன தெரியும் என்கிற ஞானம், முயற்சி, துயரத்தை சகிக்கும் சக்தி, தர்மத்தில் உறுதி போன்ற குணங்கள் இருப்பின்  அவன் பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான். பண்டிதனால்தான் உலகுக்கு நன்மைகள் செய்ய முடியும். உலக காரியங்களை உண்மையாய்  செய்கிறவனும், தீய காரியங்களிலிருந்து விலகுபவனும், ஆஸ்திகனும், எல்லா காரியத்தையும் சிரத்தையோடு செய்வதும் பண்டிதனுக்குறிய  லட்சணங்கள். அதர்மம், வெட்கம், பிடிவாதம், அதீத சந்தோஷம், தன்னையே பூஜைக்குரியவனாக கருதுதல் போன்ற பாவங்கள் ஒரு மனிதருடைய  கம்பீரத்தை குலைக்கின்றன. அவன் மனிதர்களால் கேலிக்கான பொருளாக மாறுகிறான்.

மற்றவர் தன்னை கேலியாக பார்க்கிறார்களோ என்று துயரப்படும் மனிதனுக்கு தூக்கம் வருவதில்லை. தர்மத்தோடு இருக்கிறோம் என்ற  தெளிவுடையவன் மற்றவர்களுடைய விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவன் பொழுதுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. வெட்கம், பயம்,  அன்பு, செல்வம், ஏழ்மை இவை யாருடைய காரியத்தில் தலையிடுவதில்லையோ அவனே பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான். எவன் போகத்தை  விட்டு கம்பீரத்தை கடைபிடிக்கிறானோ அவனே பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான். தன்னுடைய சக்தி என்ன என்று புரிந்து கொண்டு  அதற்கேற்றபடி பணி செய்கிறவனையே உலகம் மதிக்கிறது. நல்ல புத்தி தெரிந்தவன் மற்றவர்களை துச்சமாக மதிப்பதில்லை.

ஒரு பண்டிதன் விஷயத்தை வெகுநேரம் கேட்கிறான். ஆனால் முற்றிலும் சீக்கிரம் புரிந்து கொண்டு விடுகிறான். தன்னுடைய கடமை என்ன என்று  புரிந்து கொண்டு கம்பீரமாய் தன் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் விருப்பம் என்பது அங்கு குறுக்கிடுவதில்லை. எந்த ஒரு விஷயமும் வீணாகப்  பேசுவதில்லை. இந்த மூன்று செயல்களும் பண்டிதனுடைய முக்கியமான இயல்புகளாகும். அமைதியான அறிவுள்ள மனிதன் கிடைத்தற்கு அரிய  பொருளை விரும்புவதில்லை. உயர்ந்த பொருளின் விஷயத்தில் ஆசைப்பட்டு துயரப்பட விரும்புவதில்லை. யோசனை செய்து ஒரு விஷயத்தில்  இறங்குகிறவன், மனதை தன் வசத்தில் வைத்திருப்பவன் பண்டிதன் என்று கருதப்படுகிறான்.

தர்மங்களில் மனிதனுக்கு ஒரு ருசி ஏற்பட வேண்டும். உன்னதமான காரியம் செய்வதற்கு ஒரு விழைவு ஏற்பட வேண்டும். அப்படி செய்பவர்களிடம்  ஏதேனும் குறை இருப்பினும் அதை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நல்லவர்கள் மேற்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான  விஷயத்தைப் பற்றி கொஞ்சம் காது கொடுத்து கேட்பீராக. எவன் செல்வத்தைக் கண்டால் சந்தோஷத்தால் மலர்ந்து விடுவதில்லையோ, எவன்  அவமதிப்பால் கவலைப்படுவதில்லையோ, எவருடைய உள்ளத்திற்கு எது பொருட்டும் துயரம் உண்டாவதில்லையோ அவன் பண்டிதன் என்று  அழைக்கப்படுகிறான். இப்படிப்பட்டவனுடைய வாக்கு தடைபடுவதில்லை. அவன் உளறுவதில்லை.

