காலையில் எழுந்ததும் கண்ணாடி, உள்ளங்கை, கடவுள் படம் இவற்றில் எதைப் பார்த்தால் நல்லது?தெளிவு பெறு ஓம்

இந்த மூன்றுமே நல்லதுதான். காலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையையும், அதன்பின் கண்ணாடி, கடவுள்படம் என்ற வரிசையில் பார்ப்பது அன்றைய நாளை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும். காலையில் எழுந்ததும் உன் முகத்தில்தான் விழித்தேன், அதனால்தான் சிரமப்பட்டேன் என்று அடுத்தவர்களை குறை சொல்லும் குணமாவது இந்தப் பழக்கத்தினால் காணாமல் போகும்!

* கயா சென்று ஒரு முறை சிராத்தம் செய்துவிட்டால் பின்னர் வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகின்றார்களே... இது சரியா? கயாவில் சிராத்தம் செய்வதன் முக்கியத்துவம் என்ன?
- ரா. பாஸ்கரன், பெங்களூரு-60.

கயாவிற்குச் சென்று ஒரு முறை சிராத்தம் செய்துவிட்டால், பின்னர் வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு. பிரதி வருடம் அவரவர் இல்லத்தில் தவறாமல் சிராத்தம் செய்ய வேண்டும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த பூவுலகில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் மூன்று கடமைகளைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது. பெற்றோர் உயிருடன் இருக்கும்வரை அவர்களின் சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்பது முதல் கடமை. இறந்தபின் வருடந்தோறும் தவறாது சிராத்தம் செய்ய வேண்டும் என்பது இரண்டாவது கடமை.

(அந்த சிராத்தத்திலும் எந்தவிதமான குறையும் இல்லாமல் வயிறு நிறையும் அளவிற்கு போஜனம் செய்விக்க வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.) மூன்றாவது கடமையாக சாஸ்திரம் வலியுறுத்துவது ஒருவன் தன் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையேனும் கயாவில் சிராத்தம் செய்ய வேண்டும் என்பதே. மூன்றாவது கடமையை செய்துவிட்டால் இரண்டாவது கடமையை விட்டுவிட வேண்டும் என்று சொல்வது நியாயமாகாது.

கயா சிராத்தம் முக்கியத்துவம் பெறுவதற்கு புராணங்களில் பல கதைகள் உண்டு. கயாசுரன் என்ற ஒரு அசுரன் தேவ-அசுர யுத்தத்தில் தோல்வியடைந்து தனது முக்திக்கு வழிதேடினான். தனது உடம்பையே ஒரு ஸ்தலமாக்கிய அவனது வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மதேவர் அங்கே ஆலமரத்தினை உண்டாக்கி ஒரு யக்ஞம் மேற்கொண்டார். அந்த யக்ஞத்தால் திருப்தியுற்ற நாராயணன் தனது திருப்பாதத்தால் கயாசுரனுக்கு மோக்ஷத்தை அருளினார்.

விஷ்ணுவின் பாதம் பதிந்த அந்த ஸ்தலத்தில் சிராத்தம் செய்வதால் முன்னோர்களுக்கு குறைவில்லாத அளவிற்கு திருப்தி உண்டாகிறது. கயாசுரனின் பெயரால் அந்த ஸ்தலம் கயா என்றும், பிரம்ம தேவன் யக்ஞம் செய்த அந்த ஆலமரம் அக்ஷய வடம் என்றும் பெயர் பெற்றன. வடமொழியில் ‘வடம்’ என்றால் ஆலமரம் என்றும், அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்றும் பொருள்.

