பிரசாதங்கள்



சந்திரலேகா ராமமூர்த்தி

டிரை ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் கஸ்டர்டு

என்னென்ன தேவை?

பால் - 1/2 லிட்டர்,
கஸ்டர்டு பவுடர் - 1½ டேபிள் ஸ்பூன்,
காய்ந்த திராட்சை, காய்ந்த பேரீச்சை - 1/2 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்,
பாதாம், பிஸ்தா ஃபிளேக்ஸ் (சீவல்) - தலா 1 டேபிள் ஸ்பூன்,
வாழைப்பழம் - 1, ஆப்பிள் - 1,
மாதுளை முத்துக்கள் - 1/4 கப்,
பைனாப்பிள் - 1 துண்டு,
மாம்பழம் - 1,
கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை - தலா 6,
குங்குமப்பூ - சிறிது பால்-சிறிதளவு.

எப்படிச் செய்வது?

அனைத்து பழங்களையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் பால், கஸ்டர்டு பவுடர் சேர்த்து கரைத்து, அடுப்பில் வைத்து கைவிடாமல் கட்டி தட்டாமல் கிளறவும். கெட்டியாக வந்ததும் கன்டென்ஸ்டு மில்க் கலக்கவும். கெட்டியாக கூழ் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து, பழங்கள் கலந்து, குங்குமப்பூவை சிறிது பாலில்  கரைத்து சேர்க்கவும். மேலே பாதாம், பிஸ்தா ஃபிளேக்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் தூவி பரிமாறவும். விரும்பினால் சிறு சிறு குலோப்ஜாமூன் அல்லது ரசகுல்லா சேர்த்து பரிமாறலாம்.

கறுப்பு உளுந்து வடை

என்னென்ன தேவை?

வெள்ளை உளுந்து - 1/2 கப்,
கறுப்பு உளுந்து - 1/2 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
மிளகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இரண்டு உளுந்தையும் கழுவி 20 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம், உப்பு, சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டி ஈரத்துணி அல்லது இலையின் மேல் வடைகளாக தட்டி மத்தியில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

சுக்கியடி

என்னென்ன தேவை?

பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப்,
வெல்லம் - 3/4 கப்,
சூடான பால் - 2 கப்,
நெய் - 1/2 கப்,
முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
சுக்குத் தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து பாகு பதத்திற்கு கெட்டியாக காய்ச்சி தேன் போல் வந்ததும் இறக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பச்சரிசி மாவை பாலுடன் கரைத்து ஊற்றி, கைவிடாமல் கிளறி கொதிக்க விடவும். மாவு பாலுடன் வெந்து வந்ததும் பாதி நெய்யை சேர்க்கவும். மீதி நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து அதையும் மாவு கலவையில் கொட்டி இறக்கவும். ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் கலந்து சிறிது ஆறியதும் வெல்லப்பாகை கலந்து சிறு சிறு கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்பு: நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் பரிமாறலாம். ரவை, சிறுதானிய மாவு, கோதுமை மாவு, சம்பா ரவையிலும் செய்யலாம்.

வேர்க்கடலை ஒப்பட்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்,
வேர்க்கடலை - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
எள் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். எள்ளையும் வறுத்து பொடிக்கவும். வேர்க்கடலை, எள், ஏலக்காய்த்தூள்  போன்றவற்றை வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, 1 டீஸ்பூன் நெய், 1 சிட்டிகை உப்பு கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே சிறிது நெய் தடவி 10 நிமிடம் மூடி வைக்கவும். மாவிலிருந்து பூரி அளவிற்கு மாவு எடுத்து சொப்பு போல் செய்து, நடுவில் 2 டீஸ்பூன் பூரணக் கலவை வைத்து, மாவை இழுத்து மூடி மெதுவாக தேய்த்து சூடான தவாவில் சிறிது நெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மினி கை முறுக்கு

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
உளுத்தம்பருப்பு - 1/2 கப்,
கறுப்பு அல்லது வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
வெண்ணெய் - 25 கிராம்.

எப்படிச் செய்வது?

அரிசியை நன்கு களைந்து ஊறவைத்து நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைத்து சலித்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பை மிதமான தீயில் வைத்து சிவக்க வறுத்தெடுத்து ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, சீரகம், எள் கலந்து வெண்ணெய், உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கோலி அளவு உருண்டை எடுத்து கைமுறுக்கு சுற்றவும் அல்லது மாவு கட்டையில் நீளமாக விரல் போல் தேய்த்து இரண்டு முறுக்கு முறுக்கி இருமுனைகளையும் ஒட்டி விடவும். எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து, முறுக்குகளை பொரித்தெடுத்து எண்ணெயை வடித்தெடுத்து பரிமாறவும்.

குங்குமப்பூ முந்திரி புலாவ்

என்னென்ன தேவை?

முந்திரி - 50 கிராம்,
பாஸ்மதி அரிசி - 1 ஆழாக்கு,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
பால் - 1/4 கப்,
மிளகு - 10,
காய்ந்த திராட்சை - 20,
பிரிஞ்சி இலை - 1,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். 1/4 கப் பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். குக்கரில் நெய் விட்டு முந்திரியை வறுத்து பாதியை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். இத்துடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், திராட்சை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். மிளகு சேர்த்து வதக்கி, ஊறிய அரிசியை வடித்து போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு 1½ கப் சூடான தண்ணீர், சர்க்கரை, உப்பு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து வேகவிட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கியதும் திறந்து மேலே 1 டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி, குங்குமப்பூ பால் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி தனியாக நெய்யில் வறுத்து புலாவ் மீது அலங்கரிக்கலாம்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்