அவன் மிக தீர்க்கமாகப் பேசுகிறான். அழகாக விவாதம் செய்கிறான். சிறந்த நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் காட்டுகிறான். அவனை உலகம்  பண்டிதன் என்று அழைக்கிறது. ஒருவனுடைய அறிவு அவன் கற்றிருக்கும் வித்தையை பின்பற்ற வேண்டும். ஒருவருடைய வித்தை அவனை  அறிவைச் சார்ந்து இருக்கிறதோ அவன் பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான். படிக்காமலேயே பெரிய படிப்பாளி போல நடந்து கொள்கிறவன்,   தகுதிக்குப் பொருந்தாத பதவி உடையவன், வேலை செய்யாமலேயே செல்வம் செய்ய விரும்புகின்றவன் ஆகியோரை பண்டிதர்கள் முட்டாள்கள் என்று  கூறுகிறார்கள்.

எவன் தன் கடமையை விட்டுவிட்டு மற்றவருடைய கடமையை கடைபிடிக்கிறானோ, நண்பர்களோடு பொய்யாக நடந்து கொள்கிறானோ, அவன்  முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். சேர்க்கத் தகாதவர்களை எவன் விரும்புகிறானோ அவனும் முட்டாள்தான். யாரிடமும், எது பற்றியும் ஐயம்  கொள்கிறவன், விரைவில் நடக்க வேண்டிய காரியத்தை தாமதமாகச் செய்பவன் மூடன் என்று கருதப்படுகிறான். எவன் பித்ருக்களின்  சிரார்த்தத்தையும், தேவர்களின் பூஜையையும் செய்யவில்லையோ, எவனுக்கு நல்ல எண்ணமுடைய நண்பர்கள் கிடைப்பதில்லையோ அவனையும்  மூடன் என்றே சொல்லலாம். அத்தகைய மூடன் அம்மாதிரியான அதமன் யாரும் அழைக்காமலேயே உள்ளே வந்து விடுகிறான்.

பிறர் கேட்காமலேயே அதிகம் பேசுகிறான். அவன் நம்பத்தகாத மனிதரை அதிகம் நம்புகிறான். இம்மாதிரி மனிதர்களால் உலகில் குழப்பங்கள்தான்  ஏற்படும். எவனொருவன் தான் குற்றமாக நடந்தபடி மற்றவர் மீது அந்த குற்றத்தைக் கூறி ஆட்சேபணை செய்கிறானோ, எவன் திறமை இருக்கிறவனை  வீணாக கோபிக்கிறானோ அவன் மிகப் பெரிய முட்டாளாவான். அதிகாரம் இல்லாதவனுக்கு எவன் உபதேசிக்கிறானோ, அனர்தத்தை எவன்  உபாசிக்கிறானோ, எவன் கடுமையைக் கொண்டாடுகிறானோ அவனை மூடன் என்று கூறுகிறார்கள். எவன் பெரும் செல்வம், வித்தை மற்றும்  ஐஸ்வர்யத்தை பெற்றும் பிடிவாதக்காரனாக நடந்து கொள்வதில்லையோ அவன் பண்டிதன் என்று அழைக்கப்படுகிறான்.

தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களுக்கு உணவு தராமல், உடை தராமல், தானே நல்ல போஜனமும், நல்ல உடையும் அணிகிறவன் மிகப்  பெரிய கொடுமைக்காரன். அதிகாரம் உள்ள மனிதன் தனியாக பாவம் செய்கிறான். அதை பலபேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பயன்படுத்தியவர்கள்  குற்றத்திலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் அதைச் செய்தவன் அந்த குற்றத்திற்கு முழு பொறுப்பாகிறான். ஒரு மூடனால் வெளியிடப்பட்ட குருட்டு  அறிவு ஒரு ராஜ்ஜியத்தை அழித்து விடும். மது குடிப்பதால் குடிப்பவன் மட்டுமே இறந்து போகிறான். ஆயுதம் ஒருவனைத்தான் அழிக்கிறது. ஆனால்  தவறான ஆலோசனைகள் மக்களை, மன்னனை அழிக்கின்றன. உலகத்தில் பொறுமைதான் அழகிய குணம். வசீகரமான குணம்.

