‘உன் புருஷன் ஜெயிப்பான், என் கனவு பலிக்கும்!’மகாபாரதம் - 69

லட்சுமணன் சீதையின் இடத்தை விட்டு நகர்ந்த நேரம், ராவணன் பர்ணசாலைப் பகுதியில் பிரவேசித்தான். வாசலில் நின்று ‘பவதி பிட்சாம் தேஹி...’ என்று குரல் கொடுத்தான். சீதை வெளியே வந்து பழங்களையும், கிழங்குகளையும் தட்டில் எடுத்து வந்து அவனுக்குக் கொடுப்பதற்கு தயாரானாள். ஒரு சந்நியாசியைப்போல மாறுவேடத்தில் வந்திருந்த ராவணன், சீதையின் அழகைப் பார்த்து திகைத்தான். சட்டென்று, தன் வேடத்தை உதறி சுய ரூபத்தோடு காட்சியளித்தான்.

‘‘என் பெயர் ராவணன். நான் லங்கா நகரத்தின் மன்னன். அரக்க குலத்தோன். உன் அழகு என்னை மயக்குகிறது. எனக்கு மனைவியாகி விடு. இந்தக் காட்டில் எதற்கு அனாதைபோல இருக்கிறாய்? நான் உன்னை மிகச்சிறந்த மகாராணியாக, என் பட்டமகிஷியாக ஆக்குகிறேன்,’’ என்று ஆசை வார்த்தைகள் சொல்ல, அவள் ‘ச்சீ... தூ...’ என்று சொல்லிவிட்டு அவன் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக பர்ணசாலைக்குள் ஓடினாள். ராவணன் பர்ணசாலைக்குள் புகுந்து அவளுடைய கைகளை நீட்டி மறித்தான். சீதை மூர்ச்சையானாள்.

அவள் கூந்தலைப்பற்றி இழுத்துக்கொண்டு தன்னுடைய விமானத்தில் வைத்து விமானத்தில் ஏறி வானத்தில் ராவணன் பறந்தான். ராமச்சந்திரமூர்த்தியின் பத்தினியான சீதா, ராவணனுடைய விமானத்தில் மூர்ச்சையடைந்து கிடப்பதை, அப்போது வானில் பறந்துகொண்டிருந்த ஜடாயு பார்த்து, அவளை ராவணன் அபகரித்துப் போகிறான் என்பதை உணர்ந்து ராவணனைத் தடுத்தார். ‘‘இதென்ன நீச காரியம்!

ஒரு மன்னன் செய்ய வேண்டியதா இது? புருஷன் இல்லாமல் தனியாக இருக்கின்ற பெண்மணியின் முன்பு வேடமிட்டுக் கொண்டு வந்து, பிறகு வளைத்து எடுத்துக் கொண்டு போகிறாயே, என்ன நியாயம் இது?’ என்று சொல்லி, அவன் விமானத்தை பறக்க விடாமல் தடுத்தார். விமானம் தாழப் பறந்தது. தன் அலகாலும், நகங்களாலும் அவனுடைய உடம்புகளில் பலத்த காயங்களை  ஏற்படுத்தினார்.

ராவணனுடைய உடம்பு முழுவதும் ரத்தம் வடிந்தது. அவன் வலி தாங்காமல், கடும் கோபத்துடன், இடுப்பிலிருந்த கத்தியை உருவி ஜடாயுவின்  சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். ஜடாயு கீழேவிழ, விமானம் தொடர்ந்து பறந்தது, கடல் கடந்து இலங்கையில் இறங்கிற்று. ஸ்ரீராமர் வேகமாக திரும்பிக் கொண்டிருக்கிறபோது எதிரே லட்சுமணன் வருவதைப் பார்த்து கோபமானார்.

