நெஞ்சார்ந்த அஞ்சலி!



சென்ற இதழில் கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ கட்டுரை காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு செலுத்தப்பட்ட மிகச் சரியான இரங்கல். இப்படி ஒரு சம்பவக் கோர்வை நிகழ்ந்தது தற்செயலாகத்தான் இருக்கும் என்றாலும், காஞ்சி மகானின் மறைவுக்கு கவிஞர் செலுத்திய நெஞ்சார்ந்த அஞ்சலியாகவே அமைந்தது தெய்வாதீனம்தான்!
- அரிமளம். இரா.தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

மகா விஷ்ணுவின் ஒவ்வொரு நாமத்திற்கும் புராண சம்பவங்களை சான்று கூறி அந்த நாமத்தின் பெயர்க் காரணத்தை  விளக்கும் விதம் அற்புதம். சம்ஸ்க்ரிதப் பெயர்களானலும் தமிழில் அதன் பொருளையும், அந்தப் பெயருக்குப் பின்னணி நிகழ்ச்சியையும் வர்ணிப்பது இதுவரை எந்தப் பத்திரிகையுமே செய்யாத ஓர் ஆன்மிகப் புரட்சி!
- பாபு கிருஷ்ணராஜ், கோவை.

‘யார்தான் அறிவார் பிறப்பின் மர்மத்தை?’ எனும் திருமூலரின் திருமந்திர ரகசியம் கட்டுரையில், சொல்லாடல்களும் ‘மந்திர’ விளக்கங்களும் அருமை. மானஸ தீட்சையில் குருநாதரின் அருளைப் பெறலாம் என்று அறிந்து நெகிழ்ந்தேன்.
- கே. ஆர். எஸ். சம்பத், திருச்சி  6202017.

மனிதனின்  இருமனங்களை பொறுப்பாசிரியர், காரண காரியங்களோடு விளக்கியிருப்பது, ஒவ்வொரு மனிதனையும் தன்னை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது.
- ஆர்.கே.லிங்கேசன். மேலகிருஷ்ணன்புதூர்.

அனைத்துலக மக்களும் ஆனந்தமாக வாழ்ந்திட மிகவும் அவசியமானது செல்வம். அது தொடர்பான மகாலட்சுமி மற்றும் காமதேனுவின் வண்ண அட்டைப்படத்துடன் செல்வக் கட்டுரைகளை வாசகர்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டு உதவியமைக்கு நன்றி, வாழ்த்துகள்.
- பா.மூர்த்தி, பெங்களூரு.

செல்வம் கொழிக்க வைக்கும் குபேர தலங்களின் சிறப்புகளைப் படித்து மனமகிழ்ந்தேன். மேலும், சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு அருகிலுள்ளவர்கள் சென்று குபேர பகவானின் அருளிற்குப் பாத்திரமாகிட வழிகாட்டியாயிருந்தன அக்கட்டுரைகள்.
- இரா.வளையாபதி. தோட்டக்குறிச்சி. - கே.சிவகுமார், சீர்காழி.

அந்த மெல்லியக்கோடு தலையங்கத்தில் தன்னம்பிக்கையாளரின் மனிதாபிமானத்தையும், அகங்காரக்காரரின் குரூரத்தையும் தெளிவாக்கியுள்ள பொறுப்பாசிரியர், கீழிறங்கி வந்து இறைவனை வேண்டினால் தன்னம்பிக்கையாளரைப் போல் நிதானத்தைப் பெற்றுவிடமுடியும் என்று தெளிவுபடுத்தியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

சங்கநிதி, பத்மநிதி போன்ற நவநிதிகளின் தலைவன் இந்திரன். அத்தகைய குபேரன் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் பல்வேறு திருத்தலங்களின் மகிமையை ஆன்மிகம் இதழ் விலாவாரியாகத் தொகுத்துக் கொடுத்திருந்தது அருமையிலும் அருமை.
- முனைவர்.இராம.கண்ணன், திருநெல்வேலி.

எமனோடு வாதாடி தன் மணாளன் சத்யவானை, சாவித்ரி மீட்ட அற்புதத்தைக் கொண்டாடும் காரடையான் நோன்பின் மாண்பினை உணர்த்தி, மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும், இணக்கமும் அருளும் ஒடிஷா மாநிலம் கேதாரேஸ்வரர் ஆலயத்தின் இறைவி கேதாரகெளரியின் மகத்துவங்களை உணர்த்திய கட்டுரை, படித்துப் படித்து இன்புறவைக்கும் இறை அனுபவம்.
- அயன்புரம், த,சத்தியநாராயணன்.

துர்க்கை கையில் கிளி எனும் கூகூர் ஆலய மகிமையை தற்போதுதான் அறிந்து கொண்டேன். 1000 நாமங்கள் தொடரில் ஒவ்வொரு நாமத்திற்கும் ஆசிரியர் தரும் விளக்கம் பிரமாதம். எளிய நடையில் எளிய உச்சரிப்பில் குபேரன் துதி! இதுபோன்று அரிய விஷயங்களை சேகரிக்கும் உங்கள் பிரயத்தனம் கண்டு வியக்கிறேன், பாராட்டுகிறேன்.
- சிம்மவாகினி, வியாசர் நகர்.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருமுக்கீச்சரம் என்ற தலத்தைப் பற்றி ஆராய்ந்து தக்க விளக்கங்களுடன் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மூவேந்தர்களும் கோழிமாநகரில் கூடி மகிழ்ந்திருந்தனர் என்பதனை சதுர வடிவ செப்புக் காசில் உள்ள சின்னங்கள் தெரிவிக்கின்றன என்பதை அறிந்து உள்ளம் பூரித்தது.
- சிவ.மீ. ஞானசம்பந்தன், சென்னை.

அருணகிரி உலா கட்டுரை அற்புதம். அந்நாளில் அருணகிரியாருடனேயே சென்று அந்தந்த கோயில்களை தரிசித்தது போன்ற அனுபவத்தைத் தருகிறது இத்தொடர்.
- ஆ.தாயுமானசுந்தரம், ராக்கம்பாளையம்.