பழம் நீயப்பா, ஞானப்பழம் நீயப்பா..!



ஆலய தரிசனம்

நாம் பல கோயில்களை தரிசித்திருக்கிறோம். வீடு திரும்பி, நம் அனுபவங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, ஏற்கெனவே அதே கோயிலுக்குப் போய்வந்தவர், ‘அந்தக் கோயிலில் அதைப் பார்த்தாயா, இதைப் பார்த்தாயா..?’ என்று கேட்கும்போது பார்த்திருந்தால் மகிழ்ச்சியும், பார்க்கத் தவறியிருந்தால் ஏக்கமும் கொள்கிறோம். இந்த ஏக்கத்தைப் போக்கும்வகையில் உங்கள் ஆன்மிகம் இதழ் பிரபலமான கோயில்களின் தெரிந்த விவரங்களையும், இதுவரை தெரியாத தகவல்களையும் உங்களுக்கு வழங்கப்போகிறது. அந்தவகையில் இந்த இதழில்: பழநி.

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பாலகனின் கோபம் காரணமாக உருப்பெற்ற இத்தலத்தின் மகிமை சொல்லில் அடங்காதது. அந்தத் தலவரலாறு பொதுவாக அனைவரும் அறிந்ததே. தனக்குப் பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் கயிலையைவிட்டு வந்தமர்ந்த தலமல்லவா பழநி! சான்றோர் பலரும் அவரின் சினம் நீக்க முயன்றும் முடியாதுபோகவே, பெற்றோரே இத்தலத்தில் பிரசன்னமாகி ‘‘முருகா, நீயே ஒரு ஞானப்பழம்தானே! பழம் நீயே’’ என்று அன்பொழுக கேட்க, முருகனின் மனம் உருகியது.

பழம்நீ என்ற ஒற்றைச் சொல்லில் முருகனின் சினந்தணிந்த இத்தலமே பின்பு பழநி என்று மருவியது. வழக்கமான கோவிலாக இல்லாமல், பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு நிறைந்து கிடக்கின்றன. மலை, படிக்கட்டுப்பாதை, யானைப்பாதை, விண்வழியே செல்ல ரோப்கார், குழுவாய் அமர்ந்து பயணிக்க மென்வேக ரயில் (வின்ச்) என்று நம்மை முருகனை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகள் பல. அதனால் இத்தலம் வயது வரம்பின்றி அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், 9ம் நூற்றாண்டில் உருவானதாக வரலாறு கூறுகிறது.

சேரமான் பெருமான் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர் சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது - எங்கும் இல்லாத சிறப்பு இது. இது வீரம், பூரம், ரசம், ஜதிலிங்கம், கண்டகம், கவுரி பாசாணம், வெள்ளை பாசாணம், மிருதர்சிங், சிலசட் ஆகிய வீரிய பாஷாணங்களின் கலவையாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலையில் அபிஷேகம் செய்யப்படும் பொருட்களை - பிரசாதங்களை - உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஆண்டாண்டுகாலமாக நிலவிவரும் நம்பிக்கை.

அதனால்தான் மூலவரை உருவாக்கிய போகரும் இன்றளவும் பேசப்படுகிறார். இந்த தண்டாயுதபாணி சிலை இரவில் வியர்க்கும் தன்மை உடையது. இந்த வியர்வை துளியில் அறிவியலே வியக்கும்வண்ணம் மருத்துவத்தன்மை கொண்டது. இராக்கால பூஜையின் போது, சிலைக்கு சந்தனம் பூசப்படும். பின்பு அடியில் பாத்திரம் ஒன்று வைக்கப்படும். மறுநாள் காலை அந்த சந்தனம் கலைக்கப்படும்போது, வியர்வைத்துளிகள் பாத்திரத்தில் வழிந்து நிற்கும். சந்தனமும் பச்சை நிறமாக மாறி இருக்கும். வியர்வை, கவுபீன தீர்த்தம் எனப்படும். சந்தனமும், கவுபீன தீர்த்தமும் அருமருந்தாக கருதப்படுகின்றன.

இன்றும் போகர்-புலிப்பாணி பரம்பரையில் வந்தவர்கள் கோயில் நிர்வாகத்தின் உதவியோடு இந்த இடத்தை பராமரித்து வருகின்றனர். போகர் வழிபட்ட புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம், எந்திர சக்கரங்கள் இன்றும் சுவாமி வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது மலைக்குச் செல்லும் பாதைகள் குறித்துப் பார்ப்போம். படிப்பாதை பழநி முருகனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பழங்கால மலைக் காட்டுப் பாதை இப்போது இல்லை. பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க 1939ல் முதன் முதலில் படிப்பாதை அமைக்கப்பட்டது - 691 படிகள். முதியவர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் ‘டோலி’ மூலம் மேலே செல்கின்றனர்.

படிப்பாதையை மலையடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயில் வழிபாட்டுடன் துவங்க வேண்டும். உடன் பொருட்கள் ஏதாவது இருந்தால் அவற்றைத் தூக்கிக் கொண்டு மலையேறத் தேவையில்லை. அருகிலேயே பாதுகாப்பு அறை வசதி உள்ளது. காலை 5.30 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும். ரூ.5 முதல் ரூ.10வரை கட்டணம் செலுத்தி சுமையை இங்கு வைத்துவிட்டு கைவீசியபடி ஹாயாக மலையேறலாம். மலைப்பாதையின் துவக்கத்தில் உள்ள மண்டபத்தில் அனுமார், கருடாழ்வார், ராகு, கேது, கண்ணப்ப நாயனார், பாரிஜாத மலர், சிவலிங்கம் உட்பட பல்வேறு சிற்பங்கள் கலைவேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். படிப்பாதை வழியில் மயில் மண்டபம், வள்ளியம்மை சந்நதி மற்றும் இளைப்பாற மண்டபங்களும் உள்ளன.

படிப்பாதையில் கன்னிமார் கோயில், நர்த்தன விநாயகர், சித்தி விநாயகர், அனுக்கிய விநாயகர், இடும்பர் கோயில், வையாபுரி சுவாமி சந்நதி, மயில் வேலாயுத சுவாமி ஆலயம், குராவடிவேலன் கோயில், சர்ப்ப விநாயகர் என சந்நதிகள் உள்ளன. திடகார்த்தமாக உள்ளவர்கள் மலையேற இந்தப் பாதையை தேர்வு செய்யலாம். இருப்பினும் நேர்குத்தாய் அமைந்துள்ள படிகள் சிரமத்தை ஏற்படுத்துவதால் இறங்கும்போது மட்டும் இப்பாதையை பயன்படுத்துவது உகந்தது. யானைக்கு தனிப்பாதை திருவிழாக்காலங்களில் யானைகள் சுலபமாக மலையேறுவதற்கு படிப்பாதைக்கு அருகிலேயே படிக்கட்டுக்கள் இல்லாமல் சாய்தளமாகவே ஒரு பாதை அமைக்கப்பட்டது.

இப்பாதை நாளடைவில் யானைப்பாதை என்றே பெயர் பெற்றது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் யானைக்கென்று ஒரு பாதை அமைக்கப்பட்டது பழநி மலைக்கோயிலில் தான். யானைப்பாதை, காவல்தெய்வமான 18ம் படி கருப்பணசுவாமி கோயிலில் இருந்து துவங்குகிறது. இப்பாதையில் பழநி தலவரலாற்றை விளக்கும் சுதைசிற்பங்கள் உள்ளன. வள்ளியம்மன் சுனை என்ற வற்றாத நீர்சுனையும் உள்ளது. படிகளாக இல்லாமல் சாய்தள அமைப்பானதால் பக்தர்கள் பலரும் இதிலே செல்கின்றனர்.

வின்ச் (இழுவை ரயில்)
நடக்க முடியாதவர்களுக்காக இருக்கவே இருக்கிறது வின்ச் பாதை. இதன் மூலம் 7 நிமிடங்களில் மலை உச்சியை அடையலாம். 1965ம் ஆண்டில் ஜப்பான் ஹிட்டாச்சி கம்பெனியின் அதிதொழில்நுட்ப வசதிகளுடன் முதல் இழுவை ரயில் துவங்கப்பட்டது. பின்பு இரண்டாவது இழுவை ரயில் 1982ல் மும்பை ஹான்ஹார்ட் நிறுவனத்தாராலும், 3வது ரயில் 1988ல் சென்னை கிரீஸ் நிறுவனத்தாராலும் அமைக்கப்பட்டன. தினமும் சுமார் மூவாயிரம் பக்தர்கள் பயணிக்கின்றனர். சிறப்புக் கட்டணம் ரூ.25, சாதாரண கட்டணம் ரூ.10. காலை 5.30 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை இந்த ரயில் செயல்படுகிறது. விழாக்காலங்களில் அதிகாலை 3.30 முதல் இரவு 10.30 மணி வரை!

ரோப்கார் (கம்பிவட ஊர்தி)
இது சமீபத்திய முன்னேற்றம். சொகுசானதும் கூட. மூன்று நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கும், மலையிலிருந்து அடிவாரத்திற்கு வந்துவிட முடியும். ரோப்காரின் ஒரு பெட்டிக்கு 4 பேர் வீதம் 16 பேர் பயணிக்கலாம். இந்த கம்பிவட ஊர்தி, 2004, நவம்பர் 3ம் தேதி துவங்கப்பட்டது. சாதாரண நாட்களில் இதில் பயணித்தால் அரை மணிநேரத்தில் சுவாமி தரிசனமே முடித்து வந்து விடலாம்! காலை 7 மணி முதல் பகல் 1.30 மணிவரை, பின்பு 2.30 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த வசதி உண்டு. சிறப்பு கட்டணம், ரூ.50, சாதாரண கட்டணம் ரூ.15. தற்போது ரூ.70 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கோபுர வாயிலுக்கு உள்ளே நாயக்கர் மண்டபத்தில் சுப்பிரமணிய விநாயகர், நக்கீரர், அருணகிரிநாதர் சந்நதிகள் உள்ளன. அடுத்து, வைசியர் மண்டபத்தைக் கடந்தவுடன் ஐந்து நிலை மாடங்கள் பொருந்திய ராஜகோபுர வாயில் உள்ளது. இதன் பின்னே 12 கல்தூண்கள் தாங்கிய வேலைப்பாடு நிறைந்த பாரவேல் மண்டபமும், நவரங்க மண்டபமும் உள்ளன. வாத்திய மண்டபத்திற்கு எதிரே மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலின் முன்புற தூண்கள், ரதங்களின் வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. பழநியின் ‘கொடுமுடி சிகரம்’ என்று இப்பகுதியை கூறுவர். இதன் வழியாக உள்ளே நுழைந்தால், மகாமண்டபத்தை அடையலாம். இதனையடுத்த அர்த்த மண்டபத்தின் இடது பக்க கல்மேடை மீது நடராஜர், சிவகாமியம்மை திருவுருவங்களை தரிசிக்கலாம்.

தொடர்ந்து பழநியாண்டவர் பள்ளியறை, சண்முகநாதர் சந்நதி, திருவுலா செல்லும் சின்னக்குமாரர் சந்நிதி ஆகியன உள்ளன. இதற்கு அருகில் மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகனின் கருவறை. இது சதுர வடிவில், சுற்றிலும் நீராழிப்பத்தியுடன் அமைந்துள்ளது. கருவறை பின்புற சுவரில் அதிஷ்டானத்திலிருந்து மேற்பகுதி வரை ஏழு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறையினுள் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருக்கோயிலில் தினமும் அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து 6 கால பூஜைகளும் நடைபெறுகின்றன. பூஜைகளுக்கு சிறப்புக் கட்டணம் ரூ.150. தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் கட்டணம் இரு மடங்காகும்.

விஸ்வரூப தரிசனம்
காலை 6 மணிக்கு நடைபெறும் பூஜை இது. துவார விநாயகர் தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் உள்ளிருக்கும் பழநியாண்டவருக்கு தீபாராதனை செய்யப்படும். முருகன் சிலையில் சாத்தப்பட்ட ராக்கால சந்தனமும், கோவணத் தீர்த்தமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. விஸ்வரூப வழிபாட்டின்போது முருகனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடல்களை கோயில் ஓதுவார்கள் பாடுவர். இதைத் தொடர்ந்த ஆறுகால பூஜைகளில் முதலாவது, விளாபூஜை: முருகனுக்கு காலை 6.40 மணிக்கு செய்யப்படும் பூஜை இது. ஆத்மார்த்த மூர்த்திகளை பழநியாண்டவர் திருமுன்பு வைத்து புனிதச்சொல் மொழிந்து நான்கு திசைகளிலும் புனிதநீர் தெளித்து பின்பு அர்த்தமண்டபத்திலுள்ள சொர்க்க விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்த பின்பு ஆத்மார்த்த மூர்த்தி மற்றும் முருகனுக்கு பூஜை செய்யப்படும்.

கருவறையின் இடது பக்கத்தில் ஸ்படிகலிங்க வடிவில் ஈஸ்வரனும், அம்பிகையும், சாளக்கிராமமும் ஒரு பேழையில் வைக்கப்பட்டுள்ளன. விளாபூஜையின்போது, ஆண்டவர் ஆத்மார்த்த மூர்த்தியாகி ஈஸ்வரனை பூஜித்து வழிபடுவதாக ஐதீகம். அதனால்தான் அபிஷேகங்கள் முதலில் ஆத்மார்த்த மூர்த்திக்கும், பின் முருகனுக்கும் செய்யப்படுகின்றன. ஏனைய காலங்களில் ஆத்மார்த்த அபிஷேகம் இல்லை. இப்பூஜையின்போது முருகனுக்கு காவியுடையோடு வைதீகக் கோலத்தில் அலங்காரம் செய்யப்படும். கோயில் ஓதுவார்கள் விளாபூஜையின்போது பஞ்சபுராணங்கள் பாடுகின்றனர்.

அடுத்தது சிறுகால சந்தி பூஜை, காலை 8 மணிக்கு நடைபெறும். முருகனுக்கு அபிஷேக, அலங்கார அர்ச்சனைக்குப் பின், நைவேத்தியம், ஏக தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். சிறுகாலசந்தி பூஜையில் குழந்தை வடிவில் முருகனுக்கு அலங்காரம் செய்யப்படுகின்றது. மூன்றாவது, காலசந்தி பூஜை, காலை 9 மணிக்கு. முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைக்குப்பின் நைவேத்தியம், ஏக தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். குழந்தை வடிவில் பழநியாண்டவருக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

நான்காவது உச்சிகால பூஜை, பகல் 12 மணிக்கு. முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைக்கு பின், தளிகை நைவேத்தியம் செய்து 16 வகையான தீபாராதனையும், சிறப்பு போற்றுதல்களும் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். (அலங்கார தீபம், நட்சத்திர தீபம், 5 முக தீபம், கைலாச தீபம், பாம்பு வடிவ தீபம், மயில் தீபம், சேவல் தீபம், யானை தீபம், ஆடு வடிவ தீபம், புருஷாமிருக தீபம், பூரண கும்ப தீபம், 4 முக தீபம், 3 முக தீபம், 2 முக தீபம், ஈசான தீபம், கற்பக தீபம் ஆகியவையே 16வகை தீபங்கள்) இந்த உச்சிகால பூஜையில் முருகனுக்கு கிரீடத்துடன், வைதீக அலங்காரம் செய்யப்படும்.

சிறப்பு போற்றுதல்களாக குடை, வெண்சாமரம், கண்ணாடி, சேவற்கொடி, விசிறி, ஆலவட்டம் முதலியவை முருகனுக்குக் காட்டப்படுகின்றன. இத்தருணத்தில் தேவாரம் பாடப்படும். ஐந்தாவது சாயரட்சை பூஜை, மாலை 5.30 மணிக்கு. முருகனுக்கு அபிஷேக, அலங்கார, அர்ச்சனைக்கு பின் 16 வகை தீபாராதனையும், சிறப்பு போற்றுதல்களும் நடைபெறும். சாயரட்சையில் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும். ஆறாவது, ராக்கால பூஜை, இரவு 8 மணிக்கு. அபிஷேக அலங்கார அர்ச்சனைக்கு பின் நைவேத்தியம் செய்து ஏக தீபாராதனை நடைபெறும். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

ராக்கால பூஜையில் முருகனுக்கு விருத்தன் வடிவில் அலங்காரம் செய்யப்படும். தூயசந்தனம் முருகன் சிலையில் பூசப்படும். இந்த சந்தனம் மறுநாள் காலையில் விஸ்வரூப தரிசனத்தின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தீபாராதனைக்கு பின் சாமியை பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வர். திங்கள், வெள்ளி நாட்களில் உள்திருச்சுற்றில் தங்கப் பல்லக்கிலும், ஏனைய நாட்களில் நீராழிப்பத்தியில் வெள்ளிப் பல்லக்கிலும் முருகன் எழுந்தருளுவார். முருகன் பள்ளியறைக்கு போகும் முன் கோயில் அன்றாட வரவு-செலவு கணக்கு அவருக்கு படித்துக் காண்பிக்கப்படும்.

முருகனுக்குப் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டாலும் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் நாமும் ஆண்டியாவோம் என்ற கருத்து பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம் என்பதை உணர்த்தவும், சுவாமியின் வரலாற்றைக் காட்டவுமே இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இருப்பினும் பக்தர்களின் நிலையை அறிந்து கோயில் நிர்வாகம் இந்த அலங்காரத்தை பக்தர்கள் பார்க்காத அளவிற்கு ‘சம்பிரதாயத்திற்காக’ சில நிமிடங்கள் செய்து விட்டு பிறகு வேறு அலங்காரத்திற்கு மாற்றி விடுகின்றனர். வழிபாடு முடிந்து வெளியே வந்ததும் தங்க விமானத்தைத் தரிசிக்கலாம். இந்தக் கருவறை விமானம், ஏகதள மூல விமானம் ஆகும். பொன்னால் வேயப்பட்டது.

திருநீறு சிவச்சின்னங்களுள் ஒன்றாகும். சிவனைச் சுடலைப்பொடி பூசிய இறைவனாகப் போற்றுவது சைவ மரபு. இதில் நிலையாமை தத்துவம் உட்கிடையாக பொதிந்துள்ளது. திருநீற்றை வெண்ணீறு என்றும், திருவெண்ணீறு என்றும் கூறுவர். திருமுருகனை சிவபெருமானின் மறுவடிவம் என்பர். எனவே, சிவசின்னமாகிய திருநீறு முருகனுக்கும் உரித்தாயிற்று. திருநீறு, வடமொழியில் விபூதி, பஸ்பம் என்றும் வழங்கப்படுகிறது. தலையில் உள்ள துர்நீரை எடுத்து, கபாலத்தை தூய்மை செய்வதாலும் திருநீறு என்று பெயர் பெற்றதாக மருத்துவ உலகம் கருதுகிறது. சாணமும், கோமயமும் கிரிமிநாசினிகள் ஆகும். இதன் காரணமாகவே பசுஞ்சாணத்தில் திருநீறு தயாரிக்கிறார்கள்.

இத்திருநீறில் மணம் தரும் மலர்கள், இதழ்கள், வேர்கள், தைலங்கள் சேர்க்கப்படுகின்றன. பழநி முருகனுக்கு தற்போது பிரத்யேகமாக பசுஞ்சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுகிறது. பழநி அடிவார பகுதியில் ஏராளமான விபூதி விற்பனை கடைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோயிலுக்கும் பழநியில் இருந்துதான் விபூதி அனுப்பி வைக்கப்படுகிறது. தரிசனம் முடிந்து வெளியேறும் பாதையின் வலது பக்கத்தில், போகர் வழிபட்ட மரகதலிங்கத்தை தரிசிக்கலாம். இந்த லிங்கத்திற்குக் காலை 5 மணிக்கு நித்யபடி அபிஷேகமும், திருவிழாக்காலங்களில் அதிகாலை 3 மணிக்கு அபிஷேகமும், பவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றன.

மரகதலிங்கத்திற்கு மாவுப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, கத்தரி மஞ்சள், கூழாங்கிழங்கு, அறுகம்புல்பொடி, நெல்லிப்பொடி, பஞ்சாமிர்தம், சர்க்கரை, தேன், பால், பன்னீர், இளநீர், உடற்பிணிகள் நீங்கும் பழவகைகள், விபூதி, சந்தனம், எலுமிச்சைச்சாறு என்று 16 பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மரகதலிங்கத்திற்கு மேல்பகுதியில் போகரின் இஷ்டதேவதை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மனும், லிங்கத்திற்கு இடதுபுறம் தண்டாயுதபாணி சுவாமியும், வலதுபுரம் சுப்பிரமணியரும், கீழே எந்திரத் தகடுகளும் அதனருகே அகோரவீரபத்திரர், நவதுர்க்கை, மகாமேல் பிச்சையாண்டவர் மற்றும் வலம்புரிச் சங்கும் அமைந்துள்ளன. போகரின் சீடராகிய புலிப்பாணியின் வாரிசுகள் இன்றளவும் போகர் சந்நதியை பூஜித்து வருகின்றனர்.

முருகனை வடிவமைத்து வழிபாடு செய்த போகரையும் இங்கு வழிபடலாம். தொடர்ந்து விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களையும் வணங்கி வெளியே வரலாம்.
தமிழக அரசின் அன்னதான திட்டம் (100 நபர்களுக்கு) இத்திருக்கோயிலில், 2002, பிப்ரவரி 23ம் தேதி துவங்கப்பட்டது. விருப்பப்படுபவர்கள் அன்னதானத்திட்ட கட்டளை முதலீடாக ரூ.20 ஆயிரம் மற்றும் முதலாம் ஆண்டு அன்னதான செலவுத் தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.22 ஆயிரம் செலுத்தி இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம். தங்களுடைய பிறந்தநாள், திருமண நாள், குடும்ப உறுப்பினர்கள், பிறந்தநாள் போன்ற முக்கிய நாட்களிலும் மற்றும் அவரவர் விரும்பும் நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

தற்போது மலைக்கோயிலில் காலை 8 முதல் இரவு 10 மணிவரை அறுசுவை உணவு நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. பொதுவாக கோயிலின் திசை முக்கியமானதாகக் கருதப்படும். அக்காலத்தில் குடவறை கோயில்கள் அனைத்து திசைகளை நோக்கியும் அமைக்கப்பட்டிருக்கும். காரணம், ஆகமவிதிகள் பின்பற்றப்படாததுதான். மலைமீது துவக்க காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதால், இக்கோயிலின் அமைப்பு மேற்குதிசை நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் சேர மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மலைமீதுள்ள முருகன் மேற்கு நோக்கி, அதாவது, கேரளம் நோக்கி உள்ளார்.

இதனால் முருகப்பெருமான் தங்கள் நாட்டை பார்ப்பதால், கேரள மாநில மக்கள் அதிகளவு பழநி கோயிலுக்கு வருகின்றனர். பல கேரள மக்கள் தங்களின் இஷ்ட தெய்வமாகவ்ஏ பழநி முருகனை வழிபட்டு வருகின்றனர். அன்னதானம் பெற்றுக்கொண்டு, வெளிப்பகுதியில் நின்றபடி நகரத்தையும், வயல்வெளிகளையும் ரசிக்கலாம். சிலுசிலுக்கும் காற்று, இதமான பசுமை வெளிகள் என்று இந்த இயற்கை வளம் நமக்குள் ரம்யம் ஊட்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 472 கி.மீ. தொலைவில் பழநி அமைந்துள்ளது. பழநி மலைக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 1068 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 19 கி.மீ. நீளமுள்ள சண்முகா நதி பக்தர்கள் நீராடும் புனித ஆறுகளில் ஒன்று. மலைக்கோயிலின் உயரம் 160 மீட்டர்.

பழநி மலையில் அரிய வகை மூலிகைகள், சந்தன மரம் மற்றும் கடம்ப மரங்கள் அதிகளவு உள்ளன. அடிவாரத்தில் சுமார் மூன்று கி.மீ. தூரத்திற்கு பசுஞ்சோலைகள் நிறைந்த அழகிய கிரி பிராகாரங்கள் உண்டு. இந்த இருபுறமும் கடம்பு, வேம்பு முதலிய பலவகை மரங்கள் உள்ளன. கிரிவீதியைச் சுற்றி பல மடாலயங்கள் உள்ளன. பழநி மலையைச் சுற்றி பல்வேறு ஆலயங்கள் உள்ளன. பஞ்சமுக விநாயகர், மதுரைவீர சுவாமி, சன்னாசியப்பன், அழகுநாச்சியம்மன், மகிஷாசுரமர்த்தினி, வீரதுர்க்கை அம்மன், வனதுர்க்கையம்மன் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். கிரிவலம் வருபவர்கள் இந்த கோயில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.

சினம் கொண்ட முருகன் மயிலுடன் வந்து இறங்கிய இடம் திருஆவினன்குடி. முந்தைய காலங்களில் பழநி, திருஆவினன்குடி என்றே அழைக்கப்பட்டது. ஆவினன்குடி என்னும் பெயர், பின்னர் திருவாவினன்குடி என்று மருவியது. திரு+ஆ+இனன்+கு+டி என்று பிரித்துப் பொருள் கூறுவர். ‘திரு’ என்றால் லக்குமி, ‘ஆ’ என்றால் காமதேனு இனன் என்றால் சூரியன், ‘கு’ என்றால் பூமி, ‘டி’ என்றால் அக்கினி என்று பொருளாகும். மயில் நின்ற இந்த இடத்தில் அமைந்த ஆலயத்தில்தான் முருகன் மயில்மேல் அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாய் காட்சியளிக்கிறார். ஆனால் மலைமீது உள்ள சிவமைந்தன் வாகனமின்றி தனியாகவே அருள் பாலிக்கிறார்.

