பரந்தாமனுக்கு உதவிய பறவைகள்!



திருமால் அனைத்தையும், அனைவரையும் காப்பவர். ஆனாலும், அவருக்கும் தன்னால் காக்கப்படுபவர்களின் உதவி தேவைப்பட்டிருக்கிறது! ஆமாம், மனிதர்களைத் தவிர பறவையினங்கள், விலங்கினங்களும் பகவானுக்கு பல சந்தர்ப்பங்களில் உதவி புரிந்து அல்லது கைங்கர்யங்கள் செய்து பகவானாலும், பலராலும் பாராட்டுப் பெற்றுள்ளன. பொதுவாக திருமாலுக்குரிய வாகனமாகவும், கொடியாகவும் விளங்குபவர் கருடபகவான். இவர் நித்ய சூரிகளில் இரண்டாவது இடத்தை வகிப்பவர். ‘அனந்த, கருட, விஸ்வக்‌ஸேன, பராங்குச, பரகால, யாமுன, யதிவர…’ என்ற ஸ்லோகத்தின் மூலம் இதை அறியலாம். திருமாலின் கருடசேவைக் காட்சியை பெரியாழ்வார் போற்றும்போது, ‘‘பரவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றி’’ என்கிறார்.

இனியொரு பிறவி என்பதே இல்லாமல் போகிறது என்கிறார். கருடசேவையில், கருடபகவான் நமக்கு ஆசாரியனாக விளங்குவதாக ஆழ்வார், ஆசார்யர்களின் ஏகோபித்த கருத்து. தன் திருத்தோள்களிலே திருமாலை ஏந்தி நமக்கெல்லாம் ‘‘இவன்தான் ரட்சகன்’’ என்று காட்டிக் கொடுக்கின்றான். ராமாயணத்திலும் யுத்த காண்டத்தில் நாகாஸ்திரம் ஏவப்பட்டபோது கருடபகவான் தோன்றி ராமனுக்கு காட்சிதர வானர ஸைன்யம் அனைத்தும் மயக்கம் தெளிந்து மீண்டும் போர் புரிய ஆரம்பித்தன. அதற்கு முன்னதாக வனவாஸத்தில் ராமபிரான் வனத்தில் கண்ட மானை (மாயமான்), சீதையின் விருப்பத்துக்காகப் பிடித்துவரத் துரத்திச் சென்ற போது, ராவணன் சீதாபிராட்டியை கபடமாக கவர்ந்து சென்றான்.

அப்போது ஜடாயு என்ற கழுகரசன் ராவணனிடமிருந்து சீதாபிராட்டியை மீட்பதற்காகப் போராடினான். ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறிய, ஜடாயு நிலைகுலைந்து குற்றுயிறும் குலையுருமாய் தரையில் விழுந்தார். சீதையைத் தேடி ராம-லஷ்மணர்கள் வந்தபோது அவர்களிடம் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற விவரத்தைக் கூறி, உயிரிழந்தார். மனம் நெகிழ்ந்த ராமபிரான், ஜடாயுக்குரிய ஈமக் கிரியைகளைச் செய்து வைகுந்த வாழ்வளித்தான். இச்சம்பவமே காஞ்சியருகில் உள்ள திருப்புட்குழி மற்றும் கும்பகோணம் அருகிலுள்ள புள்ளபூதங்குடி (புள் என்றால் பறவை) இரு திவ்யதேசங்களுக்கும் தலபுராணமாக அமைந்திருக்கிறது.

