வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது!



என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* என்னுடைய மகனுக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு குழந்தையும் உண்டு. ஆனால் அவன், சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. கணவன்-மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி மனஸ்தாபம் உண்டாகிறது. அவர்களின் ஜாதகத்தில் தோஷம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அதற்கான பரிகாரத்தைத் தெரிவிக்கவும்.
- கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்கிறார் திருவள்ளுவர். பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பும், அக்கறையும்தான் தாம்பத்திய வாழ்க்கையின் ஆணிவேர். பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் கேதுபுக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின்படி திருமண நாள் முதல் இதுநாள் வரை புதன் தசை நடந்து வந்திருக்கிறது. புதன் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் பாவகத்தில் அமர்ந்துள்ளார். மேலும் புதன்கிரஹம் காதலைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதி என்பதால், அவர் தனது கணவரை மிகவும் நேசிப்பவராகவே உள்ளார்.

ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிரனும் கணவர் மீதான அன்பினையும், அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும் குணத்தையும் தருகிறார். சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் வலுப்பெற்று உள்ளது. மனைவி ஸ்தானத்திற்கு அதிபதியாகிய சனி, குரு மற்றும் சுக்கிரனின் இணைவினைப் பெற்று குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. எனினும் இவரது லக்னாதிபதி சூரியன் மூன்றில் நீசம் பெற்றிருப்பதும், சந்திரனும் செவ்வாயும் மூன்றில் இணைந்திருப்பதும் தோஷத்தைத் தந்திருக்கிறது.

வெளியில் தன்னம்பிக்கை நிறைந்தவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் உங்கள் மகன் முக்கியமான நேரங்களில் மனம் தளர்ந்து போகிறார். மன சஞ்சலத்தின் காரணமாக தெளிவின்றி காணப்படுகிறார். எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் மகன் அடுத்தவர் மனம் கோணாத வகையில் வெளிப்படுத்த வேண்டும். தைரியம் மற்றும் வீரிய ஸ்தானத்தில் லக்னாதிபதி சூரியன் வலுவிழப்பதால், தான் எங்கே தாழ்ந்து போய்விடுவோமோ என்ற வீணான சந்தேகம் இவரை கோபப்படுபவராக நடந்துகொள்ள வைக்கிறது.

இவரது மனைவி இவரைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் பிள்ளைதான் தனது மனைவியைப் பற்றி சரியாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தம்பதியருக்குள் தனிப்பட்ட முறையில் கௌரவம் ஏதும் பார்க்கக்கூடாது என்பதை உங்கள் மகனுக்குச் சொல்லிப் புரிய வையுங்கள். தனது மனைவியிடம் ஆதரவான வார்த்தைகளை வெளிப்படுத்துவதோடு அவரது தேவைகளை நிறைவேற்றவும் சொல்லுங்கள். அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டாலே போதும்.

அடுத்த வாரம் முதலே அதாவது 22.03.2018 முதலே நல்ல நேரம் இருவரின் ஜாதகத்திலும் துவங்குவதால் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பிப்பார்கள். தினமும் காலையில் உங்கள் மகனை சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள். ஞாயிறு தோறும் தம்பதியராக அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று வணங்கி வருவதை வழக்கமாக்கிக் கொள்ள அறிவுறுத்துங்கள். உங்கள் மகன் கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும், உங்கள் மருமகள் அவரை தன்வழிக்குக் கொண்டு வந்துவிடுவார். கடக ராசியில் பிறந்த உங்கள் மருமகள் திட்டமிட்டுச் செயல்படுவதில் வல்லவர். உங்கள் மகனும் தனது மனைவியின் சொல்பேச்சைக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்ந்தாரேயானால் அவரது வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

* எழுத்துத் துறையில் முன்னேற்றம் கண்டு திருப்தியாய் ஊதியம் பெறுவது எப்போது?
- கௌரிபாய், பொன்னேரி.