கேரளம் உள்ளிட்ட பல பக்தர்கள் திருஆவினன்குடி தரிசனம் முடித்தபின்பே மலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நக்கீரர் போற்றிப் பாடிய திருத்தலம், திருவாவினன்குடி. பழநி திருத்தலத்தில் திருவாவினன்குடி கோயிலும், மலைக்கோயிலும் புகழ்பெற்றவை. தேவர்களும், சித்தர்களும் தங்கிப் புனிதம் பெற்ற திருக்கோயில்கள் இவை. பழநி கோயிலில் நடைபெறும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு திருஆவினன்குடியில்தான் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிரத புறப்பாடும் திருஆவினன்குடி கோயிலில் இருந்துதான் நடைபெறும்.

ஆண்டு முழுவதுமே பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சாதாரண நாட்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவது வழக்கம். சனி, ஞாயிறு மற்றும் கார்த்திகை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தவிர, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற விழாக்காலங்களில் அளவுக்கதிகமான பக்தர்கள் வருவர். இந்நாட்களில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்திச் சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இத்தலத்தின் பிரசித்தி பெற்ற, பிரமாண்ட திருவிழா என்றால் அது, தைப்பூசமே. தை மாதம், பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில் பழநியாண்டவருக்கு கொண்டாடப்படுகிறது, தைப்பூசத் திருவிழா. இந்நாள், அன்னை உமாதேவியாரிடம் தாரகன் என்ற அரக்கனை அழிப்பதற்கு முருகப்பெருமான், வெற்றிவேல் வாங்கிய தினமாகும். அரக்கனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்டது தை மாதப் பூச நட்சத்திர தினத்தில்தான். இதனைப் போற்றும் வகையில் தைப்பூச விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

பழநியின் ஊர்க்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் வெகு சிறப்பாக இத்திருவிழா நடைபெறும். தைப்பூச முருகனை காண, 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனான காணிக்கையைச் சுமந்து, பாதயாத்திரையாய் பழநியை நோக்கி வருவது வழக்கம். ஆம், பாதயாத்திரைதான் இந்தவிழாவின் முக்கியமான அம்சம். பல நூறு கி.மீ. தூரம் பனி, வெயில் பொருட்படுத்தாது குடும்பத்துடன் இரவு, பகலாக பாதயாத்திரையாகவே பல பக்தர்கள் பழநி நோக்கி வருகின்றனர். தைப்பூச முருகனைக் காண பக்தர்கள் காவியுடை அணிந்து, விரதம் இருந்து இப்புனித பயணத்தை மேற்கொள்வர்.

குறிப்பாக காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆறுமுகக் காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.
தை மாதம் பிறந்தால், பழநி நகரில் ‘முருகா, முருகா, அரோகரா அரோகரா’ என்ற முழக்கம்தான் அதிகளவு கேட்கும். ஆட்டம், பாட்டம் மிகுதியாக இருக்கும். பழநியைச் சுற்றியுள்ள மண்டபங்களில், கிரிவீதியில் மற்றும்  சண்முகாநதியில் பக்தர்களின் காவடி ஆட்டம் ஜொலிக்கும். நத்தம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜெயங்கொண்டம் போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் சேவல் காவடி, மயிற்காவடி, வேல்காவடி, ஆறுமுகக் காவடி சுமந்து வருகின்றனர்.

பாதயாத்திரையால் தங்களின் பாவ வினைகள் நீங்குகின்றன என்றும் வழிநெடுக முருகன் தங்களுடன் நடந்து வருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நேர்த்திக்கடன் வழிபாடு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது! தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச முருகனைக் காண வருகின்றனர். பழநி வழிபாட்டில் காவடி முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் வசதியற்ற மலைப்பாதையில் ஒரு தண்டின் இருபுறமும் சுவாமிக்குத் தேவையான பொருட்களை தோளில் சுமந்தபடி சென்றனர். அதன் நீட்சியாக இன்றைக்கு காவடி வழிபாடுகள் சிறப்புபெற்றுள்ளது.

காவடி வழிபாடு மற்ற கோயில்களில் விட இங்கு அதிகம். தைப்பூச விழாவில் முருக பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வருகின்றனர்: 1. மயில்தோகைக் காவடி, 2. தீர்த்தக் காவடி, 3. அலகுக் காவடி, 4. பறவைக் காவடி, 5. சுரைக்காய்க் காவடி, 6. தானியக் காவடி, 7. இளநீர்க் காவடி, 8. தொட்டில் காவடி, 9. கரும்புக் காவடி, 10. பால் காவடி, 11. பஞ்சாமிர்தக் காவடி, 12. பன்னீர்க் காவடி, 13. பூக்காவடி, 14. சர்க்கரைக் காவடி, 15. மலர்க் காவடி, 16. காகிதப்பூக் காவடி, 17. அலங்காரக் காவடி, 18. கூடைக் காவடி, 19. செருப்புக் காவடி, 20. விபூதிக் காவடி, 21. வேல் காவடி, 22. வெள்ளிக் காவடி, 23. செடில் காவடி, 24. தாளக் காவடி, 25. தாழம்பூக் காவடி, 26. தயிர்க் காவடி, 27. மச்சக் காவடி, 28. சர்ப்பக் காவடி, 29. அக்கினிக் காவடி, 30. தேர்க் காவடி, 31. சேவல் காவடி, 32. இரதக் காவடி.

