ஜகம் புகழும் புண்ணிய கதை !



அபூர்வ ஸ்லோகம்

மகான் நாராயண பட்டத்திரி இயற்றிய அற்புத நூல் ஸ்ரீமந் நாராயணீயம். தன் முன்னே விக்ரகமாகப் பொலிந்து நிற்கும் குருவாயூரப்பனிடம், மஹாவிஷ்ணுவின் லீலாவிநோதங்களைக் சமஸ்கிருத ஸ்லோகங்களாக கூற, அவற்றை குருவாயூரப்பன் புன்முறுவலுடன் ஆமோதிப்பதாக அவர் அனுபவித்திருக்கிறார். அவ்வாறு அவர் இயற்றிய 100 தசகங்களில் இரண்டில் ராமாவதாரத்தை நெக்குருக வர்ணித்திருக்கிறார். இந்த ராமநவமி நன்னாளில் அந்தப் பாடல்களின் தமிழாக்கத்தை கீழே காணலாம். இதனைப் பாராயணம் செய்து ஸ்ரீராமனைத் தொழுவோம், நாளெல்லாம் நலம் பெறுவோம்.
 
1. குருவாயூரப்பா! ராவணனை அழிக்கும்படி உன்னைத் தேவர்கள்  வேண்டி நின்றனர். கோசல நாட்டில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க புத்ரகாமேஷ்டி யாகத்தைச் செய்தார். அங்கு உதித்த உன்னதமான பாயஸத்தை தசரதரிடம் கொடுத்தார். அதனை உட்கொண்ட தசரதனின் மனைவி மூன்று பேரும் கர்ப்பமுற்றனர். அங்கு லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோருடன் நீ ராமனாகப் பிறந்தாய் அல்லவா?

2. குருவாயூரப்பனே! உனது தந்தையான தசரதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கோதண்டம் எனும் வில்லை ஏந்தியபடி, லட்சுமணன் உன்னைத் தொடர்ந்து வர, விஸ்வாமித்ர முனிவரின் சிறப்பான யாகத்தை அசுரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகச் சென்றாய் அல்லவா? வழியில் நடந்த களைப்பானது, விஸ்வாமித்திரர் உனக்கு உபதேசித்த பலா மற்றும் அதிபலா மந்திரங்கள் மூலம் தீர்ந்தது. மனிதர்களைக் காப்பதற்காக விஸ்வாமித்திரரின் கட்டளைக்கு உட்பட்டு தாடகை என்ற அரக்கியை உனது அம்புகளால் வீழ்த்தினாய். இதனால் மகிழ்ந்த அந்த முனிவரின் மூலமாக பலவிதமான அஸ்திரங்களைப் பெற்றாய். பின்னர் முனிவர்களின் இருப்பிடமான ஸித்தாஸ்ரமம் என்ற இடத்திற்குச் சென்றாய்.

3. குருவாயூரப்பா! அங்கு நடந்த யாகத்தின் தொடக்கத்தில் உனது அம்புகளால் மாரீசன் என்ற அரக்கனை விரட்டினாய். அவனுடன் இருந்த அசுரர்களைக் கொன்றாய். நீ நடந்து சென்ற வழியில் அகல்யையை உனது பாத துளிகளால் புனிதமாக்கினாய். அதன் பின்னர் விதேஹ ராஜனான ஜனகனின் அரண்மனையை அடைந்தாய். அங்கிருந்த சிவனின் வில்லை முறித்து பூமாதேவியின் மகளான ஸ்ரீமஹாலக்ஷ்மியாகிய சீதையை மனைவியாக அடைந்தாய். பின்னர் நீயும் உனது சகோதரர்களும் மனைவியர்களுடன் கோசல நாட்டிற்குப் புறப்பட்டீர்கள் அல்லவா?

4. கிருஷ்ணா! குருவாயூரப்பா! நீ செல்லும் போது உன்னைக் கோபத்துடன் ப்ருகு குலத்திற்குத் திலகம் என்று கூறப்படும் பரசுராமர் வழிமறித்தார். அப்போது, உன்னுடைய ஒளியால் மயங்கி தன்னுடைய ஒளியையும் உனக்கு அளித்துச் சென்றார். அதன் பின்னர் நீ அயோத்தி சென்றாய். பார்ப்பவர்கள் மனதைக் கவரும் அழகுடையவனே! அயோத்தியில் நீ சீதையுடன் சுகமாக வாழ்ந்து வந்தாய். ஒருமுறை உனது தம்பி பரதன், சத்ருக்னனோடு சேர்ந்து தனது மாமனார் வீட்டிற்குச் சென்றான். அந்த நேரத்தில் உனது தந்தை உனக்கு மகுடம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்ய முயன்ற முயற்சி, கைகேயியால் தடுக்கப்பட்டதல்லவா?

