ஆனந்தம் பெருக அருள்வார் அட்சயநாதர்!கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

திருமாந்துறை

சீகாழிப் பிள்ளையாம் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய திருத்தலங்கள் வரிசையில் சோழ நாட்டில் திருமாந்துறை என்ற பெயரில் இரண்டு  திருத்தலங்கள் உள்ளன. கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் லால்குடிக்கு அருகில் திகழும் திருமாந்துறையினை, வடகரை திருமாந்துறை  எனக்குறிப்பிடுவர். காவிரிப் பேராற்றின் வடகரையில் சூரியனார் கோயிலுக்கு அருகில் திருமாந்துறை என்ற மற்றொரு தலம் உள்ளது. இதனைக்  காவிரி வடகரை திருமாந்துறை என்பர். இவ்விரு திருவூர்களும் பண்டு மாமரக் காடுகளாகத் திகழ்ந்தவையாகும்.

இரண்டு ஊர்களையும் வடமொழி நூல்கள் ஆம்ரவனம் என்றே குறிப்பிடுகின்றன. இருவூர்களின் சிவாலய வழிபாட்டு மரபுப்படி சூரியன் சந்திரன்,  இந்திரன், மிருகண்டு முனிவர், மருத்து தேவதைகள்  வழிபட்ட இடங்களாகவே சைவ அன்பர்கள் குறிப்பிடுவர். அதுபோன்றே திருஞானசம்பந்தர்  பாடியுள்ள ‘செம்பொன் ஆர்தரு...’ என்ற முதற்பாடலில் தொடங்கி, ‘காவிரி வடகரை மாந்துறை’ என, பாடல்கள்தோறும் குறிப்பிடப்பெறும் ஒரு தேவாரப்  பதிகத்தினை மாந்துறை எனப்பெறும் இரு தலத்தாரும் தங்கள் தங்கள் பதிக்குரிய பதிகமே எனவும் குறிப்பிடுகின்றனர்.

சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் காணப்பெறும் குறிப்புகளின் அடிப்படையில் இரண்டு திருமாந்துறைகளுமே  ஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலங்கள்தாம் என்பது மெய்ப்படுகின்றது. திருக்கோடிக்கா எனும் திருவூரில் சொல்மாலைகள் பாடிய  பின்பு திருஞானசம்பந்தர் கஞ்சனூர் எனும் ஊரில் திகழும் பெருமானை வணங்கிய பின்பு மாந்துறை திருக்கோயிலுக்கு வந்து இறைவனை வணங்கி,  அவர் முன்பு அஞ்சொல் தமிழ் மாலையாகிய தேவாரப் பதிகமொன்றினைப் பாடிப் பின்பு அடியார்கள் பின்தொடர திருமங்கலக்குடி சேர்ந்தார் என்பார்  சேக்கிழார் பெருமான்.

இதனை ‘கஞ்சனூர் ஆண்டதங்கோவைக் கண்ணுற்று இறைஞ்சி முன்போந்து மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி அஞ்சொல் தமிழ்  மாலை சாத்தி அங்கண் அன்பர் முன்னாகச் செஞ்சடை வேதியர் மன்னுந் திருமங்கலக்குடி சேர்ந்தார்’ என்று பாடியுள்ளார். இச்சான்றால் திருக்கோடிக்கா,  கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி ஆகிய அடுத்தடுத்த தலங்களுக்குச் சென்று ஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களைப் பாடி வணங்கினார்  என்பதறிகிறோம். எனவே, காவிரியின் வடகரை அமைந்த மாந்துறை தேவாரத் தலமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சைவ மெய்யன்பர்களில் ஒரு சாரார் இங்கு குறிப்பிட்டுள்ள ‘செம்பொன் ஆர்தரு’ என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில் காணப்பெறும் ‘காவிரி  வடகரை மாந்துறை’ என்ற குறிப்புகளால், காவிரி நதியின் வடகரையில் கஞ்சனூர் அருகில் திகழும் மாந்துறையே இப்பதிகம் பாடப்பெற்ற பதி என  வாதிடுகின்றனர். ஆனால், சேக்கிழார் பெருமானோ, அன்பில் ஆலந்துறை சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர், வடகரை மாந்துறை அணைந்து,  பதிகம் பாடியதைக் குறிக்குமிடத்து, ‘சென்று திருமாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதிவாழ் சென்னியார்தம் முன்றில் பணிந்து, அணி  நெடுமாளிகை வலஞ்செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து துன்று கதிர்ப் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய நின்ற நிலை சிறப்பித்து நிறை  தமிழின் சொல் மாலை நிகழப்பாடி...’ என அத்தலத்துக்குரிய சிறப்புகளைப் பெரியபுராணத்திலேயே பதிவு செய்துள்ளார்.

