தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்?



தெளிவு பெறு ஓம்

* கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்தோ, தெரியாமலோ கிரஹணத்தை பார்க்க நேரிட்டால், பிறக்கும் குழந்தைக்கு குறைபாடு உண்டாகிறது. இது விஞ்ஞானத்தின் அடிப்படையில் உண்டாகிறதா அல்லது சாஸ்திர ரீதியாக உண்டாகிறதா? வெளிநாடுகளிலும் இப்படித்தான் நிகழ்கிறதா?
- சி.எம்.வைத்தியநாதன், முகலிவாக்கம்.

சாஸ்திரம் என்பதே விஞ்ஞானத்தை மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் உபகரணம்தான். சாஸ்திரம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த விதிமுறைகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் உண்மை ஒளிந்திருக்கும். கிரஹண காலத்தில் வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலுள்ள கருவினை பாதிக்கிறது என்பது உண்மையே. அது மட்டுமல்ல, கிரஹண காலத்தில் பிறக்கின்ற குழந்தைகளின் வாழ்வும் குழப்பம் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.

தீர்க்க முடியாத பிரச்னைகளை உடையவர்களின் ஜாதகங்களை ஆராயும்போது, கிரஹண காலத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ள இயலும். சந்திரனை பூமியின் நிழல் மறைக்கிறது, சூரியனை சந்திரனின் நிழல் மறைக்கிறது என்று நாம் கிரஹணத்திற்கு அறிவியல் விளக்கம் அளித்தாலும், கிரஹண காலத்தில் ராகு-கேது எனும் புள்ளிகள் சூரிய-சந்திரனோடு ஒரே நேர்கோட்டில் இணையும் ஒற்றுமையை பஞ்சாங்கத்தின் உதவி கொண்டு, அன்றைய தினத்தின் கிரஹ சஞ்சார நிலையின் அடிப்படையில் அறிய முடிகிறது.

ராகு-கேது நிச்சயமாக பாதிப்பினைத் தருவார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அல்ட்ரா வயலட் கதிர்கள் கிரஹண காலத்தில் வெளிப்படும் என்கிறது விஞ்ஞானம். எப்படி இருந்தாலும் அந்த நேரம் பாதிப்பினைத் தரும் நேரமே என்ற உண்மை இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதிப்பிற்கு உள்நாடு, வெளிநாடு என்ற பேதம் ஏதும் கிடையாது. எங்கெல்லாம் கிரஹணம் தெரிகிறதோ அங்கெல்லாம் கிரஹணத்திற்கான பாதிப்பு நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

* தமிழ் ஆண்டுகளின் அறுபது பெயர்களும் தமிழில் இல்லாமல் வடமொழியில் உள்ளனவே, ஏன்?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பித்து, அஷய வரை வருகின்ற அறுபது ஆண்டுகளும் தமிழ் வருடங்கள் அல்ல; இந்திய வருடங்கள். தமிழ்நாட்டில் மட்டும் இந்த வருடங்களின் பெயர்களை உபயோகிப்பதில்லை. இந்தியத் திருநாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதே இந்த வருடங்கள். தற்போது நடந்து வருகின்ற (தமிழ்) வருடம் என்பது வடஇந்தியாவில் ஒன்றாகவும், தென்இந்தியாவில் வேறொன்றாகவும் இருக்கும். ஆனால் வருடங்களின் பெயர்கள் எல்லாம் ஒன்றுதான். இந்த அறுபது வருடங்களும் வடமொழியில் உள்ள வருடங்களின் பெயர்களே ஆகும். கால நிர்ணயத்தைக் குறிப்பிடும் வானவியல் சார்ந்த நூல்கள் எதுவும் தமிழகத்தில் இயற்றப்படவில்லை. வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் தமிழில் உள்ளன. வடமொழியின் அடிப்படையில் உள்ள வருடங்களின் பெயர்களைத்தான் நாம் தமிழில் தத்து எடுத்துக்கொண்டுள்ளோம்.