‘என்ன முட்டாள்தனம் இது! ஏன் சீதையை விட்டுவிட்டு வந்தாய்? இது அரக்கர்களின் காடல்லவா, இது தெரிந்தும் இப்படி செய்திருக்கிறாயே! என்று சற்றே கடுமையாகச் சொல்ல, சீதை தன்னை நோக்கி வீசிய கடும் சொற்களை லட்சுமணன் விவரித்தான். ஸ்ரீராமர் துக்கமானார். வழியிலே பெரிய பறவை படுத்திருப்பதைப் பார்த்து அது ராட்சஸனோ என்று வில்லை வளைத்தார்.

‘ஹே ராமா’ என்று அந்தப் பறவை குரல் கொடுப்பதைப் பார்த்து அருகே போனார். ‘‘என் பெயர் ஜடாயு. நான் உன் தகப்பன் தசரதனுடைய சிறந்த நண்பன். உன்னுடைய மனைவியை ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்தில் தூக்கிப் போனான். நான் அவனை தடுத்து நிறுத்தி அவனுக்கு காயங்கள் ஏற்படுத்தினேன். அவன் தன்னுடைய அற்புதமான வாளால் என் சிறகை வெட்டி எறிந்தான். நான் இங்கு விழுந்து கிடக்கிறேன்,’’ என்று சொல்ல, ராவணனுடைய இடம் எங்கிருக்கிறது என்று லட்சுமணன் வினவ, தென்திசை நோக்கி தன் முகத்தை வைத்து சூசகமாக அந்த திசையை காட்டி ஜடாயு உயிர்விட்டார்.

தந்தைக்கு நிகரான ஜடாயுவிற்கு ஈமச் சடங்குகள் செய்துவிட்டு அவர்கள் இருவரும் பர்ணசாலையை நோக்கி ஓடினார்கள். பர்ணசாலை கலைந்து கிடந்தது. பண்டங்கள், பழங்கள், கிழங்குகள் எல்லாம் சிதறிக் கிடந்தன. ஒரு சிறிய போராட்டம் அங்கு நடந்திருப்பது தெரிந்திருந்தது. சீதையை காணோம். சீதையை நாலாபக்கமும் ராமரும், லட்சுமணரும் தேடினார்கள்.

மார்க்கண்டேயர் சற்று நிறுத்தினார். ‘‘தர்மா ராமருடைய நிலையைப் பார்த்தாயா? முதல்நாள் பட்டாபிஷேகம் என்று சொல்லி, மறுநாள் வனவாசம் என்றும் சொல்லி அவரை வனத்திற்கு மனைவியோடும், தம்பியோடும் போகச்செய்து, பரதன் பின்தொடர்ந்தது போல மற்றவரும் பின் தொடர்வார்கள் என்று பயத்தால் அவர்கள் இன்னும் தென்திசை நோக்கி தண்டகாரண்யத்தில் நுழைய, அரக்கர்களை வதம் செய்து கோதாவரிக் கரையில் அமைதியாக இருக்க, அந்த இடத்தில் சூர்பணகையின் நடவடிக்கையும், அதனால் ராவணனுடைய வருகையும், மாரீசனுடைய வதமும் நிகழ்ந்து ராவணனால் சீதை சிறைப்பிடிக்கப்பட்டுப்போன நேரத்தில் ராமருடைய மனம் எத்தனை பாடுபட்டு இருக்கும்!

தென்திசை நோக்கி என்று சொன்னால் எந்த திசை, எவ்வளவு தூரம், எப்படிப் போகவேண்டும் என்று எதுவும் தெரியாமல் பித்துப்பிடித்த நிலையில் ராமர் மரங்களையும், செடிகொடிகளையும் பார்த்து, ‘மரமே சீதையை பார்த்தாயா, செடி கொடிகளே, காலையில் பூ பறித்தாளே அவளை கவனித்தீர்களா? யார் அவளை தூக்கிப் போனார்கள் என்று நீ பார்க்கவில்லையா...?’’ என்று தன் நிலை மறந்து அழுததாக செய்தி உண்டு.