பொறுமையால் எதுதான் வெற்றியடையாது. தர்மம் என்பது கூரான வாள். துஷ்டர்கள் அவருக்கு அருகில் நெருங்க முடியாது. வெற்று நிலத்தில்  விழுந்த நெருப்பு தானாக அணைந்து விடும். பொறுமை இல்லாது செய்யப்படுகின்ற கோபதாபங்கள் எந்தப் பயனுமின்றி தானாக நீர்த்துப் போய் விடும்.  இரண்டு வகை அதர்ம புருஷர்கள் உலகத்தில் உண்டு. தன் கடமையைச் செய்யாத குடும்பஸ்தன், உலகத்திலுள்ள கர்மங்களை செய்கின்ற சன்னியாசி.  குடும்பம் என்பது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்காத மனிதனை உலகம் மதிப்பதேயில்லை. துறவு என்பது எதன் மீதும் பற்றற்று இருத்தல்.  இடையறாது தன்னுள் ஒடுங்கிக்கிடத்தல். உள்ளுக்குள் ஒடுங்காது உலகத்தின் போகங்களில் புரள்கிறவனை எப்படி சன்னியாசி என்று அழைப்பது.

இவர்கள் இரண்டு பேருமே கேலிக்குரியவர்களாக மாறிப் போகிறார்கள். பெரும் பாவம் இவர்களைச் சூழ்கிறது. மனைவியால் நேசிக்கப்படுகிற புருஷனை  விரும்புகின்ற பெண், புருஷனால் நேசிக்கப்படுகின்ற மனைவியை விரும்புகின்ற ஒரு ஆண் சுயமதிப்பீடு இல்லாமல் போகிறார்கள். சொந்த கௌரவம்  பாழ்பட்டு இருக்கிறார்கள். யாரையும் சாராமல் இருப்பதே சிறப்பு. இருவகையான மனிதர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். ஏன் சொர்கத்தை விட  உயரமான இடத்தை அடைகிறார்கள். பலசாலியாக இருந்தும் பொறுமையாக இருப்பவன், ஏழையாக இருந்தும் தானம் அளிப்பவன் இரண்டு பேரும்  உன்னத இடத்தை இறந்த பிறகு அடைகிறார்கள்.

எவன் செல்வனாக இருந்தும் தானம் அளிக்கவில்லையோ, எவன் தரித்தரனாக இருந்தும் கஷ்டத்தை சகிக்கவில்லையோ, அவன் வாழும்போதே  நரகத்தில் உழல்கிறான். சுகபோகம் துறந்த சன்னியாசியும், போரில் பகைவர் எதிரே வீரமாக நின்று இறந்து போன போர்வீரனும் சூரிய மண்டலத்தை  தாண்டியும் நிற்கிறார்கள். சிறிய அறிவுடையவன், துதி செய்பவன், அவசரப்படுபவன் ஆகியோரோடு ரகசிய ஆலோசனை செய்யக் கூடாது, மன்னர்கள்  இவர்களை விலக்கி வைக்க வேண்டும். அறிவாளிகள் இத்தகைய மக்களை புரிந்து கொள்கிறார்கள். ஒரு செல்வந்தர் தன்னுடைய வீட்டில் நான்கு  வகையான முக்கிய மனிதர்களை எப்பொழுதும் இருக்கச் செய்ய வேண்டும்.

குடும்பத்தில் முதியவர், உயர்குல மனிதன், செல்வமற்ற நண்பன், குழந்தையற்ற சகோதரி இவர்கள் நால்வரும் செல்வந்தருக்கு எப்போதும்  உதவுவார்கள். எந்த யோக்கியதையும் இல்லாத, ஐஸ்வர்யத்தை விரும்பும் மனிதன், உறங்கும் மனிதன். தூக்க கலக்கம், கோபம், பயம், சோம்பல்,  தாமதம் என்ற ஆறு குணங்களும் நீக்கப்பட வேண்டும். உபதேசம் அளிக்காத ஆச்சாரியன், மந்திரத்தை உச்சரிக்காத சீடன், ஜனங்களை ரட்சிப்பதில்  திறமையற்ற மன்னன், கடுமையான சொற்களை பேசுகின்ற பெண், காடுகளுக்குப் போகாது கிராமத்திலேயே இருக்க விரும்புகின்ற இடையன்,  காட்டிற்கு போகும் நாவிதன் என்று அறுவரையும் சமூகம் புறக்கணித்து விடும்.

ஒரு மனிதன் ஒரு பொழுதும் சத்தியம், தானம், தன் கடமையைச் செய்தல், அசூயை இன்மை, பொறுமை, தைரியம் என்ற ஆறு குணங்களையும்  விடவே கூடாது. மன்னா, நியாயமான முறையில் செல்வத்தை அடைதல், எப்பொழுதும் ஆரோக்கியமாக இருத்தல், அனுகூலமான மனைவியை  அடைதல், தன் உறவுகளிடம் பிரியமாகப் பேசுதல், கட்டளைக்கு அடங்கியிருக்கின்ற மகன், செல்வத்தை உண்டாக்கும் வித்தை என்று ஆறு  விஷயங்களும் மனிதனுக்கு சுகம் அளிப்பன. இவை ஏதும் இல்லாது ஒரு மனிதன் சிறந்துவிட முடியாது. ஏதேனும் ஒன்று குறைந்தாலும் அவன்  வாழ்க்கை குறையுள்ளதாகத்தான் இருக்கும். இப்பொழுது சொல்லப் போகிற ஆறு வகையான மனிதர்கள் ஆறு வகையான மக்கள் மூலம் தங்கள்  வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

வைத்தியன் பிணியாளனாலும், காமம் கொண்ட பெண்கள் காமிகளாலும், புரோகிதர்கள் எஜமானரிடமிருந்தும், மன்னன் போரிடுபவனிடமிருந்தும்,  வித்வான்கள் முட்டாள்கள் மூலமும் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். சரியான முகூர்த்த நேரம் பார்த்து பரிமாறாதது, பசு, சேவை, பயிர், பெண்,  வித்தை, கலைகள் தெரிந்தவர்களின் சேர்க்கை என்ற ஆறு விஷயங்களும் நஷ்டமாகின்றன. பெண்ணை திருமணத்திற்கு பார்க்கப் போகிறபோதும்,  பசுவை வாங்குகிறபோதும், பயிரை விதைக்கிறபோதும், அறுவடை செய்கிறபோதும், உடையவர்களை சந்திக்கும்போதும்  நல்ல நேரம், நல்ல ஓரையில்  தொடர்பு கொள்ள வேண்டும். நேரம் தவறாக இருந்தால் இந்த விஷயங்களெல்லாம் எதிர்மறையாகப் போகும்.’’ என்றார் விதுரர்.

(தொடரும்)
பாலகுமாரன்

இதயபூர்வ அஞ்சலி

அந்தந்த அவருடைய வயதிற்கேற்ப அவரது எழுத்துப் பயணம் அமைந்ததை, பாலகுமாரனுடைய ஆரம்பகாலம் முதல் இன்றுவரையிலான இவரது  எழுத்துகளைப் படித்து வருபவர்களுக்குப் புரியும். கவிதை, சிறுகதை, நாவல், சினிமா என்ற வளர்ச்சியில், முதுமைகாலத்து முத்தாய்ப்பாக இவர்  ஆன்மிகத்திலேயே நிலைத்து, ஒன்றிவிட்டதும் புரியும். தினகரன் நாளிதழின் சனிக்கிழமை இணைப்பான ஆன்மிக மலரில், 2010 ஆண்டுவாக்கில்  ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற தலைப்பில் ஆன்மிக-இலக்கிய-தன்னம்பிக்கைத் தொடரை எழுதி, லட்சக்கணக்கான வாசகர்களின் மனதைக்  கவர்ந்தவர் பாலகுமாரன்.

தற்போது ஆன்மிகம் மாதமிருமுறை இதழில் ‘மகாபாரதம்’ தொடரை எழுதி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை அந்த புராண காலத்துக்கே அழைத்துச்  சென்று மகிழ்வித்து வந்தவர். இந்நிலையில் திரு பாலகுமாரன் அமரராகிவிட்டது, இலக்கிய-ஆன்மிக உலகிற்குப் பேரிழப்பு என்பது ஒவ்வொருவரும்  ஆழ்ந்த வருத்தத்துடன் உணரக்கூடியதாகும். ஆனாலும், தம் ஆன்மிகக் கடமையிலிருந்து பிறழ விரும்பாத பாலகுமாரன், தன் இறுதிநாள்வரை  எழுதிக்கொண்டே இருந்தார் என்பதையும், அவ்வாறு கடைசியாக எழுதப்பட்டது, நம் ஆன்மிகம் இதழுக்கான மகாபாரத அத்தியாயங்கள்தான்  என்பதையும் அறியும்போது மனம் நெகிழ்கிறது. இதயம் கசிந்து கண்ணீர் பெருகுகிறது. அந்த சில அத்தியாயங்களை மேலும் தொடர்ந்து பிரசுரித்து  அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்த விழைகிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.