5. குருவாயூரப்பா! உனது தந்தையின் கட்டளைக்கு ஏற்ப வில்லை ஏந்தியபடி, உனது மனைவியுடனும், தம்பியுடனும் காட்டிற்குப் புறப்படத் தயாரானாய். உன்னுடன் காட்டிற்கு வர விரும்பிய உனது நாட்டு மக்களைத் தடுத்து நிறுத்தினாய். பின்னர் குகனின் இருப்பிடத்தை அடைந்தாய். அங்கு ஜடை, மரவுரி ஆகியவற்றை தரித்தாய். பின்னர் படகில் கங்கையைக் கடந்து சென்றாய். வழியில் இருந்த பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை வணங்கி, அவருடைய சொல்லை மதித்து, சிறப்பான மலையாகிய சித்ரகூட மலையில் வசித்தாய்.

6. குருவாயூரப்பா! உனது தந்தை புத்திரசோகம் தாங்காமல் மரணமடைந்தார் என்ற செய்தியை பரதன் மூலமாகக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தாய். தந்தைக்குச் செய்யவேண்டிய தர்ப்பணாதிகளைச் செய்தாய். பரதனிடம் உனது பாதுகைகளையும், ராஜ்யத்தையும் அளித்தாய். பின்னர் அத்ரி முனிவரின் ஆஸ்ரமம் சென்று வணங்கினாய். அதன்பிறகு, மிகவும் பெரியதான தண்டகாரண்யம் என்ற காட்டை அடைந்தாய். அங்கு வசித்து வந்த விராதன் என்ற பெரிய வடிவம் கொண்ட அசுரனை அழித்தாய். பின்னர் சரபங்க முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று அவருக்கு மோட்சமளித்தாய்.

7. குருவாயூரப்பனே! முனிவர்களின் நன்மைகளை முன்னிட்டு அனைத்து அசுரர்களையும் அழிப்பதாக உறுதி பூண்டாய். அகத்திய முனிவரைக் கண்டாய். அவர் மூலமாக விஷ்ணுவின் சிறந்த வில்லும், ப்ரஹ்மாஸ்திரமும் கிடைக்கப் பெற்றாய். அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும் வழியில் உனது தந்தையின் நண்பரான ஜடாயுவைப் பார்த்து மகிழ்ந்தாய். பின்னர் கோதாவரி நதியின் கரையில் உள்ள பஞ்சவடி என்ற இடத்தில் உனது மனைவியுடன் இன்பமாக வாழ்ந்தாய்.

8. குருவாயூரப்பனே! உன்னிடம் காமம் கொண்டு சூர்ப்பணகை என்ற அரக்கி உனக்கு அருகாமையில் வந்தாள். அவளுடைய வேண்டுகோளை ஏற்காமல் அவளை லட்சுமணனிடம் அனுப்பினாய். மிகவும் கோபம் கொண்ட லட்சுமணன் அவள் மூக்கை அறுக்க, அதனால் மிகுந்த சினம் கொண்டாள். அவளது நிலைமையைக் கண்டு பொறுக்காமல், கரன், தூஷணன், த்ரிசிரஸ் போன்றவர்களும் மேலும் பதினாயிரத்திற்கு மேற்பட்ட அசுரர்களும் உன்னை நோக்கி வந்தனர். அவர்களை உனது மங்காத வீரத்தால் ஒரே நேரத்தில் கொன்றாய்.

9. குருவாயூரப்பனே! தனது சகோதரியான சூர்ப்பணகையின் சொற்களைக் கேட்ட ராவணன் கோபம் கொண்டான். அவனது தூண்டுதலால் மாரீசன் மாயமானாக வந்தான். தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய சீதை அதனை விரும்பினாள். நீ அதனை தொடர்ந்து சென்று அம்புகளால் கொன்றாய். அப்போது அந்த மாரீசன் மாயக்குரல் எழுப்பினான். அதனைக்கேட்டு பயந்த சீதை உனது தம்பியான லட்சுமணனை உன்னிடம் அனுப்பினாள். அப்போது அந்த சீதையை ராவணன் அபகரித்தான். இதனால் நீ வெளியில் துன்பம் கொண்ட போதிலும், மனதில் ராவணனைக் கொல்ல உபாயம் கிடைத்தது என்று மகிழ்ந்தாய் அல்லவா?