இங்கு மேலே குறிப்பிடப்பெற்ற ‘செம்பொன் ஆர்தரு’ என்ற ஞானசம்பந்தரின் பதிகத்தை நோக்குவோமாயின் அதில் உள்ள ஆறாம் பாடலில் ‘பொருது  காவிரி வடகரை மாந்துறை புனிதன் எம்பெருமானைப் பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்து ஏத்த மருதுவானவர்  (மருத்தெய்வங்கள்) வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே’ என்ற அடிகள் காணப்பெறுவதால் இப்பதிகம் அன்பில் ஆலந்துறையை அடுத்த  கொள்ளிடத்து வடகரை பதியான மாந்துறையில் பாடப்பெற்ற பதிகமே என்பது உறுதியாகின்றது. கொள்ளிட நதியை காவிரி என்றே கூறுவது பண்டைய  மரபாகும்.

இவை அனைத்தையும் ஆழ்ந்து நோக்கும்போது காவிரியின் வடகரையில் கஞ்சனூர் அருகில் திகழும் திருமாந்துறையில் திருஞானசம்பந்தர் பாடிய  பதிகம் நமக்குக் கிடைக்காத பதிகம் என்றே கொள்ள வேண்டும். இத்திருமாந்துறை, கும்பகோணம் - பூம்புகார் சாலை எனப்பெறும் காவிரி வடகரை  சாலையில் சூரியனார் கோயிலுக்கு அருகே திகழ்கின்றது. திருவாவடுதுறை ஆதீனத்தின் பரிபாலனத்தில் திகழும் இவ்வாலயத்தின் ஈசனின் திருநாமம்  அட்சய நாதர் என்பதாகும். இவரை ஆம்ரவனேஸ்வரர் எனவும் அழைப்பர். அம்பிகையின் திருநாமங்களாக போகநாயகி என்றும், வாழ்வு தந்த அம்மை  என்றும் குறிப்பிடுகின்றனர்.

அட்சய தீர்த்தம் எனும் திருக்குளம் கோயில் முன்னால் திகழ, இப்பெருங்கோயில் மூன்று நிலை ராஜகோபுரம், நெடி துயர்ந்த திருமதில்  ஆகியவற்றுடன், தனித்தனி திருச்சுற்றுக்களுடன் சுவாமி கோயிலும், அம்மன் கோயிலும் உள்ளே காட்சி நல்குகின்றன. மூலவரின் திருக்கோயில்  கருவறை அர்த்தமண்டபம், மாகாமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது. மூலவர் அட்சய நாதரின் திருமேனி பெரிய லிங்க வடிவில்,  வெள்ளிக் கவசங்களுடன் பேரழகோடு விளங்குகின்றது. திருச்சுற்றில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய முத்திசைகளிலும் திருமாளிகைபத்தி எனும்  திருச்சுற்று, மாளிகையுடன் விளங்குகின்றது. தென்மேற்கில் உச்சிஷ்ட கணபதியார் கோயில் இடம் பெற்றுள்ளது.

வல்லபை என்ற தேவியுடன் திகழும் இம்மூர்த்தம் சாக்த வழிபாட்டு நெறியின் சிறப்பை உணர்த்துவதாகும். மேற்கு திருமாளிகைப் பத்தியில்  வள்ளி-தேவசேனா சமேத முருகப்பெருமான், இருதேவியருடன் திருமால் ஆகிய சந்நதிகள் காட்சி நல்குகின்றன. வடபுறம் சண்டீசர் கோயில், சந்திர  தீர்த்தம், நடராசர் மண்டபம், சூரியன் பைரவர் ஆகிய மூர்த்தங்கள் இடம் பெற்றுள்ள மண்டபங்கள் உள்ளன. வடபுற மண்டபத்தில் இரண்டு  சிவலிங்கங்களும், சோழர்கால அம்மன் திருமேனி ஒன்றும் காணப்படுகின்றன. ஆலயத்தின் தென்புறம் தனித்த மதிலுடன் அம்மன் கோயில்  திகழ்கின்றது. அம்மன் திருமேனியும், முன்றிலில் கிடக்கும் இடபமும், கலைநயம் மிக்க படைப்புகளாகும்.

