உள்ளத்தை உள்ளவாறு ஆராய்ந்த வள்ளுவர்!



திருக்குறளுக்கு இணையான நீதிநூல் உலகில் வேறேதும் இல்லை. நீதி நூலைச் சமய நூலாக்காமல் பொது நூலாக்கிய பெருமை வள்ளுவருடையது. இத்தகைய பெருஞ்சாதனையை வள்ளுவர் நிகழ்த்தக் காரணம், அடிப்படையில் ஓர் உளவியல் நிபுணராக அவர் விளங்கியிருக்கிறார் என்பதுதான். வள்ளுவத்தைப் பயிலப் பயில அவரது உளவியல் சிந்தனைகள் நம் மனத்தை ஈர்த்துப் பண்படுத்துகின்றன.

உள்ளத்தை உள்ளது உள்ளவாறு அவர் ஆராய்ந்திருக்கிறார். மற்ற விஷயங்களை ஆராய்வது எளிது. ஒரு செய்தியை உள்ளத்தில் வாங்கிக் கொண்டு உள்ளம் சொல்லும் கருத்துகளை எடைபோட்டு அச்செய்தியை ஆராய்ந்துவிடலாம்.ஆனால், உள்ளத்தையே ஆராய வேண்டுமானால், அது மிகக் கடினம்! ஏனென்றால் உள்ளத்தை உள்ளத்தாலேயே தான் ஆராய வேண்டியிருக்கிறது. உள்ளத்தை ஆராய உள்ளத்தைத் தவிர வேறு வழியில்லை. இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டு வள்ளுவர் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்.
 
உள்ளத்தை உள்ளம், மனம், நெஞ்சம், அகம் என்று பல்வேறு சொற்களால் குறிக்கிறார் வள்ளுவர். உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்’, ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’, ‘தன் நெஞ்சு அறிவது பொய்யற்க’, ‘அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்’ஆகிய இடங்களில் உள்ளம் என்ற பொருளிலேயே இச்சொற்கள் இடம்பெறுகின்றன.

`சினமடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனமடக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே!’

- என்று கேட்கிறார் தாயுமானவர். மனத்தை அடக்குவதை விடப் பெரிய சாதனை வேறேதும் இல்லை என்பது தாயுமானவர் கருத்து.

`மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
 ஆகுல நீர பிற’ (குறள் எண் 34)
- என்கிறது வள்ளுவம்.

அறம் என்பதுதான் என்ன? அன்னதானமா? ஏழைகளுக்கான கல்வி உதவியா? பிற நற்செயல்களா? இருக்கலாம். ஆனால் அவற்றில் ஆடம்பரம் வர வாய்ப்பிருக்கிறது. உள்ளத்தில் மாசற்றவர்களாக இருந்தால், அதுவே சிறப்பானது. அனைத்து அறங்களுக்கும் அதுதான் அடிப்படை. எனவே மனத்தை குற்றமில்லாததாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

நண்பரால் ஒரு தாசி இல்லத்திற்குச் செல்லும் நிலை நேர்கிறது காந்திக்கு. தப்பி ஓடி வந்துவிடுகிறார். எந்தத் தீய செயலும் நடைபெறவில்லை என்ற போதிலும் சத்திய சோதனை நூலில் காந்தி என்ன எழுதுகிறார் தெரியுமா? அப்படி ஓர் எண்ணம் மனத்தில் தோன்றினாலேயே அந்தப் பாவச் செயல் நிகழ்ந்ததாகத்தான் பொருள், மனத்தளவில் அது நிகழ்ந்துவிட்டதே எனக் காந்தி தன்மீதே கழிவிரக்கம் கொள்கிறார். மனத்துக்கண் மாசில்லாதவனாக இருக்க வேண்டும் என்ற வள்ளுவரின் லட்சியம்தான் காந்தியின் லட்சியமாகவும் இருந்திருக்கிறது. அந்தப் பண்பில் அவர் முன்னேற முன்னேற வெறும் காந்தி, மகாத்மா காந்தி ஆவதை வரலாறு சொல்கிறது.