69வது வயதிலும் எழுத்துத்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கலைவாணியின் கடாட்சம் நிறைந்திருக்கும் இடத்தில் செல்வம் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே சேரும். பண்டைய வரலாற்று காலத்தைச் சேர்ந்த புலவர்கள் முதல் இக்காலத்திய கவிஞர்கள், எழுத்தாளர்கள் வரை இந்த விதி எல்லோருக்கும் பொருந்தும். எழுத்துத்துறையில் சாதிப்பவர்கள் அதனை வியாபாரம் ஆக்குவதில்லை. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் (விருச்சிக லக்னம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே சூரியனும், புதனும் இணைந்திருப்பதால் எழுத்துத்துறையில் நிச்சயம் சாதிப்பீர்கள்.

வித்யாகாரகனான புதன், ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பது ஒரு எழுத்தாளருக்கு கூடுதல் பலம் சேர்க்கும். வாக்கு ஸ்தானத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு பகவான் நீசம் பெற்றிருந்தாலும், சுக்கிரனோடு இணைந்துள்ளார். பொதுவாக நீங்கள் நகைச்சுவையாக பேசும் விஷயங்களை எழுதிவந்தாலே போதும். எளிமையான வார்த்தைகளே வாசகர்களின் மனங்களைக் கவரும். உங்கள் ஜாதகப்படி அதற்கான வலிமை உங்களிடம் உள்ளது. புதிதாக எதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யாமல், சாதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்தித்து வருகின்ற விஷயங்களைப் பற்றி ஒரு சாமானிய மனிதனின் பார்வையில் நகைச்சுவையாக எழுதி வாருங்கள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுப்பீர்கள். அதே நேரத்தில் அதில் கிடைக்கும் ஊதியத்தினை விட நற்பெயரை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் சம்பாதித்துச் சேர்த்து வைக்க வேண்டியதும் அதே நற்பெயரைத்தான், அதுவே நிரந்தரமானது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஆதாயம் எதிர்பாராமல் எழுதி வந்தாலே ஊதியம் தானாக வந்து சேரும். புதன்கிழமை தோறும் சரஸ்வதி தேவியை வணங்கி வாருங்கள். உங்களுக்கான எழுத்துலக வாசல் திறந்தே உள்ளது.

* சி.ஏ., படிக்கும் என் மகன் இன்டர்வரை பாஸ் செய்தான். பைனல் எக்ஸாமுக்கு முயன்றும் முடியவில்லை. கவனம் சுயதொழில் செய்வதில் சென்றது. அதுவும் ஆரம்பப் பணிகளிலேயே முடியாமல் போனது. தற்சமயம் புகழ் பெற்ற ஆடிட் கம்பெனியில் வேலையில் உள்ளான். இவன் எப்போது பைனல் முடிப்பான், வேலையில் இருப்பானா, சுயதொழில் செய்வானா, இவனது எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
- வீரராகவன், கோயம்புத்தூர்.

உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது ஸ்திரமற்ற மனநிலையைத் தந்துகொண்டிருப்பார். மனதில் ஏதோ ஒரு குழப்பம் சதா இடம்பிடிக்கும். உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன  லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. வித்யாஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என வரிசையாக நான்கு கிரஹங்கள் இணைந்திருப்பது கல்வியில் உயர்வினைத் தரும். எனினும் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானத்தின் அதிபதி குரு, மூன்றில் அமர்ந்திருப்பதால் அவர் தன் சுயமுயற்சியால்தான் முன்னேற வேண்டுமே தவிர, அதிர்ஷ்டம் என்பது கிடையாது.

தற்போதைய சூழலில் இவர் சொந்தமாக தொழில் செய்வது நல்லதல்ல. ஏனென்றால், இப்போது இவர், அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது வேலை செய்துகொண்டிருக்கும் கம்பெனியிலேயே தொடர்ந்து பணியாற்றி வரச் சொல்லுங்கள். 16.07.2019ற்குப் பின் படிப்பை முடிப்பார். 37வது வயதுவரை அடுத்தவர்களுக்குக் கீழ் பணிபுரிந்து வருவதே நல்லது.  38வது வயதில் சொந்தமாக ஆடிட்டிங் நிறுவனத்தைத் துவக்க இயலும். இவருடைய 32வது வயதில் திருமணத்திற்கான யோகம் கூடி வருகிறது. வருகின்ற மனைவியும் இவரது உத்யோகத்திற்கு துணைபுரிவார்.

