சூழ்நிலை வாய்ப்புகள்சூழ்நிலைகள் என்னவோ அதனதன் இயல்பு படியேதான் அமைகின்றன. ஆனால், அதை அணுகும் நம் மனதைப் பொறுத்துதான் அவை மாறுபடுகின்றன.
நம் மனம் பலவீனமாக இருந்தால் சூழ்நிலை பிரச்னையாக மாறிவிடுகிறது; நம் மனம் ஒரு நிலைப்பட்டிருந்தால் சூழ்நிலை சவாலாக மாறிவிடுகிறது;  நம் மனது உறுதியானதாக இருந்தால் சூழ்நிலை நல்ல வாய்ப்பாக மாறிவிடுகிறது. எந்தச் சூழ்நிலையை அணுகு முன்னாலும் நம் மனம் வெறுமையாக  இருத்தல் வேண்டும் - பிளாங்க்னஸ். அதாவது அதில் சந்தேகம், எதிர்பார்ப்பு போன்ற எந்த உணர்வும் உருவாகிவிடக்கூடாது.

நம்மிடம் ஒருவர் பேசுகிறார் என்றால், அவருடைய பேச்சைவிட, அந்தப் பேச்சில் வெளிப்படும் உணர்வைவிட, அந்தப் பேச்சின் பின்னால்  மறைந்திருக்கக்கூடிய உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். அது புரிந்துவிட்டால், உடனே கோபம், பகை அல்லது மகிழ்ச்சி, ஆனந்தம்  ஆகியன ஏற்படாது. சூழ்நிலை பிரச்னையாக மாறிவிட இப்படி பொறுமை காக்காததே, நம் மனம் பலவீனமாக இருப்பதே, முக்கிய காரணமாக  அமைந்துவிடுகிறது. சரி, சூழ்நிலையை முழுமையாகப் புரிந்துகொள்வோம், அதன் தன்மையை அறிந்துகொள்வோம்.

அதற்கேற்றார்போல நடந்துகொள்வோம். அப்படி நடந்துகொள்வதால் எத்தகைய விளைவு ஏற்பட்டாலும், அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம்  என்று மனதை நிலைநிறுத்திக்கொண்டால் அந்தச் சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றல் வந்துவிடும். சூழ்நிலை ஒரு சவாலாக மாற, மனம் இப்படி  நடுநிலையில் இருப்பதே காரணமாக அமைகிறது. சூழ்நிலையை சமாளிக்கும் பக்குவம் வந்துவிட்ட பிறகு, மனம் உறுதியாகிவிடுகிறது. மனம்  உறுதியாகிவிடுவதால் சூழ்நிலையை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

இந்த வாய்ப்பு நமக்கு மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களுக்கும், பொதுவாக அனைவருக்குமே நன்மைகளைச் செய்யக்கூடியதாகவும் அமைகிறது.  மனதிலிருந்து பலவீனத்தைப் போக்கவும், மனதை நிலைநிறுத்தவும், அதனை உறுதியானதாக மாற்றிக்கொள்ளவும் பயிற்சி தேவை - இறை வழிபாடு.  ஏதேனும் ஒரு புள்ளியில் மனதைக் குவிக்கும் பயிற்சி இது. இப்படி ஒரு பயிற்சியாக இறைவனை பிரார்த்தித்துக்கொள்ளும்போது, கொஞ்சம்,  கொஞ்சமாக மனம் பக்குவப்பட்டுவிடுகிறது. அதாவது உறுதியாகிவிடுகிறது. இதனால் எந்தச் சூழ்நிலையுமே நல்ல வாய்ப்பாக மாறிவிடுகிறது,  அனைவருக்கும் நன்மை பரவுகிறது.

பிரபுசங்கர்