அபிராமனை ஆராதித்த அருணகிரி!



இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-4

உரைநடையில் இடம் பெற்றிருக்கும் சொற்களைவிட ஒரு கவிதையில் அடங்கியுள்ள சொற்கள் பொதுவாக அனைவரையும் அதிகமாகக் கவர்கின்றன.  காரணம் என்ன?
கச்சிதமான சொற்பிரயோகங்கள் ஒரு கட்டுக்கோப்பான இலக்கணத்துள் அடங்கி ஓசை ஒழுங்குடன் நம் செவிகளில்
ஒலிப்பதால்தான்!

‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
- என்று பாடுகின்றார் பாரதியார்.

கோடிக்கணக்காகக் கொட்டிக்கிடக்கின்ற இவ்வுலக இன்பங்களில் முதன்மை பெறும் இன்பம் எது என்று அதே பாரதியாரிடம் வினா விடுத்தால் அவர்  தரும் விடை என்ன தெரியுமா?

‘ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதுண்டு! அதிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ...!
காட்டு நெடுவானம் கடல்எல்லாம் விந்தை எனில்
பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின் மிசை இல்லையடா!

செந்தமிழ்ப்புலவர்கள் தரும் சந்தம்தான் மேலான சந்தோஷம் என்கிறார் கவியரசர். ஓசை ஒழுங்கென்னும் சந்தத்தில் சக்கரவர்த்தியாக விளங்குபவர்  அருணகிரிநாதர். ‘வாக்கிற்கு அருணகிரி’ என்றே புலவர் பெருமக்களால் பாராட்டப் பெறுபவர். அருணகிரிநாதருக்குப் பின்னால் வந்த பாம்பன் சுவாமிகள்  அருணகிரியாரின் திருப்புகழிலும், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதியிலும் ஈடுபட்டு அவரையே தம் குருநாதராகக் கொண்டார்.

‘ஓசை முனிவர்’ என்றே அருணகிரி நாதருக்கு ஒரு உன்னதமான பட்டப்பெயரையும் சூட்டினார் அவர். தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன,  தைய என அடிப்படை சந்தங்களில் ஒலித்த அவர் பாடல் ஷண்முகப் பெருமானின் சரணார விந்தங்களிலே சப்திக்கும் சதங்கைகள் போன்றவை! அவர்  மார்பில் திகழும் மணி ஆரங்கள் போன்றவை!

கொந்தவிழ் சரண்சரண் சரண்என
கும்பிடு புரந்தரன் பதிபெற
குஞ்சரி குயம்புயம் பெற அரக்கர் மாள
குன்றிடிய அம்பொனின் திரு அரைக்
கிண்கிணி ‘கிணின் கிணின் கிணின்’ என
குண்டலம் அசைந்து இளங்குழைகளிற் ப்ரபைவீச
தந்தனம் தனம் தனம் தனவென
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட மணித்
தண்டைகள் கலின் கலின் கலின்என திருவான
சங்கரி மனங்குழைந்துருக முத்தம்தர
வரும் செழுந் தளர்நடை சந்ததி
சகம் தொழும் சரவண பெருமாளே!
- என்று தமிழ் முருகன் தளர்நடை இட்டு வருவதை தன் நடனச் சொற்களில் தத்ரூபமாகக் காட்டுகிறார்.

மேலும் ஒன்றைப் பார்க்கலாமா?
குழந்தை முருகனைக் கொஞ்சுவதோடு நிற்காமல் குழந்தை ராமனையும் அவன் அன்னை கௌசல்யா தேவி கூப்பிடுவதாக பாடியதுதான்  அருணகிரியாரின் தனித்துவம்! அவரின் மேலான சமரச மனோபாவம்! ‘தெய்வம் இகழேல்’ என்ற செந்தமிழ் மூதாட்டி ஒளவையாரின் வாக்கிற்கேற்ப  விநாயகர், சிவபெருமான், அம்பிகை, திருமால், ஐயப்பன், ஆஞ்சநேயர் என அனைத்து தெய்வங்களையும் முருகனோடு தன் அற்புதத் திருப்புகழில்  இணைத்துப் பாடிய தனிச்சிறப்பு அருணகிரிநாதருக்கு மட்டுமே உரியதாகத் திகழ்கின்றது.

ராமபிரானின் சரிதத்தைக் கம்பர் காவியமாக பன்னிரண்டாயிரம் பாடல்களில் சிறப்பாகப் பாடியுள்ளதை நாம் அறிவோம்! இத்தனை விரிவாக ராம  சரிதத்தைப் பாடியும் ராமரின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் காவியத்தில் இடம் பெறவில்லை. அருணகிரிநாதர்தான் இக்குறையைத் தீர்த்து வைக்கிறார்!  கௌசல்யாதேவி தங்கக் கிண்ணத்தில் பாற்சோறு வைத்து, ‘வா! வா!’ என்று ராமபிரானை அழைப்பதாக மிகச்சிறப்பாகத் திருச்செந்தூர் திருப்புகழ்  ஒன்றில் குறிப்பிடுகிறார்.

‘எந்தைவருக! ரகுநாயக வருக!
மைந்தவருக! மகனே இனிவருக!
என் கண்வருக! எனது ஆருயிர் வருக! அபிராம
இங்கு வருக! அரசே வருக!
முலை உண்க வருக! மலர் சூடிடவருக! என்று
பரிவிெனாடு கோசலை புகழ
வரும் மாயன்......