10. கிருஷ்ணா! குருவாயூரப்பா! உனது மனைவியைத் தேடிச்செல்லும் வழியில் ஜடாயுவைக் கண்டாய். ஜடாயு உன்னிடம், ‘‘ராவணன் என்னைத் தாக்கிவிட்டு உனது மனைவியைத் தூக்கிச் சென்றான்’’ என்று கூறினார். அதன் பின்னர் அவர் இறந்தார். நண்பனான ஜடாயுவிற்கு வேண்டிய ஈமக்கிரியைகளை நீ செய்தாய். வழியில் உன்னை மறித்த கபந்தனை அழித்தாய். பம்பையின் நதிக்கரையில் சபரியைக் கண்டாய். அதன் பின்னர் அனுமனை சந்தித்தாய். மிகவும் மகிழ்வு கொண்டாய். இத்தனை செயல்களைப் புரிந்தவனே! என்னைக் காக்க வேண்டும்.

1.  கிருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் அனுமன் மூலமாக சுக்ரீவனின் நட்பைப் பெற்றாய். தந்துபி என்ற அசுரனின் உடலை உனது கால் கட்டை விரலால் மட்டுமே உயரமாகத் தூக்கி, எறிந்து வெகுதூரம் சென்று விழும்படி செய்தாய். ஒரே அம்பினால் ஏழு மரங்களை வீழ்த்தினாய். மிக அதிகமான வலிமை உடையவனும், சுக்ரீவனைக் கொல்ல எண்ணியவனுமாகிய வாலியைத் தந்திரமாகக் கொன்றாய். சீதையைப் பிரிந்த துக்கம் தாள முடியாமல் நீ மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் மழைக்காலத்தைக் கழித்தாய் அல்லவா?

2. குருவாயூரப்பனே! அதன் பின்னர் உன் தம்பி லட்சுமணனின் சொற்களுக்கிணங்க, அச்சத்துடன் உன்னிடம் சுக்ரீவன் வந்தான். அவனது படைகள் உனது துணைவியான சீதையைத் தேடுவதற்காக அணியாக நின்றன. இதனைக் கண்ட நீ மிகுந்த மகிழ்வு கொண்டாய். அதன் பின்னர் அனுமனின் கைகளில் உனது மோதிரத்தையும் செய்தியையும் அளித்தாய். உடனே, வானரவீரர்கள் அனைத்துத் திசைகளிலும் அனைத்து வழிகளிலும் உனது பிரியமான சீதையைத் தேடிச் சென்றனர்.

3. குருவாயூரப்பனே! உனது சரிதத்தைக் கேட்டவுடன் ஸம்பாதிக்கு சிறகுகள் முளைத்தன. அவர் சற்றே மேலே பறந்தார். அங்கிருந்து சீதையைக் கண்டார். அவருடைய சொற்களைக் கேட்ட அனுமனும் கடலைத் தாண்டிச் சென்றார். அங்கு இருந்த இலங்கையின் நடுவில் ஜனகனின் மகளான சீதையைக் கண்டான். உனது மோதிரத்தை சீதையிடம் அளித்தான். அசோகவனத்தையே அழித்தான். தடுக்க வந்த அட்சயகுமாரனைக் கொன்றான். பின்னர்(இந்திரஜித் தொடுத்த) ப்ரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டான். ராவணனையும் கண்டான். இலங்கையை எரித்தான். பின்னர் விரைவாக உன்னிடம் வந்து (சீதை அளித்த)சூளாமணியைக் கொடுத்தான் அல்லவா?

4. குருவாயூரப்பா! சுக்ரீவன், அங்கதன் போன்ற பலம் மிகுந்த வானர வீரர்களுடன் நீ, வானரக் கூட்டம் முழுவதுமாக ஆக்ரமித்தவாறு நின்றிருந்த இடத்துக்கு வந்தாய். அந்த சமுத்திரத்தின் கரையில் ராவணனின் தம்பியாகிய விபீஷணன் உன்னிடம் தஞ்சம் புகுந்தான். அவன் உன்னிடம் எதிரிகளைப் பற்றி விரிவாகக் கூறினான். உன்னுடைய தாழ்மையான வேண்டுகோளைக் கேட்டும் சமுத்திரராஜன் அமைதியுடன் இருக்கவே நீ கோபம் கொண்டு ஆக்னேயாஸ்த்திரத்தை விடத் தயாரானாய். உடனே பயந்துபோன சமுத்திரராஜன் உன்னிடம் வந்தான். அவன் கூறியபடி கடலின் நடுவே வழியை அமைத்தாய்.

5. குருவாயூரப்பா! அனைத்து வானரங்களும் பல திசைகளிலிருந்தும் மலைகளைக் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அதனால் அணையைக் கட்டினாய். அதன்மூலம் இலங்கையை அடைந்தாய். அங்கு சென்று, பற்கள், நகங்கள், மலைகள், கற்கள் போன்றவற்றை மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்த உனது படைகளின் உதவியால் அசுரர்களை அழித்தாய். உனது தம்பியுடன் இணைந்து சிறந்த முறையில் போர் புரிந்தாய். அப்போது இந்திரஜித் தொடுத்த நாகாஸ்திரத்தால் கட்டப்பட்டாய். பின்னர் கருடனின் இறக்கை சிறகுகளின் காற்று உன் மீது படவே மீண்டும் எழுந்தாய்.

6. குருவாயூரப்பா! சக்தி ஆயுதம் தாக்கியதால் லட்சுமணன் மயக்கம் அடைந்து வீழ்ந்தான். உடனே அனுமனால் கொண்டு வரப்பட்ட ஸஞ்ஜீவினீ என்ற மலையில் உள்ள மூலிகையால் மயக்கம் தெளிந்தான். தனது மாய வித்தைகளால் கர்வம் கொண்டிருந்த இந்திரஜித்தை லட்சுமணன் வீழ்த்தினான். நீ அந்தப் போரில் உண்டான மாயைகள் மூலம் கலக்கம் அடைந்தாய். ஆயினும் விபீஷணனின் வார்த்தைகள் மூலம் உனது மனக்கவலை நீங்கியது. அப்போது அந்தப் பூமியே அதிர்ந்து நடுக்கம் கொள்ளும்படியும், அனைத்துப் படைகளையும்  உண்பவனுமாகிய கும்பகர்ணன் உன்னை நோக்கி வந்த போது நீ அவனைக் கொன்றாய்.

7. குருவாயூரப்பா! இந்திரன் உனக்குத் தேரையும் கவசத்தையும் அளித்தான். அவற்றை ஏற்ற நீ ராவணனுடன் யுத்தம் செய்தாய். அப்போது ப்ரஹ்மாஸ்த்திரம் மூலம் அவனது பத்து தலைகளையும் வெட்டினாய். அக்கினிப் பிரவேசம் செய்த பரிசுத்தமான உனது மனைவியான சீதையை ஏற்றாய். தேவர்களின் உதவியால், உயிர் நீத்த அனைத்து வானரக் கூட்டமும் உயிர் பெற்றது. அவர்களுடனும், இலங்கையின் அதிபதியாகிய விபீஷணனோடும், லட்சுமணனோடும் புஷ்பக விமானம் ஏறிய நீ உனது நகரமான அயோத்திக்குச் சென்றாய்.

8. குருவாயூரப்பனே! உன்னுடைய பட்டாபிஷேகம் மிகவும் திவ்யமாக நடந்தது. அதனால் மகிழ்வுற்ற நீ, பல வருடங்கள் சுகமாக வாழ்ந்தாய். சீதையைக் குறித்து, படிப்பறிவில்லாத குடிமகன் ஒருவன் கூறிய பாவமான பேச்சைக்கேட்டு, கர்ப்பமாக இருந்த அவளைத் துறந்தாய். சிவ, சிவா! இது என்ன கஷ்டம்! சத்ருக்னன், லவணன் என்ற அசுரனைக் கொன்றான். சம்பூகன் என்பவன் தகாத காரியம் செய்ய முயன்றபோது நீ அவனைக் கொன்றாய். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் வசித்து வந்த சீதை இரண்டு மகன்களைப் பெற்றாள் அல்லவா?

9. கிருஷ்ணா! குருவாயூரப்பா! யாகசாலைக்கு வந்த உனது இரண்டு மகன்களும், வால்மீகி முனிவரின் கட்டளையை ஏற்று ராமாயணத்தை மிக இனிமையாகப் பாடினார்கள். நீ சீதையை ஏற்க சம்மதித்தாய். ஆனால், அப்போது சீதை இந்தப் பூமியினுள் சென்று மறைந்தாள். நீயும் யமதர்மராஜனால் வைகுண்டம் செல்லும்படி வேண்டப்பட்டாய். ஒரு காரணத்திற்காக நீயே உன் தம்பி லட்சுமணனைத் துறந்து அவனுடைய இறப்பிற்குக் காரணமானாய். பின்னர் உனது சுற்றத்தாருடன் (அவர்கள் சரயு நதியில் மூழ்கினர்) உனது இருப்பிடமான வைகுண்டம் சென்றடைந்தாய்.

10. கிருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த மனித அவதாரம் பல படிப்பினைகளைக் கூறுவதற்கே ஆகும். அவையாவன: அன்பானவர்களைப் பிரிந்தால் துக்கம் உண்டாகும். காமமும், தர்மமும் அதிகரித்தால் தியாகத்தில் கொண்டு சேர்த்துவிடும். சக்கரத்தைக் கையில் கொண்டவனே! பரிசுத்த வடிவினனே!
மாறுதல்களற்றவனே! எனது வியாதிகளை நீ தீர்த்தருள வேண்டும்.

 
தொகுப்பு: ந. பரணிகுமார்