இறை உருவங்களை வழிபடுவதால் நன்மைகள் உண்டு!



அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

நுண்மாண் நுழைபுலமாக, அபிராமி அந்தாதியை நாம் படிக்க முற்படும்போது புரிந்து கொள்ளவேண்டிய சில இன்றியமையாத குறிப்புகள் உள்ளன. இவற்றைப் புரிந்துகொண்டால் அந்தாதியை நன்கு புரிந்துகொள்ள இயலும். பொதுவாக படைப்பான அந்தாதியை மையமாக கொண்டு விளக்கப்படுவதுதான் வழக்கம் என்றாலும், இக்கட்டுரை படைப்பாளியை மையமாகக் கொண்டு விளக்கப்படுகின்றது. அதோடு, அந்தாதியின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள சொற்கருத்துகளைத் தனித்தனியே விளக்காமல், நூறு பாடல்களின் வழியாகவும், அபிராமி பட்டர் கூறவிழையும் ஒருங்கிணைந்த கருத்தை மையமாக வைத்து விளக்குவதுதான் இந்தக் கட்டுரை.

அபிராமி அந்தாதி சாத்திரம் வேதாகமங்களின் வழியாக இறைவியை வழிபடுகிற முறை, அதன் பயன், அதற்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி, கருத்தை உறுதிபடுத்த காட்டும் சான்று இவை எல்லாவற்றையும் கொண்டு அபிராமிபட்டர் ஸ்ரீவித்யா என்கிற மந்திரத்தை ஜெபித்து வேதகாம சாத்திரத்தை பின்பற்றி உயர்வு, முக்தி பெற்றார் என்பது நமக்கு அந்தாதி வழி அறிய கிடைக்கிறது.

முற்காலங்களில் ஓர் அரசன் நிலங்களை பிறருக்கு தானமாகக் ஒரு கல்வெட்டில் பொறித்து அதை நிலத்தில் பதித்து வைப்பது வழக்கம். இதன்மூலம் இன்னாருக்கு இதை கொடுத்தார் என்று உறுதி செய்வர். இதன் அடிப்படையில் தோன்றிய சொல்தான் சாசனம். அது போன்றதே சாத்திரம் - ‘சாசனாதி சாஸ்திரம்’, ‘சாமான்ய லக்ஷ்ணம்’, ‘க்ஷட் சூத்திர பிரமாணம் சாஸ்திரம்’.

உள்ளதை உள்ளவண்ணம் கூறுதல் (இயல்பை, குணத்தை, பிரிவிலாதன்மையை), உண்மையைச் சொல்வது, நன்மையைச் சொல்வது, உறுதிபடச் சொல்வது, பின்பற்ற வேண்டியது, கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியது - இவை ஆறும் சாஸ்திரத்தின் பொது இலக்கணம். இந்த இலக்கணம் துறைதோறும் மாறுபடும். அவை உரைக்கும் பொருளும் வேறுபடும். உதாரணமாக சிற்ப சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம் போல. இதுபோன்ற வேறுபாடுகள் ஒவ்வொரு சாஸ்திரத்திற்கும் சிறப்பிலக்கணம் எனப்படும்.

அந்தவகையில் மதகோட்பாடுகளை உரைப்பதற்குத் தனியாக உண்டானவை ஆகம சாஸ்திரம். இவை வழிபாட்டிற்கென்றே உருவாக்கப்பட்டவை. ஆகம கோட்பாடுகளை விளக்கிக்கூறுவது என்பது சித்தாந்தம் எனப்படும். இந்த சித்தாந்தங்கள் ‘சப்த மத’த்தை (ஏழுவகை கொள்கைகள்) அடிப்படையாக கொண்டு விளக்கப்படவேண்டும். அதைகொண்டு சக்தி தத்துவத்தை நிறுவுவதுதான் ‘அபிராமி அந்தாதி.’

1. உடன்படல் (ஆசிரியர் பிறர் மதத்திற்கு உட்படுதல்)
‘‘சக்தி தழைக்கும் சிவமும்’’ (பாடல் - 29) என்ற வரிமூலம் பட்டர் சைவமதத்திற்கு உடன்படுகின்றார். ‘உதிக்கின்ற செங்கதிர்...’ அபிராமியின் சிறப்பு. மேலும் உச்சித் திலகம் என்பது கணவனால் தினந்தோறும் மனைவிக்கு இட்டுவிடப்படும் பொட்டு ஆகும். அந்த பொட்டிற்கு உரியவர் என்றவகையில் சிவனே இங்கு குறிப்பிடப்படுகிறார். ‘தில்லை ஊரர் தம் பாகத்து’ என்று ‘சைவம்’ உடன்பாட்டு மதமாகிறது.

