திருவோணத் திருநாளில் திருமால் தாள் பணிவோம்!



இயற்கை வளமெல்லாம் சேர்ந்து
இளம்பெண்களிடம் குவிந்து
இன்பஎழில் கொஞ்சும் சேரநாடு
மலைகள் சூழ்ந்து ஆளும் நாடு!
சீர்மிகு திறமாண்ட மகாபலி

சிந்தை, செயலில் தர்மவான்!
மக்கள் வாழ்வு சிறக்க
மணிமுடி சூடிய மன்னனின்
பொருளும், புகழும் தேவருக்கு நிகராம்!
பொறாமையில் கொதித்த அமுதம் உண்டோர்
பொற்தாமரையான் மலரடி சரண் புகுந்து
பொல்லார் உயர்வதோ, நல்லோர் தாழ்வதோ என
பொய்புகார்  வாசித்து காக்க வேண்டினர்!
அழுக்காற்றில் குளித்த தேவரின்
அகம் அறிந்த மாயவன்
மகாபலி மாண்பை அவருக்கு உணர்த்த
குள்ளவுரு வாமனனாய் அவதரித்து
மூன்றடி மண் யாசித்து நின்றான்!
நிலமளந்து, வானளந்து மூன்றாமடி
மகாபலி தலைமீது அழுத்தி
பாதாள உலகுக்கு அனுப்பினான்!
ஆண்டுதோறும் ஆவணி திருவோணத்தில்
மக்களை காணும் வரம் பெற்ற
அன்பு மன்னனை  ஆண்ட தேவனை
அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியாய்
ஆடிப்பாடி வரவேற்கும் மக்கள்
ஓணம் சத்யா விருந்து உபசரிக்க
காணம் வித்தாவது மானம் காத்து
தலைவாழை இலையில் வகையாய்
பரிமாறி தலைவனுக்கு நன்றி செய்கின்றனர்!
புத்தாடை  அணிந்து முகத்தில்
புன்னகை தவழ ஊஞ்சலாடும்
பூக்கர வளையோசை பெண்கள்
கைக்கொட்டுக்களி நடனமாட
புலியாட்டம், கதகளி காளையராட
பத்துநாளும் மகாபலிக்கு பல்லக்கு உற்சவம்!
தர்மம் அழுத்தப்படலாம் அழிவதில்லை
தர்மத்தை பொய்மேகம் மறைக்கலாம்
மரணிப்பதில்லை  என்று
பூமியில் பாடமாக்கினான் திருமால்!
நிலைத்த இன்பமும், அமைதியும்
நிறைந்த ஞானமும், செல்வமும்
நினைத்தது கிடைக்கும் பாக்கியமும்
திருமாலைச் சரண்புகுந்து பெறுவோம்!

- விஷ்ணுதாசன்