மொத்தத்தில் அதிர்ஷ்டத்தை நம்பாமல், தன் முயற்சியால் முன்னேற வேண்டிய அம்சமே அவரது ஜாதகத்தில் நிறைந்துள்ளது. அவ்வப்போது மனதில் தோன்றும் சஞ்சலத்தைப் போக்க தினமும் ஹனுமான் சாலீஸா படித்து வரச் சொல்லுங்கள். புதன்கிழமை தோறும் மாலை வேளையில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வருவதும் நல்லது. தயக்கத்தைத் தவிர்த்தால் சாதிக்க இயலும் என்பதையே அவரது ஜாதகம் எடுத்துச் சொல்கிறது.

* என் மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் ஆன பிறகு ஆயுள் முழுவதும்
தம்பதியர் ஒற்றுமையாக இருப்பார்களா?
- வஸந்தா சேஷாத்ரி, மும்பை.

43 முடிந்து 44வது வயது நடந்துகொண்டிருக்கும் பிள்ளைக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டுள்ளீர்கள். 2014ம் ஆண்டில் கூடி வந்த திருமண வாய்ப்பினைத் தவிர்த்ததால் தற்போது தவிக்க வேண்டி உள்ளது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. கார்த்திகை மாத அமாவாசை என்பதோடு, சூரிய கிரஹணத்திற்கு உரிய கிரஹ அமைப்பு நிலவும் நேரத்தில் உங்கள் பிள்ளை பிறந்திருக்கிறார். ஜென்ம லக்னத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ராகு என ஐந்து கிரஹங்களின் இணைவினைப் பெற்றிருக்கும் உங்கள் மகனின் ஜாதகம் விபரீத ராஜயோக அம்சத்தினைக் கொண்டது.

அதிக பட்சமாக 29.06.2018ற்குள் இவரது திருமணத்தை நடத்திவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் தனது வாழ்வினை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவார். பொதுஜன சேவையும், அரசியலும் இவருக்கு கைகொடுக்கும். மக்கள் சேவையே, மகேசன் சேவை என்ற எண்ணத்தோடு, இயலாதவர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் தனது வாழ்வின் அர்த்தத்தை இவர் காண இயலும்.

உங்களுடைய உடல்நிலையைப் பற்றி கேட்டுள்ளீர்கள். உங்கள் பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு உங்கள் உடல்நிலை எப்போது சீரடையும் என்று கணித்துக் கூற இயலாது. அவரவர் ஜாதகம்தான் அவரவருடைய உடல்நிலையைத் தீர்மானிக்கும். நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே இவரை விரும்பும் பெண்ணை ஜாதி, மத பேதம் ஏதும் பாராமல் திருமணம் செய்து வையுங்கள். ஜூன் மாத இறுதிக்குள் அவரது திருமணம் நடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மஹாலக்ஷ்மி அஷ்டகம் படித்து வாருங்கள். மகாலக்ஷ்மியின் அருளால் மங்கள இசை வீட்டில் ஒலிக்கட்டும்.

* என் மகள் எப்போது பார்த்தாலும் கோபமாக பேசுகிறாள். அவள் சாந்தமாகப் பேச நல்ல வழி காட்டுங்கள்.
- சொக்கலிங்கம், புதுச்சேரி.

16 வயதில் சராசரியாக ஒரு பெண் எவ்வாறு நடந்துகொள்வாரோ, அப்படித்தான் உங்கள் மகளும் நடந்து கொள்கிறார். இதில் நீங்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகள் எல்லாவற்றையும் எளிதில் அடைய வேண்டும் என்று ஆசைப்படுவார். அவரது ஆசை நிறைவேறாத பட்சத்தில் அது கோபமாக வெளிப்படுகிறது. அவருடைய ஜாதகத்தில் குரு, சனி இரண்டு கிரஹங்களும் வக்ர கதியில் அமர்ந்துள்ளார்கள்.

மேலும் தற்போது அவருடைய ஜாதகக் கணக்கின்படி ராகு தசையில் சனிபுக்தி நடந்து வருகிறது. நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற வேகம் அவரிடம் நிறைந்திருக்கும். அவருடைய எண்ண ஓட்டத்தினைப் புரிந்துகொண்டு நல்லவை-தீயவை பற்றி நிதானமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். தான் செய்வது சரியே என்ற தன்னம்பிக்கையில் அவருடைய பேச்சில் கறார்தன்மை வெளிப்படுகிறது. அதனைத் தவறு என்று சொல்லமுடியாது. எனினும் அடுத்தவர் மனம் கோணாமல் பேசவேண்டியதன் அவசியத்தை பெற்றோராகிய நீங்கள்தான் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

13.07.2018 முதல் நேரம் மாறுவதால் அவருடைய நடவடிக்கையில் பக்குவத் தன்மையைக் காணத் துவங்குவீர்கள். அவரைக் கட்டுப்படுத்தி வைக்க எண்ணாமல், அவருடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு பக்கபலமாய்த் துணை நின்றீர்களேயானால் வாழ்வில் அவர் வெற்றி பெறுவார். நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்ட அவருக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. அவரைப் பற்றி அநாவசியமாய் பயம் கொள்ளத் தேவையில்லை.

* பெண் வயிற்றுப் பேரனின் ஜாதகம் இணைத்துள்ளேன். கொஞ்சம் சுறுசுறுப்புடன் இருப்பான். சேட்டைகள் அதிகம். இவனைப் பற்றிய கவலைதான் என் பெண்ணிற்கு. தற்சமயம் இவனுக்கு என்ன தசாபுக்தி நடக்கிறது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- கௌசிகன் வெங்கட்ராமன், சென்னை.

மூன்றாம் வகுப்பு படித்து வரும் உங்கள் பேரனின் ஜாதகம் மிக நன்றாக உள்ளது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள அவருடைய ஜாதகத்தில் கிரஹங்களின் சஞ்சாரம் வெகு சிறப்பாக அமைந்துள்ளது. ஜென்ம லக்னத்தில் உள்ள செவ்வாய் அவரை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்வார். 11ம் இடத்தில் உள்ள கேது பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள கற்றுத் தருவார். லக்னாதிபதி சூரியன், லாபாதிபதி புதனுடன் இணைந்து 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது இவரை மிக உயர்ந்த அரசுப்பணியில் அமர்த்தும். சிறுபிள்ளையாக இருந்தாலும் எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுச் செயல்படும் திறனைக் கொண்டிருக்கிறார்.

நம் கண்களுக்கு அவர் படபடப்புடன் செயல்படுவதாகத் தோன்றுகிறதே தவிர, அவருடைய செயலில் எந்தவிதத் தவறும் உண்டாகாது. தற்போதைய சூழலில் இவருடைய ஜாதகப்படி சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. இந்த தசாபுக்திக்கு என்று சிறப்புப் பரிகாரம் ஏதும் அவசியமில்லை. வடஇந்தியாவில் இருந்து அவர்கள் இங்கு வரும் சமயத்தில் திருமலை திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஸ்ரீநிவாஸப் பெருமாளை சேவிப்பதுடன், திருச்சானூருக்கும் பேரனை அழைத்துச் சென்று தாயாரையும் சேவிக்கச் செய்யுங்கள். பெருமாள்-தாயாரின் திருவருளால் உங்கள் பேரன் எந்தக் குறையுமின்றி நலமுடன் வாழ்வார். அவரைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை என்று உங்கள் பெண்ணிடம் எடுத்துச் சொல்லுங்கள். பேரனின் பெயர் சொல்லிப் பெருமைப்படும் யோகம் உங்களை வந்து சேரும்.

- சுபஸ்ரீ சங்கரன்