கருணைமிக்கவன் காட்கரையப்பன்



- திருக்காட்கரை

காட்கரையப்பன் கொலுவிருக்கும் கோயிலுக்கு முன்னால் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. திருமாலால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி பிரதிஷ்டை செய்து ஸ்தாபித்த கோயில் இது என்கிறார்கள். அதனாலேயே இந்த சிவன் கோயில், பக்கத்தில் உள்ள காட்கரையப்பன் கோயிலை விடவும் தொன்மையானது என்றும் சொல்கிறார்கள்.  புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு இங்கே பூஜை போட்டு எடுத்துச் செல்வது இப்பகுதி மக்களின் வழக்கமாக இருக்கிறது.

லிங்கரூபமாக சிவன் அருள்பாலிக்கிறார். கருவறை முன் ‘பரமசிவன்’ என்று தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலை வலம் வந்தால் விநாயகர், முருகன், பார்வதி, துர்க்கை ஆகியோரை தனித்தனி சந்நதிகளில் தரிசிக்கலாம். வெகு அருகிலேயே, இருபதடி தொலைவில் அமைந்திருக்கும் காட்கரையப்பன் கோயிலுக்குள் போகலாம். பிராகாரச் சுற்றில் பிரமாண்டமான ஓர் அரசமரம் பசுமை போர்த்திக் கொண்டிருக்கிறது. மரத்தின் வேர் பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சியில் சிவன் என்று மும்மூர்த்திகளின் சங்கமமாக இந்த அரசமரம் திகழ்கிறது என்று சொன்னார்கள். மரத்தடியில் மேடைகட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளன்றும் இந்த மரத்தடியில் பூஜை மேற்கொள்கிறார்கள். அப்போது நாகர் இனத்து ஆதிவாசிகளின் ‘புல்லுவன்’ பாட்டைப் பாடி பூஜையை மேலும் சிறப்பிக்கிறார்கள். இந்த ஆயில்ய பூஜையின்போது, ஆலயத்தில் எந்தப் பகுதியிலாவது ஒரு நாகப்பாம்பு தென்படும் என்றும், வேறெந்த நாளிலும் இப்படிக் காணக் கிடைக்காது என்றும் சொல்கிறார்கள்.

மேலும் சுற்றி வந்தால் ஆலயத்தின் கபில தீர்த்தத்தைக் காணலாம். தான் தவம் செய்வதற்குத் தகுந்த இடம் தேடிவந்த கபில முனிவர் இந்தத் தலத்தைத் தேர்ந்தெடுத்தார். அப்போது இங்கே நீர்வளமே இல்லாததைக் கண்டு, மனம் நொந்து, தன் தவவலிமையால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். இந்தக் குளத்தின் மூலம் மலர்ச் சோலையை வளர்த்து அதிலிருந்து மலர்கள் கொய்து எம்பெருமானை அர்ச்சித்து வழிபட்டார். அந்தக் குளம் கபில தீர்த்தம் என்று இன்றளவும் வழங்கப்படுகிறது.

‘இது புனிதமான குளம். போத்திகள் மட்டுமே இதில் நீராடலாம்’ என்று கரைமீது ஓர் எச்சரிக்கை-அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். பச்சைப் பசேலென்ற வண்ணத்துடன் நீர் தேங்கியிருக்கும் அந்தக் குளத்தை இன்னும் நேர்த்தியாகப் பராமரிக்கலாமோ என்ற ஏக்கம் தோன்றுகிறது. சற்று தள்ளி பெரிய மண்டபம் ஒன்று இருக்கிறது. இதனை அன்னதானக் கூடம் என்றார்கள்.  அருகே பிரம்ம ராட்சசனுக்கு ஒரு சந்நதி.

கருவறையில் மூலவர் காட்கரையப்பன், வாமன மூர்த்தியாக எழில் கோலம் காட்டுகிறார். பக்கத்துத் திண்ணையில் ஒரு பெரிய குடை வைக்கப்பட்டிருக்கிறது. இது வாமனர் குடையாம். உற்சவ நாட்களில் ஊர்வலத்தின்போது மூர்த்திக்கு இந்தக் குடை பிடித்து அழைத்துச் செல்வார்களாம். சுவரில் சரஸ்வதி, சிவன்-பார்வதி ஆகியோர் ம்யூரல் ஓவியங்களாகத் திகழ்கிறார்கள்.

யக்ஷி மண்டபத்துக்கு முன்னால், மேலே சில பொம்மைத் தொட்டில்களைக் கட்டி வைத்திருக் கிறார்கள். மழலைப்பேறு வேண்டி, பெண்கள் கட்டி வைத்த பிரார்த்தனை தொட்டில்கள் இவை. பகவதி, ஐயப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டு திகழ்கிறார்கள். சரி, இப்போது கோயிலின் தல புராணத்தைப் பார்க்கலாமா? இந்தப் பெருமாளின் பேரெழிலிலும், அருளிலும் வயப்பட்ட யோகி ஒருவர், திருக்காட்கரையப்பன் சந்நதியைத் தன் வாழ்விடமாகக் கொண்டார்.

இமைப்பொழுதும் பெருமாளை நீங்காது அவருக்கு சேவை செய்தார். அப்போது அந்த ஊரில் ஒரு செல்வந்தனுக்குப் பெருந்துக்கம் ஏற்பட்டது. அவனது வாழைத்தோப்பில் எந்த மரமும் குலை தள்ளாமலேயே அழிந்து மடிந்தது. இதை எண்ணிப் பெரிதும் வருந்திய அவன், காட்கரையப்பனை சரணடைந்தான். பொன்னாலான ஒரு வாழைக் குலையை அவருக்குப் பரிகாரமாக சமர்ப்பித்தான்.

தன் வாழை மரங்கள் இயல்பான வளர்ச்சியடைய வேண்டும் என்று நேர்ந்து கொண்டான். அடுத்த சில நாட்களிலேயே அந்த வாழைமரங்கள் எல்லாம் பெருமகிழ்ச்சியுடன் குலை தள்ளி செல்வந்தனை சந்தோஷப்படுத்தின. தன் குறை தீர்க்குமாறு செல்வந்தன் நேர்ந்துகொண்டதால், அதற்குப் பிறகு விளைந்த வாழைக் குலைகள் ‘நேந்திரம் பழம்’ என்று அழைக்கப்படலாயிற்று. இன்றளவும் கேரளத்தின் பிரதான அடையாளமாக நேந்திரம் பழம் விளங்குகிறது.

ஆனால், சில நாட்கள் கழித்து, தான் நேர்ந்து கொண்டு, சமர்ப்பித்த பொன் வாழைக் குலை, கருவறையிலிருந்து காணாமல் போய்விட்டதைக் கண்டு திடுக்கிட்டான் செல்வந்தன். அப்போது அதே சந்நதியில் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருந்த யோகியின் மீது சந்தேகம் விழுந்தது. அவன் உடனே மன்னனுக்குத் தகவல் சொன்னான். விஷயம் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அந்த யோகியை அடித்துத் துன்புறுத்தினர். மன்னனும் கடுமையாக தண்டித்தான்.

இதைக் கண்டு பதைபதைத்தான் பரந்தாமன். தன்னுடைய சந்நதியிலேயே தன் பரம பக்தன் அநியாயமாக தண்டிக்கப்படுவதைக் காண மனம் பொறுக்கவில்லை அவனுக்கு. உடனே தனக்குத் திருமஞ்சனம் செய்த அபிஷேகப் பொருட்கள் தேங்கிக்கிடப்பதை அவர்கள் காணச் செய்தான். அவை வெளியேறாமல் தடுப்பது எது என்று சோதித்தபோது, கருவறை நீர் வெளியேற்றும் வழியை பொன் வாழைக் குலை அடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கண்டு செல்வந்தனும், மக்களும், மன்னனும் வெட்கித் தலைகுனிந்தார்கள். தாங்கள் யோசியாமல் செய்த அபவாதத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு யோகியிடம் வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால், யோகி மானஸ்தன். ஒரு யோகியாகத் தான் படக்கூடாத அவமானமெல்லாம் பட்டாயிற்று; இந்தக் கொடுமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, தற்கொலை செய்துகொண்டு விட்டான். அதுமட்டுமா, உயிர் துறக்குமுன், ‘என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அனைவரும் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் நாசமாகப் போகட்டும்’ என்று சபிக்கவும் செய்தான். இதைக் கேட்டு பதைபதைத்துப் போனார் பெருமாள். ‘மிகக் கடுமையான சாபம் இது.

இப்போது சிலர் செய்த தவறுக்காக இவர்களது சந்ததியும் சாப விளைவை அனுபவிக்க வேண்டுமா?’ என்று யோகியிடம் கேட்டார். உடனே யோகி, ‘கூரை வீடும், கொள்ளித் தீபமும் உண்டாகும்போது சாபம் நீங்கும்’ என்று கூறி உயிர் துறந்தான். கோயிலிலேயே இப்படி ஒரு துர்மரணம் நிகழ்ந்ததால், யோகி, பிரம்மராட்சசனாக அலைந்தான். இதனால் ஊரார் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர். அதோடு, பகைவர்களும் இந்தப் பகுதி மீது படையெடுத்து அந்த ஊரையே அழித்து நாசமாக்கினர்.

பிரம்மராட்சசனாக அலையும் யோகியின் ஆன்மாவை அமைதிப்படுத்தினால் இந்தத் துன்பங்கள் குறையும் என்று எண்ணிய மக்கள், கோயிலிலேயே பிரம்மராட்சசனுக்கு ஓர் இடம் உருவாக்கி, மந்திரத்தால் அவனை அங்கே நிலைநிறுத்தினார்கள். தினமும் காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிக்கப்படும் நிவேதனத்தில் ஒரு பகுதியை பிரம்மராட்சசனுக்கும் படைத்து அவன் ஆன்மா சாந்தியடைய வைத்தார்கள். ஆனால், எதிரி படையெடுப்பால் வீடுகள் எல்லாம் அழிந்துவிட்டன.

அதுமட்டுமல்ல, உண்பதற்கு எந்த உணவும், அடுத்த வேளை உடுப்பதற்கு உடையும் இல்லாமல் மக்கள் தவித்தார்கள். மூங்கில் கூரை வேய்ந்த வீடுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். ஒளி தர விளக்கு என்று எதுவும் இல்லாததால், கோரைப் புற்களை எரித்து வெளிச்சம் உண்டாக்கி அதில் வாழ ஆரம்பித்தார்கள். ஆக, யோகியின் சாபம் பலித்தது. இதற்கிடையில், அந்நியர் ஆக்கிரமித்திருந்த அந்த ஊரை, கேரள அரசர்கள் போரிட்டு மீட்டனர். பகைவர்களை விரட்டி மக்களை நல்வாழ்வுக்குத் திருப்பினார்கள். திருக்காட்கரையும் கபிலர் காலத்துப் பழைய வளத்தை மீண்டும் பெற்றது!

யோகியைப் பழியிலிருந்து காப்பதிலும் சரி, யோகியின் சாபத்தால் அனைத்து மக்களுக்கும் கேடு விளையுமே என்று வருந்தியதிலும் சரி, காட்கரையப்பன் கருணை மிக்கவனாகவே திகழ்ந்தான். இதே பரம்பொருள், மகாபலியின் கர்வம் அழித்த வாமன மூர்த்தியாகவும் வழிபடப்படுவதால், இங்கே திருவோணப்பெருவிழா தனிச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. காட்கரையப்பனுக்குப் பால் பாயசம் நிவேதித்து, தம்கோரிக்கைகளை பக்தர்கள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

‘வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய, என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே’

-நம்மாழ்வாரின் தேனினும் இனிய பதினொரு பாசுரங்களில் ஒன்று இது. பகவானை அனுபவிப்பதில் உணர்வு பூர்வமாக ஆழ்வார் ஈடுபடுகிறார். வாரியில் (கடலில்) எப்படி எண்ணற்ற, வகைவகையான, வண்ணம் பல கொண்ட மணிகளும், நவரத்தினங்களும் உற்பத்தியாகின்றனவோ, அதேபோல இந்த காட்கரைத் திருத்தலமே ஒரு கடல்போல அனைத்து தெய்வங்களும் தோற்றுவிக்கக்கூடியது. ஆனால், எத்தனை தெய்வங்கள் இங்கே உருவானாலும், அவர்களுக்கெல்லாம் ஆதியானவன் இங்கே கோயில் கொண்டிருக்கும் காட்கரையப்பன் என்று பெருமிதப்படுகிறார் ஆழ்வார்.

இந்தப் பரம்பொருள்தான் எப்படிப்பட்டவன்? பேரழகன், பெருந்தன்மையானவன், வேண்டும் வரமெலாம் வாரிவாரி வழங்குபவன். இத்தகைய இனியனை அப்படியே வாரி விழுங்கிவிட வேண்டும் என்ற வேட்கை ஆழ்வாருக்குத் தோன்று கிறது. திடப்பரிமாணம் கொண்ட ஒரு பொருளை அதன் வசீகரம், மணம், சுவையால் கவரப்பட்டு அப்படியே அள்ளி உண்டுவிட மனம் எப்படித் துடிக்குமோ அதேபோல இந்த காட்கரையப்பனையும் உண்டுவிட வேண்டும் போலிருக்கிறதாம் ஆழ்வாருக்கு.

பரந்தாமனோ இவரையும் விஞ்சிவிட்டான். ஆமாம், தன் பரமபக்தனான நம்மாழ்வாரை நீர்ப் பொருளாக்கி அப்படியே குடித்துவிடத் துடிக்கிறானாம்! என்னதான் ஆசைப் பட்டாலும், திடப் பொருளை விழுங்குவதற்குக் கொஞ்சம் சிரமம் இருக்கத்தானே செய்யும்? ஆனால், நீர்ப்பண்டம், எளிதாக விழுங்கக்கூடியதல்லவா? அதாவது, இறைவன் மீதான பக்தனின் ஈர்ப்பு ஒரு மடங்கு என்றால், பக்தன் மீதான இறைவனின் ஈர்ப்பு பல மடங்காகப் பெருகும் என்று பொருள். திருச்சூர் - எர்ணாகுளம் பாதையில் இரிஞ்சாலகுடா ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்காட்கரை. திருச்சூரிலிருந்து சாலை வழியாக 23 கி.மீ.

கோயில் தொடர்புக்கு: திருவிதாங்கூர்தேவஸ்வம்ேபார்டு, சங்கணாச்சேரி - 0484-6519867.