பெரும்பாலானோரால் சொல்லப்படுகின்ற இன்னொரு கதையும் உண்டு. பெருமாள் தனது வாமன அவதாரத்தின் போது மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டபோது தனது முதலாவது அடியால் பூமியை அளந்தார் என்று கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறு அவர் இந்த பூமியை அளக்க தனது முதல் அடியை வைத்த இடம் கயா என்றும் தனது பாதத்தினை அவர் அங்கு பதித்ததால் அது குறையின்றி வளர்ந்தது என்றும், அவர் பாதம் பதித்த அந்த இடமே விஷ்ணுபாதம் என்றழைக்கப்படுகின்ற கயா என்னும் புனிதத்தலம் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த அந்த கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்கின்ற சிராத்தம் ஆனது 101 குலத்தையும், அந்த மனிதன் சார்ந்த ஏழு கோத்திரக்காரர்களையும் கரையேற்றுகிறது என்றும் ஸ்மிருதி உரைக்கிறது. அதாவது, வருடந்தோறும் செய்து வரும் சிராத்தம் என்பதை அன்றாடம் நாம் சாப்பிடுகின்ற உணவு என்று வைத்துக்கொண்டால், கயா சிராத்தம் என்பது என்றோ ஒரு நாள் சாப்பிடுகின்ற விருந்து போஜனம் போல என்று சொல்லலாம்.

வாழ்நாளில் என்றோ ஒருநாள் விருந்து சாப்பிட்டுவிட்டால் போதும், அன்றாடம் உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதுபோல, கயா சிராத்தம் ஒருமுறை செய்துவிட்டால் அடுத்து வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதும் அபத்தமே. இது முற்றிலும் தவறு மாத்திரமல்ல, இவ்வுலகை நீத்த பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறியவர்களாகவும் ஆகிவிடுவோம். வருடந்தோறும் சிராத்தம் செய்யத் தவறினால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

* ஆவணி அவிட்டம் அன்று பூணூல் அணிவதன் தத்துவம் என்ன? இந்து மதத்தினர் அனைவரும் பூணூல் அணிவதில்லையே, ஏன்?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆவணி அவிட்டம் அன்று மட்டும்தான் பூணூல் அணிய வேண்டும் என்றில்லை. இந்து மதத்தினர் எப்போதும் பூணூல் அணிந்திருக்க வேண்டும். ஆவணி அவிட்டம் நாளில் பூணூல் போட்டுக்கொண்டு மறுநாள் அவிழ்த்துப் போட்டுவிடுவது என்பது தவறு. அந்தணர் பிரிவினைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அவர்களின் ஏழாவது வயதில் உபநயன பிரம்மோபதேசம் செய்வார்கள். அவ்வாறு பிரம்மோபதேசம் பெற்ற ஆண்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை கட்டாயம் பூணூல் அணிந்திருப்பார்கள்.

இவ்வாறே வைசியர்களுக்கும் உபநயனம் உண்டு. க்ஷத்திரியர்களுக்கும் திருமணத்தின்போது உபநயனம் என்ற சடங்கு நிச்சயம் உண்டு. இவ்வாறு எல்லோருக்குமே பூணூல் என்பது கட்டாயம் என்றாலும் தற்காலத்தில் அந்தணர், வைசியர், கர்ணம் என்றழைக்கப்படும் கணக்குப்பிள்ளை இனத்தவர் போன்ற ஒரு சில பிரிவினர் மட்டுமே பூணூல் அணிவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். பூணூல் அணிவதை வழக்கத்தில் கொண்டுள்ள இந்தப் பிரிவினர் ஆவணி அவிட்ட நாளில் தங்களது பழைய பூணூலை புதிதாக மாற்றிக் கொள்கின்றனர். இதனை உபாகர்மா என்று அழைப்பார்கள்.

ரிக் வேதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு ரிக்உபாகர்மா என்றும், யஜுர் வேதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு யஜுர்உபாகர்மா என்றும், சாம வேதத்தினருக்கு சாம உபாகர்மா என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பர். இந்த உபாகர்மாக்கள் அனைத்தும் தக்ஷிணாயண காலத்தின் துவக்கத்தில் வருபவை. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான உத்தராயண காலத்தில் பொருள் தேடச் செல்வதும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான தக்ஷிணாயண காலத்தில் புதிய பாடங்களைக் கற்றுக் கொள்ளுதல், வேத சம்ரக்ஷணை, கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல், மரம் நடுதல் முதலான பொதுக்காரியங்களைச் செய்தல் என அந்தந்த குலத்திற்கு உரிய பொதுக்கடமைகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வருடம் எனும் காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதலைத் துவக்குவதற்கு ஏதுவாக தங்களது பழைய பூணூலை புதிதாக மாற்றிக் கொண்டு கடமையைச் செய்யத் துவங்கும் காலம் உபாகர்மா என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாள் ஆகும்.