‘வா’ என்று ஒருமுறை அழைத்தால் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் வந்துவிடாது! எனவே அதன் மனோபாவம் தெரிந்து பலமுறை ‘வருக  வருக’ என்று அழைப்பதாக நயம் துலங்க பாடியுள்ளார் அருணகிரியார்! அது மட்டுமல்ல! வருக, வருக என்று எத்தனை முறை பாடி உள்ளார் என்று  எண்ணிப்பாருங்கள், பத்து முறை! என்ன காரணம்? தச அவதாரப் பெருமாள் அல்லவா!

நம்மைக் காக்க வைகுந்தத்தில் இருந்து பத்து முறை வரும் பகவான் அவராயிற்றே! மேலும் ஒரு வியக்க வைக்கும் அம்சம் இந்த அருணகிரி  திருப்புகழில் அமைந்துள்ளது. ‘அபிராம இங்குவருக’ என்று ஏழாவது அழைப்பாக ஏன் அமைந்துள்ளது? திருமாலின் ஏழாவது அவதாரம்தான் ராம  அவதாரம்! சந்தம் கொஞ்சும் திருப்புகழில் இவ்வளவு சங்கதிகள் அடங்கி இருப்பதால்தான் அவர் ‘வாக்கிற்கு அருணகிரி’ என்று வர்ணிக்கப்படுகிறார்.

ஜகம் புகழும் புண்ணிய கதையான ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும் அந்த இதிகாசத்தின் உயிர்நாடியான  உன்னத பாத்திரமாக ’ஆஞ்சநேயர்’ விளங்குகின்றார் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை அல்லவா! அதனால்தான் கம்பர் ‘செவிக்குத்  தேன் என ராகவன் கதையைத் திருத்தும் கவிக்கு நாயகன்’ என்று அனுமனை அற்புதச் சொற்பதங்களால் ஆராதிக்கிறார்.

‘அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை
தூதுவரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று!
- என்கிறார் திருவள்ளுவர்.

கணவன் ராமனின் காதல் தூதுவனாகவும், தலைவன் இராமனின் போர்த் தூதுவனாகவும் விளங்கிய ஆஞ்சநேயர் அனைத்து சிறப்புகளும்  அமைந்தவராக விளங்கினார். ராம நாமம் கூறி கடலைத் தாண்டினார். கட்டுக்காவல் நிறைந்த இலங்கையில் தனி மனிதராக அச்சமின்றி உள்  நுழைந்தார். சீதா தேவியைக் கண்டு கணையாழி அடையாளத்தைத் தந்தார். பதிலுக்கு சூளாமணியைப் பெற்றார். ராவணனுக்கு ராமரைப்பற்றி  எடுத்துரைத்தார்! வெகுண்டு அவன் தன் வாலில் வைத்த தணலைக்கொண்டு இலங்கையை ஏழு நாட்கள் பற்றி எரியச் செய்தார்.

இவ்வாறான அனுமனின் வீரதீரச் செயல்களைக் கவிச்சக்கரவர்த்தி ஒரு புதுமை நோக்கில் நமக்கெல்லாம் புலப்படுத்துகிறார். இலக்கியத்தேன் சொட்டும்  இப்பாடலில் ஐந்து என்ற சொல்லை ஐந்து இடங்களிலே பயன்படுத்தி அனுமனின் சிறப்பைக் காட்டும் சுந்தர காண்டம் பகுதியையே சுருக்கமாகவும்,  சுவையாகவும், சூட்சுமமாகவும் காட்டுகிற கம்பனுக்கு நிகர் கம்பனேதான்! ஒரு புதிர்போலத் தோன்றும் இப்பாடலை நாம் புரிந்துகொண்டுவிட்டால்  கம்பனின் கவிநயமும், ஆஞ்சநேயரின் பேராற்றலும் ஒரு சேர விளங்கும்!

அஞ்சிலே ஒன்று பெற்றான்
   அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
   ஆருயிர்க்காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்!
   அவன் நம்மை அளித்துக் காப்பான்!
பஞ்ச பூதங்களை வைத்துப் பல்லாங்குழி ஆடுகிறது கம்பரின் இந்தக்கவிதை.

காற்று, தண்ணீர், ஆகாயம், பூமி, நெருப்பு ஆகிய ஐம்பூதங்களோடும் அணுக்கத் தொடர்பு கொண்டவன் அனுமன். எப்படி என்று பார்க்கலாமா?
அனுமன் வாயு குமாரன். அதாவது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றின் புதல்வன். அவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைத்தாவி, பஞ்ச  பூதங்களில் ஒன்றான வான்வழியே பறந்து இலங்கையை அடைந்தான். அங்கே சீதையைக் கண்டான்.

அவள் பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியின் புதல்வி. பின் திரும்பி வரும்பொழுது இலங்கையை எரியூட்டினான். அதை ‘அயலார் ஊரில் அஞ்சிலே  ஒன்றை வைத்தான்’ என்கிறார் கம்பர். அனுமனை ஐந்துடன் தொடர்புபடுத்தி இத்தனை அற்புதமாகப் பாடியிருப்பதால்தான் ‘கம்பன் வீட்டுக்  கட்டுத்தறியும் கவிபாடும்’ என்கின்றனர் பெரியவர்கள்!

(இனிக்கும்)
திருப்புகழ்த்திலகம்
மதிவண்ணன்