உள்ளத்தில் தீய எண்ணம் ஏதும் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். தீய எண்ணங்களில் மிக மோசமானது எது தெரியுமா? பொறாமை! அடுத்தவர்மேல் கொள்ளும் பொறாமையால் நம் உள்ளம் பாழ்படுகிறது. பொறாமைத் தீ, நெஞ்சைச் சுட்டுப் பொசுக்கிவிடும். நம்மை நிம்மதியாக வாழவிடாது. அவரவர் வினைப்பயனை அவரவர் அனுபவிக்கிறார்கள். அவரவர் இன்ப துன்பங்கள் இப்பிறவிச் செயல்களாலும் முற்பிறவிச் செயல்களாலும் அவரவர்க்கு அமைகின்றன.

நம் வினைப்பயன் எதுவோ அதுவே நமக்குக் கிட்டும் என்று ஆறுதல் கொண்டால் நம்மைவிட உயர்ந்திருப்பவர்களைக் கண்டு பொறாமை தோன்றாது. நம் வாழ்வும் நிம்மதியடையும்.

`ஒழுக்காறக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்கா றிலாத இயல்பு’ (குறள் எண் 161)

பொறாமை இல்லாத இயல்பைக் கைக்கொள்பவன் நிம்மதியையும் சாந்தியையும் எப்போதும் அனுபவிக்கிறான். அதனால்தான் வேதாத்ரி  மகரிஷி ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லச் சொன்னார். மனத்தில் ஒரு சிறிதும் பொறாமை இல்லாதவர்களே அடுத்தவர்களை மனமாற `வாழ்க வளமுடன்!’ என வாழ்த்த முடியும். நம்மைவிட அவர்களுக்கு வளம் சேர்ந்து விடுமே என்ற எண்ணம் இருக்குமானால் அடுத்தவரை வாழ்த்த எப்படி மனம் வரும்?

`உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர்பொருளைக்
 கள்ளத்தால் கள்வேம் எனல்!’ (குறள் எண் 282)

ஆசை என்பது மனத்தில் தோன்றும் ஒரு மாசு. ஆசை எழாமல் மனத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பிறர் பொருளைக் கைப்பற்றுவோம் என மனத்தில் ஒருகணம் எண்ணம் எழுந்தாலும் அது மாபெரும் தவறு. நாம் வெறுமே நினைக்கத்தானே செய்தோம், அவர்களின் பொருளை நாம் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லையே என எண்ணுவது பிசகு. அந்த நினைப்பே பாவமானதுதான்.

`உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
 உள்ளான் வெகுளி எனின்’(குறள் எண் 309)

மனத்திலிருந்து சினத்தை ஒருவன் முற்றாக நீக்கிவிட்டால் அவன் நினைத்த அனைத்தும் உடனே அவனுக்குக் கிடைக்கும். மனம் சக்தி உடையதாக இருந்தால் அது, தான் நினைத்த அனைத்தையும் கொண்டு தருகிறது. அது பலவீனப்பட்டிருந்தால் நினைத்த காரியம் கைகூடாமல் போகிறது. மனத்தை பலவீனப்படுத்தும் உணர்வுகளில் தலையாயது சினம்தான். இன்றைய நவீன உளவியலாளர்களும் கோபம் மனித மனத்தைப் பெரிதும் பலவீனப்படுத்தி விடுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

வசிஷ்டர் போல எளிதாக ‘பிரம்ம ரிஷி’ நிலையை விஸ்வாமித்திரரால் அடைய முடியவில்லை. இருவரும் முனிவர்கள்தான். தொடக்கத்தில் அரசனாக இருந்தாலும் விஸ்வாமித்திரர் பின்னர் தவம் செய்து முனிவரானார் என்பது உண்மைதான். ஆனாலும் வசிஷ்டர் அடைந்த நிலையை விஸ்வாமித்திரர் அடைய நெடுங்காலம் தேவைப்பட்டதே, ஏன்? வசிஷ்டர் சினமில்லாத வராக இருந்தார். விஸ்வாமித்திரர் கடும் சீற்றம் கொண்டவராக விளங்கினார். அவர் ஒவ்வொரு முறை சினந்து யாரையேனும் சபிக்கும்போதும் அவரது தவச் சக்தி வீணாயிற்று.

மீண்டும் தொடக்கத்திலிருந்து தவம் இயற்றி முன்னர் அடைந்த தவநிலையை அவர் அடைய வேண்டியிருந்தது. அதனாலேயே பிரம்மரிஷி ஆவதற்கு அவருக்கு நெடுங்காலம் பிடித்தது. சினம் இல்லாதிருந்தால் அவர் தாம் நினைத்ததைச் சீக்கிரமே அடைந்திருப்பார் என்பதைத்தானே வள்ளுவம் சொல்கிறது? காமம் கோபம் இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

ஒன்றிருக்கும் இடத்தில் இன்னொன்றும் கட்டாயம் இருக்கும். விஸ்வாமித்திரரிடம் கோபம் இருந்தது. அதனாலேயே காம உணர்வும் இருந்தது. மேனகையிடம் காமம் கொண்டு தவத்தை நிறுத்தி இல்வாழ்வு நடத்தி சகுந்தலையைப் பெற்ற பின்னர்தான் அவர் உள்ளத்தில் விழிப்பு வந்தது. பிறகுதான் காமத்தை முற்றிலும் நீக்கியவராய் அவர் மீண்டும் தவத்தில் ஈடுபடலானார். வசிஷ்டரே பாராட்டும் வகையில் பிரம்மரிஷி பட்டத்தையும்அடைந்தார். உள்ளத்தில் அன்பைத் தேக்கி இனிய சொற்களை ஒருவன் பேசுவான் என்றால் அதுவே சிறந்த அறம்தான்.
 
`முகத்தான் அமர்ந்தினிது நோக்கின் அகத்தானாம்
இன்சொ லினதே அறம்’ (குறள் எண் 93)

அகத்தில் அன்பிருந்தால் வாயில் இன்சொல் பிறக்கும். அவ்விதம் உள்ளத்தில் அன்போடு இனிய சொற்களைப் பேசுவோமானால் அதைவிடப் பெரிய அறம் வேறில்லை.

`யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!’

- என இன்சொல் பேசுவதே முக்கிய அறம் எனத் திருமூலர் எழுதிய திருமந்திரமும் வலியுறுத்துகிறது. கனியிருக்கும்போது காயை உண்பது மாதிரி ஏன் இனிய சொற்கள் இருக்கும்போது கடுமையாகப் பேச வேண்டும் எனக் கேட்கிறார் வள்ளுவர். உளவியலின் உச்சக்கட்டமான ஒரு நிலையையும் வள்ளுவர் கூறத் தவறவில்லை. உள்ளத்தில் பொய்மை இல்லாதிருந்தால் அதைவிடப் பெரிய சாதனை வேறில்லை. அப்படி யார் இருக்கிறாரோ அவர், உலகில் உள்ள எல்லோரின் உள்ளத்திலும் இருப்பார் என்கிறது வள்ளுவம்.

‘உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்’ (குறள் எண் 294)

உள்ளம், பொய்யாமை என்கிற குணநலனைப் பெற்றிருக்குமானால் அவன் மாசற்ற மனம் படைத்தவன் ஆகிறான். அவனை உலகமே உள்ளத்தில் வைத்துக் கொண்டாடும். அரிச்சந்திரனை இன்றளவும் உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எத்தனை இன்னல்கள் வந்தாலும் பொய்யே சொல்லாத அவன் பண்பு நலன், காலமான பின்னும் அவனை நம் நினைவில் நிறுத்தியிருக்கிறது. பொய்யே சொல்லமாட்டேன் என்று எவனேனும் சொன்னால் நீயென்ன பெரிய அரிச்சந்திரனா என்கிறோம். அவன் அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரனப்பா என்று கிண்டல் செய்கிறோம். அரிச்சந்திரனை உலகம் தொடர்ந்து நினைவில் கொண்டிருப்பதன் அடையாளங்கள்தான் இந்த வழக்குகள். உள்ளத்தால் பொய்யாது ஒழுகியதால் அரிச்சந்திரன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

`மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை’ (குறள் எண் 295)

உதட்டளவில் அல்லாமல் உளமாற வாய்மை பேசுகிறவர்கள் தவம் செய்வாரைவிடவும் தானங்கள் செய்வாரைவிடவும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். வாய்மை என்பது உதடு சம்பந்தப்பட்டது அல்ல, உள்ளம் சம்பந்தப் பட்டது. அதனால்தான் மகாகவி பாரதியார் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். வாக்கில் ஒளியை உண்டாக்குவது உள்ளத்தின் உண்மையே அன்றி வேறல்ல.
 
`தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்!’ (குறள் எண் 293)

ஒருவன் தன் நெஞ்சறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. அப்படிப் பொய் சொன்னால் அந்த நினைவு அடிக்கடித் தோன்றி, தன் நெஞ்சே தன்னை வருத்தும்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு’ (குறள் எண் 798)

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை மனத்தால் எண்ணாமல் இருக்க வேண்டும். அதுபோல் துன்பம் வருகின்றபோது கைவிடுபவர்களின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் உள்ளத்தில் ஊக்கம் இருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். ‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை’ என்கிறது இன்னொரு குறள். ஊக்கம் தராத நினைவுகளை எண்ண வேண்டாம் என ஓர் உளவியல் விதியை வகுக்கிறார் வள்ளுவர்.

 `வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
 மற்றைய எல்லாம் பிற’ (குறள் எண் 661)

ஒரு தொழிலில் உறுதியாக நிலைத்தல் என்பது மனத்தின் உறுதியைப் பொறுத்ததே. எனவே தொழிலில் மேம்பட விரும்புவோர் மனத்தை உறுதியாய் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மற்றவை எல்லாம் அதற்கு அடுத்த நிலையில் உள்ளவையே.

`உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு’ (குறள் எண் 598)

உள்ளத்தில் ஊக்கம் இல்லாதவர், நாம் வலியவர்கள்தாம் என்றெண்ணி அடையும் மகிழ்ச்சியை அடைய மாட்டார்.

`புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு’ (குறள் எண் 79)

உள்ளத்தில் அன்பு இல்லையானால் புறத்தே உள்ள மற்ற உறுப்புக்களால் என்ன பயன்? அன்பே வாழ்வின் அச்சாணி.

`அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று!’ (குறள் எண் 78)

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை பாலை நிலத்தில் வற்றிய மரம் தளிர்ப்பதைப் போல் பயனில்லாதது ஆகும்.

`கெடுவல்யான் என்பதறிக தன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்’ (குறள் எண் 116)

தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்யுமாயின் தான் கெடப் போகிறேன் என்று ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும்.

`கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி’ (குறள் எண் 115)

உயர்வும் தாழ்வும் வாழ்வில் வந்தே தீரும். எனவே எப்போதும் நெஞ்சை நடுநிலையோடு வைத்துக் கொள்வதே சான்றோர்க்கு அணி சேர்ப்பதாகும்.

`வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்’ (குறள் எண் 271)

வஞ்ச மனத்தை உடையவனது பொய்யொழுக்கத்தை அவன் உடலில் கலந்துள்ள பஞ்ச பூதங்களும் கண்டு நகைக்கும். மனத்தைப் பற்றிப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உளவியல் ரீதியாக வாழ்வியலை விளக்கிய வள்ளுவர் ஒன்றை அறிந்திருக்கிறார். எவ்வளவுதான் மனத்தைச் செம்மைப் படுத்தினாலும் மனிதரை அவ்வப்போது கவலைகள் வாட்டத்தான் செய்யும். அந்தக் கவலைகளைக் களைய வழி என்ன? அதையும் ஆராய்ந்து தெரிவிக்கிறார்.

`தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது’

தனக்குவமை இல்லாத இறைவனின் அடியிணைகளைப் பற்றிக் கொள்வதுதான் மனத்தில் தோன்றும் கவலைகளைக் களையும் உபாயம் என்பதையும் வள்ளுவரே தெரிவிக்கிறார். வள்ளுவர் சொன்ன உளவியல் கருத்துகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்வோம். அதே வள்ளுவர் சொன்னபடி, இறைவன் தாளைப் பற்றிக் கொண்டு மனக் கவலைகளைக் களைவோம்.
 

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்