பிரசாதங்கள்மேங்கோ இனிப்பு தயிர்

என்னென்ன தேவை?

கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 1 கப், சுண்ட காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப், மாம்பழக்கூழ் - 1/4 கப், தோல் நீக்கி  பொடியாக நறுக்கிய மாம்பழம் - 1/2 கப், அலங்கரிக்க பாதாம், பிஸ்தா சீவல் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தயிரை ஒரு துணியில் கட்டி தொங்க விட்டு வடிக்கவும். பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், தயிர், மாம்பழக்கூழ், பால் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது  மாம்பழத் துண்டுகள், சிறிது பாதாம், பிஸ்தா சீவல் கலந்து, சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி அலுமினிய ஃபாயில் பேப்பரால் மூடி இட்லி பாத்திரத்தில்  வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து மேலே மாம்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா சீவலால்  அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு: விருப்பமான வேறு பழங்களிலும் செய்யலாம்.

நுங்கு பாதாம் கீர்

என்னென்ன தேவை?

நுங்கு - 8, பாதாம் - 10, பால் - 2 கப், கன்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த பனங்கற்கண்டு - 1/2 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் -  தலா 1 சிட்டிகை, அலங்கரிக்க பாதாம், பிஸ்தா சீவல் - தேவைக்கு, குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

நுங்கின் தோலை நீக்கி சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். பாதாமை ஊறவைத்து தோலுரித்து சிறிது பாலுடன் சேர்த்து  அரைக்கவும். 1/4 கப் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊறவைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதனுடன் கன்டென்ஸ்டு மில்க், குங்குமப்பூ, பால்,  பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி, மிதமான தீயில் வைத்து, அரைத்த பாதாம் விழுது சேர்த்து கலந்து, கீர் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். ஆறியதும்  நுங்கு, ஏலக்காய்த்தூள் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பாதாம், பிஸ்தா சீவல், மேலே குங்குமப்பூ தூவி ஜில்லென்று பரிமாறவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்

என்னென்ன தேவை?

பெரிய கேரட், பெரிய தக்காளி - தலா 2, பீட்ரூட் - 1, பாகற்காய் - ஒரு சிறு துண்டு, சுரைக்காய் - 1/2 கப், இஞ்சி - 1 துண்டு, வெள்ளரிக்காய் -  சிறிது, ஓமம், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓமத்தை சிறிது தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், வெள்ளரி, இஞ்சியை நறுக்கி மிக்சியில்  அரைக்கவும். அதனுடன் ஓமத் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து வடித்து ஐஸ் துண்டுகள் சேர்த்து ஜில்லென்று  பரிமாறவும்.
குறிப்பு: மிளகுத் தூளுக்கு பதில் சாட் மசாலாத்தூள் சேர்க்கலாம்.

செம்பருத்தி பூ டிரிங்

என்னென்ன தேவை?

செம்பருத்திப்பூ - 8, பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

செம்பருத்திப் பூவின் காம்பு, நடுவில் உள்ள நரம்பு பகுதியை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும். பாத்திரத்தில் செம்பருத்திப் பூ இதழ்கள், பனங்கற்கண்டு  சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். ஆறியதும் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும். சிறிது குளிரவைத்தும்  பரிமாறலாம்.

எனர்ஜி ஃப்ரூட் ஸ்டுவர்ஸ்

என்னென்ன தேவை?

சதுரமாக நறுக்கிய மாம்பழம், பைனாப்பிள், தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், கிவி பழம் - தலா 1 கப், ஸ்ட்ராபெர்ரி - 8-10 பழம், கருப்பு, பச்சை திராட்சை,  சப்போட்டா - தலா 1 கப், தேன் - தேவைக்கு, குளுக்கோஸ் பவுடர் - சிறிது, சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு, டூத் பிக் அல்லது  நீட்டு குச்சி - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நீளமான குச்சியை சுத்தப்படுத்தி முதலில் கெட்டியாக உள்ள ஆப்பிள், தர்பூசணி, பப்பாளி என வரிசையாக பழங்களை மாற்றி மாற்றி குத்தி  அடுக்கவும். அதற்கு மேலே இனிப்புக்கு தேனும், காரத்திற்கு சாட் மசாலாத்தூள், உப்பும் தூவி குளிரவைத்து பரிமாறவும்.

ஓட்ஸ் வெள்ளரிக்காய் மோர் ஸ்மூத்தி

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், ஓட்ஸ் - 4 டேபிள்ஸ்பூன், மோர் - 1½ கப், உப்பு - தேவைக்கு, மிளகு - 3/4 டீஸ்பூன், சீரகம் - 2  டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறிய துண்டு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் சுக்கு, மிளகு, சீரகத்தை வாசனை வரும்வரை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். ஓட்ஸை லேசாக வறுத்து 1 கப்  தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கவும். நன்றாக ஆறியதும் கடைந்த மோர், பொடித்த தூள், வெள்ளரித்துண்டுகள் சேர்த்து கலந்து  ஸ்மூத்தியாக அப்படியே அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு: வெள்ளரிக்காயை துருவியும், மிக்சியில் அரைத்தும் செய்யலாம்.

சந்திரலேகா ராமமூர்த்தி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்