அதே போன்று ராமபிரான் சுக்ரீவனுடன் நட்பு கொண்டு சீதையை மீட்க, வானர சைனியங்களை தெற்கு நோக்கி அனுப்பினார். பல இடங்களில் சுற்றித் திரிந்தும், விந்திய மலைச்சாரல் பக்கம்வரை வந்தும், வானரங்களால் சீதையின் இருப்பிடத்தை அறியமுடியவில்லை. இப்படியே திரும்பிச் சென்றால் சுக்ரீவன் மற்றும் ராம, லட்சுமணரின் கோபத்திற்கு ஆளாவோமே என்று நினைத்து அனுமன், ஜாம்பவான், அங்கதன் முதலானோர் அங்கேயே சிறிது காலம் தங்கியிருக்க முடிவெடுத்தனர். அச்சமயம், ராமபிரான் அயோத்தியிலிருந்து புறப்பட்டு சுக்ரீவனைச் சந்தித்ததுவரை நடந்த சம்பவங்களைப் பற்றி தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த குகையில் வசித்து வந்த ஸம்பாதி இவற்றைக் கேட்டு, தனது தம்பி ஜடாயு மரித்ததைத் தெரிந்துகொண்டான். மெதுவாக பறந்து அவர்களிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பிறகு ஜடாயுவுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் முதலான கர்மாக்களைச் செய்தான். அனுமன் முதலானவர்களின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு தனது கூர்மையான பார்வையால் சீதாபிராட்டி ராவணனால் அபகரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். ‘இலங்கையில் தேவி சிறைப்பட்டிருக்கிறாள். அந்த மாதரசியை என் கண்களால் பார்க்க முடிகிறது. நீங்கள் இலங்கைக்கு சென்றால் சீதையைக் காணலாம். எனக்கு நூறு யோஜனை தூரம் தள்ளி இருப்பதையும் பார்ப்பதற்குரிய சக்தியை பகவான் அருளியுள்ளதால் என்னை நம்பி நீங்கள் சீதையை தேடும் முயற்சியை மேற்கொள்ளலாம்’’ என்று கூறி ஆறுதல்படுத்தினான்.

இதைத் தொடர்ந்து அனுமன், கடலைக் கடந்து இலங்கையை அடைந்து சீதையைக் கண்டான். இவ்வாறு ராம கைங்கர்யத்தில் ஈடுபட்ட  ஸம்பாதியுடன் ராமர் கோயில்கொண்டுள்ளார். செய்யாறு அருகில் (பஜார் அருகில்) கொடநகரில், ‘ஸ்ரீஸீதாலஷ்மண ஹனுமத் ஸமேத ஸம்பாதி ஸ்ரீவிஜய கோதண்டராமர்’ ஆலயம், பாஞ்சராத்ர ஆகம அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கிறது. சுமார் 350 ஆண்டுகள் புராதனமானது. கந்தாடை ஸம்பாதி நரசிம்மாச்சாரியார், இக்கோயிலில் ஸ்தாபகராகத் திகழ்ந்தார். ஸம்பாதி வம்சத்தைச் சார்ந்தவர்களால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இங்குள்ள ஸம்பாதிக் குளக்கரையில் நான்கு கிணறுகள் அமைந்துள்ளன. நித்ய பூஜைகளும் ஸ்ரீராம நவமி வைபவங்களும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

குளக்கரையின் மேற்கில் பாதுகாஸேவக ‘ஸ்ரீவீர ஆஞ்சநேயர்’திருக்கோயில் திகழ்கிறது. திருக்கோயில் விமானம் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ‘ஸாரஸ்ரீகர’ விமானம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீஸீதா லக்ஷ்மண, ஹனுமத் ஸமேத  ஸ்ரீவிஜயகோதண்டராமர், ஸம்பாதி ஆகியோர் மூலவராக அருள்பாலிக்கிறார்கள். உற்ஸவ மூர்த்திகளாக லஷ்மி நரஸிம்மர், லஷ்மி ஹயக்ரீவர், லஷ்மி வராஹர் மற்றும் நம்மாழ்வார், ராமானுஜர், ஸ்வாமி தேசிகன் ஆகியோர் திகழ்கிறார்கள். காஞ்சி க்ஷேத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டநாதப் பெருமாள் சந்நதியின் அபிமானத் திருத்தலம் இது.

எம். என்.ஸ்ரீனிவாஸன்