ஞானமயமாகிய திருவடிகளைத் தந்தருள்வாயாக!



அருணகிரி உலா-55

சிதம்பரம் செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த குமரகுருபரரிடம், ‘‘இங்கு பாடாமல் செல்ல வேண்டாம்’’ என்று தடுத்தாண்டான்  செல்வமுத்துக்குமரன், ‘முத்து’ என்று அருணகிரியாருக்கு அடி எடுத்துக் கொடுத்த பெருமாள் குமரகுருபரருக்கு ‘பொன் பூத்த குடுமி’ என்று முதலடி  அளித்து அருள்புரிந்தான். அங்ஙனம் அவர் பாடிய நூல்தான் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். ‘கொழுந்தேன் பிழிந்திட்டு மதுர அமுது  குழைத்தூற்றும் மழலை ததும்பப் பழமறையை வடித்துத் தெளித்த வார்த்தையொன்று மொழியும் பவளச் செங்கனிவாய் முத்தந்தருக முத்தமே  மும்மைத் தமிழ் தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே’ என்று முத்துக்குமரனின் முத்தப் பருவத்தை, முத்து முத்தான சொற்களால் அமைத்துள்ளார்  குமரகுருபரர்.

சிவபிரான் வைத்தியனாகவும், உமையவள் மருத்துவச்சியாகவும், முருகனே மருந்தாகவும் விளங்கும் திருத்தலம் வைத்தீஸ்வரன் கோயில் என்றால்  அது மிகையாகாது. மாதந்தோறும் கிருத்திகை மற்றும் கந்தர்சஷ்டி நாட்களில் மட்டுமே முத்துக்குமரனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மற்ற  நாட்களில் அவரது ஆத்மார்த்த பூஜா மூர்த்தியான ஸ்ரீமுத்துலிங்கத்திற்குத்தான் அபிஷேகங்கள். ஏனைய தலங்கள் போலன்றி அர்த்தஜாம பூஜை  காலத்தில் செல்வமுத்துக் குமாரருக்கு வழிபாடு நடந்த பின்னரே ஸ்வாமிக்கு வழிபாடு நடைபெறுகிறது! இதற்குப் புழுகாப்பு என்று பெயர். ‘நேத்திரப்பிடி  சந்தனம்’ இப்பூஜையின் போது சாத்தப்பட்டு பின் பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. ‘மாலினால்’ எனத் துவங்கும் தலத்திருப்புகழை இங்கு  அர்ப்பணிக்கிறோம்.
 
மாலினால் எடுத்த கந்தல், சோறினால் வளர்த்த பொந்தி
மாறியாடெடுத்தசிந்தை அநியாய
மயையால் எடுத்து மங்கினேனையா, எனக்கிரங்கி
வாரையா இனிப்பிறந்து இறவாமல்
வேலினால் வினைக் கணங்கள் தூளதா எரித்து உன்றன்
வீடுதா, பரித்த அன்பர் கணமூடே
மேவியான் உனைப் பொல் சிந்தையாகவே களித்து கந்த
வேளெயாம் எனப் பரிந்து அருள்வாயே’’
- என்பது பாடலின் முற்பகுதி.

பொருள்: மூவாசைகளின் (பெண், மண், பொன்) விளைவாக ஏற்பட்ட கிழிந்த உடம்பு, உணவைத் தின்று பொதிபோல வளர்ந்திருக்கும் சரீரம், (சோற்றுத்  துருத்தி சுமை சுமப்ப - தாயுமானவர்) மாறி மாறி ஆட்டம் கொள்ளும் எண்ணங்கள் இவற்றை மிகவும் கேவலமான ஜகமாயையால் எடுத்துக் கொண்டு  வாடுகிறேன், (‘மாயா பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே ஓயா ஜனனம் ஒழித்திலேன் பூரணமே’ - பட்டினத்தார்) என் ஐயனே! என்னிடம் இரங்கி வாரும்  ஐயா! இனியும் பிறந்தும் இறந்தும் இராமல் இருக்க அருளுமையா!

உனது திருக்கை வேலைப் பிரயோகித்து எனது திரளான வினைகளை சாம்பலாக்கி உனது சுக சாயுஜ்யத்தைத் தந்தருள வேண்டும். (பூவோடு நார்  சேர்ந்தாற் போல) அன்பு மிகுந்த அடியார் கூட்டத்தில் நானும் கலந்து, உன்னைப்போல் பாசங்களற்ற நிர்மல உள்ளம் பெற்று, பேரானந்தம் அடைந்து  குகோஹம் நிலையை அடைய அன்புடன் அருள்வாயாக! (‘வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்’ - கந்தர் அனுபூதி). பாடலின் பிற்பகுதியைப்  பார்ப்போம்:

‘காலினால் எனப்பரந்த சூரர்மாள வெற்றி கொண்ட
    கால பாநு சத்தி அங்கை முருகோனே
காம பாண மட்ட(அ)நந்த கோடி மாதரைப் புணர்ந்த
    காளை ஏறு கர்த்தன் எந்தை அருள்பாலா
சேலை நேர் விழிக்குறம் பெண் ஆசை தோளுறப் புணர்ந்து
    சீரை ஓது பத்தரன்பில் உறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளுருக்குகந்த
    சேவல் கேது சுற்று கந்த பெருமாளே’

பொருள்: காற்றைப் போல் எங்கும் பரவியிருந்த அசுர வீரர்கள் மடிய, வெற்றி நிலைக்க, எமனைப் போல் வலிமையும், சூரியனைப் போல் பேரொளியும்  கொண்ட வேலினைக் கையில் கொண்ட முருகனே! மன்மத பாணம் தாக்கியதால் நரகாசுரனால் சிறையில் வைக்கப்பட்ட எண்ணற்ற தேவ கந்தர்வ  கன்னியரை மணந்தவனும், இடபமாய் நின்ற திருமாலின் மீது வீற்றிருந்த எந்தை ஈசனின் குழந்தையே! (திரிபுர சம்ஹாரத்திற்கு எழுந்தருளியபோது  தேரின் அச்சு முறிந்ததால் திருமால் ரிஷபமாகித் தானே மஹாதேவரைத் தாங்கினார்).

சேல் மீன்கள் போன்ற கண்களை உடைய அழகிய குறவள்ளியை ஆசையுடன் தோள்களில் அணைத்த அந்த வள்ளி மணாளனின் சிறப்பை ஓதுகின்ற  பக்தர்களின் அன்புமிக்க மனதில் வீற்றிருப்பவனே! தேவர்களும், மாதர்களும், சித்தர்கள், அடியார்கள் சென்று வணங்க வைத்தீஸ்வரன் கோயிலில்  விளங்கும் பெருமாளே! சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே! இத்தலத்தில் பாடிய மற்றொரு பாடலில் முத்தமிழ் வல்ல புலவர்கள் ஓதி  மகிழ்கின்ற ஞானத் திருவடிகளைத் தந்தருளுமாறு வேண்டுகிறார்:
 
‘எத்தனை கோடி கோடி விட்டுடலோடி யாடி
    எத்தனை கோடி போனதளவேதோ
இப்படி மோகபோகம் இப்படியாகி யாகி
    இப்படி ஆவதேது இனிமேல், ஓ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
    சிக்கினில் ஆயுமாயும் அடியேனைச்
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது
    சித்திர ஞான பாதம் அருள்வாயே!’

பொருள்: எத்தனை கோடிக்கணக்கான உடல்களை விட்டு புது உடலில் புகுந்தும் ஆடியும், இப்படி எத்தனை கோடிப் பிறப்புகள் வந்து போய் விட்டன!  இதற்கு ஏதேனும் அளவு உண்டோ! இவ்வாறு மோகமும் போகமும் கலந்து இவ்வாறே பிறந்து பிறந்து இப்படியே ஆகிவருவது ஏனோ? இனிமேல்  யோசித்துப் பார்க்கில் எவ்வளவு இழிவானது இந்த மாய வாழ்க்கை என்று தோன்றுகிறது. இதன் பிடியில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை  அறிவுத்துறையில் பயிற்றுவித்து முத்தமிழிலும் தேர்ச்சி உடைய புலவர்கள் ஓதுகின்ற உனது அழகிய ஞானமயமான திருவடியைத் தந்தருள்வாயாக.

‘நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக
    நிர்த்தமதாடும் ஆறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு
    நெட்டிலை சூல பாணி அருள்பாலா
பைத்தலை நீரும் ஆயிரத்தலை மீது பீறு
    பத்திர பாத நீல மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
    பற்றிய மூவர் தேவர் பெருமாளே’

தினந்தோறும் உன்னைத் துதித்துப் போற்றுபவர்களின் மனத்தையே இருப்பிடமாகக் கொண்டு அதில் நடனம் புரியும் ஆறுமுகனே! அருவநிலையும்,  உருவநிலையும் உடையவர், இடப்பாகத்தில் அம்மை இருப்பதால் பச்சைவண்ணம் உடையவர், மூன்று நெடிய இலைகள் கொண்ட சூலத்தைக் கையில்  ஏந்தியுள்ள சிவபெருமான் பெற்ற குழந்தையே! ஆதிசேடனின் படங்கள் உள்ள பெரிய ஆயிரம் முடிகளின் மேலே கீறிக் கிழிக்கும் நொச்சி இலை  போன்ற மூன்று பிளவுகளுடைய கால்களமைந்த நீலமயில் வீரனே! பசுமையான இளம் கமுக மரத்தின் பாளைகளின் மேல் வயலிலிருந்து கயல்  மீன்கள் துள்ளிக் குதிக்கின்ற வேளூரில் விருப்பமுடன் வீற்றிருக்கும் மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் தலைவனான பெருமாளே! யோகக் கருத்துகள் நிறைந்த ஒரு பாடலில் அன்னையின் பெருமையை வெகுவாகப் போற்றியிருக்கிறார்.

