அழியா முத்தி ஆனந்தமே, அபிராமி!



சக்தி தத்துவம் - அபிராமி அந்தாதி 16

அபிராமி அந்தாதியின் 10ம் பாடலுக்கான விளக்கங்கள் தொடர்கின்றன: ‘உமையே’ உமா என்கின்ற சொல்லில், உ+ம்+ஆ என்ற மூன்று எழுத்துகள் உள்ளன. பிரணவமாகிய ஓம்காரத்திலும் அ, உ, ம (அகர, உகர, மகர) மூன்றும் உள்ளன. இதற்கு வர்ண வித்தை என்பது பெயர். மந்திரங்களை எல்லோரும் அறிய விளக்கிச் சொல்லக்கூடாது என்கிறது சாஸ்திரம். அதேசமயத்தில் இறையருளும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உடையவர்களுக்கு உணர்த்துவதற்காக, சாஸ்திரத்தில் மந்திரங்கள் மறைத்து வேறுவிதமாய் உரைக்கப்படுகின்றன. அவ்வகையிலேதான் இந்த ‘உமையே’ என்ற சொல்லும், இந்தப் பாடலில் அமைக்கப்பட்டுள்ளது. இது மறைமுகமாக பிரம்ம வித்தை எனப்படும் ஒரு சக்தியை பற்றிய மந்திரத்தை குறிக்கிறது.

அதை மந்திர சாஸ்திரம் அறிந்தவர் மட்டுமே உபதேச வழியில் அறிந்துகொள்ள முயல வேண்டும். இந்த சொல்லானது தற்காலத்தில் பாஸ்வேர்டு (ரகசிய குறியீடு) என்பதைப்போல் என உணர்க. இதுபோல் மந்திரத்தின் எழுத்துகளை பயன்படுத்தி ஸ்லோகங்களையும், நாமாவளிகளையும் அமைத்துள்ளார் பட்டர். இதை லலிதா மூலமந்திர த்ரிசதி உறுதி செய்கிறது:

தாம் - பார்வதித்யபி ஜனேன நாம்ந
பந்துபிரியாம் பந்து ஜனோ
ஜுஹாவஉமேதி மாத்ரா தபசா நிஷிக்தா
பஸ்சாத் உமாக்யாம் சுமுநீஜகாம

- என்ற குமார சம்பவத்தின் முதல் சர்க்கத்தில் 26வது ஸ்லோகத்தில் உமா என்ற பெயரை பற்றி சிறப்பாக காளிதாசரும் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருளாவது: உறவினர்க்கு பிரியமான அவளை, குலம் காரணமாக வந்த பெயரினால், பார்வதி என அழைத்தனர். பிறகு குழந்தைப் பருவத்தில் தவம் வேண்டாம் என்று கூறி தாயினால்  தவத்தினின்றும், தடுக்கப்பட்டவளாக அழகிய முகமுடைய அவள் உமா என்ற பெயரை அடைந்தாள். இக்கருத்தின்படி உமா என்ற சொல்லிற்கு ‘உ’ என்றால் தவம், ‘ம’ என்றால் தடுக்கப்பட்டவள். இப்படி தவத்தை தடுத்து இல்லற நலனை வழங்குவதற்கு இந்தப் பெயரை சாஸ்திரங்கள் பரிந்துரைக்கிறது. ‘உமா’ என்பது வடசொல். அதன் தமிழாக்கம், ‘உமை’ என்பதாகும். ‘ஏ’ என்பது விளி - வேற்றுமை யகரம் என்பது உடன்படு. மெய் உமையே என்று செய்யுளில் அமைந்துள்ளது.

‘இமையத்து அன்றும் பிறந்தவளே’
உமையம்மையானவள் பல்வேறு பிறவிகளை எடுத்துள்ளாள். அவள் எந்த குலத்தில் பிறக்கின்றாளோ அந்த குலம் செழித்து வளரும். உலக நன்மைக்காகவும் ஆன்மாக்களை உய்விக்கவும், பல்வேறு பிறவியை எடுக்கின்றாள். இமவானுக்கு மகளாக பிறந்தது ஒரு அவதாரமாகும். அந்த அவதாரத்தில் கீழ்க்காணும் பெயர்களைப் பெறுகின்றாள். இந்த பெயர்களை அபிராமி பட்டர் நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார்:

கைலாயருக்கு அன்று இமவான் அளித்த கணங்குழையே (பாடல் - 99)
மலை மகள் என்பது நம் மிகையே (பாடல்-93)
இமவான் பெற்ற கோமளமே - 95

இமயத்து ‘அன்று’ பிறந்தவளே என்று குறிப்பிடாமல் அன்றும் பிறந்தவளே என்று குறிப்பிடுவதற்கு காரணம் என்ன? பல்வேறு பிறவியை எடுத்ததனால் அன்றும் பிறந்தவளே என்கிறார். தட்சனின் புதல்வியாக - தாட்சாயணி, மதங்க முனிவரின் மகளாக - மாதங்கி, மீனவ குலத்தில் - சொக்கலிங்க பெருமானால் பரதவ மகளாகப் பிறக்க சபிக்கப்பட்டு பின் சாப விமோசனம் கிடைக்கப் பெற்றாள் என்கிறது உத்திர கோச மங்கை வரலாறு. பாண்டிய மன்னனுக்கு மகளாகப் பிறந்த வரலாற்றை சொல்வது - மதுரை புராணம். மதங்க முனிவருக்கு மகளாக பிறந்து சிவபெருமானை மணந்தாள் என்கிறது திருநாங்கூர் ஊரிலுள்ள மதங்கீஸ்வர் ஆலய தலவரலாறு.
 
அதையே அபிராமி பட்டரும், ‘மதங்கர் குல பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி’

(பாடல் - 70) என்கிறார். குமார சம்பவத்தில் காளிதாசர் தாட்சாயணியாக பிறந்ததை குறிப்பிடுகிறார்: ‘தட்ஷஸ்ய கன்யா பவ பூர்வ பத்தினி’. தக்ஷருடைய பெண்ணும், சிவபிரானது முதல்  மனைவியும் பதிவிரதையுமான ஸதி, தந்தை இழைத்த அவமானத்தினால் தூண்டப்பட்டு யோகாக்னியில் சரீரத்தை விட்டவளாக பிறப்பதற்காக அந்த ஹிமவானுடைய மனைவியை (மேனையை) அடைந்தாள்.

மானுட தோற்றத்தில் அல்லாமல் உமையம்மையானவள், மயிலாக, (மாயூரம், மயிலாப்பூர்-சென்னை) ‘மயிலாய் இருக்கும்’ (பாடல் - 99), பசுவாக, (திரு ஆ அடுதுரை) இருந்து வணங்கியிருக்கின்றாள். இது அத்துனையும் மனதில் கொண்டே ‘அன்றும்’ பிறந்தவளே என்பதில் ‘ம்’ என்ற எழுத்தால் அவளது பல்வேறு பிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளார். அபிராமி அந்தாதியில் உள்ள ஒரு எழுத்துகூட பல்வேறு தகவல்களைச் சொல்லும் வல்லமை உடையது என்பதை அன்றும் என்பதில் உள்ள மகர ஒற்றிற்கே (ம்) இவ்வளவு பொருளும் அமைந்துள்ளது. இறையருளே.

‘அழியா முத்தி ஆனந்தமே’
இந்த வரிக்கு பொருள் சொல்வதற்குமுன் கீழ்க்காணும் கருத்தைப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு சமயமும் தனக்கான தத்துவக் கருத்துகளைக் கொண்டுள்ளது. தத்துவம் என்பது பொதுவில் உலகம். உயிர், இறைவன். இவற்றில் இடையே உள்ள உறவு. இவற்றை காரணகாரிய அடிப்படையில் விளக்கி, தான் கூறும் கருத்தை அதை கேட்போருக்கு அனுபவ சாத்தியப்படுத்துவதற்கு முயல்வதாகும். அந்த வகையில் முக்தி கோட்பாடு என்பது பெரும்பாலான சமயங்களில் தனித்து விளக்கப்படுகிறது. ‘சாக்தம்’ என்பது உமையம்மையையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் உயிர்கள் (பக்தர்கள்) இறுதியில் என்ன நிலையை அடைகிறார்கள் என்பதை இவ்வரி விளக்குகிறது.

பிற சமய முக்தி கோட்பாடுகளை முதலில் கண்டு பிறகு அபிராமி பட்டர் கூறும் முக்தியை அறிவோம். அப்படி அறிவது என்பது உமையம்மை வழிபாட்டில் முக்தி கோட்பாட்டின் தனித்தன்மையை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு துணையாக அமையும். வாழும்போது ஏற்படும் இன்ப துன்ப அனுபவம்தான் சொர்க்கம், நரகம் என்கிறது லோகாயதம் என்னும் சமயம்; இறந்தபின் ஆன்மா என்று ஒன்று இல்லை என்கிறது அனாத்மவாதம் என்னும் சமயம்; ஆன்மாக்கள் பல. அவை, தாம் செய்யும் தீவினை, நல்வினைக்கு ஏற்ப இறந்தபின் துன்பம், இன்பத்தை அடையும் என்கிறது சைவம்.

இதற்கு பகுவாத்ம வாதம் என்று பெயர். ஆன்மா ஒன்றேதான் அது மாயையால் பலவாகவும், ஞானத்தால் ஒன்றாகவும் தோன்றுகிறது. மாயையாக தோன்றும்போது அழியாத துன்பத்தையும், ஞானமாக தோன்றும்போது, அழியாத இன்பத்தையும் அடையும் என்கிறது சாக்தம். இதற்கு ஏகாத்ம வாதம் என்று பெயர். இதையே அபிராமி பட்டர், ‘ஒன்றே’ (பாடல்-30) - ஞானமாக இருக்கும்போது; ‘பல உருவே’ (பாடல்-30) - மாயையாக இருக்கும்போது; ‘பாழ் நரகுக்குழிக்கே அழுந்தும்’ (பாடல் - 79) - மாயையாக இருக்கும்போது; ‘அழியா முக்தி ஆனந்தமே’ (பாடல் -10) என்கிறார். இவ்வரிகள் சாக்த சமயத்தின் முக்திக் கோட்பாட்டை விளக்குகிறது.

ஆனந்தமாய், என் அறிவால் நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே பாடல் - 11

ஒவ்வொரு உயிரினமும் தனக்கான துன்பத்தை விளக்கிக் கொள்வதில் முயற்சியுடையதாய் உள்ளது. அதற்கான ஆற்றலையும் இயற்கையிலேயே அது பெற்றுள்ளது. அத்தகைய ஆற்றல்களுள் ஒன்றுதான் அறிவு. அறிவின் உதவியுடன் துன்பத்தைப் போக்கிக் கொள்ள முயல்கிறது, ஆன்ம சமூகம். வேதியர்களால் ஓதப்படுகிற வேதமானது, துன்பத்தைப் போக்குகின்ற வழிகளை விளக்கி அறிவிக்கிறது. வேதத்தின் விழுப்பொருளை விளக்குவது சமிதி என்னும் ஒரு குழு (அறிஞர் பேரவை). அந்தக் குழுவில் எடுக்கும் முடிவானது இறுதியாய் அமைகிறது. சமய உண்மைகளை அறிவிப்பதற்கு மட்டுமே அக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையே மாணிக்கவாசகர், ‘பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை’ (திருவாசகம், திருச்சதகம், கைமாறு கொடுத்தல்) என்பார். அபிராமி அம்மையின் அருளை உறுதி செய்ய, தான் சிறந்த சமயவாதி என்பதை நிரூபிக்க, சபையில் அன்றாடம் சரபோஜி மன்னரின் முன்னிலையில் அபிராமி பட்டருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைக் கொண்டு அபிராமி அந்தாதி உருவான சூழலை மிக அற்புதமாக விளக்கிக் காட்டுகிறது இப்பாடல். நெருப்பின் மூலம் அவரின் ஓலைச்சுவடி எரியாமல் இருந்ததும், அபிராமி அம்மையின் அருளால்  அமாவாசையின் வந்த நிலவின் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டது.

‘ஆனந்தமாய்’
ஆனந்தமானது உலக உயிர்களால் ஐந்து வகைகளாகப் பிரித்து அனுபவிக்கப்படுகிறது: உடல் சார்ந்து, உள்ளம் சார்ந்து, அறிவு சார்ந்து, ஆன்மா சார்ந்து, இறை சார்ந்து. இச்சொல்லை ஐந்து வகையாக பிரித்து புரிந்து கொள்ள வேண்டும். 1. உடலுக்கு உணவு, இசை, வாசனை, மெய்யின்பம், காட்சி இவற்றை களிப்பு என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்கள். ‘களிக்கும் களியே...’ (பாடல் - 23) 2. உள்ளத்துக்குள் ஏற்படும் காதல் என்ற உணர்வால் தோன்றும் மகிழ்ச்சியை 2 வகை என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். இதையே நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை - மெய்பாடு என்கிறது தொல்காப்பியம் (பொருளதிகாரம் - மெய்பாட்டியல் - சூத்திரம் - 3)

3. அறிவினால் ஏற்படும் அமைதி, தெளிவு, இது போன்ற அறிவுணர்வை இன்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ‘இன்பம் விழையான் வினைவிழையான்’ என்கிறார் திருவள்ளுவர். 4. ஆன்மா மரணம் பிறவி என்ற இரு துன்பங்களிலிருந்து விடுதலை பெறும்போது ஏற்படும் அனுபவத்தை இனிது என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். உமையம்மை வழிபாட்டை பொறுத்தவரை வழிபாடு செய்வதற்கு முன் இறைவன், உலகம், உயிர் இவை மூன்றிற்கும் உண்டான தொடர்பினை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்கின்றன ஆகமங்கள். இந்தப் பாடலை பொறுத்தவரை உயிரைப் பற்றிய உண்மையை நாம் அறிந்து கொண்டாலன்றி அது பெறும் ஆனந்தத்தை பற்றி அறிந்து கொள்ள முடியாது.

உடல் ஆனந்தம் - களித்தல்; உள்ள ஆனந்தம் - உவகை; அறிவானந்தம் - இன்பம். இதில் உடல், உள்ளம், அறிவு என்பது வாழும்போதே நம் அனுபவத்தினால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆன்ம ஆனந்தமானது அவ்வாறு அல்ல. அதை பற்றி சாத்திரங்கள் என்ன கூறியிருக்கின்றனவோ அதை கொண்டுதான் அறிய முற்பட வேண்டும் என்கிறது ஆகமம். அந்தவகையில் முதலில் உயிரின் இலக்கணம் என்ன, அது படும் துன்பம் என்ன, அது கொள்ளும் ஆனந்தம் என்ன என்பதை பற்றிக் காண்போம். உயிரின் இலக்கணம் (ஆகமம் சார்ந்து): பிறப்பதற்கு முன்னும், இறந்ததற்கு பின்னும் உள்ள நிலையில் உடல் தாங்கிய எல்லா உயிரினங்களும், தாம் என்னவாக இருக்கின்றனவோ அதையே ‘உயிர்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

இந்த இடைப்பட்ட நிலையை இறையருள் உதவியில்லாது யாரும் அனுபவத்தில் உணர முடியாது. இதை அபிராமிபட்டர் ‘என் ஆவி’ (பாடல் - 7) என்றும், ‘மரணம் பிறவி ரண்டும் எய்தார்’ (பாடல் - 51) என்றும் குறிக்கிறார். அதாவது, அபிராமிபட்டர் வழியில் ஆன்மாக்கள் தனக்கான உடலினுள் வருவதை பிறப்பு என்றும், உடலை விட்டு வெளியில் செல்வதை மரணம் என்றும் கொள்ளலாம். இந்த உயிரானது பல்வேறு உடலை எடுத்துக் கொள்ளும். இதையே மாணிக்கவாசகரும்,

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்ல சுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்றவித தாவர சங்கமத்து
ஏல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே
னெம்பெருமான்’ என்கிறார்.

இந்த அறிவைப் பெறவே உடலோடு உயிர் வந்து ஒன்றுகிறது. அந்த அறிவானது ஆன்மாக்களுக்கு பிறவிதோறும் வளர்கிறது. தொல்காப்பியம் (பொருளதிகாரம் மரபியல்), ‘புல்லும் மரனும் ஒரறிவினவே, நந்தும் மூரளும் ஈரறிவினவே, சிதலும் எறும்பும் மூவறிவினவே, நண்டும் தும்பியும் நான்கறிவினவே, மாவும் புள்ளும் ஐந்தறி வினவே, மக்கள் தாமே ஆறறி வுயிரே’ என்கிறது. இந்த அறிவுக்குத் தடையாக இருப்பது துன்பம் என்றும், அறிவுக்கு உறவாக இருந்து வளர்ப்பது இனியது என்றும் கருதப்படுகிறது. ஆன்மாவிற்கு உறவாக இருந்து இன்பத்தை தருவது அறிவேயாகும். அது பிறவிதோறும்
அறியும் ஆற்றலை அடைகிறது.

‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே (சூடு, குளிர்)
இறண்டறிவதுவே அதனொடு நாவே (சுவை அறிவது)
மூன்றறிவதுவே அவற்றொரு மூக்கே (வாசனை)
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே (வடிவம், வண்ணம்)
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே (ஓசை)
ஆறறி வதுவே அவற்றோடு மனனே (உணர்வு)
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’

இதிலிருந்து ஆன்மாவானது இயல்பாக கண்டு, கேட்டு, தொட்டு, உற்று உணரும் இயல்பு இல்லாதது, எந்தவிதமான இன்பத்தையும் அனுபவிக்க இயலாததாய் இருக்கிறது. அப்படி இயலாத ஆன்மாவானது உடலெடுத்து நீக்குவதால் அந்த அறிவையும் அதனால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் பெற முயல்கிறது. அப்படி பிறவி எடுப்பதனால் ஜனன அவஸ்தையும், இறப்பதால் மரண அவஸ்தையையும், வாழும் போது சுக துக்க அவஸ்தையையும் பெறுகிறது. ஜனன அவஸ்தை என்றால் என்ன? ஒவ்வொரு ஆன்மாவும், ஒரு உடலை தேர்ந்து தாயின் கர்ப்பத்திற்குள் தன் உடலை அமைத்துக் கொள்ள முயலும். அப்படி அமைத்துக் கொள்ள முயல்கிறபோது சில துன்பத்தை அடையும். அதையே கருப்பை ஊறு என்பர்.

இச்சொல்லிற்கு கருப்பையிலே ஆன்மா அடைகின்ற துன்பங்கள் பத்து விதமாகும். அதை பத்து மாதம் வளர்வதாகக் கூறுகின்றார்கள். கருவிலே துன்பமிருப்பதை உணர்த்தவே துர்வாசம் என்று கூறுவர். தூய்மையான ஒருவன் மலக்குழியிலிருந்து உணவருந்துவதை போல மிகுந்த துன்பத்தை தரும். இதை உணர்த்த ஒரு புராணத் தகவலை பார்ப்போம். ருத்திரன் தனக்கு மகனாய் பிறக்க வேண்டும் என்ற ஒருமுறை தவம் இயற்றினாள் அனுசுயா. உடனே ருத்திரன் தேவியை ‘கர்ப்பவாசத்திற்கு என்னை இழுக்காதே. அது துர்வாசம் (வசிப்பதற்கு ஏற்ற இடமல்ல)’ என்றார்.

ஆனால், அனுசுயா வலியுறுத்தவே, ஜடாதாரியாய் அக்கமாலை மிளிரும் திருமேனியுடன் புனித நீற்றொளி திகழும் நெற்றியினராய், ‘தாயே நான் உன் மகன்’ என்று கூறிக் கொண்டு அவள் எதிரில் நின்றார் ருத்திரன். துர்வாசம் என்று சொல்லி அனுசுயையின் எதிரில் வந்ததால் அவருக்கு துர்வாசர் என்று பெயராயிற்று. இந்த வரலாறு சனத்குமார சம்ஹிதையில் உள்ளது. இந்த துர்வாசர் உமையம்மை வழிபாட்டின் மிக சிறந்த குருவாவார். இதையே அபிராமிபட்டர், ‘குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’ (பாடல் - 48) என்று ஜனன அவஸ்தையை தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

மரண அவஸ்தை என்பது உடல் உயிரை விட்டு வெளியில் செல்லும்போது ஏற்படும் சில துன்ப உணர்வுகள். மரணத்தின் சில விளைவுகளை இனி காண்போம். பஞ்ச பூதத்தின் அம்சமான ஆகாயத்தை தவிர பூமியின் தன்மை கொண்ட உணவு செல்லாது. நீரின் பண்பு கொண்ட இரத்தம் உறைந்து விடும். வாயுவின் அம்சமான மூச்சு வெளியேறி விடும். தேயுவின் அம்சமான உடல் குளிர்ந்து விடும். இதையே பட்டினத்தார், ‘பூதமு நாலு சுவாசமு நின்று நெஞ்சுதடு மாறி வரு நேரமே’ என்கிறார். இத்தகைய மாற்றம் உடலில் நிகழும்போது ஆன்மாவிற்கு ஏற்படும் துன்ப உணர்வே இறப்பிடர் எனப்படுகிறது.

இந்த பிறப்பு இறப்பு என்கின்ற துன்பம் நீக்கிக் கொண்ட நிலையில் ஆன்மா அடைகிற ஆனந்தத்தை தான் இனிது என்கின்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். இதை ஆகமங்கள் ஆத்ம ஞானம் என்கின்றன. இது தன்னை உடல், உள்ளம், அறிவு என்று கருதுவோருக்கு ஏற்படாது. தன்னை ஆன்மா என்று அனுபவத்தில் உணர்பவர் மட்டுமே ‘இனிது இனிது ஏகாந்தம் இனிது’ என்ற ஒளவையாரின் உணர்வைப் பெறமுடியும். அபிராமிபட்டர் இந்த உணர்வை பெற்றவர். தன்னை உடலாக அவர் உணரவில்லை என்பதை ‘குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’

(பாடல் - 48) என்பதிலிருந்தும், தன்னை உள்ளமாக அவர் உணரவில்லை என்பதை ‘இழவுற்ற நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே’ (பாடல் - 71) என்பதிலிருந்தும், தன்னை அறிவாகவும் அவர் நினைக்கவில்லை என்பதை ‘அறிவொன்றிலேன்’ (பாடல் - 81) மற்றும் ‘அறிவிழுந்து’ (பாடல் - 94) என்பதிலிருந்தும் அறியலாம். தன்னை அவர் ஆன்மாவாகவே உணர்கிறார் என்பதை ‘ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி’ (பாடல் - 7) என்பதிலிருந்தும், ஆன்மாவானது தான் இழைத்த வினையின் வழியே வேறு ஒரு கூட்டை (ஒரு பிறப்பை) அடைய முற்படும்போது தான் இப்போது இருக்கும் உடலை விட்டு வெளியே செல்ல (இறக்க) முயற்சிக்கும் என்பதை ‘குரம்பை அடித்துக் குடி புக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது’

(பாடல் - 49) என்பதிலிருந்தும் அறியமுடிகிறது. இதை குருவருளாலும், திருவருளாளும் அனுபவத்தில் உணர முடியும். நேரடியாக எந்த ஆன்மாவும் தன் முயற்சியால் உணர முடியாது. ‘உணர்ந்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா’ என்கிறது சைவ சித்தாந்தம். ஆன்மாவாக இருந்தால்தான் பிறப்பையும், இறப்பையும் துன்பமென்று உணர முடியும். தான் உடலாகவோ, உள்ளமாகவோ, அறிவாகவோ இருந்தால் உணர முடியாது. ஆன்மா பிறப்பு, இறப்பை துன்பம் என்று உணரும்போதுதான் ஆத்மானந்தம் என்ற இனிது என்ற இன்பத்தை உணர முடியும்.

(தொடரும்)