தொலைத்தது ஓரிடம், தேடுவது வேறிடம்!



திருமூலர் மந்திர ரகசியம்

“ஏங்க! கம்ப்யூட்டர், ஐ பாட், லேப் டாப், யு ட்யூப்-னு விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்குது. இந்தக் காலத்துல போயி, ஞான நூல்கள் அதுங்களச் சொன்ன மகான்கள்னு சொல்லிக்கிட்டு...” என்ற எண்ணம் பலபேருக்கு உண்டு. இது மேம்போக்கான, போகிற போக்கில் பேசுகிற பேச்சு. இந்த விஞ்ஞான சாதனங்கள் வராத காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தோமோ, அதையே தான் விஞ்ஞான சாதனங்கள் நிறைந்த இக்காலத்திலும் செய்து கொண்டிருக்கிறோம்!

தெய்வத்தின் அருளாடல் என்று ஓர் அஞ்சலட்டையில் எழுதி, “இதை நூறு பேருக்கு எழுதியனுப்ப வேண்டும் .அனுப்பினால் இதெல்லாம் கிடைக்கும்; இல்லாவிட்டால் விபரீத பலன்கள் வரும்” என மிரட்டிய நிகழ்வுகள் உண்டு. விஞ்ஞான சாதனங்கள் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இக்காலத்திலும், அதே மிரட்டல் வைபவம் முகநூல், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன!

தெய்வத்தைப் பற்றிய ஒரு தகவலைப் பதிவிட்டுவிட்டு, “இதை ஆயிரம் பேருக்குப் பகிருங்கள். நடக்கும் அதிசயத்தைப் பாருங்கள். பகிராமல் அலட்சியப் படுத்தினால் ஆபத்து விளையும்” எனவும் இந்த சாதனங்களில் பயமுறுத்தல் பதிவுகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. விஞ்ஞான வசதிகள் வளர்ந்து சந்திர மண்டலத்திற்கே போய்க் குடியேறினாலும், மனிதன் மனிதன்தான்! அவன் மனமும் அதேமனம்தான் . விஞ்ஞானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மெய்ஞானத்தைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதைப் பற்றித் திருமூலர், சொல்வதைப் பார்க்கலாம்:

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தினாலும் கலந்தறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தலுள் ஆமே
(திருமந்திரம் - 511)

கருத்து: உள்ளத்தின் உள்ளே உயிருக்கு உயிராக உணரப்படும் இறைவனை, அந்த உள்ளத்தில் அன்பில்லாமல், ஆரவாரமாகச் செய்யப்படும் செயல்களால், யாராலும் அடைய முடியாது, அன்பு வழியைத் தேடாமல், புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றையும் தேடிச் செல்பவர், தீவினையாகிய பள்ளத்தில் போடப்பட்ட ஓட்டை சால் ஆவர்.

நம்மைப் பற்றி அன்றே திருமூலர்
சொல்லிவைத்தாற்போல இருக்கிறது! விரும்புகிறோமோ இல்லையோ, பேருந்தில் ஏறிவிட்டோம்; பேருந்தோ நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. பயணத்தில் நமக்கு விருப்பமில்லை. அதற்காக ஓடும் பேருந்திலிருந்து கீழே குதிக்கவா முடியும்? பயணம் செய்துதானே ஆகவேண்டும்! அதுபோல, உடம்பு என்ற வாகனத்தில் ஏறி, வாழ்க்கை எனும் பயணத்தைத் தொடங்கி விட்டோம்; நம் விருப்பப்படி கீழே இறங்க முடியாது. பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டும். அப்பயணத்தில் நிகழும் அனைத்தையும் பொறுப்போடும், பொறுமையோடும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

செய்யத்தான் செய்கிறோம். எந்தவொரு செயலைச் செய்தாலும் விருப்பத்தோடு, வழிமுறைகளோடு செயல்பட்டு, நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறோம், அல்லவா? உதாரணமாக, பணம் எடுக்கும் இயந்திரத்தில், நேரே போய்ப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட முடிகிறதா நம்மால்? அந்த இயந்திரம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லி, நம் ரகசியக் குறியீட்டு எண்ணையும் பதிவு செய்தால்தானே, பணம்பெற முடிகிறது! வேறொருவரின் ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு எய்தால், பணம் கிடைக்காது.
 
அதுபோல, தீர்த்த யாத்திரை, திருத்தல தரிசனம், வழிபாடு முதலியவற்றில், நம் அன்பு என்பதை (ரகசியக் குறியீட்டு எண்) அழுத்தமாகப் பதிவு செய்தால், தெய்வம் ஒருபோதும் அருள்தர மறுப்பதில்லை. அப்படியிருக்க, தீர்த்த யாத்திரை முதலானவற்றில் ஈடுபடுபவர்களுக்கு முழுமையான பலன் கிடைக்காதது ஏன்? வேறு ஒன்றும் இல்லை. நாம் ஒவ்வொருவருமே அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுகிறோம். இருங்கள், இருங்கள், கோபம் வேண்டாம். ஒருசில விநாடிகள் யோசித்துப் பார்த்தால், உண்மை விளங்கும்.

அடுத்தவரிடமிருந்து நம் விருப்பப்படி எதைக் கவர்ந்து உபயோகித்தாலும் சரி, அது அடுத்தவர் செல்வத்தைக் களவாடுவதாகத்தான் கருதப்படும். நம்மில் பெரும்பாலானோருடைய நடவடிக்கைகள் அனைத்துமே, அடுத்தவர்களைச் சார்ந்ததாகத்தான் இருக்கிறது!. முக்கியஸ்தர்கள், பெரும் புள்ளிகள், நடிக-நடிகையர் என மற்றவர்களுடைய நடவடிக்கைகளை நாம் விரும்பி ஏற்றுக் கடைப்பிடிக்கிறோமே, இந்தவகையில் பெரும்பாலானோர் நம்முடைய உண்மை முகத்தைத் தொலைத்து விட்டோம். இந்தச் செயல்பாடுகள், நமது வழிபாடுகள் உட்பட அனைத்திலும் பரவிக் கிடக்கின்றன.

ஆடை, பூக்கூடை மட்டுமல்லாது, ஆலயங்களைக்கூட அடுத்தவரைப் பார்த்து, பெரும்புள்ளிகள் போகும் கோயில்களாகப் பார்த்துதான் செல்கின்றோமே தவிர, நாமாகச் செல்வது இல்லை. ஏராளமான ஆடம்பரம், ஆரவாரம், கள்ளம் புகுந்து விட்டது என்கிறார் திருமூலர். யாரையும் பார்த்து அப்படியே பிரதிபலிக்க முயலக்கூடாது. தெய்வத்திடம் நம்மைச் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர, அடுத்தவரையல்ல. ‘ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப் பாசத்துடன் வைத்துப் பரிவு செய்வார்களை’ எனத் திருமூலரே, மற்றொரு திருமந்திரத்திலும் சொல்லியபடி, யார் யார் எப்படிப்பட்ட உள்ளத்தோடு வழிபடுகிறார்கள் என்பது தெய்வத்திற்குத் தெரியும்.

பணம் எடுக்கும் இயந்திரம் கேட்கும் அனைத்துத் தகவல்களையும் தந்தாலும், அடுத்தவருடைய ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவிட்டால் பலனில்லாமல் போகிறதல்லவா? அதுபோல, தீர்த்த யாத்திரை, திருத்தல யாத்திரை, வழிபாடு ஆகியவற்றில் கள்ளத் தனம் இருந்தால், அத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டும் பலனில்லை என்கிறார் திருமூலர். அதையும் ஓர் அற்புதமான உதாரணத்தின் மூலமாகச் சொல்கிறார்.

முற்காலத்தில் வயல்வெளிகளில் ஏற்றம் வைத்து நீர் இறைப்பார்கள். ஆழமாக உள்ள பெருங்கிணற்றில் இருந்து ‘சால்’ மூலம் நீர் பாய்ச்சுவார்கள். சால் என்பது தோலால் செய்யப்பட்ட ஒரு பெரிய கிண்ணம்போல இருக்கும். என்னதான் ஆழ அமுக்கி நீர் முகந்தாலும், சாலில் பல ஓட்டைகள் இருந்தால், பலன் கிடைக்காதல்லவா? அதுபோல தீர்த்த யாத்திரை, திருத்தல யாத்திரை, வழிபாடு ஆகியவற்றை என்னதான் விரிவாக நடத்தினாலும், உள்ளத்தில் உள்ள தீய குணங்கள் என்னும் ஓட்டைகளால் இறையருள் நமக்குக் கிடைக்காமல் போகிறது.

திருமூலர் இப்பாடலின் மூலம் ,’உள்ளத்தின் உள்ளே உள்ள இறைவனையறிந்து இறையருள் பெற முயலுங்கள்’ என்கிறார். விஞ்ஞான சாதனங்கள் விரைவாக ஆலயத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை நம் மனதை ஆண்டவன் திருவடிகளில் சமர்ப்பிக்க உதவாது. சொல்லப்போனால், தெய்வத்திடம் அடைக்கலம் புகும் மனதைக்கூட, தன்வழியில் திருப்பி, நம்மைக் கெடுத்துவிடும், அவ்விஞ்ஞான சாதனங்கள்.

சந்நதியில் நின்று கொண்டிருப்போம். தீபாராதனை நேரத்தில். மெய்மறந்து ஆண்டவனைத் தரிசித்துக் கொண்டிருக்கையில், செல்போன் ஒலிக்கும். அதன்பின் வழிபாடாவது, ஒன்றாவது! செல்போனுடன் வெளியேறி விடுவோம். திருப்பித் திருப்பி, ஞான நூல்கள் எல்லாம், மனம், மனம் என்று மனதைப் பற்றியே கூற இதுவே காரணம்.

நம் மனம் அந்த அளவிற்கு வெளிவிவகாரங்களில் பழக்கப்பட்டு அழுந்திக் கிடக்கின்றது. வேறுவழியே கிடையாது. அழுந்திக் கிடக்கும் உள்ளத்தை எப்பாடுபட்டாவது மீட்டு வெளியே எடுத்துத்தானாக வேண்டும். ஆனால், நாம் செய்வதில்லை. எங்காவது எதிலாவது நிம்மதி கிடைக்குமா என்று ஒவ்வொன்றாகத் தேடித்தேடி அலைகிறோம். அடிப்படையான அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் நிற்காததைப்போல, நம் மனக்கோட்டைகள் தகர்ந்து போகின்றன; நம்மையும் தகர்க்கின்றன. இதைத் தவிர்க்க, தேடித்தேடி அலையும் நம்மைப் பார்த்துத் திருமூலர் சொல்லும் அடுத்த பாடல்:

‘கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார்; தம்மை
ஒப்பாரில்லார் திட முற்ற
நந்தி திருவருளாற் சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறியாரே                      
 (திருமந்திரம் - 505)

கருத்து: கடலில் ஒரு பொருளைப் போட்டு விட்டு, அதைக் குளத்தில் தேடுவதைப்போல, உடலிலேயே ஒப்பற்ற தீர்த்தங்கள் பல இருப்பதை அறியாமல், அதை வெளியே தேடி அலைபவர்களைப் போன்றோர், யாருமிருக்க மாட்டார்கள். உயிருக்கு உற்ற துணையாக, இறைவன் உடலுக்குள்ளேயே பொருந்தியிருப்பதை, அவர்கள் சிறிதுகூட உணர வில்லையே!

இதுதான் கடலில் போட்டுவிட்டுக் குளத்தில் தேடுவது என்பது! இதையே நகைச்சுவையாகவும் சொல்வார்கள். சிறு பையன் ஒருவன். இரவு நேரத்தில் வீதியிலுள்ள பெரும் விளக்கின் அடியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒருவர், “ஏன்டா தம்பி, என்னத்தத் தேடற?” எனக் கேட்டார். “நூறு ரூவா நோட்டு ஒண்ணு காணோம். அதத்தான் தேடறேன்” எனப் பதில் சொன்னான் சிறுவன்.

விவரமறிந்து இன்னும் சிலர் சோ்ந்து தேடத்தொடங்க, அது ஒரு சிறு கும்பலாகி, பணத்தைத் தேடிக்கொண்டிருந்தது. அப்போது ஒருவர், “தம்பி, இங்கதான தொலச்சே?” எனக் கேட்டார். சிறுவன் ‘பளிச்’சென்று பதில் சொன்னான்: “இங்க இல்ல. பணத்த நாந்தொலச்சது அங்க பெரிய தெருவுல. அங்க இருட்டா இருக்குது, தேடமுடியல; இங்கதான் வெளிச்சமா இருக்குது. அதனாலதான் இங்க வந்து தேடறேன்,” என்றான்.

பழங்காலக் கதையிது. இக்கதையில் வரும் சிறுவன் - நாம்தாம். ஓரிடத்தில் தொலைத்துவிட்டு வேறோரிடத்தில் தேடுகிறோம். ஏதோ நம்மிடம் மிச்சம் மீதி இருக்கும் நிம்மதியை, இருட்டில் தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடுகிறோம் வேறோரிடத்தில். ‘உள்ளத்தின் உள்ளே உள்ள ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியான இறைவனை மறந்துவிட்டு, வெளியில் தேடுகிறீர்களே எனக் கேட்கிறார் திருமூலர். அது மட்டுமல்ல, ‘உயிருக்கு உற்ற துணையாக இறைவன், உடலுக்குள்ளே பொருந்தியிருப்பதை அறியவில்லையே’ என வருந்தவும் செய்கிறார்.

ஆழமான தகவல் இது. உபநிடதங்கள், கீதை, திருப்புகழ் முதலான ஞானநூல்கள் அனைத்தும் பாடம் நடத்திய தகவல் இது. அந்தப் பாடம்தான் என்ன? படிக்கலாம் வாருங்கள் - அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகக் கண்ணன் அமைந்து, கீதையை உபதேசித்ததாகச் சொல்வோம். அர்ஜுனன் யார், கண்ணன் யார், கண்ணன் ஓட்டிய தோ் எது?

‘பத்தர்க் கிரதத்தைக் கடவிய பச்சைப் புயல்’ என முதல் திருப்புகழில் அருணகிரிநாதர் சொன்னது என்ன? இதை எளிமையாகச் சொல்வார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். “அறிவுள்ளதும் அறிவில்லாததும் ஒன்றாகச் சேராது. மாட்டுக்கு அறிவு உண்டு; வண்டிக்கு அறிவு கிடையாது. ஒருவர் வந்து படுத்துக்கிடக்கும் மாட்டை எழுப்பி, வண்டியில் பூட்டி,வண்டியை ஓட்டிக்கொண்டு போவார்.

அந்த வண்டிக்காரர் மாட்டிடமும், வண்டியிடமும், “உங்களை எங்கே அவிழ்த்து விடட்டும்? இந்த ஊரிலா, அந்த ஊரிலா?’’ என்று கேட்கமாட்டார். அவருக்காக எங்கே தோன்றுகிறதோ அங்கே மாட்டயும் வண்டியயும் பிரித்துவிட்டுப் போய்விடுவார். தேரில் அர்ஜுனனை வைத்து கண்ணன் தேர் ஓட்டினார் என்பதும் இதுதான்!  “தேர்- நம் உடல். சாரதியான கண்ணன் - தெய்வம். அர்ஜுனன் - நாம். உடம்பு எனும் தேரில் தெய்வம் அமர்ந்து, ஆன்மாவான நம்மைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. அது எப்போது உடம்பையும் உயிரையும் தனித்தனியாகப் பிரித்து விடுமோ, தெரியாது,’’ என்பார்.

யோசிக்க வேண்டிய விஷயம் இது. எதை எதையோ யோசிக்கிறோம்; இயன்றதைச் செய்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இதை யோசித்தால், நன்றாக இருப்போம் நாம். உடம்பையும் உயிரையும் இணைத்தது நாமல்ல. அவற்றை இணைத்தது தெய்வம். ஒரு வீட்டைக் கட்டி , அதில் நாமே குடியிருப்பதைப் போல, உயிரையும் உடலையும் இணைத்த தெய்வம், தானே வந்து நம் உள்ளத்தில் குடிகொள்ளவும் செய்கிறது. அதை உணராமல், தெய்வ வழிபாட்டை வெளியே மட்டும் செய்து பலன் இல்லை.

உதாரணமாக, மின்சாரப் பலகை (மெயின் ஸ்விட்ச் போர்ட்) இருக்கிறது. அதிலிருந்து, ஒரு குழாய் விளக்கு (பல்ப்)வரை செல்கிறது. விளக்கும் இருக்கிறது. ஆனால் மின் பொத்தானை அழுத்தினால், விளக்கு எரியவில்லை. ஏன்? தொடர்பு உண்டாக்கும் குழாயின் உள்ளே மின்கம்பிகள் (ஒயர்) இல்லை.

இணைப்பு இல்லை என்றால், விளக்கு எப்படி எரியும்? அதுபோல, நாம் செய்யும் வழிபாடுகளில், “என் உள்ளத்தில் இருக்கும் இறைவன் இதோ, இங்கே எழுந்தருளியிருக்கிறார்” எனும் அழுத்தமான எண்ணம் பதிய வேண்டும் என்கிறார் திருமூலர். இயன்றவரை செய்வோம்! இறையருளைப் பெறுவோம்!

(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்