ராமன் அவதார புருஷன். ஆனாலும், தான் மானுடன் என்பதாகவே நினைப்பில் ஒரு மானுடனைப் போல கழிவிரக்கத்தில் மனைவியை இழந்த துக்கத்தில் புலம்பியிருக்கிறார். இதைக் கேட்கும்போது உன்னுடைய துக்கம் ஞாபகம் வருகிறதா? ராமனுடையதை ஒப்பிடும்போது உன் துக்கத்திற்கு ஏதேனும் அர்த்தம் உண்டா?” என்று கேட்க, தருமர் வாய்புதைத்துக் கொண்டார். பீமனும், அர்ஜுனனும், நகுல சகாதேவனும், திரௌபதியும் கண்ணீர் உகுத்தார்கள். கைகூப்பி ஸ்ரீராமரைத் துதித்தார்கள்.

மார்க்கண்டேயர் ராமாயணத்தை தொடர்ந்தார்... ‘‘ராம, லட்சுமணர் சீதையைத் தேடி வனம் வனமாகப்போக, ஒருசமயம் உருவமில்லா உருவம் அவர்களை மறித்து நின்றது. விழுங்க வாய் திறந்தது. லட்சுமணன் அந்த அரக்கன் பிரபந்தனின் உடம்பில் ஏறிக் கொண்டான். அதன் கைகள் லட்சுமணனை பற்றிக் கொண்டன. ராமர் தானும் முன்னேறி தன் வலது கையைக் கொடுத்தார். அது ராமரையும் கோத்துக் கொண்டது. ‘‘நல்லது. இப்பொழுது அவன் கைகளை விட்டு விடுவோம்” என்று ராமர் சொல்ல, இருவரும் பிரபந்தனின் கைகளை வெட்டினார்கள். ராமர் தன் வில்லால் அம்பு தொடுத்து அவனுடைய விலா எலும்புகளை அடித்து நொறுக்கினார்.

அவ்விதமே லட்சுமணனும் செய்தார். அந்த மாமிச பிண்டம் இரண்டாகப் பிளந்தது. உள்ளிருந்து தேஜஸ்மிக்க ஒரு கந்தர்வன் தோன்றினான். ‘‘என் பெயர் முத்கலர். ஒரு அந்தணனுடைய சாபத்தினால் இப்படி அரக்க உருவம் பெற்றேன். உன்னுடைய மனைவியை ராவணன் தென்திசை நோக்கி அழைத்துப் போகிறான். விமானத்தில் கவர்ந்து போகிறான். அவனைக் கொல்லவேண்டுமென்றால் அவன் இடத்திற்குப் போகவேண்டுமென்றால் ரிஷ்யமுக பர்வதத்தில் இருக்கின்ற சுக்ரீவனை நாடிப்போ.

சுக்ரீவன் நிச்சயம் உனக்கு உதவி செய்வான். சுக்ரீவன் வானரப்படைகளின் தலைவன். அங்கு ஒரு பிணக்கு இருக்கிறது. அந்த பிணக்கு தீர்ந்து சுக்ரீவன் உனக்கு உதவி செய்வான்,’’ என்று சொல்லி ராமரை நமஸ்கரித்து விண்ணுலகம் போனான். ராமர் ஆச்சரியத்தோடு இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் மிகவேகமாக பம்பா நதிக்கரையை அடைந்தார். கரையின்மேலே ரிஷ்யசிருங்க பர்வதத்தில் ஏற, அங்கு ஒரு அந்தணர் ராமர் முன் கைகூப்பினார். மண்டியிட்டார்.

அந்தணர் மண்டியிடுவதாவது என்று ராமர் திகைத்தபோது, அனுமன் சுயரூபம் பெற்று ராமரை வணங்கி எழுந்தார். ‘‘உங்கள் வருகை நல்வரவு. நான் உங்களை எங்கள் மன்னனாகிய சுக்ரீவனிடம் அழைத்துப் போகிறேன். அவருக்கும் அவருடைய சகோதரன் வாலிக்கும் ஒரு பிணக்கு இருக்கிறது. அதனால் இடைவிடாது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ரிஷ்யமுக பர்வதத்தில் அவருடைய சகோதரரான வாலி இங்கு வரமுடியாது.

வந்தால் தலை வெடித்துவிடும் என்ற சாபம் உண்டு. அதனால் சுக்ரீவன் இந்த இடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார். செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட்டு விட்டோமே என்று வருத்தப்படுகிறார். அவரைக் கொல்வதற்காக வாலி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். அந்த துக்கத்தில் சுக்ரீவன் இருக்கிறார்,’’ என்று சொல்ல, ராமர் பயந்து ஒடுங்கியிருந்த சுக்ரீவனைச் சந்தித்தார்.

தன்னுடைய மனைவியை வாலி அபகரித்துக் கொண்டார் என்றும், தான் வாலி இறந்து விட்டான் என்று நினைத்து குகையை மூட, உள்ளுக்குள்ளே ராட்சஸனோடு சண்டை போட்டு பிறகு குகையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தான் குகையை மூடியது பிசகு என்று சொல்லி தன்னை கொல்வதற்கு தமையனான வாலி முயற்சி செய்வதாய் துக்கத்தோடு சொல்ல, ‘கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்று ராமர் அவனுக்கு ஆறுதல் அளித்தார்.
 
சுக்ரீவன் என்ன செய்வதென்று கேட்க, மறுபடியும் போய் வாலியை போருக்கு அழை. நான் அப்போது மறைந்திருந்து வாலியை கொன்று விடுகிறேன் என்று வாக்கு கொடுத்தார். சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைத்தான். சண்டை துவங்கியது. ஆனால், யார் வாலி, யார் சுக்ரீவன் என்று ராமருக்கு அடையாளம் தெரியவில்லை. அடிபட்டு தோற்ற நிலையில் தப்பித்து சுக்ரீவன் ஓடிவர, மிகுந்த துக்கப்பட ராமர் அவனைத் தேற்றினார்.

‘‘உன் மனைவியை அபகரித்த வாலியை நான் கொல்வேன். ஆள் மாறாதிருக்க ஏதேனும் அடையாளம் தேவை,’’ என்று சொல்லி, லட்சுமணனால் தயார் செய்யப்பட்ட ஒரு மாலையை சுக்ரீவன் கழுத்தில் போட்டார். அந்த மாலையோடு போய் மறுபடியும் அவன் குரல் கொடுக்க, மிகுந்த கோபத்தோடு வாலி தன் குகையை விட்டு வெளியே வந்து அவனோடு சண்டையிட, தன்னுடைய வில்லை வளைத்து வாலியின் நெஞ்சு பார்த்து ஒரு சரத்தை ராமர் தொடுக்க அது வாலியை குத்திக் கீழே சாய்த்தது.

‘‘உன் மனைவியைத்தேட என்னை அணுகியிருக்கலாமே! ஏன், சுக்ரீவனிடம் உதவிகேட்டு என்னை சண்டையிட அழைக்கச் சொல்லி  என்னைக் கொன்றாய்? என்னைக் கொல்வதால் உனக்கு என்ன லாபம்? நீ உத்தமன். நல்ல பண்புடையவன், மானிடரில் சிறந்தவன், மன்னவரில் உயர்ந்தவன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி மறைந்திருந்து கொல்கிறாயே, இது நியாயமா?’’ என்று கேட்க, ‘‘உன்னுடைய எதிரியின் வலிவை வாங்கிக் கொள்ளும் வரத்தை நீ வைத்திருக்கிறாய்.

அதனால் உன்னுடன் நேரில் நின்று போரிடுவது தர்மயுத்தம் ஆகாது. உன்னுடைய வீரத்தை மறைந்துதான் சந்திக்க வேண்டியுள்ளது. உன்னுடைய வரத்தின் தவறு அது. மறுபடியும் சொல்கிறேன் நீ ஒரு வானரம். ஒரு மிருகம். அதை நான் மறைந்திருந்து கொல்லலாம். அது தவறில்லை’’ என்று சொல்ல, அவருடைய பேச்சைக் கேட்டு வாலி அமைதியானான்.

‘‘ராமா, ஆயினும் தோன்றுகிறது. இந்த உதவியை நான் செய்திருப்பேனே,’’ என்று சொல்ல, ‘‘நான் எப்படி உன்னை நம்புவது? சுக்ரீவனுடைய மனைவியை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய். நான் என் மனைவி சீதையை தேடிக்கொடு என்று உன்னிடம் சொன்னால் வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் நான் எப்படி நம்புவேன்? நீ நம்பிக்கைக்கு உரியவனாக எனக்குத் தென்படவில்லை. மாற்றான் மனைவியை வரிப்பவன் நல்லவனாக நான் நினைக்கவில்லை’’ என்று சொன்னார் ராமர்.

‘‘இது எங்கள் மிருக விதி. அதனுடைய நியமம். ஆயினும் உன் கையால் நான் மரணமடைவது எனக்கு சந்தோஷம்’’ என்று சொல்லி வாலி உயிரை விட்டான். ‘‘ராமர், வாலியின் மகனான அங்கதனுக்கு இளவரசு பட்டம் கட்டி சுக்ரீவனை மன்னனாக்கி விலகினார். மழைக்காலம் என்பதால் அவர்கள் தங்கள் குகையில் அடங்கினார்கள். மழைக்காலம் முடிந்ததும் நிச்சயம் வருகிறேன் என்று சுக்ரீவன் உத்தரவாதம் கொடுத்திருந்தான்.

சீதையின் நினைப்பாகவே மனம் உருகி மழைக்காலம் முடியும்வரை தென்திசை நோக்கியே ஸ்ரீராமர் அமர்ந்திருந்தார்’’ என்று மகரிஷி சொல்ல, நீண்ட நெடிய பெருமூச்சோடு அவர்கள் ராமருடைய துக்கத்தை தம்முடைய நெஞ்சில் ஏற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவதாரப் புருஷரான ஸ்ரீராமர் அடைந்த துக்கத்திற்கு இணையான துக்கம் இல்லவே இல்லை என்பது போலத்தான் தருமரும், மற்றவர்களும் உணர்ந்தார்கள்.

மழைக்காலம் முடிந்தும் வராத சுக்ரீவனை நோக்கி லட்சுமணன் போய் அதட்டி அழைத்து வர, சுக்ரீவன் மன்னிப்பு கேட்டான். தன் படைகளைத் தயார் செய்தான். நாலாபுறமும் வீரர்களை ஏவினான். தென்திசை நோக்கி ஜாம்பவானும், ஹனுமனும் போனார்கள். தாங்கள் செய்வது ராமகாரியம் என்ற நினைப்போடே மிகுந்த கவனத்தோடு நடந்து கொண்டார்கள்.

இலங்கையை அடைந்த ராவணன் சீதையை ஒரு அசோகவனத்தில் தங்க வைத்தான். அவளைச் சுற்றி அரக்கிகளை காவல் வைத்தான். விகாரமான உருவமுடைய அந்த அரக்கிகள் சீதையை பல்வேறு விதமாக ராவணனோடு சேர்ந்திருக்கும்படி மோசமான வார்த்தைகளால் வற்புறுத்தினார்கள். துன்புறுத்தினார்கள். இல்லையெனில் தின்று விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அப்பொழுது திரிஜடை என்கிற ஒரு அரக்கி மட்டும் சீதைக்கு ஆதரவாக இருந்தாள்.

‘‘ராவணனுக்குக் கேடுகாலம் வந்து விட்டது. அவன் மடியப் போகிறான். உன் புருஷன் இலங்கைக்கு வந்து வெகு நிச்சயம் ராவணனை கொல்லப் போகிறான். நான் ராவணனைப் பற்றி மோசமான கனவுகள் கண்டேன். உன்னுடைய புருஷன் ஜெயிப்பதாக கனவு கண்டேன். அது பலிக்கும்,’’ என்று ஆறுதல்படுத்தினாள். திரிசடையினுடைய நம்பிக்கையான வார்த்தைகள் சீதாதேவிக்கு உறுதுணையாக இருந்தன.
 
ராவணன் வந்து சீதையை தன் ஆசைக்கு இணங்கும்படியாக உரத்த குரலில் கர்ஜிக்க, மண்டோதரிக்கு இணையான இடத்தைத் தருவேன் என்று உத்தரவாதம் சொல்ல, ராவணனுக்கும் தனக்கும் நடுவே சீதை ஒரு புல்லைப் போட்டு அந்த புல்லை நோக்கி பேசலானாள். ‘‘ராட்சஸ ராஜா, இப்படி உயர்குலத்தில் பிறந்தும் அதர்மமான வாக்கியங்களை ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய்? நீ என்ன செய்தாலும் என் மனதை என் புருஷனான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியினின்று மாற்ற இயலாது.

அவருடைய பராக்கிரமம் தெரியாமல் நீ இந்த தவறான காரியம் செய்து விட்டாய். என்னைக் கொண்டுபோய் அங்கு விடு என்றும் நான் கேட்க மாட்டேன். அவர் வருவார். உன்னை வதம் செய்வார். பிறகு, என்னை அழைத்துக் கொண்டு போவார். அதுவரையில் நான் காத்திருப்பேன். மறந்து போயும் இனி என்னிடம் இப்படி பேச வேண்டாம்,’’ என்று நிஷ்டூரமாக சீதை சொல்ல, ‘‘உன்னுடைய சம்மதம் இல்லாமல் உன்னைத் தொடமாட்டேன்,’’ என்று ராவணன் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
 
அப்பொழுது திரிசடை, ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவன் அவளை வற்புறுத்தினால் துன்புறுத்தினால் அவனுக்கு உடனடியாக இறப்பு ஏற்படும் என்று ஒரு சாபம் இருக்கிறது. எனவே, உன்னை ஒருபோதும் அவன் வற்புறுத்த மாட்டான் என்று சமாதானம் சொன்னாள். வடக்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் போனவர்கள் திரும்பி வர, தென்திசை போனவர்கள் மட்டும் திரும்பவில்லை. ஸ்ரீராமர் அந்த திசையிலிருந்து நல்ல செய்தி வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.

சில மாதங்கள் கழிந்ததும், சில வானரங்கள் வந்து மதுவனத்தை அழித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் தென்திசை நோக்கி பயணப்பட்டவர்கள் என்று தெரிவித்தார்கள். மதுவனத்தை சீரழித்துக் கொண்டிருப்பதாகவும் விவரங்கள் கிடைத்தன. அப்படியானால் தென்திசை சென்றவர்கள் வெற்றிகரமாக காரியத்தை முடித்துவிட்டார்கள் என்று சுக்ரீவன் உணர்ந்து கொண்டான். ராமரிடமும் அந்த விஷயத்தைச் சொன்னான்.

மது வனத்தில் ஓய்வு எடுத்த பிறகு ஹனுமான் ராமரிடம் வந்து வணங்கி நின்றான். ‘‘சொல் ஹனுமான், நீ ஜானகியைப் பார்த்தாயா? நான் பகைவர்களை வென்று ஜானகியை என்னுடைய தேசத்திற்கு அழைத்துப் போக முடியுமா? அந்தப் போரில் வெற்றியடைய முடியுமா? என் மனைவியை மீட்டு வராமல் நான் உயிர் வாழ மாட்டேன்,’’ என்று கோபம் கலந்த வார்த்தைகளைச் சொன்னார்.

அதற்கு வாயுபுத்ரன், ‘‘உங்களுக்கு பிரியமான செய்தியைச் சொல்கிறேன். நான் ஜானகியை சந்தித்தேன். பல இடங்களில் சீதையை தேடி களைத்து பிறகு ஒரு மிகப் பெரிய குகையை கண்டோம். அதனுள் அகன்ற காடுகள் இருந்தன. வெகுதூரம் அந்தப் பாதையில் நகர்ந்து போனோம். அங்கே ஒரு திவ்ய வனம் இருந்தது. அது கைகராஜன் மயனுடைய வாழ்விடமாக கருதப்படுகிறது. அதில் பிராபாவதி என்னும் தபஸ்வி தவம் செய்து கொண்டிருந்தார்.

எங்களுக்கு பல்வகையான பதார்த்தங்களையும், ரசங்களையும் அளித்தார். அவற்றை உண்டு எனக்கு பலம் கிடைத்தது. நாங்கள் கடல் பக்கம் போய் கந்தமான மலையில் ஏறி நின்று அகன்ற அந்தக் கடலை பார்க்கத் துவங்கினோம். எங்களுக்கு அந்தக் கடலைத் தாண்டுவோம் என்ற நம்பிக்கை வரவில்லை. மிகவும் தளர்ந்து போனோம். நிற்க முடியாமல் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது உங்களைப் பற்றியும், லட்சுமணன் பற்றியும், ஜடாயு பற்றியும் பேச்சு வந்தது. அப்பொழுது அருகிலே ஒரு உருவம் தள்ளாடி வந்தது. பெரிய கழுகைப் போன்று அருகே வந்து நின்றது.

‘என்னுடைய சகோதரன் ஜடாயு பற்றி பேசுகிறீர்களா? என் பெயர் சம்பாகு. நாங்கள் சூரியனை பிடிக்க முயற்சித்து, என்னால் முடியாமல்போய் என் சிறகுகள் கருகி உதிர கீழே விழுந்தேன். ஆனால், ஜடாயு காயப்படாமல் தப்பினான். நீங்கள் எதற்காக ஜடாயு பற்றி பேசுகிறீர்கள்? யார் ஸ்ரீராமர், சீதை யார்?’ என்று கேட்க, வானரங்கள் அதற்கு சரியான பதிலைச் சொல்லின.

‘ராவணன் சீதையை அபகரித்துப் போனானா? அவனுடைய இலங்கையை நான் பார்த்திருக்கிறேன். அது பெரிய மலைக்கு நடுவே ஒரு பெரிய குகைக்கு அருகே உயர்ந்த ஒரு மலையில் அமைக்கப்பட்ட நகரம். மிக ஒளிபொருந்திய நகரம். நீங்கள் அங்குபோக இந்தக் கடலை தாண்டித்தான் ஆகவேண்டும்,’ என்று சொல்லி நிறுத்தியது. ஜடாயு இறந்த கதையை நாங்கள் சொல்ல, சம்பாகு துக்கப்பட்டார்.

நான் இலங்கையில் இறங்கி அசோக வனத்திற்கு நடுவே உங்கள் சீதையைக் கண்டேன். அவரைச் சுற்றி கோரமான அரக்கிகள் காவல் இருந்தார்கள். அவருடைய கேசம் ஜடையாக மாறியிருந்தது. அவர் உடம்பு முழுவதும் புழுதியாக மாறியிருந்தது. அவர் உடைகள் கிழிந்திருந்தன. மிகுந்த சோகத்தோடு அவர் இருந்தார். அரக்கிகள் தூங்கிய பிறகு நான் அவருக்கு என்னை வெளிப்படுத்திக் கொண்டேன். உங்கள் தூதுவனாக வந்திருப்பதாகச் சொன்னேன். என்னை முழுவதுமாக நம்பி தன்னை சந்தித்ததற்கு அடையாளமாக ஒரு சூளாமணியை கொடுத்தார். இதோ அந்தச் சூளாமணி.

இது தவிர, வேறொரு விஷயத்தையும் சொன்னார். சித்ரகூடத்தில் நீங்கள் இருக்கும்போது ஒரு காக்கை மீது ஒரு புல்லை அஸ்திரமாக செலுத்தி அந்தக் காக்கையினுடைய கண்களை பறித்தீர்கள்.அந்தக் காக்கை சீதையை துன்புறுத்த முயற்சித்தது என்பதையும் விளக்கிச் சொன்னார். இது வேறு எவருக்கும் தெரியாது, எனக்கும் ராமருக்கும் மட்டுமே தெரிந்தது. இப்போது உனக்கும் தெரிந்தது என்றும் சொன்னார்.’’
ராமர் உதடு நடுங்க, மனம் நடுங்க அந்தச் சூளாமணியை பெற்றுக் கொண்டார்.

முத்தமிட்டார். நெஞ்சில் வைத்துக் கொண்டார். ‘சீதே சீதே சீதே...’ என்று புலம்பினார். கண்ணில் நீர் வழிய நின்றார். ஹனுமான் பார்த்தது சீதையைத்தான் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. நல்ல செய்தியை கொண்டு வந்த ஹனுமானை ராமச்சந்திர மூர்த்தி ஆரத்தழுவிக் கொண்டார். இலங்கையை எரித்து கடல் தாண்டி மறுபடி வந்ததையும் ஹனுமான் விவரித்தார்.

லட்சுமணனோடும், பெரிய வானர சேனையோடும் ராமச்சந்திர மூர்த்தி சமுத்திரக்கரையை அடைந்தார். ‘‘ஹனுமானைப்போல இந்தக் கடல் பகுதியை எல்லா வானரங்களாலும் தாண்ட முடியாது. ஆனால், இந்தக் கடல் வழியாகத்தான் வானரங்கள் போயாக வேண்டும். எனவே, நான் தர்ப்பையை விரித்து சமுத்திரராஜனை வேண்டுவேன். வழிவிடச் சொல்வேன். அப்படி வழிவிடவில்லையெனில் என் வில்லை வளைத்து நாண் ஏற்றி அஸ்திரங்களை பிரயோகம் செய்து இந்தப் பகுதியிலுள்ள அத்தனை நீரையும் எரித்து விடுவேன்,’’ என்று உரக்கச் சொன்னார்.

சமுத்திரராஜன் உடனே வந்து கைகூப்பினார். ‘‘ஸ்ரீராமா நீ அக்னி அஸ்திரங்களை ஏவினால் என் நிலைமை என்னாவது? அதை ஒருபோதும் செய்ய வேண்டாம். இந்த வானர கூட்டத்தில் விஸ்வகர்மாவின் மகன் நளன் இருக்கிறார். அவர் கையால் கட்டையோ, துரும்போ, கல்லோ எடுத்துப் போட்டால் அவற்றை நான் நீரின் மேல் மிதக்கச் செய்வேன். அதுவே உங்களுக்கு பாலமாகிவிடும்’ என்று சொல்லி மறைந்தான்.

பிறகு ராமரின் உத்தரவுப்படி கடலின்மேல் ஒரு பாலத்தை தயார் செய்தார். இந்தப் பூமியில் இன்றும் நளசேது என்று அந்தப் பாலம் பிரபலமாய் இருக்கிறது. சமுத்திர கரையை அடைந்தபோது விபீஷணன் தன்னுடைய நண்பர்களோடு தன் தமையனை விட்டு ராமரை சரணடைய,  ராமர் அவனை தன் நண்பனாக ஏற்றுக் கொண்டார். அவர் படையில் அவனும் ஓர் அங்கம் வகித்தான். வானரப்படை விபீஷணனின் வழிகாட்டலோடு, பாலத்தின் வழியே போய் இலங்கையில் இறங்கியது.

(தொடரும்)

பாலகுமாரன்