‘சூலாள் மாது மைதூர்த்த சம்பவி
    மாதா, ராபகல் காத்தமைந்த அனை
    சூடோடு ஈர்வினை வாட்டி மைந்தரென எமையாளும்
தூயாள், மூவரை நாட்டும் எந்தையர்
    வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர்
    தோய் சாரூபரோடு ஏற்றிருந்தவள் அருள்பாலா’

சூலம் ஏந்திய தாய், கண்மை நிரம்பிய சாம்பவி, அன்னை, உலகை இரவும் பகலும் ரட்சிக்கும் தாய், நம்மைத் தகித்து இழுத்துச் செல்லும் வினைகளை  வாட்டி, சேயைக் காப்பது போல் நம்மைக் காக்கும் நிர்மலி, மும்மூர்த்திகட்கும் முத்தொழில்களையும் ஸ்தாபித்துக் கொடுத்த எம்பிரான், வைத்தீஸ்வரன்  கோயிலில் வாழ்கின்ற வைத்தியனாய் உருவத் திருமேனி எடுத்து எழுந்தருளியபோது, தான் தைலப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வைத்தியரின்  மனைவியாக வந்த தையல் நாயகி அருளிய குழந்தையே!

‘வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
    மூடார் சூரரை வாட்டி அந்தகன்
    வீடுடேவிய காத்திரம் பரி மயில் வாழ்வே!
வேதா நால்தலை சீக்கொளும்படி
    கோலாகாலம தாட்டு மந்திர
    வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே!’

வேலனே! சினங்கொண்டு ஏழ் கடல்களையும் வற்றச் செய்து கபடம்மிக்க முட்டாள்களான சூரர்களை மாய்த்து, அவர்களை எமபுரத்திற்கு  அனுப்பியவரும், மயிலைக் குதிரையாகக் கொண்டவனுமான செல்வமே! பிரம்மனின் நான்கு சிரங்களும் புண்ணாகி சீழ்படும்படிக் குட்டி ஆடம்பர  விளையாட்டுகள் புரிந்திடும் மந்திர வேலாயுதனே! திருமாலின் மகளான வள்ளியின் தவத்திற்கு இரங்கி அருள்புரிந்த பெருமாளே! கோவிலில் பங்குனி  மாதம் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. ஐந்தாம் நாளன்று செல்வமுத்துக்குமரர் வைத்தியநாதரைப் பூஜிக்கும் காட்சி சிறப்பு வாய்ந்தது.

உற்சவ காலங்களில் சுவாமி எழுந்தருளுகையில் ஒருபுறம் சுவாமியும், ஒருபுறம் அம்மையும், நடுவில் முத்துக்குமரனுமாக இறைவன்  சோமாஸ்கந்தராகக் காட்சி அளிக்கிறார். முத்துக்குமரனோடு வள்ளி-தெய்வானையையும் வணங்கி பிராகார வலம் வரும்போது கஜலட்சுமி,  அஷ்டலட்சுமி, நடராஜர், சிவகாமி அம்மை, துர்கை ஆகியோரை வணங்குகிறோம். நவக்கிரஹங்கள் வரிசையாக அமைந்துள்ளன. அறுபத்து மூவரையும்,  சப்த கன்னியரையும், சக்தி விநாயகர், சனிபகவான், சூரியன், தன்வந்திரி, கட்டுமலைமேல் சட்டநாதர், அடியில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் என  அனைவரையும் கண்டு வணங்குகிறோம்.

கோயிலில் ஜடாயு குண்டம் என்று ஒன்று உள்ளது. ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமபிரான் இத்தலத்தில் சிதையடுக்கி, ஜடாயுவின் உடலை  வைத்துத் தகனம் செய்ததனால் இப்பெயர் பெற்றது. குண்டத்தின் மேலே ராமர், லட்சுமணர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், ஜடாயு ஆகியோரின்  திருவுருவங்கள் உள்ளன. சோமாஸ்கந்தரையும், சிங்கார வேலவரையும் கண்டு வணங்குகிறோம். மேற்கு நுழைவாயிலருகே இரண்டு கொடிமரங்கள்  உள்ளன. இடப்புறம் திரும்பி நேரே சென்றால் அழகன் ஆறுமுகனைத் தரிசிக்கலாம்.

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி