கயிலைநாதன் அருள் பெற்ற கருங்குருவி!



அருணகிரி உலா - 50

வேதவனம் எனப்படும் வேதாரண்யத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் தந்தருளிய குழந்தையாம் முருகனை நோக்கி இவ்வாறு கூறுகிறார் அருணகிரியார், ‘‘என்னைச் சூழ்ந்துள்ள வினை காரணமாக வருகின்ற துன்பம், நீண்ட வியாதிகள், அளவு கடந்த காமம், களவு, வஞ்சனை இவற்றை மனத்தில் நினைவு கொண்டிருந்தால் எனக்கு உற்ற துணை ஏது உண்டு? (எதுவுமில்லை) ஏழையாகிய நான் இத்தகு துக்கங்களுடன் நாள்தோறும் அலைச்சலுறுவேனோ? இக்குற்றங்களை நீக்கி உனது செம்மையான திருவடிகளைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக!’’

அருகிலிருக்கும் இலங்கையைப் பற்றி அறியும்போது அருணகிரியாருக்கு சேதுபந்தன நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது போலும்! ‘‘சமுத்திரத்தை அணையாலடைத்து, ஏழு நாளிலே, இலங்கையை, தமது ஆண்மையைச் செலுத்தி கைக்கொண்ட புயல் வண்ணனின் மருமகனே!’’ என்று விளிக்கிறார். ‘‘யானை முகத்தை உடைய கணபதியின் தம்பி என்று கூறப்படும் அழகிய முருகனே!’’ என்றும் கூறி மகிழ்கிறார். இத்தலத்தில் பாடிய மற்றொரு பாடலிலும் ராமாயணக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன:

‘‘பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று
    பார மலைக்குள் அகன்று கணையால் ஏழ்
பார மரத்திரள் மங்க வாலி உரத்தை இடந்து
    பால்வருணத் தலைவன் சொல் வழியாலே
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை
    வீடணருக்கருள் கொண்டல் மருகோனே!
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
    வேத வனத்திலமர்ந்த பெருமாளே’’

‘‘விஸ்வாமித்திரருடன் சென்று அங்கநாடு கடந்து ஒரு பாலைவனம் கண்டு, அங்கு அவர் உபதேசித்த பலை, அதிபலை எனும் மந்திரங்களைப் பெற்று பாலைவனம் கடந்து, தாடகையை வதைத்து...’’ என்கிறது அபிதான சிந்தாமணி. இதையே ‘‘பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று’’ என்று பாடுகிறார் அருணகிரியார். பின் பெரிய மலையாம் சித்ரகூடத்தினின்று நீங்கி அப்பால் சென்றான் ராமன். அம்பு கொண்டு ஏழு மராமரங்களை வீழ்த்தினான்; வாலியினுடைய மார்பைப் பிளந்தான்; தன்னிடத்தில் அஞ்சி ஓடிவந்த வருணராஜன் சொன்ன வழியின்படி சமுத்திரத்தை அணைகட்டி அடைத்தான்; அரக்கர் வாழ்ந்திருந்த சூழல்களை அழித்தான். இவற்றையெல்லாம் நிகழ்த்தி இறுதியில் இலங்கை அரசாட்சியை விபீஷணருக்கு உவந்தளித்த மேகநிறத்துத் திருமால் மருகனே!’’ என்று பாடுகிறார்.

திருத்தணியில் ‘‘கொங்கில் ஏரி தரு பழநியில் அறுமுக, செந்தில் காவல, தணிகையில் இணையிலி’’ என்று பாடியது போன்று, இங்கும் ‘‘விருப்பமுள்ள திருத்தணி, செந்தில், பெரிய பழநி ஆகிய மூன்று தலங்களிலும் உள மகிழ்ச்சியோடு வீற்றிருந்து, வேதாரண்யத்திலும் விருப்பமுடன் அமர்ந்தருளும் பெருமாளே’’ என்கிறார். ‘‘வால ரவிக்கிரணங்களாமென உற்ற பதங்கள் மாயை தொலைத்திட உன்றன் அருள்தாராய்’’ என்ற பிரார்த்தனையையும் முன் வைக்கிறார். ‘இளஞ்சூரியனுடைய கிரணங்கள் என்று சொல்லும்படியான ஒளி கொண்டு விளங்கும் உனது திருவடிகள், என்னுடைய மயக்க அறிவைத் தொலைக்கும்படி உனது திருவருளைத் தந்தருளுக.’ ‘நூலினை’ எனத் துவங்கும் மற்றொரு வேதாரண்யப் பாடலிலும் ராமாயணக் குறிப்பு வருகிறது.

‘‘வால இளம்பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை
    வாசுகியைப் புனை நம்பர் தருசேயே
மாவலியைச் சிறை மண்ட ஓரடி ஒட்டி அளந்து
    வாளி பரப்பி இலங்கை அரசானோன்
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இருபத்தும் அரிந்து
    வீரமிகுத்த முகுந்தன் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
    வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே’’

‘‘பால இளம்பிறை, தும்பை, கங்கை, கொன்றை, திருநீற்றுப் பச்சை, பாம்பு இவையணிந்த சிவனார் மைந்தனே! மகாபலிச் சக்ரவர்த்தி பாதாளச் சிறையில் ஒடுங்க, தமது ஒப்பந்தத்தின்படி ஒரு அடி அளந்தும், அம்புக் கூட்டங்களைச் செலுத்தி ராவணனின் பத்து முடிகளையும் அறுத்து, இருபது தோள்களையும் வெட்டித் தள்ளிய அதிவீரனான திருமாலின் மருகனே! ஆசையுள்ள திருத்தணி, செந்தில், பெரிய பழநி எனும் தலங்களில் அன்பு கொண்டு வேதாரண்யத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!’’

தனது ஆசாரங்களனைத்தையும் ஒழித்துவிட்டு மோகத்தில் அழுந்தி, அதன் காரணமாக தேர்ந்து அடையத் தக்க தவநிலையை இழந்து அலைச்சல் உறாதபடித் தன்னைக் காக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். பசியால் வாடிய எலி ஒன்று இத்தலக் கோயில் கருவறையில் அணையும் தருவாயில் இருந்த விளக்கிலிருந்த எண்ணெயைக் குடிக்க முயன்றது. அதன் மூக்கின் நுனிபட்டுத் திரி தூண்டப்பட்ட விளக்கு சுடர் விட்டுப் பிரகாசித்தது. இதனால் எலி அடுத்த பிறவியில் மாவலியாய்ப் பிறந்து, திருமாலின் பாதத்தால் அழுத்தப்பட்டு, பாதாள உலகிற்கு அரசனாக்கப்பட்டது! எனவேதான் வேதாரண்யப் பாடலில் மாவலியைப் பற்றிய குறிப்பை வைத்தார் போலும்! (‘‘மாவலியைச் சிறை மண்ட ஓரடி ஒட்டி அளந்து...’’) மற்றுமொரு வேதாரண்யப் பாடலில் அகத்தியருக்கு சிவபெருமான் அருளிய திருமணக்கோலம் பற்றிக் குறிப்பிடுகிறார். துரதிருஷ்டவசமாக இப்பாடல் முழுவதுமாக நமக்குக் கிடைக்கவில்லை. தணிகைமணியின் விடாமுயற்சியால் கிடைத்த ஒரு பகுதியை இங்கு காண்போம்:

‘‘காதலுடைத்தாகி அன்று ஆரணியத்தே நடந்து
கானவர் பொற்பாவை கொங்கை அணைவோனே
கோதில் தமிழ்க்கான கும்ப மாமுனிவற்கா மணஞ்செய்
கோலமளித்தாளும் உம்பர் முருகோனே
கோகனகத்தான் வணங்கி...
கோடி மறைக் காடமர்ந்த பெருமாளே’’

‘‘அன்புடையவனாகி, பண்டு, வள்ளிமலைக் காடுகளில் நடந்து, வேடர் மகளான வள்ளியின் தனங்களை அணைந்தவனே! மாசற்ற தமிழ் மொழியில் பற்று கொண்ட கும்ப முநிவனுக்கு (அகத்தியருக்கு) தன் திருமணக் கோலத்தைக் காட்டியருளிய சிவனாரது குழந்தையே! (படைக்கும் ஆற்றலை இழந்த) பொன்னிறமுடைய பிரம்மன் (கோகனகத்தான்) பூஜித்துப் பேறு பெற்ற வேதாரண்யத்தில் அமர்ந்த பெருமாளே! (கோடி நகரை அடுத்தமைந்துள்ள திருமறைக்காட்டில் வீற்றிருப்பவனே!)

திருப்புகழால் முருகனைத் துதித்த பின் ஜுரஹரேஸ்வரர், சனிபகவான், கஜலட்சுமி, கையில் வீணையின்றி விளங்கும் சரஸ்வதி, சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரை வணங்கிச் செல்கிறோம். இங்கு தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள துர்க்கை மிகவும் பிரசித்தி பெற்றவள். கோளிலித் தலங்களுள் ஒன்றான இங்கும் நவகிரஹங்கள் நேர்கோட்டில் நிற்கின்றன. பள்ளியறையை அடுத்து பைரவர், சூரியர், சந்திரர் உள்ளனர். வெளித் திருச்சுற்றில் அன்னை வேதநாயகியைத் தரிசிக்கிறோம். ஒரு போட்டியின்போது அன்னையின் குரல் வீணையின் நாதத்தைக் காட்டிலும் இனிமையாக இருந்ததால், அன்னைக்கு ‘யாழைப் பழித்த மொழியாள்’ என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.

எனவேதான் இங்கு கலைமகள் கையில் வீணை இல்லை. சுந்தரர் இவ்வம்மையை ‘‘யாழைப் பழித்த மொழியன்ன மங்கை’’ என்று குறிப்பிட்டுள்ளார். அம்பிகை சந்நதிக்கு எதிரே தலவிருட்சமான வன்னி மரம் உள்ளது. இதன் கீழ் விஸ்வாமித்திரர் பூஜை செய்ததாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இத்தலத்துப் பெருமான் மீது அந்தாதி பாடியுள்ளார். அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் திருத்தலம் வலிவலம். காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றான இது, திருவாரூர், நாகப்பட்டினம் சாலையில் கீவளூர் சென்று அங்கிருந்து தெற்கே 10 கி.மீ. செல்ல வேண்டும். திருவாரூரிலிருந்து நேரிடையாகவும் செல்லலாம்.

(10 கி.மீ. தொலைவு) வலியன் குருவி வழிபட்ட தலங்களுள் ஒன்று. (மற்றொன்று சென்னை அருகிலுள்ள திருவலிதாயம்) கருங்குருவி ஒன்று மதுரை அருகில் வசித்து வந்தது. ஒருநாள் சிவனடியார் ஒருவர் மதுரைக்குச் சென்று பொற்றாமரைக் குளத்தின் நீர் உடலில் பட்டாலே பிறவிப் பிணி தீரும் என்று சீடர்களிடம் கூறுவதைக் கேட்டது. உடனே அது மதுரை சென்று குளத்து நீர் உடலில் படும்படியாக உரசி விட்டு மீனாட்சி கோயில் சந்நதி உத்தரத்தில் அமர்ந்து தெய்வ தரிசனம் செய்தது.

குருவியின் முற்பிறப்பை உணர்ந்த இறைவன் அதற்கு ஆயுள் விருத்தி ஏற்படவும், பிறவித் துன்பம் நீங்கவும் மிருத்யுஞ்ஞய மந்திரத்தை உபதேசித்தார். தான் ஒரு பலம் மிக்க குருவியாகவும், மற்ற பறவைகளை விரட்டும் ஆற்றல் பெற்ற பறவையாகவும் ஆக வேண்டி இறைவனைத் தொடர்ந்து பிரார்த்தித்த குருவிக்கு ‘வலியன்’ என்ற பெயரையும் அளித்து த்ரயம்பக மந்திரத்தையும் உபதேசித்தார் இறைவன். தான் கற்ற மந்திரங்களை சதா ஒலித்த வண்ணம் வலியன் குருவியும் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தது. வலிவலம் கோயில் இறைவன் இருதய கமல நாதேஸ்வரர் மற்றும் மனத்துணைநாதர் என்றும், இறைவி, அங்கயற்கண்ணி, மத்ஸ்யாயதாட்சி மற்றும் வாளையங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சுந்தரர், அன்னையை ‘மாழையொண் கண்ணி’ என்கிறார். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று இது. சுவாமி, கட்டுமலை மேல் கிழக்கு நோக்கிக் குடிகொண்டுள்ளார். முறைப்படித் தேவாரம் ஓதுபவர்கள் சம்பந்தப் பெருமானின் வலிவலப் பாடலையே முதலில் பாடுவர்.

‘‘பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடி கொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே’’

-இது, வலிவலம் வலம்புரி விநாயகர் மீது பாடப்பட்ட பாடல். 85 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். முகப்பு வாயிலில் சதாசிவ குடும்பத்தினரின் சுதைச் சிற்பங்களைத் தரிசிக்கிறோம். முன் மண்டபத்திலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து உள்ளே சென்றால் படிகள் ஏறிச் சென்று மனத்துணைநாதரையும் தெற்கு நோக்கிய அம்பிகை மாழையொண்கண்ணியையும் தரிசிக்கலாம். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்ரமணியர், லட்சுமி, காசி விஸ்வநாதர், நவகிரகங்கள், அறுபத்து மூவர், ஈசானிய மூலையில் பிடாரி ஆகியோரைத் தரிசிக்கலாம்.

இங்கு திருமால் ஏகசக்ர நாராயணர் என்று அழைக்கப்படுவதால் இத்தலத்திற்கு ஏகசக்ரபுரம் என்ற பெயரும் உண்டு. தலமரம் புன்னையாகும். சிவசந்நதியின் இடப்புறம் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கி, தலத்திற்குரிய திருப்புகழ்ப் பாடலைச் சமர்ப்பிக்கிறோம்:

‘‘நறுமலர் அயன் விதித்த தோதக வினையுறு தகவது
துறக்க நீறிட அரகரவென உளம் அமையாதே
அடுத்த பேர், மனை, துணைவியர், தமர், பொருள்
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறும்
அசட்டன் ஆதுலன் அவமது தவிர நின் அடியாரோடு
அமர்த்தி மாமலர் கொடு வழிபட எனை
இருத்தியே பரகதி பெற மயில் மிசை
அரத்த மாமணி அணி கழலிணை தொழ அருள்தாராய்’’

நறுமலரில் வீற்றிருக்கும் பிரம்மன் விதித்த, துக்கம் தருவதான வினைகளுடன் கூடிய செயல்களை ஒழிக்கவும், திருநீறிடவும், ‘ஹரஹர’ என்று வாய் விட்டு உரைக்கவும் என் மனம் பொருந்தாதோ? உறவினர், மனைவி, சகோதரிகள், சுற்றத்தார், செல்வம் இவற்றுடன் கூடிய இல்வாழ்க்கையை நிலையானதென்று நம்பும் அசடன், வறிஞன் ஆகிய எனது வீண் வாழ்க்கை ஒழியும்படி, உன் அடியாரோடு கூடி, நறுமலர் கொண்டு வழிபடச் செய்து, உயர்கதியைப் பெறும்படியாகவும், மயில் மீது விளங்கும் சிவந்த ரத்ன மணிகள் பொருந்திய வீரக்கழல்கள் அணிந்த இரு கழல்களைத் தொழும்படியாகவும் உனது திருவருளைத் தந்தருள்வாயாக!

‘‘எடுத்த வேல் பிழை புகல் அரிதென எதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே
எருக்கு மாலிகை, குவளையின் நறுமலர்
கடுக்கை மாலிகை, பகிரதி சிறு பிறை
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கடல் எழுவரை துகளெழ
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புயவேளே
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய
கடப்ப மாலிகை அணி புய! அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை பெருமாளே!’’

பொருள்: உன் வேலுக்குக் குறி தவறுதல் இல்லை என்பது போலவே ராவணனது ரத்ன முடிகள் சிதறும்படி ஓரம்பைச் செலுத்திய திருமால் மருகனே! வெள்ளெருக்கு, குவளை, கொன்றை இவற்றின் மாலைகளோடு கங்கை, இளம்பிறை, எலும்பு மாலை இலை அணிந்த சிவபிரானின் மைந்தனே! பிஞ்சு மாவடுக்கள் நிறைந்த மாமரமாகத் தோன்றிய சூரனை அடக்கவும், எழுகடல் வற்றவும், எழுகிரி தூளாகவும் வேலைச் செலுத்திய கரங்களை உடையவனே! கஸ்தூரி அணிந்த புயங்களை உடைய வேளே! காட்டில் வாழ் வள்ளியின் தனங்களைத் தழுவிய கடப்பமாலை அணிந்த புயங்களை உடையவனே! தேவர்கள் மதிக்கும் வீரனே! வலிவலம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி