விருப்பங்கள் நிறைவேற்றுவார் திருவாழ்மார்பன்



- திருவல்லவாழ்

(ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத் திவ்யதேசத் திருத்தலங்கள் சிலவற்றை இந்த இதழில் தரிசிப்போம்)

தலத்துப் பெயரைச் சொன்னாலேயே தவறாது நற்பேறு அளித்திடும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயம், திருவல்லவாழ். இப்படி அந்தச் சிறப்பைப் பாசுரமாகச் சொல்லியிருக் கிறார் திருமங்கையாழ்வார்:

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லும் வல்லையாய் மருவு நெஞ்சே

- திருமங்கையாழ்வார் தன் மனதை நோக்கிப் பேசுகிறார்: ‘‘பற்று என்ற உணர்வால் மயங்கி கிடக்கும் மனமே, தந்தை, தாய், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று பலவாறாக உலகியல் பந்தங்களில் உழன்று நீ தவிக்கிறாய். ஒரு கட்டத்தில் இதெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட தொடர்புகள் என்றும் விரக்தி கொள்கிறாய். அதனால், உண்மையான பற்று எது என்று புரியாமல் மயங்குகிறாய். பிரளய காலத்திலும்கூட, பிரபஞ்சமே அழிந்திடும் நிலையிலும்கூட, புகலிடம் அருள்பவன் எம்பெருமான்.

அதுமட்டுமா, படைப்புக் காலத்தில் முதல் தோற்றம் காண்பிப்பவனும் அவன்தான். இத்தனை பராக்கிரமங்களுக்கும் சொந்தக்காரனான அவன்தான் எப்படிக் காட்சியளிக்கிறான்? எளியனாய், ஓர் இடையனாய் அல்லவா தோன்றுகிறான்! அப்படிப்பட்ட பரந்தாமன், அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறான், திருவல்லவாழ் என்ற திருத்தலத்தில். உலகப் பற்றறுக்க விழையும் மனமே, அந்த திவ்ய தேசத்தின் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே இரு, போதும். உண்மையான பற்றினையும், அதன் அர்த்தத்தையும் நீ புரிந்துகொள்வாய்.’’

ஆலயத்துக்கு முன்னால் செம்பால் ஆன உயர்ந்த துவஜஸ்தம்பத்தைப் பார்க்கலாம். இது நேர்கோணத்தில் கோயிலைப் பார்த்து இராமல், சற்று விலகி அமைந்திருக்கிறது. சிதம்பரம் அருகே உள்ள திருப்புன்கூர் தலத்தில், தன்னை நேராக தரிசிக்க முடியாதபடி குறுக்கே நின்ற நந்தியினை ஈசன், ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்று கேட்டு விலகி அமரச் சொன்னதுபோன்ற புராண நெகிழ்ச்சி ஏதேனும் இருக்குமா என்று விசாரித்தபோது, யாருமே எந்தத் தகவலுமே தராத ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘அது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம்.

ஒருகாலத்தில் இந்த கொடிமரம் கோயில் வளாகத்திற்குள் அமைந்திருந்திருக்கக் கூடும். பின்னாளில், கோயிலைப் புனரமைத்தவர்கள், கொடிமரத்துக்கும், கோயிலுக்குமான இடைவெளி வெகு அதிகமாக இருப்பதை உணர்ந்து, கொடிமரத்தை விட்டு கோயில் நுழைவாயிலை பின்னால் தள்ளி அமைத்திருக்கலாம். கோயிலுக்குள்ளே ஒரு கொடிமரம் இருக்கிறதே, அது, நேராக கர்ப்பகிரஹ கோணத்தில்தானே நிற்கிறது!’ என்ற உத்தேசமான, ஊகமான பதில்தான் கிடைத்தது.

பிரதான நுழைவாயிலின் உச்சியில் திருவாழ்மார்பன் நின்ற கோலத்தில் சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறார். கோயிலுக்குள் கருவறையிலும் பெருமாள் இதே கோலம்தான் காட்டுகிறார், ஆனால், உலோகத் திருமேனி! உள்ளே நுழைந்ததும் நிமிர்த்திவைத்த நிலையில் சங்கு ஒன்று சுதை சிற்பமாகக் காணப்படுகிறது. அந்த சங்கைச் சுற்றி, ‘ஓம்சங்கபதே நமஹ; ஓம் விஷ்ணுபதே நமஹ’ என்று மலையாளத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பகுதியின் முன் மண்டபத்தில் திருமால் பாற்கடல் சயனனாக அருட்காட்சி நல்குகிறார்.

இடது பக்கம் கலா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது, ஆன்மிகக் கலை நிகழ்ச்சிகள் இந்தப் பெரிய மண்டபத்தில் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். கருவறை மண்டபத்துக்கு எதிரில் கோபுர வடிவிலான மண்டபத்தில் கருடாழ்வார், மிகப் பெரிய ஓவியமாகத் திகழ்கிறார். இந்தக் கோபுரத்தின் உச்சியில் அவரே விக்ரகமாக, பவ்யமாக பெருமாளை வணங்கியபடி விளங்குகிறார். இந்தக் கோபுர மண்டபம், மிக பிரமாண்டமான, 50 அடி உயர பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

கருடாழ்வார் மண்டபத்துக்கு முன்னால் சாய்வாக ஒரு பாறை நிறுவப்பட்டுள்ளது பக்தர்களின் சிதறு தேங்காய் வழிபாட்டுக்காக. பிரதான மண்டபத்துக்கு முன்னால் சம்பிரதாயமான துவஜஸ்தம்பம். அருகில் காண்டாமணி கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. துவஜஸ்தம்பத்தைக் கடந்தால் மிகப் பெரிய பலிபீடம். அருகே துலாபாரம் காணிக்கைப் பகுதி. வெளிப்பிராகாரச் சுற்றில் விக்னேஷ்வர் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். அவரைப்போலவே ஐயப்பனும் தனியே விளங்குகிறார். மேற்கூரையில்லாத சந்நதியில் ‘குறையப்ப சாமி’ அருள்கிறார்.

அது என்ன குறையப்ப சாமி? பக்தர்களின் குறைகளை எல்லாம் களையச் சொல்லி திருவாழ்மார்பனுக்கு சிபாரிசு செய்பவராம்! வட்டவடிவ கருவறைச் சுற்றில், இடது மண்டபத்தில் துலாபார காணிக்கைகளான வாழைக்காய்கள், வாழைப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கருவறைச் சுவரில் விஷ்ணுவின் பல கோலங்களும், கிருஷ்ணனின் லீலைகளும் ஓவியங்களாக மிளிர்கின்றன. பூஜையின் ஓர் அங்கமாக மஹாவிஷ்ணுவின் புகழை மேளதாள ஒத்துழைப்புடன் சிலர் பாடுகிறார்கள்.

கோஷ்டத்தில் மேற்கு பார்த்து சுதர்ஸன மூர்த்தி தனியே தரிசனம் தருகிறார். கருவறை சுற்று மண்டபத்தைப் பல தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன. அங்கே, விஷ்ணு, சிவன், பார்வதி, நிருத்த கணபதி, சுப்பிரமணியர், விஷ்வக்சேனர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். வியாசரும், துர்வாசரும் வந்து தங்கி இந்தப் பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள். இவர்களில் துர்வாசர் பிரதிஷ்டை செய்த மூலவர்தான் திருவாழ்மார்பன் என்கிறார்கள். இந்த ஐயனை, திருவாழ் மார்பன், ஸ்ரீவல்லபன், அலங்காரப்பிரான், அலங்காரத் தேவன், கோலப்பிரான் என்றெல்லாமும் அழைத்து பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

இக்கோயிலுக்கான புராண ஆதாரம் என்ன?
இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவள் சங்கரமங்கலத்து அம்மை. குழந்தைப்பேறு வேண்டி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தாள் அவள். ஏகாதசி அன்று நீர்கூடப் பருகாமல், கடும் விரதம் அனுசரித்த அவள், அடுத்த நாள், நீராடிவிட்டு ‘பாரணை’ செய்வாள். அதாவது, உணவு எடுத்துக்கொள்வாள். இப்படி நீடித்து இந்த விரதத்தை மேற்கொண்டாளானால், அவளுடைய வேண்டுகோள், இறையருளால் நிறைவேறும் என்பது அவளுடைய திடமான நம்பிக்கை.

தனக்குக் கிடைக்கப்போகும் பலனைவிட, இந்த சாக்கில் பரந்தாமனை வெகு தீவிரமாக வழிபடக்கூடிய வாய்ப்பில்தான் அவள் பெரிதும் மகிழ்ந்தாள். ஆனால், விரதத்தை சரியாக முடிக்க இயலாதவகையில், இடையூறு செய்தான் தோலகாசுரன் என்ற அரக்கன். ஊர் மக்களின் அறச்செயல்களையெல்லாம் நிர்மூலமாக்கி மகிழ்ந்தான் அவன். யாரும் நிறைவாக இறைச்சேவை செய்துவிடாதபடி பார்த்துக் கொண்டான்.

அந்தவகையில் ஒரு துவாதசி நாளில், சங்கரமங்கலத்து அம்மை பாரணை மேற்கொள்ள முடியாதபடியும், அவளுக்கு ஊரார் எந்த உதவியையும் செய்துவிடாதபடியும் தடுத்தான். திடுக்கிட்ட அம்மை, பரம்பொருளின் அருள் வேண்டினாள். உடனே பிரம்மச்சாரி கோலத்தில் பூமியில் இறங்கினார் பகவான். தோலகாசுரனுடன் கடும் போர் புரிந்தார். இறுதியில் தன் சக்கரத்தை அவன் மீது ஏவிவிட, அவன் உருக்குலைந்து நிர்மூலமானான்.

பிறகு சக்கரமும் அந்த தோஷம் நீங்க, பூமியைத் துளைத்து ஒரு நீர்நிலையை உருவாக்கி, அதில் நீராடி, இத்தலத்துப் பெருமானின் வலது கரத்தில் போய் அமர்ந்தது. இப்படி, இந்தத் தலத்தில் சக்கரத்துக்குப் புராண முக்கியத்துவம் இருப்பதாலோ என்னவோ, சங்குக்கும் மேன்மையளிக்க வேண்டி, அதற்குக் கோயிலின் முற்பகுதியிலேயே பகவான் தனி இடம் வழங்கி சிறப்பித்திருக்கிறார் போலிருக்கிறது!

அசுரனை வதைத்துத் தன் விரதத்தைக் காத்த பிரம்மச்சாரியைக் கண்ணுற்றாள் அம்மை. தான் அணிந்திருந்த மான்தோல் ஆடையால் தனது இடது மார்பை அவன் மறைக்க முயற்சிப்பதையும் கவனித்தாள். உடனே அது பரந்தாமன்தான் என்பதும், அவன் மறைக்க முயற்சிப்பது தன் இடபாகத்தில் எழுந்தருளியிருக்கும் மஹாலக்ஷ்மியைத்தான் என்பதையும் புரிந்துகொண்டாள். தோலகாசுரனை ஒரு பிரம்மச்சாரியால்தான் வீழ்த்த முடியும் என்ற நிபந்தனை காரணமாகவே எம்பெருமான் பிரம்மச்சாரியாக வந்தான் என்பதையும் தெரிந்துகொண்டாள்.

உடனே அவர் பாதம் பணிந்து தன் நன்றியைத் தெரிவித்தாள். அதோடு, ‘‘நீ உன் மார்பை மறைத்தாலும், அதனுள் உறையும் மஹாலக்ஷ்மியை நான் அறிவேன். மறைக்க முயற்சிக்கும் அந்த நொடியில் நான் தாயாரை தரிசித்துவிட்டதால், இதே திரு வாழ் மார்பனாக, இங்கே உன்னை தரிசிக்க வரும் அடியார் அனைவருக்கும் ஆனந்த தரிசனம் நல்க வேண்டும்,’’ என்று நெகிழ்ந்து கேட்டுக்கொண்டாள். திருமாலும் அதற்கிணங்கி, இந்தத் தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் தன்னை தரிசித்தாலேயே தாயாரையும் சேர்த்து தரிசிக்கும் பாக்கியமும் கிட்டுமாறு விதி செய்தார்.

இப்படி அரூபமாக, பரந்தாமனுக்குள் விளங்கும் தாயாரின் பெயர் என்ன தெரியுமா? வாத்ஸல்ய தேவி! எந்த பாரபட்சமும் பார்க்காத, எல்லா பக்தர்களையும் ஒரே வாத்ஸல்யத்துடன் (பாசத்துடன்) பரிபாலிக்கும் தாயார் இவர்! இந்தக் கருவறையை தரிசித்தாலே வாழ்வில் நல்திருப்பங்கள் ஏற்படும் என்பது பலரது அனுபவம். கொல்லம்-எர்ணாகுளம் பாதையில் உள்ளது திருவல்லவாழ் ரயில் நிலையம். இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயில் தொடர்புக்கு: திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு: 0469-2700191.