கிழக்கு ராஜகோபுரத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஒரு சிற்பத்தொகுப்பு குறிப்பிடத்தக்கதாகும். அம்மன் சிவலிங்கம் ஆகிய திருமேனிகள் முன்பு  நிற்கும் கணபதிப் பெருமான், வல்லபை எனும் அவர் தம் தேவி, கிளி வடிவில் திகழும் அம்பிகை, சூரியன் ஆகியோர் அட்சய நாதரை பூசனை செய்ய,  கீழே நான்கு இசைவாணர்கள் இசைக்கருவிகளை இயக்கவும், நான்கு அடியார்கள் போற்றவும், எதிரே கோயிலின் தீர்த்தக்குளமும் சிற்பங்களாக இடம்  பெற்றுள்ளன. இவை யாவும் இத்திருக்கோயிலின் தலவரலாற்றை காட்சி வடிவில் எடுத்துரைக்கினறன.

உமாதேவி கிளி வடிவம் எடுத்து இத்தலத்தில் வழிபட்டதை இக்கோயிலின் தலபுராணம் பின்வருமாறு உரைக்கின்றது: முன்பு ஒரு யுகத்தில்  பார்வதியையும், பரமேஸ்வரனையும் வழிபடுவதற்காகத் திருமால், நான்முகன், இந்திரன், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் திருக்கயிலை  மலைக்குச் சென்றார்கள். திருக்கயிலாயத்தில் திருவோலக்க மண்டபத்தில் சிம்மாசனத்தில் பார்வதியும்-பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தார்கள்.  நந்திதேவரின் அனுமதி பெற்று முதலில் திருமால், அடுத்து நான்முகன் என்னும் முறையில் ஒவ்வொருவராகத் திருவோலக்க மண்டபத்தை அடைந்து  வணங்கி வலம் வந்து திரும்பினார்கள்.

வழிபட்டவர் வரிசையில் தலை மட்டும் கிளியாகவும் உடல் முனிவராகவும் விளங்கிய சுகமுனிவர் வணங்கும்போது பார்வதி அவரைப் பார்த்துக்  களுக்கென்று சிரித்தாள். பரமேஸ்வரனுக்குக் கோபம் வந்து கண் சிவந்தது. இருந்தாலும் கோபத்தை அடக்கிக் கொண்டார். எல்லோரும் வழிபட்டுத்  திரும்பிய பின் பரமேஸ்வரன் பார்வதியைப் பார்த்து, ‘‘ஒரு முனிவர் வழிபடும்போது நீ எதற்காகப் பரிகாசமாகச் சிரித்தாய்?’’ என்றார். ‘‘பெருமானே!  கிளித்தலை முனிவரைப் பார்த்தபோது இப்படியும் ஒரு சிருஷ்டி உண்டா? அல்லது அவர் சாபத்தால் கிளித்தலையர் ஆனாரா என்று வியப்பு வந்தது.  அதனால் சிரித்து விட்டேன்’’ என்றாள் பார்வதி. ‘‘பார்வதி! நீ பெரிய தவறு செய்து விட்டாய்.

எந்தச் சிருஷ்டியையும் பரிகசிக்கக் கூடாது. கிளித்தலை முனிவர் ‘சுகப்பிரமரிஷி’ என்று எல்லோராலும் வணங்கத்தக்கவர். பிரம்மத்தைத் தெளிவாக  அறிந்தவர். எப்போதும் பிரம்மத்தோடு ஒன்றிச் சமாதி நிலை கூடுகிறவர். அவர் யாரோடும் பேச விரும்பாமல் இருப்பவர். ‘‘கிளி, சொல்லிக்  கொடுத்ததைச் சொல்லும்; வேறொன்றும் சொல்லாது. அதுபோலத் தன் குருநாதர் உபதேசித்த மந்திரத்தை மட்டும் சொல்லிப் பிறிதொன்றும் பேசாமல்  இருக்க வேண்டும்’’ என்று கோரி, எம்மிடம் கிளித்தலையை யாசித்துப் பெற்றவர். அப்படிப்பட்ட சுக முனிவரைப் பரிகாசம் செய்த நீ கிளி ரூபமாகிப்  பறந்து போ’’ என்று பரமேஸ்வரன் சாபம் இட்டார். உடனே பார்வதி சாப விமோசனம் கேட்டாள்.

‘‘பார்வதி! நீ பூலோகம் சென்று காவிரியாற்றின் வடகரையில் அமைந்த ஆம்ரவனத்தை (திருமாந்துறையை) அடைந்து அங்குள்ள சிவலிங்கத்தை  வழிபடு. சாபம் நீங்கும். பிறகு அங்கே உன்னை மணந்து கொள்கிறேன்’’ என்று பரமேஸ்வரன் கூறினார். பார்வதி கிளி ரூபமானாள். அந்தக் கிளி  பூலோகத்துக்கு வந்து திருமாந்துறையை அடைந்தது. சிவலிங்கம் இருந்த இடத்தில் வளர்ந்திருந்த மாமரத்தில் அமர்ந்து மாவிலையைக் கொத்திக்  கொத்திச் சிவலிங்கத்தின் மேல் இட்டு வழிபட்டு வந்தது. கீ, கீ என்று கத்தியது. பெருமான் மனம் இரங்கினார். கிருபை வேண்டும் என்று சொல்ல  முடியாமல் ‘கீ, கீ’ என்று பேசுவதாக எண்ணி, ‘‘கிளியே! நீ திருமாந்துறைக்கு மேற்கே உள்ள திருமங்கலக்குடிக்குச் சென்று மூன்று நாள் வழிபடு.

உன் கிளி ரூபம் மாறிச் சுயரூபம் வரும். உடனே திருமாந்துறைக்கு வா’’ என்று சொல்லி மறைந்தார். அதன்படி கிளி திருமங்கலக்குடிக்குச் சென்று  வழிபட்டது. சங்கராந்தியன்று சுவாமி காட்சி கொடுத்தார். கிளி ரூபம் நீங்கியது. பார்வதி சுய ரூபத்தோடு திருமாந்துறைக்கு வந்தாள். தேவர்கள்,  முனிவர்கள் முன்னிலையில் அட்சயநாதர் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டார். அந்தநாள் முதலாக அட்சயநாதருக்கு வலதுபுறத்தில்  திருமணத்தின் நினைவாக லோகநாயகி என்னும் திருநாமத்தோடு அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள் என இத்தலத்து புராணம்  விவரிக்கின்றது.

கணபதிப்பெருமான் வல்லபையை மணந்து இத்தலத்தில் அருள்பாலிக்கும் திறத்தையும், சூரியன் தன் குறையை இத்தலத்தில் போக்கிக்  கொண்டதையும், சந்திரன் இங்கு வழிபட்ட திறத்தையும், தாருகாவன முனிவர்கள் சிவப்பேறு அடைந்த மாட்சிமையையும் இத்தலத்து புராணம் விரிவுற  எடுத்துக் கூறுகின்றது. சோழர் காலத்தில் எடுக்கப்பெற்ற இக்கற்றளியில் இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்து இரண்டு கல்வெட்டுச் சாசனங்கள் இடம்  பெற்றுள்ளன. முதல் கல்வெட்டு அப்பேரரசனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப் பெற்றதாகும். அதன் காலம் கி.பி. 1161ம் ஆண்டாகும்.  அச்சாசனத்தில் ஒரு அரிய வரலாற்றுத் தகவல் பதிவு பெற்றுள்ளது.

பெரியதேவர் என இரண்டாம் ராஜராஜ சோழனால் குறிக்கப்பெறும் அவன் தந்தை இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் முப்பத்தெட்டாம்  ஆண்டில் கோயிலுக்குரிய வானவன் நாயகப் பெருந்தெரு என்னும் இவ்வூரின் ஒரு தெருவில் வசித்தவர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச்  செலுத்த இயலாமல் அவ்வூரிலிருந்து புலம் பெயர்ந்து வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாகவும், பின்பு அப்பேரரசனின் மகனான இரண்டாம் ராஜராஜ  சோழன் தன் ஆட்சிக்காலத்தில் திருமாந்துறையின் வானவ நாயக பெருந்தெரு மக்கள் புலம் பெயர்ந்த செய்தி அறிந்து அவர்களை அழைத்து வந்து  மீண்டும் அங்கு குடியேறச் செய்ததையும் இக்கல்வெட்டு விவரிக்கின்றது.

அவர்களுக்கும், மாந்துறை கோயிலுக்கும் அரசனால் அளிக்கப் பெற்ற சலுகைகளைப் பற்றி விவரிக்கும் கல்வெட்டுப் பகுதி இங்கு மிகவும் சிதைந்து  காணப் பெறுகின்றது. இதே கோயிலில் திகழும் இரண்டாம் ராஜராஜ சோழனின் பதினாறாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் கோயிலுக்கென நந்தவனம்  அமைக்க அரசு அளித்த நிலம் பற்றியும், அந்நிலத்திற்காக அளிக்கப்பெற்ற வரிச்சலுகைகள் பற்றியும் விவரிப்பதோடு அவை முழுமையான  ஆவணத்தில் பதியப் பெற்றதாகவும் கூறப் பெற்றுள்ளது. நவகிரக வழிபாட்டிற்காக சூரியனார் கோயில் செல்லும் அன்பர்கள், சூரியனும், அம்பிகையும்,  கணபதியும், சந்திரனும் பூஜித்த, அருகமைந்த திருமாந்துறை அட்சய நாதரையும், உமையவளையும் வழிபட்டால் நிச்சயம் பேறுகள் அனைத்தும் பெற்று  உய்யலாம்.

முதுமுனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன்