அட, அப்படியா!



மட்டைத் தேங்காய் பிரார்த்தனை

திருச்சி டி.வி.எஸ்.காலனியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என வேண்டும் பெற்றோர், வேலை கிடைக்க வேண்டுவோர் எல்லாம் இங்குவந்து அனுமனை வேண்டி ஆலயத்தில் தரும் மட்டை தேங்காயை ஒரு பையில் கட்டி சந்நதியில் வடபுறத்தில் கட்டி விடுகின்றனர். இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்களுக்குள் அவர்கள் வேண்டுதல் பலிப்பது உண்மை. வேண்டுதல் நிறைவேறியதும் அந்தத் தேங்காயை அவிழ்த்து ஆலய நிர்வாகிகளிடமே தருகின்றனர். பின்னர் அது அவர்களால் காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

குறுக்கை தும்பிக்கையான்

திருப்பனந்தாள்-சீர்காழி பேருந்து தடத்தில் உள்ள மணல்மேட்டிலிருந்து 7 கி.மீ.தொலைவில் உள்ளது குறுக்கை என்ற தலம். இங்குள்ள வனதுர்க்கை ஆலயப் பிராகாரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வலம்புரி விநாயகர். தன்னை நாடிவரும் கன்னியர்களின் மனம்போல் மாங்கல்யம் அமையவும், அவர்கள் இல்லறம் சிறக்கவும் அருள்புரியக் கூடியவர் இந்த தும்பிக்கையான்.

கருப்பண்ணசாமிக்கு சுருட்டு நிவேதனம்

திருவானைக்காவலிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் உள்ளது ஸ்ரீசுயம்பு நாகமணி தேவி ஆலயம். இந்த ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் முனீஸ்வரன், மதுரை வீரனுடன் அருள்பாலிக்கிறார், கருப்பண்ணசாமி. மிகப்பெரிய உருவத்துடன் காட்சி தரும் இவருக்கு சுருட்டு வாங்கி அதை தூளாக்கி சாம்பிராணி போல் புகை தீபாராதனை காட்டி  வேண்டிக்கொள்ள, நினைத்த காரியம்
கைகூடும் என்பது நம்பிக்கை.

மாரியம்மன் முன் மழலை

திருச்சி அருகே உள்ளது மேலகல்கண்டார் கோட்டை. இங்கே பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பாலமுருகனுக்குப் பாதுகாவலாய் அவருக்கு முன் மாரியம்மன் அமர்ந்துள்ளாள். அன்னையுடன் அருள்பாலிக்கும் இந்த பாலமுருகனை வணங்கி, தாமும் அவனைப் போன்றே அழகுமிகு மழலைக்கு மாதாவாகும் பாக்கியம் அடைகிறார்கள், பெண்கள்.

- திருச்சி சி.செல்வி