இவற்றில் அலகுக் காவடி சிறப்பிடம் பெற்றுள்ளது. பல மண்டலங்கள் விரதமிருந்து உடல் முழுவதும் சிறிய வேல்களை குத்திக் கொண்டு பாதயாத்திரையாய் வருவர். திருப்பத்தூர், காரைக்குடி, திண்டுக்கல், நத்தம், தேவகோட்டை பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உதடு, கன்னத்தில் வெள்ளி அல்லது செம்பினால் செய்த சிறிய கம்பி போன்ற வேலினைக் குத்திக் கொள்கின்றனர். 22 அடி நீளமுள்ள அலகுக் காவடிகளைச் சுமந்து வருபவர்களும் உண்டு. பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம், திருநீறு பூசி முதுகில் அலகு குத்தி, தேர் இழுத்து வருகின்றனர். வாய்பேசாத குழந்தைகள் பேசவும், உடல் ஊனம் விலகவும் அலகுக் காவடி எடுத்து வரப்படுகிறது.

ஆண் வாரிசு, செவ்வாய் தோஷம் நீங்குதல், தடைபட்ட திருமணம் நடைபெற, கடன்தொல்லை, தீராத நோய் தீர, ஊழ்வினை நீங்க, தொழில் லாபம், ஆயுள், ஆனந்தம் பெருக என்று ஒவ்வொருவரும் தங்களின் நீண்டநாள் பிரச்னைதீர இவ்வகை நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறி விடுவதால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை பழநிக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக பாதயாத்திரை மகிமை ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிப்பதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பரம்பரை, பரம்பரையாகப் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கின்றனர். பழநி தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில், சேலம் மாவட்டம், எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்று.

350 ஆண்டுகளுக்கும் மேலாக பருவத ராஜகுல காவடி குழுவினர் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இக்குழுவினர் தைப்பூசம் முடிந்த பின்னரே பழநி கோயிலை வந்தடைவர். ஒருநாள் முழுவதும் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர். பின், அப்பஞ்சாமிர்தத்தை காவடிக்குழுவினர் பகிர்ந்து கொள்வர். பிரச்னைகள் தீர்ந்து பெருமகிழ்வு கொண்ட பக்தர்கள், பல்வேறு காணிக்கைகளை செலுத்துகின்றனர்.

உண்டியலில் நாணயங்கள், பணம், தங்கக்காசு, ஆபரணங்கள், காசோலைகள், வெள்ளிக்காசுகள், வெள்ளி-தங்க வேல்கள், மோதிரங்கள், கடிகாரங்கள், வெளிநாட்டு பணம் என்று சமர்ப்பிக்கிறார்கள். வேறு சிலர், தங்கள் ஊரில் இருந்து பாதயாத்திரையாய் வந்து சேவல், புறா போன்ற பறவைகளைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்கள் நிலங்களில் விளையும் நெல், கம்பு, சோளம், மிளகாய், பருப்பு, உளுந்து, தினை, மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் குறிப்பிட்ட அளவு காணிக்கை தருகின்றனர். பசு, எருது உள்ளிட்ட விலங்குகளையும் அளிக்கிறார்கள். இன்னும் சிலர் நிழல் தரும் மண்டபங்கள், படிகளை பக்தர்கள் வசதிக்காக அமைத்துத் தருகிறார்கள்.

பாதயாத்திரை வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிநெடுகிலும் உள்ள பல ஊர்களில் அன்னதானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கெட், பால், நெல்லிக்காய், சாக்லேட், அமர்வதற்கு சேர் வழங்குதல், கால்வலி நீங்க மசாஜ், குளிக்க வசதி ஏற்படுத்துதல் என்று பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். பக்தர்களுக்குச் செய்யும் சேவை முருகனுக்கு சென்றடையும் என்பதால், இவ்வாறு வழிநெடுகிலும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சேவை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் பழநி முருகனுக்கு விரதம் இருந்து, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளில் பழநி முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆண்களும், பெண்களும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விரதமிருந்து வழிபாடு செய்யும் பழக்கமும் உண்டு. சித்திரை மாதம் நடைபெறும் அக்னி நட்சத்திர விழாவில் பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். குழந்தை வரம் வேண்டி சிலர் பழநி மலைக்கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். தங்கரதம் பழநி கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத உலா நடைபெறும். பக்தர்கள் தங்கரதம் இழுக்க ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். தங்கரதம் இழுக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக பரிவட்டம், மாலை அணிவிக்கப்பட்டு பாத்திரம், பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம் முதலிய பிரசாதங்கள் வழங்கப்படும்.

பழநியின் மற்றுமொரு சிறப்பு, பஞ்சாமிர்தம். திருப்பதி என்றதும் லட்டு நினைவிற்கு வருவது போல பழநி என்றதும் பஞ்சாமிர்தம்தான் நினைவிற்கு வரும். போகர், தான் உருவாக்கிய நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு தினமும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, அதனை உண்டு வந்ததாக இன்றளவும் நம்பப்படுகிறது. முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை உண்டால் தீராத நோய்கள் தீருமென கூறப்படுகிறது. மலைவாழைப்பழம், கற்கண்டு, நெய், தேன், கரும்புச்சர்க்கரை, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றால் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. தற்போது கோயில் நிர்வாகம்சார்பில் பக்தர்களுக்கு சாயரட்சை பூஜைக்குப் பின் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பல்வேறு அளவுகளில், விலைகளில் இந்த பஞ்சாமிர்தம் கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. சண்முக நதி, பழநி மலைக்கோயிலிலிருந்து வடமேற்கு திசையில், 6 கி.மீ. தூரத்தில் கோவை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆறுமுகனைக் குறிக்கும்வகையில் மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, பச்சையாறு, கானாறு, கல்லாறு ஆகிய ஆறு நதிகளின் முழு வடிவமே சண்முக நதி என்பர். மூலிகை கலந்துவரும் இந்த நதியில் நீராடி முருகனை வழிபட்டால் உடல்நோய், மனநோய் நீங்கும், முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இடும்பன் குளம், சரவணப் பொய்கை, போன்ற புண்ணிய தீர்த்தங்களும் பழநியில் உண்டு.

இவற்றில் நீராடுவதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் ஷவர் பாத் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, வரட்டாறு, வையாபுரிக்குளம், வள்ளிசுனை, பிரம்ம தீர்த்தம் ஆகியவையும் புண்ணியநீர் எடுத்து வரும் நீர்நிலைகளாக உள்ளன. அயன்மிராஸ் பண்டாரங்கள் என்பவர் யார்? பழநி முருகனுக்கு நடைபெறும் 6 கால பூஜைகளுக்கு, மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள வரட்டாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் உரிமை, பழநியைச் சேர்ந்த 64 அயன்மிராஸ் பண்டாரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களின் வாரிசுகள் இப்பணியை செய்து வருகின்றனர். இவர்கள் தீர்த்தம் எடுத்துவர ரோப்கார் அருகே தனியாக திருமஞ்சன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 6 கால பூஜைக்கு தற்போதும் இவர்கள் சுழற்சி முறையில் தீர்த்தம் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

கிமு 500ல் இருந்தே இம்மலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. சங்ககால இலக்கியங்களில் பழநியை பற்றியும், பழநியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப்பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார். அதனால் ஆவிநாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்றும் இப்பகுதி அழைக்கப்பட்டிருக்கிறது. இன்றும் பழநியின் நடுவே உள்ள குளம் வையாபுரிக்குளம் எனப்படுகிறது. இந்த மலைக்கோயில், பிற்கால பாண்டிய மன்னர்களின் கட்டுமான வகையைச் சேர்ந்தது.

கிபி 9ம் நூற்றாண்டில் சேர மன்னர்கள் கோயில் திருப்பணிகளைத் துவக்கினர். கோயில் கருவறை வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு மூலம் கிபி 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கருவறை சுவர்களில் உள்ள 4 கல்வெட்டுக்களில் ஒன்று (கிபி 1520) கிருஷ்ண தேவராயர் காலத்தை சார்ந்தது. இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழநிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது. மற்றவை, மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே குறிப்பிடுகின்றன. விஜயநகர மன்னர் மல்லிகார்ஜுனர் காலத்தில் (கிபி 1446) அவரது பிரதிநிதியான அன்னமராய உடையார் என்பவர் இந்த பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் 3 சந்திகால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக இரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரவிமங்கலத்தில் கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் கால பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கல்வெட்டு பழநி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் அழகிய சிற்பங்கள் நிறைய உள்ளன - தவக்கோலத்தில் இருக்கும் சித்தர்கள், நவவீரர்கள், கிளி, மயில், மான், துவார பாலகர்கள். பாரவேல் மண்டபம் மற்றும் அர்த்த மண்டபங்களில் வண்ண ஓவியங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் மற்றும் அவரது மனைவியர் சிலைகளும் உள்ளன. மண்டப மேற்கூரைகளில் வரையப்பட்டுள்ள கொடுங்கய் வடிவ ஓவியங்கள் சிற்பிகளின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பாதவிநாயகர் கோயிலை அடுத்துள்ள மண்டபத்தில் பைரவர், பத்ரகாளி, காளத்திநாதருக்கு தன் கண்ணை எடுத்து லிங்கத்தில் அப்பும் கண்ணப்பநாயனார், தேவசேநாதேவி திருமணம், சூரசம்ஹார சுப்பிரமணியன், வீரபாகுத்தேவர் ஆகியோர் திருவுருவங்கள் அழகிய சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பழநி கோயிலில் உள்ள சிற்பங்கள் அற்புதமானவை. சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளதுதான் நவரங்க மண்டபம். முன் மண்டபம் என்றும் இதனைக் கூறுவர். இதில் 12 ராசிகளுக்கு 12 கலைநுட்ப தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிக்கும்வகையில் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைத் தாங்கி நிற்கின்றன. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபம்.

(மேலும் விவரங்கள் அடுத்த இதழில்...)

- N.கணேஷ்ராஜ், கதிர்செந்திலரசு, V.சங்கர் சபரி.