2. மறுத்தல்  (ஆசிரியர் பிறர் மதத்தைமறுத்தல்)
‘‘வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன்’’ (பாடல் - 64); ‘‘பர சமயம் விரும்பேன்’’ பாடல் -23) என்ற வாக்கியங்களினால் பலியிட்டு வழிபடும் நெறியை அபிராமி பட்டர் மறுக்கிறார். சக்தியை தவிர பிற தெய்வங்களை உயர்வுபடுத்தும் சமயங்களையும் மறுக்கிறார்.

3. பிறர் மதம் மேற்கொண்டு களைதல் (ஆசிரியர், பிறர் மதத்திற்கு முதலில் உட்பட்டு பின்னர் மறுத்தல்)
‘‘தவளே இவள் எங்கள்
சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும்
ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியுமாம்
துவளேன் இனி ஒரு தெய்வமுண்
டாக மெய்த் தொண்டு செய்தே
(பாடல் - 44)

- இந்த பாடலின் வழி முதலில் சைவத்தை உயர்வாக ஏற்றாலும் காரணம் காட்டி முடிவில் சக்தியே உயர்வு என்பதற்கு உடன்பட்டு பின் மறுக்கின்றார் என்பது புலனாகும்.

4. தா அன் நாட்டித் தனாது நிறுத்தல் (ஆசிரியர் தான் ஒரு கருத்தை எடுத்துக்காட்டி பின்னர் அக் கருத்து வரும் இடந்தோறும் நிலைநிறுத்துதல்) அபிராமி பட்டர், தான் வித்யா உபாசகர் என்பதை மீண்டும் மீண்டும் தன் பாடல்களின் வழி வலியுறுத்திக்கொண்டே இருப்பார். அவரால் இயற்றப்பட்ட பாடல்களில் அனைத்திலும் இதைக் காணலாம். உதாரணமாக பாசாங்குசம் என்ற சொல்லைபன்னிரண்டு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்:

1. ‘பாசாங்குசமும் கரும்பு வில்லும்’ (2) திரிபுர
2. ‘சிலையும் அம்பும்’ (9) அம்மே (அம்பிகா)
3. ‘பாசாங்குசை, பஞ்சபாணி’ (43) திரிபுரசுந்தரி
4. ‘அஞ்சம்பும் இக்கலராக நின்றாய்’ (59) மகாதிரிபுரசுந்தரி
5. ‘செங்கை கரும்பும் மலரும்’ (62) குறியிட்ட நாயகி
6. ‘தாமம் கடம்பு படை பஞ்சபாணம்’ (73) திரிபுரை
7. ‘பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும்’ (85) திரிபுரையாள்
8. ‘கரும்பு வில்லும்’ (100) கொங்கைவல்லி
9. ‘பாசாங்குசமும்’ (நூற்பயன்) அபிராமவல்லி
10. ‘பஞ்சபாண பயிரவி’ (76) பயிரவி
11. ‘கன்னலும் பூவும்’ (37) வாமா
12. ‘பாசாங்குசை’ (77) பஞ்சபாணி

இது பாடல்வழி விளக்கப்படுமாயின் கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகலாம். வேதாகம கருத்தின்படி, ஸ்ரீவித்யா என்கிற மந்திர ஜெபத்தை செய்பவர்களின் செயல்முறை விதிகளைப் பின்பற்றி, ஆகமவழியே ஆய்ந்தால், ஒரு மந்திரத்தைக் கொண்டு வெவ்வேறு விதமான பயன்களை நாம் பெறுவதற்கு ஏதுவாகும்.

அதே மந்திரத்தைப் பன்னிரண்டு விதமாக மாற்றி உச்சரித்தால் அது ஒரே தேவதையின் வெவ்வேறு விதமான தோற்றத்தைத் தியானம் செய்தலையும், அதன் வழியாக நமக்கு வெவ்வேறு பயன் கிடைப்பதையும் உணர்த்துகிறது. இதனால்தான் அபிராமி பட்டர் பன்னிரண்டு இடங்களை ஒரே வார்த்தையால் விளக்குகிறார்.

‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ (1), ‘ஐயன் அளந்தபடி’ (57), ‘எங்கள் சங்கரனார்’ (44) ஆகிய வரிகளை நோக்கும்போது சக்தியைவிட சிவபரம்பொருளை உயர்வாக விளக்குவதாக அமைந்துள்ளது. ‘பூத்தவளே புவனம் பதினான்கும்’ (13) என்ற பாடல், இவ்வுலகத்தை உமையம்மையே படைத்துக் காக்கின்றாள் என்று கூறுகிறது.

‘ஐயன் அளந்தபடி இருநாழிகை கொண்டு’ என்ற பாடல் இறைவன் அளந்ததைக் கொண்டே, இறைவி உலகை காக்கிறாள் என்ற கருத்தை விளக்குகிறார். மேற்கண்ட பாடல் வரிகளை அதே பொருள்கொண்டு நாம் ஆய்ந்தால், இரண்டு முரண்பாடான கருத்தை அபிராமிபட்டர் கூறுவதாக ஆகிறது. இதையே வேதாகம கருத்துப்படி, ஸ்ரீவித்யா உபாசகர்கள் வழிபடும் முறைப்படி இப்பாடல் வரியை இவ்வாறு விளக்கலாம்: ஸ்ரீசக்கரத்தில் இறைவன், இறைவி இருவரும் சமமாக இணைந்து இருப்பதாக தியானிக்கப்படுகின்றார்கள்.

மேலும் ஸ்ரீசக்கரத்தில் சிவன், சக்தி இருவரையுமே மேலான பொருளாக கொண்டு வழிபடலாம். அபிராமிபட்டர் ஸ்ரீசக்கரம் உபாசனை செய்பவர் ஆதலால் இரண்டு வகையிலும் சக்கரத்தின் மூலம் இறைவன், இறைவி இருவரையும் வழிபடும் முறையையே அந்தாதியில் தெளிவாக கூறியுள்ளார் என்பதை நன்கு அறியலாம்.

சக்தி வழிபாட்டின்படி உமையம்மையை வழிபடுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன: 1. சவ்வியாசாரம், 2. வாமாசாரம். சவ்யம் என்பது உயிர்வதை செய்யாது இறைவியை வழிபடும் முறையாகும்; வாமாசாரம் என்பது உயிர் பலியிடுதல், கள் அருந்துதல், மீன், இறைச்சி புசித்தல் ஆகிய பழக்கங்களுடன் வழிபடுவது.

‘த்ரவ்யமாவச தத்வாட்யம் பஷ்யம் மாம்சாமதிகம் ப்ரியே’ - ருத்ரயாமளம். வாமாசார நூல்களின் வழி உமையம்மையை வழிபடுவது குற்றம் எனக்கூறி வேதவழி பாட்டையே அவர் தேர்ந்தெடுக்கிறார். பிறி தொரு படா அன் தன் மதம் கொளல் (ஆசிரியர் பிறரது கொள்கைக்கு உடன்படாது, தன் மதத்தையே தான் கொள்ளுதல்) ‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட’ என்ற சொற்றொடரால் பிற நூல்களை எல்லாம் தள்ளிவிட்டு வேதத்தையே முதன்மையாகக் கொண்ட சக்தி வழிபாடுதான் செய்தார் என்பதும் புலனாகிறது. ஆகவே, அபிராமி அந்தாதி, சாத்திர நூல் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு சிறிய கண்ணாடி, பெரிய உருவங்களையும் தன்னுள் செம்மையாய் அடக்கி இனிதாகக் காட்டும். அதுபோல சிலவகை எழுத்துகளால் இயற்றப்பெறும் யாப்பில், பல்வகைப்பட்ட பொருள்களை செம்மையாக அடக்கி, நோக்குவார்க்கு இனிதாக அப்பொருள்களை விளங்கச்செய்து, சொல்வலிமை, பொருள் வலிமையுடன் பொருள் நுணுக்கங்களும் சேர்ந்து அமைவன சூத்திரங்களாகும்.

‘‘சில்வகை எழுத்தின் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியில் செறித்து இனிது விளக்கித் திட்ப நுட்பம் சிறந்தன’’ - சூத்திரம் (நூற்பா 18) அபிராமி அந்தாதியில் கூறப்பட்டுள்ள சில பெயர்களுக்கு ஆகமம் சார்ந்த விளக்கமாக முதன் முதலில் ரூபத் தியானம் என்கிற இப்பகுதி விளக்கப்படுகிறது.

ஆகமமானது இறைவனுக்கு உருவம் உண்டு என்றும், அதனை அமைத்து வழிபடுவதால் நமக்கு நன்மைகள் உண்டு என்றும் கூறுகிறது. அவ்வாறு இறைவனுக்கு அமைக்கப்படும் உருவங்களை பற்றியும், அவற்றை அமைக்கும் முறைகளைப் பற்றிய விளக்கங்களையும் அவை நமக்கு தருகின்றன. அவ்வகையில் அது குறிப்பிடும் இறை உருவங்களின் விளக்கமே ரூபத் தியானம் ஆகும்.

ரூபத்தியானம் என்பது ஆகமங்களில்
கூறப்படும் இறைவனின் பல்வேறு திருவுருவங்களின் விளக்கமாகும். அந்த இறையுருவத்தின் பெயர், நிறம், அதன் கைகளில் இருக்கும் ஆயுதங்கள், ஆபரணம், இருக்கை (ஆசனம்), இருத்தல் நிலை, பிரத்யேக அடையாளங்கள் ஆகியவற்றைக் கூறி விளக்குகிற வடமொழியிலான செய்யுள் வடிவமாகும்.

அவ்வகையில் ஆகமம் கூறும் தியானங்கள் அபிராமி அந்தாதியில் மூன்று வகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. முதல்வகையில் அபிராமிபட்டர் சில தெய்வங்களின் பெயரை நேரடியாக வடமொழிச் சொல்லாலேயே குறிப்பிடுகின்றார். உதாரணமாக, ‘சுந்தரி’, ‘காளி, சூலி’ போன்றவற்றைக் கூறலாம்.

2. இரண்டாம்வகையில் சில தெய்வங்களின் பெயர்களை அவற்றிற்கான நேரடியான தமிழாக்கம் மூலம் குறிப்பிடுகிறார். உதாரணமாக,  ‘முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்’ (65), ‘சண்முகன்’, ‘பிறை முடித்த ஐயன்’ (52).

3. மூன்றாம்வகையில் சில கருத்துகள் மூலம் அந்தத் தேவதைகளுக்கு உண்டான தனித்தன்மையை குறிப்பிட்டு அந்தத் தேவதையின் பெயரை நாம் புரிந்து கொள்ளுகிற வகையிலே நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக - ‘மகிடன் தலைமேல் அந்தரி’ (8). துர்க்கை உருவ விளக்கப்படங்களும் அவற்றின் அருகே கொடுக்கப்பட்டிருக்கிற வடமொழி மூலமும் அதற்கான தமிழ் விளக்கமும் கீழ்காணும்வகையில் அபிராமி அந்தாதியுடன் தொடர்புடையவை ஆகும்:

மகிடன் தலைமேல் (துர்கா தியானம்)
‘ஏக வக்த்ராம் சிரோஜ்வாலாம் ரக்தநேத்ராம் புஜாஷ்டகாம்
நீலாங்கீம் கோராதம்ஷீட்ராம்ச நாநாலங்கார பூஷிதாம்
சாபபாணபாலாஸி சூலசக்ராயுதாம் வந்தே துர்காம் பதாக்ராந்த மஹிஷாஸுரமஸ்தகாம்’

ஒரு திருமுகம், ஜ்வாலையையுடைய சிரசு, சிவந்த கண்கள், எட்டு கைகள், கருமை நிற சரீரம், கோரைப் பற்கள் கொண்டவளும், பலவகைப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், வில், அம்பு, கபாலம், கத்தி, சூலம், சக்கரம், கதை ஆகிய ஆயுதங்களை உடையவளும், மகிஷாசுரனை வீழ்த்தி அவன் மத்தகத்தில் ஒரு காலை ஊன்றிக் கொண்டிருப்பவளுமான துர்கா தேவியை வணங்கு கின்றேன்.

இதுபோன்ற பெயர்கள் 150க்கும் மேல் அபிராமி அந்தாதியில் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு உருவமும், அவற்றை வழிபடுவதனால் ஏற்படும் பயனும், மற்றும் வழிபாட்டு முறையும் வெவ்வேறு. இவற்றைப் பற்றி விரிவாகப் பேசாமல் ஒரு வார்த்
தையிலேயே குறிப்பிடுகின்றார்.

மேலே குறிப்பிட்டபடி துர்க்கையை நாம் எப்படி புரிந்து கொண்டோமோ, அப்படி புரிந்துகொண்டு அதில் கூறியவண்ணம் வழிபடுதல் என்பது கருவிலே உருவானது முதல், கைலாய பதவியை அடைவதுவரை மனிதனுக்கு வெவ்வேறு சூழ்நிலைக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத் தரவல்லது. இவ்வகையில் அபிராமி அந்தாதியில் பல சொற்கள் சூத்திரமாககையாளப்பட்டுள்ளன.

வேதாகம சாத்திரங்கள், ஸ்ரீவித்யா உபாசகர்கள் மற்றும் நடைமுறையில் பின்பற்றுகின்றவர்களைக் கேட்டு அறிதல் நலம். இதன் மூலம் அபிராமி அந்தாதியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும், மிக விரிவாக அனுபவ சாத்தியப் படுகிற உண்மையை நமக்கு சொல்லவல்லதாகிறது. அதனால் சாத்திர, தோத்திர, சூத்திர நோக்கில் அபிராமி அந்தாதியை புரிந்துகொள்ள வேண்டும். பிற நூல்களைப்போல் இது இலக்கிய படைப்பு மட்டுமன்று, அதனினும் மேலானது, நுட்பமானது. இறையருளுடன் இனி நூலுக்குள் நுழைவோம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர் சிவாச்சாரியார்