குறையெல்லாம் தீர்க்கும் குந்துமணி பிரத்தனை- திருவாரண்முளா

சாலையிலிருந்து நேராக மேலே முப்பது படிகள் ஏறி கோயிலுக்குள் செல்லலாம். முன்மண்டபத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நிறைய குத்து விளக்குகளில் தீபமேற்றி இத்தல இறைவனைக் கொண்டாடுகிறார்கள். தினமும் இப்படி விளக்கேற்றுவது பக்தர்களின் பங்களிப்பால் நிகழ்வது. அப்படி யாரும் இந்த கைங்கர்யத்தை மேற்கொள்ள முன்வராவிட்டால்கூட ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில் நிர்வாகமே விளக்குகளை ஏற்றி ஒளிபரப்புகிறது.

ஆனால், மாலை நேரங்களில் கருவறைச் சுற்றில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான விளக்குகளை சில இளைஞர்கள் தாமே முன்வந்து ஏற்றி, கோயிலை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறார்கள். பிராகாரச் சுற்றில் சாஸ்தா, யக்ஷியம்மன், பகவதி ஆகிய கடவுளர்கள் தனித்தனி சந்நதிகளில் அருள் பெருக்குகிறார்கள். பிராகாரத்திலிருந்து படியிறங்கினால், இக்கோயிலின் தல தீர்த்தமான பம்பை நதியை அடையலாம். அந்தப் புண்ணிய தீர்த்தத்தை சற்று எடுத்து, தலையில் தெளித்துக்கொண்டு, படியேறி வரலாம்.

இந்த பம்பை ஆற்றிலிருந்துதான் கற்களை எடுத்து இந்தக் கோயிலை முழுமையாகக் கட்டினார்கள் என்றும், அதனாலேயே ஆற்றில் கற்களே இருக்காது என்றும், பக்தர்கள் பயமின்றி நீராடலாம் என்றும் தகவல்கள் கிடைத்தன. சற்றுத் தொலைவில் தரைத்தளத்திலிருந்து கீழே படியிறங்கினால் இரு சந்நதிகளைத் தரிசிக்கலாம். பலராமன், சிவன்-கணபதி ஆகியோருக்கான சந்நதிகள் அவை. இவற்றை வலம்வரும் அளவுக்கு பெரிதாக அந்த முற்றம் விளங்குகிறது.

ஒருசமயம், கிருஷ்ணரும், பலராமரும் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாகவும், அப்போது கிருஷ்ணர், பலராமரிடம், ‘அண்ணா, நீங்கள் இங்கேயே தங்கி, இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்குவீர்களாக’  என்று கேட்டுக் கொண்டதாகவும், அதனாலேயே இங்கே பலராமர் அர்ச்சாவதாரம் கொண்டதாகவும் இந்த சந்நதியில் பக்தர் வழிபாட்டை நிறைவேற்றும் அர்ச்சகர் சொன்னார்.

கருவறைக்கு முன்னால் துவஜஸ்தம்பம் நெடிதுயர்ந்து நிற்கிறது. அதனடியில் நிறைய வன்னிக்காய்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதெல்லாம் பக்தர்கள் வேண்டிக்கொண்டு சமர்ப்பித்த காய்களாம். சிவப்பு வண்ணத்தில் பளபளக்கும் அந்தக் காய்களை பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, கொடிமரத்துக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் பெரியவரிடமிருந்து இருகை நிறைய காய்களை அள்ளிக்கொண்டு கொடிமரத்துக்கு வந்து உளமாற பிரார்த்தனை செய்துகொண்டு, மரத்தடியில் கொட்டுகிறார்கள், பக்தர்கள்.

இதனால் தம் கோரிக்கைகள் நிறைவேறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். இங்கு துலாபார பிரார்த்தனையும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு இந்த வன்னிக்காய்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குந்துமணி என்றும் அந்தக் காய்களை அழைக்கிறார்கள். அந்நாளில் சில வீடுகளில் பல்லாங்குழி விளையாட இந்தக் குந்துமணிகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்தது.

கேரள சம்பிரதாயமான வட்டக் கருவறைக்குள் பகவான் பார்த்தசாரதி கொலுவிருக்கிறார். அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த திருவுரு இது. பின்னாளில் இச்சிலையின் ஒரு கரம் பின்னப்பட்டதாகவும், கோயில் சிற்பங்களை உருவாக்கித் தரும் தந்திரி ஒருவர் மூளியான கரத்திற்கு பதிலாக தங்கத்தாலான கையைப் பொருத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கருவறைச் சுவரில் காளி, சித்தி விநாயகர் முதலான கடவுளர்களின் ஓவியங்கள் இன்னும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் காட்சியளிக்கிறார்கள்.

கருவறைச் சுற்றில் வைகுண்ட வாசனை தரிசிக்கலாம். மூலவர் பார்த்தசாரதிக்கு முன்னால் வெள்ளியாலான கருடாழ்வார் ஒளிர்கிறார். சிற்ப ரூபமாக குழலூதும் கண்ணன் மற்றும் வாமனரை தரிசிக்கலாம். முன் மண்டபத்தூண்களில் ராமர், அகத்தியர், அனுமன் முதலானோரை தரிசிக்க முடிகிறது. சபரிமலையில் மகரஜோதி வைபவத்தின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இந்தக் கோயிலில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பெருமாளை அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததன் பின்னணி என்ன?
சல்லியன் இப்படி ஒரு துரோகியாக மாறுவான் என்று கர்ணன் எதிர்பார்க்கவேயில்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்துகொண்டிருந்தது. அர்ஜுனனை வீழ்த்தி, தன் துரியோதன விசுவாசத்தை நிரூபிக்கும் முழு முயற்சிகளில் கர்ணன் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அவனுடைய தேர்ச் சக்கரம் போர்க்கள சேற்றில் புதையுண்டது. தனக்குத் தேரோட்டியாகப் பணிபுரிந்த சல்லியனிடம், தேரைவிட்டிறங்கி, சக்கரத்தை நிமிர்த்துமாறு கட்டளையிட்டான் கர்ணன்.

ஆனால், சல்லியனோ, அது தன் வேலை அல்ல என்று வெகு சுலபமாக பதிலளித்துவிட்டான். தேரோட்டுவது மட்டுமே தன் பணி என்றும், சேற்றில் புதைந்த சக்கரத்தை கர்ணனேதான் மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அலட்சியமாக சொன்னதோடு, அந்த இடத்தை விட்டு, கர்ணனைத் தனியனாக விட்டுவிட்டு, விலகிச் சென்று விட்டான். தன் சுய முயற்சியாலேயேதான் போரைத் தொடரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குள்ளானான் கர்ணன். பாதி குடைசாய்ந்த தேரிலிருந்தபடி போரிட முடியாது.

சக்கரத்தை மீட்டு, தேரை சம நிலைக்குக் கொண்டுவந்து, தானே தேரையும் ஓட்டிக்கொண்டு, போரையும் தொடரவேண்டிய கட்டாயம். அது எப்படி சாத்தியம் என்பதைவிட, துரியோதனனுக்குத் தான் பட்ட நன்றிக்கடனை வட்டியும், முதலுமாகத் திருப்பி செலுத்திவிடும் வேகம்தான் அவனுக்கு அதிகம் இருந்தது. அதோடு, அந்நாளைய போர் தர்மப்படி, விழுந்துவிட்டாலும், தான் சுதாரித்துக்கொண்டு, போர் புரிய மீண்டும் முழுவதுமாகத் தயாரான பிறகுதான் எதிரி தாக்கத் தொடங்குவான் என்று நம்பிய அவன், தேரிலிருந்து குதித்து புதையுண்டிருந்த சக்கரத்தை தன் கரபலத்தால் மேலே தூக்கிவிட முயன்றான்.

முழுபலத்தையும், வேகத்தையும் பிரயோகித்து, மூச்சடக்கிப் பிரயத்தனப் பட்டான் கர்ணன். ஆனால், அதேசமயம், கிருஷ்ணனின் தூண்டுதலால், சற்றும் விருப்பமில்லாத, மிகுந்த தயக்கத்துடன் புறப்பட்ட அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் மார்பைத் துளைத்தது. திடுக்கிட்டான் கர்ணன். போர் நியதிகளுக்கு முரணாக, நிராதரவாக நின்ற எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அம்பு எய்யும் சதிக்குத் தான் பலியாவதை எண்ணி மனம் வெதும்பினான்.

துரியோதனன் என்ற தீயவனுக்கு துணைபோனதால், மரணத்தையும் முறை தவறிய உத்தியாலேயே தான் சந்திக்க வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அதைவிட, தான் வாரி வழங்கியதாகப் பிறர் போற்றும் போது, அதையெல்லாம் பெருமையுடன் கேட்டுக்கொண்டிருந்த தன் சிறுமைக்கு, பகவான் தந்த தண்டனை அது என்றும் சிந்தித்தான். ஆமாம், தான் எந்தவகையிலும் சம்பாதிக்காத அல்லது அந்த சொத்துகளுகாகக் கொஞ்சமும் உழைக்காத, உணர்ச்சிவசப்பட்ட ஒரு கட்டத்தில் துரியோதனன் தூக்கிக் கொடுத்த இந்த சொத்துகளுக்கு, தான் அதிபதியாக கர்வப்பட்ட செருக்குக்குச் சரியான தண்டனையோ என்றும்கூட யோசித்தான்.

யாரோ ஒருவருடைய சொத்தை, வறியவர்களுக்கும், தேவைப் பட்டோருக்கும் தானமாக வழங்கும் சாதாரண கைமாற்றுப் பணியாளனாகிய தான் சிறந்த கொடையாளி, வாரி வழங்கும் வள்ளல் என்றெல்லாம் பட்டம் ஏற்றது சரிதானா, நகைப்புக்குரியது அல்லவா என்றெல்லாமும் மரண நேரத்தில் எண்ணி வேதனைப்பட்டான் கர்ணன். ஆனால், இவனைவிடப் பெரிதும் துயருற்றவன் அர்ஜுனன். போர் தர்மத்தை கிருஷ்ணனே மீறுவதும், அதற்குத்தான் உடந்தையாக இருப்பதும் எவ்வளவு கேவலம்!

இந்தக் கீழ்த்தர செய்கைக்குப் பிராயசித்தம் ஏதேனும் உண்டா என்று பெரிதும் மனம் அலைக்கழிந்தது அவனுக்கு. தனக்குச் சமமான வீரனை, அவனுடைய இயலாமை நிலையில், பேடித் தனமாகக் கொன்றது அவனுடைய நெஞ்சை அறுத்தது. அந்த ‘குற்றத்துக்கு’ அவன் தன் சகோதரர்களுடன் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது அவனால் விமோசனம் தேடிக்கொள்ள முடிந்தது.

ஆமாம், தங்கள் பயண வழியாக இப்போதைய கேரள தேசத்துக்கு வந்த பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தம்மாலியன்ற இறைப்பணியை மேற்கொண்டார்கள். அந்தவகையில் அர்ஜுனன், திருவாரண்முளா என்ற இந்த திவ்ய தேசத்தில், பெருமாளுக்கு ஒரு கோயில் நிர்மாணித்து, அவரை பார்த்தசாரதியாக வணங்கி, வழிபட்டு, பிராயசித்தம் தேடிக்கொண்டான். இந்தத் தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு.

இங்கே இருந்த வன்னிமரத்தின் பொந்தில்தான், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத அஞ்ஞாதவாசத்தின்போது, தங்கள் ஆயுதங்களை பாண்டவர்கள் மறைத்து வைத்தார்கள். அந்த வன்னி மரம் கோயிலை விட்டுச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த வன்னி மரத்துக் காய்களைத் தம் பிரார்த்தனைகளோடு பக்தர்கள் சமர்ப்பித்து, வாழ்வில் துயர் நீங்கப் பெறுகிறார்கள்.

இந்த திவ்ய தேசத்தைப் பதினொரு பாடல்களால் மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார் பெருமகனாருக்கு வந்தனம் சொல்லி, அவர் பாடல்களில் ஒன்றைப் பார்க்கலாம்:

மலர் அடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடுமாடங்கள், நீடுமதில் திருவாறன்விளை
உலகம் மலி புகழ்பாட நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே

- ‘என் நெஞ்சத்தில் தன் மலரடிகளை எப்போதும் நிலைத்திருக்கும்படி வைத்திருக்கும் பரந்தாமனின் கருணையே கருணை. எத்தனையோ அடியார்கள் இருக்க, எனக்கு இத்தகைய அருளை நல்கிய நெடுமாலின் கொடை இது. மலர்கள் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த, உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு உருவாகியுள்ள திருத்தலத்தில், பாம்பணையில் துயிலும் என் அப்பன் நிலைத்து சேவை சாதிக்கிறான். உலகளாவிய பெரும்புகழ் கொண்ட இத்திருத்தலத்தின் மேன்மையான புகழைப் பாடப்பாட நமது தீவினைகள் எல்லாம் உருகியோடி மாயமாகுமே’ என்று நெகிழ்ந்து பாடுகிறார் ஆழ்வார்.

மது-கைடபர் அரக்கர்களால் பிரம்மனிடமிருந்து அபகரிக்கப்பட்ட வேதங்களை, திருமால் மீட்டு பிரம்மனிடமே அளித்தார். அதற்கு நன்றிக்கடனாக பிரம்மன் இங்கே மஹாவிஷ்ணுவைத் துதித்து தவமியற்றியதாகவும் புராணம் சொல்கிறது. இத்தலப் பெருமாள் திருக்குறளப்பன் என்றும் வணங்கப்படுகிறார் - தன்னைக் குறுக்கிக்கொண்டு வாமன அவதாரம் எடுத்ததை நினைவுபடுத்தும் விதமாக! திருவாறன்விளை (ஆரம் முழா), செங்கனூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில்உள்ளது.

கோயில் தொடர்புக்கு: திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தொலைபேசி எண். 0468-2212170