* யாரை நாம் கடவுளாக நினைக்க வேண்டும்?
- டி.என்.ரங்கநாதன், திருவானைக்காவல்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றெல்லாம் படித்திருக்கிறோமே! பெற்றவர்களையும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். மாதா, பிதா, குரு இவர்களை நாம் கடவுளாக எண்ணி வணங்கினாலே தெய்வத்தின் அருள் நம்மிடம் வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

* ஒருவர் விபத்தினாலோ, தற்கொலையினாலோ இறக்க நேரிட்டால் அதை அகால மரணம் என்கிறோம். அப்படியானால் அவரின் ஆன்மா என்ன ஆகிறது?
- கோவிந்தராஜன், குடியாத்தம்.
அலைந்துகொண்டுதான் இருக்கும். விபத்தினாலோ, தற்கொலையினாலோ ஒருவர் இறக்க நேரிட்டால் சாதாரணமாக எல்லோருக்கும் செய்வதைப்போல் கர்மாவினை செய்து முடிக்க இயலாது. இப்படி இறந்தவரின் உடலை மந்திரம் ஏதுமின்றி வெறுமனே எரித்துவிட்டு அஸ்தியை தனியாக ஒரு பானையில் இட்டு, வீட்டுத் தோட்டம் அல்லது சொந்த நிலத்தின் மூலையில் ஒரு பள்ளம் எடுத்து பானையை புதைத்து வைக்க வேண்டும்.

ஆறுமாத காலம் கழித்து குழியிலிருந்து பானையை வெளியில் எடுத்து அந்த அஸ்தியைக் கொண்டு தர்ப்பை சம்ஸ்காரம் என்ற கிரியையைச் செய்ய வேண்டும். அதாவது தர்ப்பைப் புல்லில் பொம்மை போல் செய்து அந்த பொம்மையில் இறந்தவரின் பெயரைச் சொல்லி ஆவாஹணம் செய்து அந்த பொம்மையை பிரதேமாக பாவித்து அந்திம சம்ஸ்காரங்களுக்கு உரிய மந்திரங்களுடன் எரித்து, எடுத்து வைத்த அஸ்தியை அதனோடு சேர்த்து பால் தெளித்து முறையான மந்திரங்களுடன் நதி அல்லது கடல் போன்ற தீர்த்தங்களில் கரைக்க வேண்டும்.

அந்த நாளையே அவர் இறந்த நாளாகக் கணக்கில் கொண்டு முறையாக தசாஹம் முதலான கர்மாக்களைச் செய்ய வேண்டும். இதில் நாராயணபலி என்ற முக்கியமான நிகழ்வும் உண்டு. நாராயணபலி என்ற அந்த கிரியையைச் செய்தால் மட்டுமே இவ்வாறு இறந்த ஆத்மா பித்ரு லோகத்தைச் சென்றடையும். நாராயணபலியைச் செய்யாமல் மற்ற கிரியைகளை மட்டும் செய்தால் விபத்தினாலோ, தற்கொலை மற்றும் கொலையினாலோ இறந்த அந்த மனிதனின் ஆத்மா பித்ருலோகத்திற்குச் செல்லாமல் அலைந்துகொண்டுதான் இருக்கும். இவ்வாறு செயற்கையாக அகால மரணம் அடைபவர்களுக்கு உரிய கர்மாக்களை முறையாகச் செய்யாமல் விட்டால் அந்தப் பரம்பரையில் பல பிரச்னைகள் வந்து சேர்வது கண்கூடு.

* திரைப்படங்களிலும், நெடுந்தொடர்களிலும் கற்பனை காட்சிகளில் இடம்பெறுவது போல்தான் இறைவனின் முகம் இருக்குமா?
- இரா.வைரமுத்து, இராயபுரம்.
இறைவனை நம்மில் ஒருவனாக நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். நமது வாழ்க்கை முறையோடு இறைவனையும் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற எண்ணம் நமக்குள் வேரூன்றிவிட்டது. தென்னிந்தியாவில் கண்ணனை கார்மேகவண்ணனாகக் காண்கிறார்கள். வட இந்தியர்கள் கண்ணனுக்கும், ராமனுக்கும் பொன்னிற மேனியை உருவமாகத் தருகிறார்கள். அவரவருக்கு பிடித்த வடிவில் அவரவர் இறைவனைக் காண்கிறார்கள். உண்மையில் இறைவன் உலகில் வாழுகின்ற எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கிறார். கலியுகத்தில் அவரைக் கண்ணால் காண இயலாது, அனுபவித்து உணரத்தான் இயலும் என்கிறார்கள் பெரியோர்கள்.

* சுபநிகழ்ச்சிகளில் ஒற்றை இலக்கமாக மொய்ப்பணம் வைப்பது ஏன்?
-‘தமிழ்விரும்பி’ பொன்.மாயாண்டி, சென்னை-13.
ஒற்றைப்படை எண்களை வளரும் எண்களாகவும், இரட்டைப்படை எண்களை வளர்ச்சி நின்றுவிட்ட எண்களாகவும் நம்மவர்கள் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு 100 ரூபாய் மொய்ப்பணம் வைக்கும்போது இறுதியில் வருகின்ற பூஜ்யம் என்ற எண் ஆனது வளர்ச்சியைத் தராது என்றும், ஒரு ரூபாய் சேர்த்து 101 என்று மொய்ப்பணம் வைக்கும் போது ஒன்றாம் எண் வளர்ச்சியைத் தரத்துவங்கும் என்பதும் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கை மொய்ப்பணத்தில் மட்டுமல்ல, வீடு வாங்க அட்வான்ஸ் கொடுப்பது, புரோகிதருக்கு தக்ஷிணை கொடுப்பது என்று பல நடைமுறைகளிலும் பின்பற்றப்படுகிறது.

* பணத்தை ‘லட்சுமி’ என்று சொல்வது ஏன்?
-அயன்புரம் த.சத்தியநாராயணன்.
கல்வியைத் தருவது சரஸ்வதி என்றும், செல்வத்தைத் தருவது லட்சுமி என்றும், வீரத்தைத் தருவது சக்தி என்றும் முப்பெருந்தேவியருக்கு என தொழில்களை நிர்ணயித்து வைத்திருக்கிறோம். பிரம்மாவிற்கு படைத்தல், விஷ்ணுவிற்கு காத்தல், ருத்ரனுக்கு அழித்தல் என்று மூன்று தொழில்களை வைத்திருப்பது போல முப்பெருந்தேவியருக்கும் மூன்று விதமான செயல்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இவற்றில் செல்வத்தைத் தருவது லட்சுமி என்பதால் செல்வத்தின் அடையாளங்களான பசுமாடு, பொன், காசு, பணம் ஆகியவற்றை லட்சுமி என்று அழைக்கிறோம்.

* நான் மன வேதனையுடன் ஆலயத்தில் அமர்ந்து இருந்தேன். பூஜை முடிந்து எல்லோரும் சென்ற பின் துர்க்கையின் கழுத்திலிருந்து மாலை விழுந்தது. வயலூர் முருகன் கோவிலுக்குச் சென்றபோதும் ஆதிநாயகி கழுத்தில் இருந்து செவ்வந்திபூ விழுந்தது. இதன் பொருள் என்ன?
- வாசுகி, திருச்சி.
உங்களுடைய பிரார்த்தனை விரைவில் நிறைவேறிவிடும் என்பதற்கான சமிக்ஞையாகத்தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் மனவேதனையுடன் ஆலயத்தில் அமர்ந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மனவேதனைக்கான காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் ‘‘குறை விரைவில் நீங்கி உன்னுடைய வேதனை காணாமல் போகும், நீ கவலைப்படாதே, நான் உன் அருகில் இருக்கிறேன், தைரியமாக இரு,” என்று அம்பாள் உங்களுக்குச் சொல்வதாகத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அநாவசிய பயம் தேவையில்லை.

* பிரணவ மந்திரத்தோடு சேர்த்து இறைவன் பெயரை எந்நேரமும் கூறி வருகிறேன். இவ்வாறு நான் எந்நேரமும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கலாமா? அல்லது ஆசனம் போட்டு அமர்ந்துதான் கூற வேண்டுமா?
- கணேஷ், திசையன்விளை.
குருநாதரிடமிருந்து முறையாக உபதேசம் பெற்ற மந்திரம் என்றால் குருநாதரின் வழிகாட்டுதலின்படியே ஜபம் செய்ய வேண்டும். ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடி தியானித்து முதலில் மானசீகமாக குருநாதரை வணங்கிவிட்டுத்தான் ஜபம் செய்யத் துவங்க வேண்டும். இதுபோன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களை ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடி ஜபிப்பதே பலன் தரும். கவனத்தை வேறு எங்கோ வைத்துக் கொண்டு உதடுகள் மாத்திரம் மந்திரத்தை ஜபிப்பதில் பலன் இல்லை. ஸ்லோகங்கள் என்பது வேறு, மந்திரம் என்பது வேறு, அதிலும் பிரணவ மந்திரம் என்பது ஓம்காரத்தைக் குறிக்கும். அகார, உகார, மகாரத்தின் இணைவான ஓம்காரத்தின் உண்மையான பொருளை உணர்ந்துகொண்டு ஜபிப்பவர்கள், ஆசனத்தில் முறையாக அமர்ந்துதான் ஜபம் செய்வார்கள். உங்கள் குருநாதரின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள்.

- திருக்ககோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா