குழிக்குள்ளிருந்து பீறிட்ட கங்கை!



தெலுங்கானா - ஜீடிக்கல்

பூர்ணாவதாரமாகப் போற்றப்படும் ஸ்ரீராம அவதாரத்திற்குரிய ஆலயங்கள் இந்தியா முழுவதும் ஏராளமாக உள்ளன. இவற்றில் உத்தரப் பிரதேசத்தில உள்ள  அயோத்யா, ஆந்திர மாநிலம் வொண்டிமிட்ட, தெலங்கானா மாநில பத்ராசலம், தமிழ்நாடு கும்பகோணம்  போன்ற தலங்களில் உள்ள ஸ்ரீராமர் ஆலயங்கள் மிகப்பிரபலமானவை. தெலங்கானா மாநிலத்தில்  பத்ராசலம் போன்றே, அங்குள்ள மற்றொரு பிரபலமான ராமலாயம்,  ஜீடிக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள  வீராச்சல ஸ்ரீராமச்சந்திரஸ்வாமி ஆலயமாகும்.

திரேதாயுகத்தில் ராமபிரான் தன் வனவாச காலத்தின் போது பொன் மானாக வந்த மாரீசனை வதம் செய்த தலம் இது. இறக்கும் தருவாயில் இருந்த மாரீசனின் தாகம் தீர்க்க கங்கைக்கு நிகரான ஒரு  தீர்த்த குண்டத்தை _ராமன் இங்குதான் உருவாக்கினார்.  வீரா என்ற முனிவருக்கு காட்சி தந்து அவர் பெயரால் வீராச்சல ஸ்ரீராமச்சந்திரஸ்வாமி என்ற திருநாமத்தில் இங்கே எழுந்தருளியிருக்கிறார். ஓராண்டில் இரண்டு முறை திருக்கல்யாண உத்சவம் நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

ராமபிரான் தன் வனவாசத்தின்போது  பரத்வாஜ முனிவரின் அறிவுரைக்கேற்ப சித்ரகூடத்தில் மலையவதி ஆற்றின் கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அப்போது மாரீசன் என்ற அசுரன் ராவணனின் ஆணைக்கேற்ப பொன்மானாக சீதாதேவியின் முன் தோன்றியதும், ராமபிரானால் துரத்தப்பட்டு வதம் செய்யப்பட்டதும், அந்த சமயத்தில் ராவணன் சீதாப்பிராட்டியை அபகரித்துச் சென்றதும் ராமாயணச் சம்பவங்கள்.

மாரீசனை ராமபிரான் வதம்செய்த இந்தப் பகுதியே ஜீடிக்கல் என்று தலபுராணம் தெரிவிக்கிறது. ராமபிரான் பொன்மானைத் துரத்திச்சென்று வீழ்த்திய இந்த இடம் ‘லேடி பண்டா’ (தெலுங்கு மொழியில் லேடி என்பது மானையும், பண்டா என்பது பாறையையும் குறிக்கும்) என்று அழைக்கப்படுகிறது. மாரீசனும், சுபாஹுவும் தாடகை என்ற அரக்கியின் புதல்வர்கள். வைகுண்டத்தின் வாயிற்காப்பாளர்களான ஜய-விஜயரிடம் முற்பிறப்பில் சித்திர ரதன் என்ற பெயரில் பணி செய்து வந்த மாரீசன் ஒரு தவறு செய்ய, மஹாவிஷ்ணுவால் பூமியில் அரசுரனாகப் பிறக்குமாறு சபிக்கப்பட்டான்.

இங்கு  ராமபிரானால் சாப விமோசனம் பெற்றான். இறக்கும் தருவாயில் இருந்த மாரீசனிடம் அவனது  கடைசி விருப்பத்தை கேட்டபோது அவன் அவரது பாத தீர்த்தத்தை தனக்கு அனுக்ரஹிக்குமாறு கேட்டுக்கொண்டான். ராமரும் தன் கால் கட்டை விரலால் மாரீசன் படுத்திருந்த பாறையின் மீது அழுத்தினார். அதனால் ஏற்பட்ட ஒரு சிறிய குழியிலிருந்து உடனே கங்கை பெருகியது. உத்தர கங்கை என்ற அந்தப் புனித நீரை அருந்தி மாரீசன் நற்கதி அடைந்தான்.

சிறந்த ராம பக்தரான வீரா என்று அழைக்கப்பட்ட வீரா முனிவர் இப்பகுதியில், ஒரு சிறிய ராம விக்கிரகத்தை வைத்துப் பூஜித்து வந்தார். அவருடைய பக்தியை மெச்சிய ராமபிரான், அந்த விக்கிரகத்தில் தன் சான்னித்தியத்தை செலுத்தியதோடு, முனிவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் பாதுகைகளையும் அவரிடம் தந்தார். கூடவே அங்கு ஒரு புனித குண்டத்தையும் ஏற்படுத்தி, அந்த புனித குண்டத்தில் தினந்தோறும் புனித நீராடி, தன் பாதுகைகளை வழிபட்டு, கலியுகம் முடியும்போது வைகுண்டம் ஏகுமாறும் கூறினாராம். அந்த சிறந்த ராமபக்தரின் நினைவாகவே இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ராமபிரானுக்கு ‘வீராசல ராமச்சந்திரஸ்வாமி’ என்ற திருநாமம் ஏற்பட்டது. 

பத்ரன்  மற்றும் வீரா என்ற இரண்டு ராமபக்தர்கள் தவம் செய்ய ராமபிரான் அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில்  பிரத்யட்சமாகி அருள்புரிந்தார் என்றும் அவர்கள் நினைவாகவே பத்ராசலம் மற்றும் வீராச்சலம் என்ற இந்த புனிதத் தலங்கள் அழைக்கப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஜீடிக்கல் பகுதியை ஆண்டு வந்த சந்திரகுப்தன் என்ற மன்னரின் அரண்மனையில் அவரது உறவினர்களான ஒரு இளைஞனும், பெண்ணும் வளர்ந்து வந்தனர். அந்த  மன்னன்  மீது காஷ்மீர் மன்னனான பீமசேனன் படையெடுத்து வந்தபோது, சந்திரகுப்தன் இறந்துபோக, பீமசேனன் அந்தப் பெண்ணை தன் நாட்டிற்கு அழைத்துகொண்டு தன் மகள் போல வளர்த்து வந்தான்.

அந்த இளைஞனை சந்திரகுப்தனின் அமைச்சர்கள் கண்டுபிடித்து ஓர் அரசகுமாரனாக போற்றி வளர்த்து வந்தனர். பீமசேனன் அந்தப் பெண்ணிற்கு நடத்திய சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த அவனை தன் சகோதரன் என்று அறியாமலே மாலையிட, இப்பாவத்தினால் அவர்கள் இருவரும் தங்களுடைய பொலிவினை இழந்து முந்திரியின் தோல் போன்று (தெலுங்கு மொழியில் ஜீடி என்றால் முந்திரி) கருமை நிறம் கொண்டவர்களாயினர்.  முனிவர்களின் அறிவுரைக்கேற்ப அவர்கள் பாவ நிவாரணம் பெறும் பொருட்டு, தலயாத்திரை மேற்கொண்டார்கள்.

அப்போது இத்தலத்தில் பாறையில்  இருந்த குண்டத்தில் புனித நீராடி ராமரை வழிபட, அவரருளால் அவர்கள் கருமை நிறம் மறைந்து மீண்டும் பழைய பொலிவினைப் பெற்றனராம். பெரிதும் மகிழ்ந்த  அவர்கள் அங்கு ஆலயம் கட்ட முனைந்தபோது, ராமபிரான் அவர்கள் கனவில் தோன்றி, தனக்கு ஆலயம் வேண்டாம் என்றும், இங்குள்ள குண்டத்தில் நீராடி தன்னை வணங்கினாலே பக்தர்களின் பாவங்கள் விலகும் என்றும் கூறினாராம். அவர்களது நினைவாக இந்தக் குண்டம் ஜீடி குண்டம் எனப்பட்டதோடு, இத்தலத்திற்கும் ஜீடிக்கல் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இப்பகுதியில் ஜீடி மரங்கள் நிறைந்திருந்ததாலும்  ஜீடிக்கல் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

வண்ணம் தீட்டப்பட்ட மூன்று நிலை கொண்ட சிறிய ராஜகோபுரம், பலிபீடம், 45 அடி உயர கொடிமரத்தை  அடுத்து கருவறையை  நோக்கிய அனுமன் சந்நதியோடு இந்த ஆலயம் அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு தென்புறம் கைகூப்பிய தாச ஆஞ்சநேயர் மற்றும் கையை உயர்த்திய பிரசன்ன ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் உள்ளன. கருவறை எதிரில் உள்ள அனுமன் சந்நதியின் வெளியே, கோரிக்கைகள் நிறைவேற வேண்டி பக்தர்கள் செந்நிறத் துணியில் தேங்காய் வைத்து கட்டுகின்றனர். இதை முடுபு கட்டுதல் என்கின்றனர். கோரிக்கை இறையருளால் நிறைவேறியவுடன் அதை எடுத்து விடுகின்றனர். ஆலய வளாகத்தில் நவகிரக சந்நதியும், ஒரே கல்லில் வடிக்கப்பட்ட ஆழ்வார்கள் சந்நதியும் உள்ளன.

வீரா முனிவருக்கு ராமபிரான் ஓர் அகன்ற பாறையின்மீது அமைத்துக் கொடுத்த குண்டத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி சுவர்கள் எழுப்பி விசாலமான கருவறையை அமைத்துள்ளார்கள். கருவறை நுழைவாயிலில் துவாரபாலர்கள் உள்ளனர். க்ஷீர குண்டம் என்று அழைக்கப்படும் நாற்பது அடி ஆழமான இந்தக் குண்டத்தின் அடியில் ராமபாதுகைகள்  வைக்கப்பட்டுள்ளன. ராமபிரானின் திருமஞ்சனத்திற்காக இந்தத் தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. காலங்காலமாக இந்தக் குளத்தின் நீர் மட்டம் கூடுவதுமில்லை குறைவதுமில்லை என்பது ஒரு சிறப்பாகும்.

ஆலயத்திற்கு அருகில் உள்ள படர்ந்த பாறையில் ஏற்பட்டுள்ள  சிறிய பள்ளங்கள் பொன்மானாக வந்த மாரீசனின் குளம்புகளால் ஏற்பட்டவை என்று பக்தர்கள் நம்புகின்றனர். இவற்றை பக்தர்கள் அடையாளம் கண்டு கொள்ள, சுற்றிலும் வெள்ளைநிறக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. ஒரு குழி எப்போதும் நீரின்றி காய்ந்து காணப்பட்டாலும், பக்தர்கள் ஒரு கைக்குட்டையை அந்தக் குழியில் வைத்து அழுத்தி எடுக்க அது ஈரமாக மாறுகிறது! இதன் அருகில் மோட்ச குண்டம் என்ற மற்றொரு திருக்குளம் உள்ளது.

ராமபிரான் மாரீச வதம் முடித்த பின்னர் தன்னுடைய வில்லை இந்தக் குண்டத்தில் சுத்தம் செய்தார். இங்கிருந்து சற்றுத் தொலைவில் ஒரு பாறையின் மீது ராமேஷ்வர் என்ற பெயரில் முக மண்டபமும், சாட்சி கணபதியோடு சிவாலயமும் உள்ளன. இங்கும் சிவபெருமானுக்கு முன்பாக குண்டம் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் இந்த ஜீடிக்கல் தலத்தில் ஒரு பிரபலமான வேதபாடசாலை இருந்திருக்கிறது. இத்தலம் பத்ராசலம் ஆலயத்தைக் காட்டிலும் பிரபலமானதாகத் திகழ்ந்த அக்காலத்தில் இந்த ஜீடிக்கல் கிராமத்தைச் சுற்றிலும், லிங்காலா கன்பூர் வட்டத்தில் 170 ஏக்கரும், குண்டூர் மாவட்டத்தில் 12 ஏக்கர் விளை நிலங்களும், இந்த ஆலயத்திற்கு நிவந்தமாக அளிக்கப்பட்டன என்பதை இங்குள்ள சாசனங்கள் மூலம் அறிகிறோம்.

ஆலயம் மிகவும் செழிப்பாக இருந்தபோது ஐம்பது அர்ச்சர்கர்கள் பணியாற்றியதாகவும், தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார் எனவும் கூறுகின்றனர். ஒருகாலத்தில் இந்த ஆலயத்திலிருந்து யாதகிரி குட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டதாம். 170 ஏக்கர் விளை நிலங்களோடு செல்வச் செழிப்பாக இருந்த ஆலயம், பின்னாட்களில் நிலங்களிலிருந்து வருமானமின்றி மிகவும் நலிந்து போய், ஆலயத்தின் வருமானமும் பெரிதும் குறைந்துவிட்டது. சமீப ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருள் உதவியோடு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜீடிக்கல் ராமச்சந்திரஸ்வாமி ஆலயம் மீண்டும் புதிய பொலிவினைப் பெற்றிருப்பதும், கோயிலுக்கான வருமானமும் பலமடங்கு உயர்ந்திருப்பதும் இந்த ராமபிரானின் அருளே என்று பக்தர்கள் நெகிழ்கிறார்கள்.

பொதுவாக ராமபிரான் ஆலயங்களில், ராமநவமி உற்சவத்தின் போது, ராமநவமி அன்று மட்டுமே சீதா-ராம திருக்கல்யாணம் கொண்டாப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில், ஸ்ரீராமநவமி அன்றும், அடுத்து கார்த்திகை மாத பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையில் வரும் புனர்பூச நட்சத்திரத்தன்றும் இருமுறை திருக்கல்யாணம் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இவ்வாண்டு, 25.3.2018 ஞாயிறு அன்றும் அதேபோல பக்தர்கள் குழுமவிருக்கிறார்கள்.

இந்தத் திருக்கல்யாண உற்சவத்திற்காக தலம்பராலு என்ற மங்கள அட்சதை தயாரிக்கப்படும் அதேநேரத்தில் ஆலய மடப்பள்ளியில் உள்ள அரிசி எல்லாமும் மஞ்சள் நிற மங்கள அட்சதையாக மாறிவிடுவதாக வியப்புடன் கூறுகின்றனர். புது வாகனத்துக்கான பூஜை, அட்சராப்யாசம், முடிகாணிக்கை, அன்னபிராசனம் போன்ற சடங்குகளை இந்த ஆலயத்தில் பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலிருந்து 145 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான வரங்கல்லிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும்  ஜீடிக்கல் கிராமம் உள்ளது. ஜீடிக்கல் வீராசல ராமச்சந்திரஸ்வாமி ஆலயம்  காலை 6 முதல் 12மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்