ஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பைக் காணமுடிகிறது!



காகிநெல்லி கண்டெடுத்த கனகதாசர் கட்டுரை மெய்சிலிர்க்க வைத்தது. தமிழக சங்கீத மும்மூர்த்திகள்போல கர்நாடக சாஹித்யங்களின் மூர்த்திகளின் வரிசையில் வந்த கனகதாசர் பற்றிய தகவல்கள் கன்னட பக்தி இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்த அனுபவத்தை தந்தது. ஆன்மிகம் இதழ் தமிழகம் கடந்து மற்ற மாநில பண்பாட்டு, இலக்கிய, ஆன்மிக செய்திகளை வாசகர்களுடன் பகிர்வது நெஞ்சிற்கு இனிதாக உள்ளது.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை.

‘அர்த்தமுள்ள இந்து மதம்’ அத்தியாயங்களைக் கண்ணீர் சிந்தாமல் படிக்கமுடியவில்லை. அதேசமயம் தாய், தமக்கை உறவு களுக்கு கவிஞர் அளித்த விளக்கத்தைப் படித்துச் சிரிக்காமலும் இருக்க முடியவில்லை. ஒட்டுமொத்த இதழுக்கான உங்கள் உழைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடிகிறது!
- கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி-620017.

‘தோல்வி என்ற ஏணிப்படி’ தலையங்கக் கருத்துகள் என்னை ஈர்த்தன. விநாயகர் செய்திகள், பெரும்பாலும் புதியனவாகவும், பயனுள்ளதாகவும் இருந்தன. ‘பிரசாதங்’களைப் படித்து பூரண, கார கொழுக்கட்டைகளை செய்து மகிழ்ந்தோம்.
- இல.வள்ளிமயில். திருநகர்.

விநாயகர் பக்தி ஸ்பெஷல், ‘மனதுக்கு இனியவர் மணக்குள விநாயகர்’ கட்டுரைப் பிள்ளையார் சுழியாக ஆரம்பித்து கடைசி பக்கம்வரை பல்வேறு நற்சுவைகளுடன் கூடிய பெரிய விருந்தாகவே அமைந்துவிட்டது.
- இரா.வளையாபதி. தோட்டக்குறிச்சி.

பாரத தேசமெங்கும் ஆங்காங்கே அதிசயக்கத் தக்க ஆன்மிக இறைவழிபாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தேடிச்சென்று விவரங்கள் சேகரித்து தாங்கள் கட்டுரைகளாக வெளியிடுவது வெகு சிறப்பு. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் வைத்யநாதர் ஆலயத்திற்கு ‘கங்கா காவடி’ சுமந்து, பல லட்சம் மக்கள் நடைப்பயணமாக யாத்திரை செல்லும் பிரமிக்கத்தக்க இறைவிழா பற்றிய கட்டுரைத் தொகுப்பு கண்டு சிலிர்த்தேன்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

ஆசைவசப்பட்டு அல்லல் வலையில் அகப்படாமல், ஒவ்வொரு ஆசையாக மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு, அமுதமே ஆனாலும் அளவாக உண்ணுங்கள், வளமுடன் வாழுங்கள் என்ற திருமூலரின் வாக்கை அனைவரும் செயல்படுத்துவோம்.
- கோ.தியாகராஜன், கீழ்வேளூர்.

அஷ்ட கணபதிகள் கட்டுரையும், படங்களும் எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தின. அதுபோலவே கர்நாடகத்து ஆறு கணபதிகள் கட்டுரையும் படங்களும்.
- கே. சிவகுமார். சீர்காழி.

தெளிவுபெறுஓம், திருமூலர் திருமந்திர ரகசியம், குறளின் குரல், விதவிதமான ஆலயங்கள் என கட்டுரைகள் மூலம் வாசகர்களுக்கு ஒவ்வொரு இதழிலும் விருந்து படைக்கிறீர்கள்.
- இரா வைரமுத்து. ராயபுரம்.

விநாயகர் பக்தி ஸ்பெஷலில்தான் எத்தனை எத்தனை விநாயகர்கள்! தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாட்டில் உள்ள முக்கிய விநாயகர் ஆலயங்களின் சிறப்புகளையெல்லாம் கொட்டிக் குவித்துவிட்டீர்கள்.குருபெயர்ச்சியின் பலன்களை மிகவும் தெளிவாக விரிவாக விளக்கியிருந்தார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர். அபூர்வ ஸ்லோகம், அபூர்வமானது மட்டுமல்ல, மிகவும் பயனுள்ளது. சக்தி தத்துவம் அருமையோ அருமை.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

இன்றைக்குப் பலவித குற்றங்களுக்கும், கோபமே மூலகாரணம் என்பதை ‘கோபம் உடனிருந்து கொல்லும் அரக்கன்! என்று குறளின் குரல் தெளிவாக விளக்கியது.
- எல்.மலர்க்கொடி லோகநாதன், பரணிஸ்டோர், சிகரலப்பள்ளி - 635104.