அனந்தனுக்கு 1000 நாமங்கள்!



31. ஸம்பவாய நம: (Sambhavaaya namaha)
ஹைதராபாத், செகந்தராபாத் நகரங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும் ஒஸ்மான் சாகர் ஏரிக் கரையில் அழகிய சோலைகள் நிறைந்த ‘சிலுக்கூர்’ என்னும் கிராமம் அமைந்துள்ளது. திராட்சைத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற ஊராக அது விளங்குகிறது. பல்லாண்டுகளுக்கு முன் அவ்வூரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவர் திருவேங்கடமுடையானின் பரம பக்தர். வயலை உழும்போது “ஏழுமலையானே!” என்றும், வயலில் நெல் விதைக்கும் போது “கோவிந்தா!” என்றும், களையெடுக்கையில் “பாலாஜி!” என்றும் நீர்ப்பாய்ச்சும் போது “வேங்கடேச்வரா!” என்றும் திருமாலின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே விவசாயம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் தன் வயலில் விளையும் தானியங்களில் ஒரு பகுதியைத்
திருமலையப்பனுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வருடங்கள் பல கடந்தன. அவரது முதுமையோடு சேர்ந்து அவரது பக்தியும் அதிகரித்தது. அறுவடைக் காலம் நெருங்கியது. ஊன்று கோலுடன் சென்று நன்கு விளைந்திருந்த தன் வயலைப் பார்வையிட்டார். “இந்த வருட அறுவடை முடிந்ததும் முன்புபோல ஏழுமலையானுக்கு வந்து காணிக்கை செலுத்த முடியாது போலிருக்கிறதே! என் நடை தளர்ந்து விட்டதே! என் உடல் சோர்ந்து விட்டதே! நான் என்ன செய்வேன்?” என்று அழுது புலம்பினார்.
 
“என் அப்பன் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாணம் கண்டருளும் அந்தக் காட்சியைக் காணாமல் என்னால் எப்படி உயிர்வாழ முடியும்?” என்று ஏங்கினார். இப்படி ஏக்கத்தோடும் கண்ணீரோடும் பல நாட்கள் உணவும் உறக்கமும் இன்றித் தவித்தார். அதனால் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. ஒருநாள் காலை, “குழந்தாய், எழுந்திரு!” என்ற ஒரு ஒலியைக் கேட்டார். கண்விழித்துப் பார்த்தால் ஒளிமிக்க உருவம் ஒன்று அவர் முன்னே நின்றுகொண்டிருந்தது. வந்திருப்பவன் திருவேங்கடமுடையானே என்று அவர் உணர்ந்து கொண்டார்.

“நீ எதற்காக என்னைத் தேடி வர வேண்டும்? நான் உன்னைத் தேடி வந்துவிட்டேன். உன் வயலுக்கு அருகாமையில் உள்ள சிவலிங்கத்துக்குப் பக்கத்தில் ஒரு பாம்பு புற்று உள்ளது. அந்தப் புற்றுக்குள் நான் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேர்ந்து ஒரே விக்கிரகத்தில் எழுந்தருளியுள்ளேன். என்னை வெளியே எடுத்து எனக்குக் கோயில் அமைத்து நீ தினமும் தரிசனம் செய்யலாம்!” என்றான் எம்பெருமான்.

உடனே எழுந்தோடிய அந்த விவசாயி, ஊர்மக்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் புற்று இருக்கும் இடத்துக்குச் சென்றார். கடப்பாறையால் அந்தப் புற்றைத் தகர்த்தபோது, புற்றுக்குள்ளிருந்து ரத்தம் பெருகி வருவதைக் கண்டார்கள். கடப்பாறை உள்ளிருக்கும் பெருமாள்மேல் பட்டதால் ரத்தம் வருகிறது என உணர்ந்த அவர்கள், பெருமாளைச் சாந்தப் படுத்தப் புற்றுக்குள் பால் ஊற்றினார்கள்.

அப்போது புற்றுக்குள்ளிருந்து திருமலையப்பனின் விக்கிரகம் அவர்களுக்குக் கிடைத்தது. அவன் திருவடிவாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியும் எழுந்தருளியிருந்தார்கள். அவனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள். இன்றும் தெலங்கானா ரெங்கரெட்டி மாவட்டத்திலுள்ள சிலுக்கூரில் அந்த பாலாஜி கோயில் உள்ளது. இப்போது அந்தப் பெருமாள் ‘விஸா பாலாஜி’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். ஏனெனில் அவரை வந்து தரிசிக்கும் அடியார்களுக்கு விரைவில் வெளிநாட்டில் வேலை கிடைத்து விடுகிறதாம். அதனால் விஸா பெற்றுத் தரும் விஸா பாலாஜி என்று அன்பர்கள் அவரை அன்புடன் அழைக்கிறார்கள்.

திரேதா யுகத்தில் ராமனாகவும், துவாபர யுகத்தில் கண்ணனாகவும் வந்த இறைவன், கலியுகத்தில் பாலாஜியாக வந்து அடியார்களைக் காக்கிறான். இவ்வாறு யுகம்தோறும் தன் அடியார்களுக்கு அருள்புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில் எம்பெருமான் அவதரிப்பதால் அவன் ‘ஸம்பவ:’ என்றழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 31-வது திருநாமம். “ஸம்பவாய நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களின் மேல் சிலுக்கூர் விஸா பாலாஜி பெருமாள் தன் அருள்பார்வையைச் செலுத்துவார்.

32. பாவநாய நம: (Bhaavanaaya namaha)
சேனா நாவிதர் என்ற முடிதிருத்தும் தொழிலாளி, அவந்தி எனும் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் பாண்டுரங்கனின் தீவிர பக்தர். ஒருநாள் மாலை அவரது இல்லத்துக்கு அரண்மனையில் இருந்து சில காவலாளிகள் வந்தார்கள். “மன்னருக்கு நாளை காலை முடி திருத்தவேண்டும்! சரியாக எட்டு மணிக்கு வந்துவிடு!” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அடுத்தநாள் அதிகாலை நீராடி விட்டுத் தன் இஷ்டதெய்வமான பாண்டுரங்கனைத் தியானிக்கத் தொடங்கினார் சேனா. தியானத்தில் ஈடுபட்ட அவர், மன்னரின் அழைப்பு உத்தரவை மறந்துவிட்டார்.

சேனாவின் வரவுக்காகக் காத்திருந்த மன்னருக்குக் கோபம் வந்து விட்டது. “எட்டு மணிக்கு வரச் சொன்னால் ஏழரை மணிக்கே வந்து அவன் எனக்காகக் காத்திருக்க வேண்டாமா? முடிதிருத்துபவனுக்காக மன்னன் காத்திருக்க முடியுமா?” என்று கேட்டார். காவலாளிகள் சேனாவின் வீட்டுக்கு விரைந்தனர். சேனாவின் மனைவிக்குத் தன் கணவனின் தியானத்தைக் கலைக்க மனமில்லை. அதனால் காவலாளிகளிடம், “அவர் வீட்டில் இல்லை. அவர் வந்ததும் நான் அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறேன்!” என்று கூறினாள்.

காவலாளிகள் சேனாவின் உறவினரான கூனா நாவிதரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார்கள். மன்னரிடம், “சேனாவைக் காணவில்லை. எங்கு சென்றிருக்கிறான் என்றும் அவன் மனைவிக்குத் தெரியவில்லை. அவனுக்குப் பதிலாக இந்தக் கூனாவை அழைத்து வந்திருக்கிறோம். இவனும் நன்றாக முடி திருத்துவான்!” என்றார்கள். மன்னனின் கோபம் அதிகரித்தது. “அந்தச் சேனாவுக்கு அப்படி என்ன அலட்சியம்? மன்னன் சொல்லி அனுப்பியும் அவன் வரவில்லை. முதலில் அந்தச் சேனாவின் தலையை வெட்டுகிறேன்! அதற்குப்பின் இந்தக் கூனாவிடம் முடி திருத்திக் கொள்வதா வேண்டாமா என முடிவு செய்கிறேன்!” என்றான் மன்னன்.

அடுத்த நொடி, தன் பெட்டியுடன் சேனா அரண்மனைக்குள் வருவதைக் கண்டான் மன்னன். “மன்னா! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று மன்னனிடம் வந்து பணிந்தார் சேனா. “சரி, சரி, விரைவாகப் பணியை முடி!” என்றான் மன்னன். சேனாநாவிதர் மன்னனின் முகத்தில் நீர்மத்தைப் பூசினார். அந்த நீர்மத்தின் வாசனை மன்னனை மெய்சிலிர்க்க வைத்தது. சேனா தன் கைகளால் மன்னனின் முகத்தைத் தொட்டபோது மன்னனுக்கு ஒரு தெய்வீக ஆனந்தம் ஏற்பட்டது. எதிரே வைத்திருந்த நீர்ப் பாத்திரத்தில் ஒரு அழகிய சிறுவனின் முகத்தைக் கண்டான் மன்னன்.

அந்தச் சிறுவன் கருநீல வண்ணம் கொண்டவனாக, கையில் புல்லாங்குழலோடு, இடையில் பட்டுப் பீதாம்பரம் அணிந்திருந்தான். இக்காட்சியைக் கண்ட மன்னனுக்குத் தான் வானில் பறப்பது போலத் தோன்றியது. பணி முடித்ததும் சேனாவை ஆரத் தழுவிக் கொண்டான் மன்னன். அவனை அனுப்பவே மனமில்லாமல் ஐந்து பொற்காசுகளைத் தந்து பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தான். சிறிது நேரத்தில் சேனா அரண்மனைக்கு ஓடி வந்தார். மன்னனின் கால்களில் விழுந்து, “மன்னா! என்னை மன்னித்து விடுங்கள்...” என்று புலம்பத் தொடங்கியவர், மன்னனின் முகம் முழுமையாக முடிநீக்கப்பட்டிருப்பதைக் கண்டார். “எனக்குப் பதில் வேறு யாராவது வந்தார்களா?” என்று கேட்டார்.

“என்ன சொல்கிறாய்? நீதானே மிகவும் சிறப்பான முறையில் எனக்கு ஒப்பனை செய்தாய். உனக்குத் தந்த ஐந்து பொற்காசுகள் போதாது. மேலும் ஐந்து பொற்காசுகள் தரலாம் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நீயே வந்துவிட்டாய்!” என்று ஆசையுடன் சொன்னான் மன்னன். நடந்தது என்னவென்று சேனாவுக்கு விளங்கிவிட்டது. இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். பாண்டுரங்கனே சேனா நாவிதரின் வடிவில் வந்து தன் முகத்தைப் பொலிய வைத்துள்ளான் என மன்னனும் புரிந்து கொண்டான். பூரிப்படைந்தான்.

தன் பக்தனின் தியானம் கலையாதிருக்க, தானே அந்த பக்தனின் வடிவில் தோன்றினான் எம்பெருமான். இவ்வாறு தன் அடியார்களுக்கு நேரும் துன்பங்களிலிருந்து அவர்களைக் காக்கப் பல வடிவங்கள் எடுத்துக் கொண்டு வருவதால் ‘பாவ:’ என்றழைக்கப்படுகிறான் எம்பெருமான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 32-வது திருநாமம். “பாவாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், ஏதோ ஒரு வடிவில் வந்து நம்மையும் இறைவன் காத்தருள்வான்.

33. பர்த்ரே நம: (Bharthre namaha)
ஏகநாதர் என்னும் மகான் பைத்தானிபுரம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக ஒரு சீடன் தொண்டு செய்து வந்தான். ஒருநாள் ஏகநாதர், தன் சீடனான  கண்டியனுடன் சேர்ந்து தன் தந்தையின் சிராத்தத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அன்று சிராத்தத்தில் உண்ண வரும் அந்தணர்களுக்காக ஒரு பலாப்பழம் வாங்கிவரும்படி சாம்பன் என்பவரிடம் சொல்லியிருந்தார் ஏகநாதர். வெகுநேரமாகியும் சாம்பன் வராததால், அவனுடைய வீட்டுக்கே சென்றார் ஏகநாதர்.

சாம்பனின் வீட்டில் அவரது குழந்தைகள், “அப்பா! அந்த அந்தணரின் வீட்டருகே நாங்கள் சென்று முகர்ந்து பார்த்தோம். உள்ளே சமைக்கப்படும் உணவுகள் அவ்வளவு நறுமணம் வீசுகின்றன. அந்த உணவையெல்லாம் சுவைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது!” என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். “நாம் அதை உண்ண முடியாதப்பா! அவர்கள் தான் உண்பார்கள்!” என்றார் சாம்பன். ஏகநாதரின் கண்கள் கலங்கின.

வறுமையின் வாட்டம் தோய்ந்த அந்த பிஞ்சுக் குழந்தைகளின் முகங்களைக் கண்ட அவர், “சாம்பனின் குழந்தைகள் ஏற்கெனவே உணவை முகர்ந்து பார்த்து விட்டதாகச் சொல்கிறார்கள். பிறர் முகர்ந்த உணவைப் பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. அந்த உணவை இந்த சாம்பனுக்கும் அவன் குழந்தைகளுக்கும் வழங்கிவிட்டால், அவர்கள் உண்பதையாவது கண்ணாரக் கண்டு மகிழலாமே!” என்றெண்ணினார். அதனால் தன் சீடன் கண்டியனை அழைத்து அதுவரை சமைத்த உணவையெல்லாம் சாம்பனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் வழங்கச் சொல்லிவிட்டார். அந்தக் குழந்தைகள் உண்பதைக் கண்ட ஏகநாதருக்குப் பாண்டுரங்கனே உண்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது.

பீமநதியில் நீராடிவிட்டு, மீண்டும் சீடருடன் உணவுகளைச் சமைக்கத் தொடங்கினார் ஏகநாதர். ஏற்பாடுகள் பூர்த்தியானவுடன், அந்தணர்களை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர்களோ, “பித்ருக்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவைத் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தந்துவிட்டாய்! எனவே உன் வீட்டில் இனி நாங்கள் உணவு உண்ண மாட்டோம்!” என்று சொல்லி ஏகநாதரை ஊரை விட்டுத் தள்ளிவைத்தார்கள். ஏகநாதர் செய்வதறியாமல் திகைத்தபோது கண்டியன், “நம் பாண்டுரங்கன் இருக்க என்ன பயம்?” என்றான். பாண்டுரங்கனை ஏகநாதர் தியானித்தார். அடுத்தநொடி, பாண்டுரங்கன் கருடனையும் அநுமனையும் அழைத்துக் கொண்டு ஏகநாதரின் வீட்டுக்குள் வந்துவிட்டான். மூவரும் உணவு உண்டார்கள். சிராத்தம் வெகு சிறப்பாக நிறைவடைந்தது.

ஆனாலும் ஊரிலுள்ள அந்தணர்கள் ஏகநாதரை ஊரைவிட்டுத் தள்ளியே வைத்திருந்தார்கள். “நீ காசிக்குப் போய் கங்கையில் நீராடினால் தான் உன்னை ஊருக்குள் சேர்ப்போம்!” என்றார்கள். அவ்வந்தணர்களையும் கண்டியனையும் அழைத்துக் கொண்டு காசியாத்திரை புறப்பட்டார் ஏகநாதர். கங்கையில் நீராடுவதற்காக அவர் இறங்கிய போது ஒருவர் எதிரே வந்து, “ஸ்வாமி! நீங்கள் தான் ஏகநாதரா?” என்று கேட்டார். “ஆம்!” என்றார் ஏகநாதர். “நான் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நோயிலிருந்து என்னைக் காக்கவேண்டும் என்று பாண்டுரங்கனிடம் வேண்டினேன்.

ஏகநாதர் என்ற பெரிய மகான் பைத்தானிபுரத்திலிருந்து காசிக்கு வருவார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவளித்து அதனால் பெரும் புண்ணியத்தை ஈட்டியுள்ளார். அந்தப் புண்ணியத்திலிருந்து கால் பகுதியை நீ பெற்றாலே உன் தொழுநோய் தீர்ந்துவிடும் என்று இறைவன் சொன்னான். அந்தப் புண்ணியத்தின் கால் பகுதியை எனக்குத் தருவீர்களா?” என்று வேண்டினார். “நான் செய்ததைப் பாவம் என்று என்னோடு இருப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது புண்ணியம் என்று அவர்களின் காதில் விழும்படி நீ சொன்னதற்கு நன்றி.

கால்பகுதி என்ன? முழு புண்ணியத்தையும் உனக்கே தருகிறேன்!” என்று சொல்லி அவரிடம் ஏகநாதர் வழங்கவே அவரது தொழுநோய் குணமானது. இதைக் கண்ட ஊர்ப் பெரியவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வெட்கித்  தலைகுனிந்தனர். வருடங்கள் பல கடந்தன. பண்டரிபுரத்திலுள்ள பாண்டுரங்கனின் திருமேனியில் தேஜஸ் குறைந்து கொண்டே வருவதை ஒரு பண்டிதர் கண்டார். அதன் காரணத்தை அறிய விரும்பிப் பண்டரிபுரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

உண்ணாவிரதம் இருந்தவரின் கனவில் தோன்றிய ருக்மிணி தேவி, “பண்டிதரே! பாண்டுரங்கன் இப்போது இங்கே இல்லை. அவரது விக்கிரகம் மட்டும்தான் உள்ளது. அவர் பைத்தானிபுரத்தில் உள்ள ஏகநாதரின் வீட்டில் அவரது சீடனாக உள்ளார். அதனால்தான் கோயிலிலுள்ள அவர் திருமேனியில் தேஜஸ் குறைந்துவிட்டது. எப்படியாவது இறைவனை மீண்டும் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்!” என்றாள்.

ஏகநாதரின் இல்லத்துக்குச் சென்ற பண்டிதர், அந்தச் கண்டியனைக் கண்டறிந்து அவன் கால்களில் விழுந்து, “பாண்டுரங்கா! போதும் உன் நாடகம்! தயவுசெய்து கோயிலுக்கு வந்துவிடு!” என்று மன்றாடினார். உடனே கண்டியன் ஏகநாதரின் பூஜையறைக்குள் ஓடிப்போய் மறைந்தான். பண்டரிபுரக் கோயிலிலுள்ள தன் திருமேனியோடு ஐக்கியமானான். தன்னை விட்டுப் பிரிந்திருக்க முடியாமல், கோயிலையே விட்டுவிட்டுச் சீடனாக வந்து தன்னோடு இறைவன் உறவாடித் தனக்குப் பணிவிடைகளும் செய்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தார் ஏகநாதர்.

இவ்வாறு தன் அடியார்களுக்கு வசப்பட்டு, காந்தத்துடன் இரும்பு ஒட்டிக் கொள்வது போல அடியார்களை விட்டுப் பிரியாதிருக்கும் எம்பெருமான் ‘பர்தா’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 33-வது திருநாமம். “பர்த்ரே நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களை இறைவன் என்றும் விட்டுப் பிரியவே மாட்டான்.

34. ப்ரபவாய நம: (Prabhavaaya namaha)
தன் ஒன்றுவிட்ட சகோதரியான தேவகிமீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தான் கம்சன். அவளுக்கு வசுதேவருடன் திருமணம் நடத்திவைத்து, அவர்களைத் தேரில் அமரவைத்துத் தானே தேரை ஓட்டினான். அப்போது வானிலிருந்து, “ஏ முட்டாளே!” என்று ஓர் அசரீரி ஒலித்தது. “யார் என்னை அழைத்தது?” என்று மேலே பார்த்தான் கம்சன். “நீ யாருக்குத் தேரோட்டிக் கொண்டிருக்கிறாயோ அவளுக்குப் பிறக்கப்போகின்ற எட்டாவது மகன்தான் உனக்கு யமன்!” என்றது அசரீரி. அதிர்ந்து போன கம்சன், தேவகியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அவளை வெட்டப்போனான்.

அப்போது வசுதேவர் அவனைத் தடுத்தார். “எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையால் தானே உனக்கு ஆபத்து என்கிறது இந்த அசரீரி. இந்தப் பெண்ணால் உனக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லையே. தயவுசெய்து இவளை விட்டுவிடு! எங்களுக்குப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன்!” என்றார். “சரி! குழந்தைகளை என்னிடம் ஒப்படைத்துவிடு!” என்ற கம்சன், “ஊர்வலம் தொடரட்டும்!” என்றான். புதுமணத் தம்பதிகளை ஒரு புதிய அரண்மனையில் தங்கவைத்தான்.

ஒரு வருடம் கழித்து முதல் குழந்தை பிறந்தது. அதை வசுதேவர் கம்சனிடம் ஒப்படைத்த போது, “இந்தக் குழந்தையால் எனக்கு ஆபத்து இல்லையே! எட்டாவது குழந்தை பிறக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்!” என்றான். ஆனால், நாரதர் அங்கே வந்து, “கம்சா! அசரீரி உன்னை முட்டாள் என்று கூறியது சரிதான். அது எட்டாவது குழந்தை என்று சொன்னது. ஆனால், முதலிலிருந்து எட்டாவது குழந்தையா அல்லது கடைசியிலிருந்து எட்டாவது குழந்தையா என்று சொல்லவில்லையே. அதனால் எல்லாக் குழந்தைகளையும் கொல்வது தான் உனக்கு நல்லது!” என்றார். அந்தக் குழந்தையைக் கொன்ற கம்சன், வசுதேவர்-தேவகியைச் சிறையிலடைத்தான்.

சிறையில் பிறந்த அடுத்த ஐந்து குழந்தைகளையும் கொன்றான் கம்சன். தேவகியின் வயிற்றிலிருந்த ஏழாவது குழந்தையை எம்பெருமானின் உத்தரவுப்படி துர்காதேவி கோகுலத்திலுள்ள வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றினாள். அந்தக் குழந்தை தான் பலராமன். தேவகி எட்டாவது முறையாகக் கருவுற்றாள். திருமாலே அவளது கர்ப்பத்துக்குள் நுழைந்தார். தன்னைக் கொல்பவன் பிறக்கப்போகிறான் என உணர்ந்துகொண்ட கம்சன் சிறைக்காவலை மேலும் கடுமையாக்கினான்.

ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் வானில் பிரம்மா, சிவன், விநாயகர், முருகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தோன்றி தேவகியைப் போற்றினார்கள். தேவகியின் கருவிலிருந்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நான்கு திருக்கரங்களோடும், சங்கு-சக்கரத்தோடும், திருமார்பில் மகாலட்சுமியோடும், உந்தித்தாமரையில் பிரம்மாவோடும், இடையில் பட்டுப்பீதாம்பரத்தோடும், திருவடிகளில் தங்கப் பாதுகைகளோடும் விளங்கியது. அது பிறந்த அடுத்த நொடி, வசுதேவர்-தேவகி கையிலிருந்த விலங்குகள் எல்லாம் அறுந்து கீழே விழுந்தன.

தேவகி, “நீ ஏன் சாதாரண குழந்தைகளைப் போல இரு கைகளுடன் பிறக்காமல் நான்கு கைகளுடன் பிறந்தாய்? கம்சன் இதைக்கொண்டே நீ நாராயணனே என்று எளிதில் கண்டுபிடித்து விடுவானே!” என்று பயத்துடன் கேட்டாள். உடனே தன்னுடைய கூடுதல் இரண்டு கைகளை மறைத்துவிட்டு இரண்டு கைகளுக்கு மாறியது அக்குழந்தை. வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக் கோகுலத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறைக்கதவு தானே திறந்தது.

யமுனாநதி தானே வழிவிட்டது. இப்படிக் கண்ணபிரானுடைய அவதாரமே மிகவும் சிறப்பானது. வேறெந்தக் குழந்தையின் தாயையாவது தேவர்கள் துதிசெய்ததுண்டா? வேறெந்தக் குழந்தையாவது தெய்வத்துக்குரிய லட்சணங்களுடன் பிறந்ததுண்டா? வேறெந்தக் குழந்தையாவது பிறந்தவுடனேயே பெற்றோர்களின் விலங்குகளை அறுத்ததுண்டா? வேறெந்தக் குழந்தையாவது தன் தந்தையைத் தண்ணீரின்மேல் நடக்க வைத்ததுண்டா? கண்ணனின் அவதாரத்துக்கு மட்டும் ஏன் இத்தனைச் சிறப்புகள்?

ஏனெனில் நாமெல்லாம் கர்மவினையால் பிறக்கிறோம். அவனோ கருணையால் அவதரிக்கிறான். நம் உடல் ஐம்பூதங்களால் ஆனது. அவனது திருமேனியோ சுத்தசத்துவமயமானது. இவ்வாறு எம்பெருமான் பிறப்பதன் உயர்த்தியை எண்ணி நம்மாழ்வார் திருவாய்மொழியில் “பிறந்தவாறும் வளர்ந்தவாறும்...” என்று பாடத் தொடங்கி அப்படியே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். மூர்ச்சை தெளிந்து எழுவதற்கு ஆறு மாதங்கள் ஆயின. ஆறு மாதங்களுக்குப்பின் எழுந்து மீண்டும் கண்ணனின் லீலைகளைப் பாடினார்.

எனவே பிற மனிதர்கள், தேவர்கள் முதலியோரைக் காட்டிலும் வேறுபட்டதான, சிறப்பான, உயர்ந்ததான பிறப்பை எம்பெருமான் தன் கருணையால் எடுப்பதால் அவன் ‘ப்ரபவ:’ என்று அழைக்கப்படுகிறான். அதனால் தான் 60 வருடங்களில் முதல் வருடத்துக்கு ‘ப்ரபவ’ என்று நம் முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள். ‘ப்ரபவ’ என்றால் உயர்ந்த பிறப்பு என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 34-வது திருநாமம். “ப்ரபவாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மையும் வாழ்வில் எம்பெருமான் உயர்த்துவான்.

35. ப்ரபவே நம: (Prabhave namaha)
வசுதேவரின் சகோதரியான ச்ருதச்ரவா, சேதிதேசத்து மன்னன் தர்மகோஷனை மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தான் சிசுபாலன். சனகாதிமுனிவரின் சாபத்தால் வைகுந்தத்தின் வாயில் காப்பாளர்களான ஜய-விஜயர்களே ஹிரண்யகசிபு-ஹிரண்யாக்ஷனாகவும், ராவணன்-கும்பகர்ணனாகவும், சிசுபாலன் -தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள். இதில் சிசுபாலனின் பிறப்பு அதிசயமானது. பிறக்கும்போதே நான்கு கைகளோடும் மூன்று கண்களோடும் பிறந்தான். திருமால்-சிவன் இருவரின் ஒருங்கிணைந்த அம்சமாகத் தனக்குக் குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் ச்ருதச்ரவா.

அச்சமயம் வானில் ஓர் அசரீரி ஒலித்தது: “யார் இந்தக் குழந்தையைத் தூக்கும்போது, இக்குழந்தையின் கூடுதல் இரு கைகளும், மூன்றாவது கண்ணும் மறைகின்றனவோ, அவரால் தான் இக்குழந்தைக்கு மரணம் ஏற்படும்!” இதைக் கேள்வியுற்ற அனைவருமே அந்தக் குழந்தையை நெருங்க அஞ்சினார்கள். கண்ணனும், பலராமனும் தங்களின் அத்தை ச்ருதச்ரவாவைக் காணச்சென்றபோது, கண்ணன் “அத்தானே!” என்றபடி ஆசையுடன் சிசுபாலனைத் தூக்கிக் கொஞ்சினான். சிசுபாலனின் கூடுதல் இரண்டு கைகளும் மூன்றாவது கண்ணும் மறைந்துவிட்டன.

“ஐயோ!” என்றாள் ச்ருதச்ரவா. “கண்ணா! என் மகனை நீயா கொல்லப்போகிறாய்?” என்று கேட்டாள். “அவன் ஒழுங்காக இருந்தால் நான் ஏன் கொல்லப் போகிறேன்? தவறு செய்தால் கொல்லுவேன். அதிலும் உங்களுக்காக ஒரு சலுகை தருகிறேன். ஒரு நாளைக்கு அவன் தொண்ணுற்றொன்பது தவறுகள் வரை செய்யலாம். உங்களுக்காக நான் அவற்றைப் பொறுத்துக் கொள்கிறேன்!” என்றான் கண்ணன். சிசுபாலன் கிருஷ்ண துவேஷியாக வளர்ந்தான். தினமும் கண்ணனைக் கீழ்மை வசவுகளால் ஏசினான். ஆனால், வசவுகளின் எண்ணிக்கை ஒருநாளைக்குத் தொண்ணூற்றொன்பது முறைக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வான்.

பாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்தபோது, கண்ணனுக்கு முதல்பூஜை செய்தார்கள். அதைக் கண்ட சிசுபாலனுக்குக் கோபம் தலைக்குமேல் ஏறியது. நூறாவது தவறு செய்தால் கண்ணன் தன்னைக் கொல்வான் என்பதைக் கூட ஆத்திரத்தில் மறந்துபோய்ச் சுடுசொற்களால் கண்ணனை ஏசத் தொடங்கினான். அங்கிருந்தவர்கள் எல்லோரும் கொதித்துப் போனார்கள். ஆனால், கண்ணன் சிரித்தபடியே சிசுபாலன் எத்தனை முறை தன்னை ஏசுகிறான் என்று கணக்கிட்டுக்கொண்டே இருந்தான். எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது.

உடனே கண்ணன் எழுந்து, “பெரியோர்களே! நான் நரகாசுரனுடன் போரிடச் சென்றபோது, என் பாட்டனார் உக்கிரசேனரைச் சிறைப்பிடித்து வைத்தவன் இந்த சிசுபாலன். என் தந்தை வசுதேவர் அசுவமேத யாகம் செய்தபோது, குதிரையை மறைத்துவைத்தான். தன் சொந்த மாமனான பப்ருவின் மனைவியிடமே தவறாக நடக்க முயன்றான். என்னைக் காதலித்த ருக்மிணியைப் பலவந்தமாகத் திருமணம் செய்ய எண்ணினான். ஆனால், நான் இவன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக இத்தனைத் தவறுகளையும் பொறுத்துக்கொண்டேன்.

இப்போது சிசுபாலனே தன் முடிவைத் தேடிக்கொண்டு விட்டான். இன்று நூறுமுறைக்கு மேல் என்னை அவமானப் படுத்திவிட்டான். இவன் இனி புறப்படலாம்!” என்றான். தன் சக்கராயுதத்தை அவன் மேல் ஏவினான். அது சிசுபாலனின் கழுத்தை அறுத்தது. சிசுபாலனின் உடல் கீழே விழுந்தது. அதிலிருந்து ஒரு ஒளிப்பந்து புறப்பட்டு வந்து கண்ணனின் திருவடிகளை அடைந்தது. சிசுபாலன் வைகுந்தத்தை அடைந்துவிட்டான்.

இத்தனை பாபங்கள் செய்த சிசுபாலன் எப்படி முக்தியடைந்தான்? ஜய-விஜயர் மூன்று பிறவிகள் முடிந்தபின் வைகுந்தத்துக்கு மீள வேண்டும் என்று ஏற்கெனவே எம்பெருமான் விதித்திருந்தான். அதை நிறைவேற்றுவதற்காக சிசுபாலனுக்குக் கண்ணன் முக்தியை அளித்துவிட்டான். அனைத்துலகுக்கும் இறைவனான கண்ணனுக்குத் தான் விரும்பும்போது தான் போட்ட சட்டங்களை மீறுவதற்கும் உரிமையுண்டு.

மனிதனாக அவன் அவதரித்தாலும், தனது இயற்கையான சக்திகளோடு தான் இருக்கிறான். எனவே அந்தச் சக்தியால் சிசுபாலன் பாபங்கள் செய்திருந்தாலும் கண்ணனே விதிகளை மீறி அந்தப் பாவிக்கும் முக்தியளித்தான். நினைத்த நேரத்தில் நினைத்த செயலைச் செய்வதால் எம்பெருமானுக்கு ‘ப்ரபு:’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 35-வது திருநாமம். ‘ப்ரபு:’ என்றால் அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தையும் நினைத்த நேரத்தில் அருளவல்லவன் என்று பொருள். “ப்ரபவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் சரியான நேரத்தில் நமக்குத் தேவையானதை எம்பெருமான் அருளுவான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்