* மாலைமாற்றும் சடங்கின்போது மணமக்களை சடக்கென்று சிலர் பின்னால் இழுக்க மாலை போடுபவர் நிலை தடுமாறி மாலை கீழே விழுந்துவிடுகிறதே... மாலை மாற்றும் சடங்கில் இந்த விளையாட்டு தேவைதானா?
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்.

இந்தச் சடங்கே விளையாட்டிற்காகச் செய்யப்படுவதுதானே. இதில் ஏன் உங்களுக்கு இத்தனை வருத்தம்? பால்ய விவாஹம் செய்து வந்த அந்தக் காலத்தில் சிறு பிள்ளைகளாக இருக்கும் மணமக்களுக்கு விளையாட்டு காட்டுவதற்காகவும், வேடிக்கைக்காகவும் இந்த மாலை மாற்றுதல் சடங்கினை நமது சம்பிரதாயங்களில் ஒன்றாக வைத்தார்கள். மணமக்களின் தாய்மாமன்கள் பிள்ளைகளை தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு நடனமாடி மாலை மாற்றினார்கள்.

இந்த வேடிக்கையான நிகழ்வில் மாலை கீழே விழுவதை அபசகுனமாக எண்ணுவது அறியாமை. நீங்கள் குறிப்பிடும் இந்த வேடிக்கையான நிகழ்வு தாலிகட்டுதலுக்கு முன்னர் நடப்பதாகும். அதேநேரத்தில் மாங்கல்யதாரணம் முடிந்து, பாணிக்ரஹணம், சப்தபதி முதலான நிகழ்வுகள் ஆன பின்பு இதுபோன்ற வேடிக்கைகளைச் செய்ய மாட்டார்கள். இன்றும் மாங்கல்யதாரணம் ஆன பின்பு தமிழகத்தில் பல இனத்தவர்களில் மாலை மாற்றும் சம்பிரதாயம் உண்டு. 

தாலி கட்டிய பிறகு மாலை மாற்றும்போது இவ்வாறு வேடிக்கையாக யாரும் செயல்படுவது இல்லை. காசியாத்திரையைத் தொடர்ந்து வரும் மாலைமாற்றும் சம்பிரதாயத்தில் வேடிக்கையாகச் செயல்படுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. இதுபோன்ற சம்பிரதாயங்கள் மணமகன், மணமகள் என இரு வீட்டாரையும் சந்தோஷமான மனநிலைக்குக் கொண்டுவருகின்றன என்பதால் இதில் குறைகாணத் தேவையில்லை.

* மந்திர, மாந்திரீக, தாந்திரிக, ஜோதிடத்தை ஓரிரு நாளில் கற்றுத் தருவதாக சொல்கிறார்களே... இதில் சேர்வது பலன் தருமா?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

நிச்சயமாகப் பலன் தராது. எந்த ஒரு கலையையும் ஓரிரு நாளில் கற்றுக் கொள்ள இயலாது. அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கலைகளைக் கற்றுக் கொள்வதற்கு கடவுள் அருள் அவசியம் தேவை. இந்தக் கலைகளை எல்லோராலும் அத்தனை எளிதாகக் கற்றுக் கொள்ள இயலாது. பாரம்பரியம் மிக்க இந்த கலைகளை ஓரிரு நாட்களில் கற்றுத் தருவதாகச் சொல்வது ஏமாற்றும் காரியமே. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

* கல்லிற்கு கடவுளின் சக்தி எப்படி வருகிறது?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. சாணியைப் பிடித்து வைத்து பிள்ளையார் என வணங்குகிறோம். பிடித்து வைத்த சாணத்திற்குள் பிள்ளையார் வரும்போது கருங்கல்லால் வடித்த சிற்பத்திற்கு கடவுளின் சக்தி வந்து சேராதா என்ன? இவை அனைத்தும் நமது நம்பிக்கையால் உருவாகின்றன. ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்ற கவிஞரின் வரிகள் நூற்றுக்கு நூறு நிஜமானவை. யந்திரப் பிரதிஷ்டை, மந்திரங்களின் சக்தி என்று பல காரணங்களைச் சொன்னாலும், இந்தச் சிற்பத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்ற நமது முழுமையான நம்பிக்கையே அந்தக் கல்லிற்கு கடவுளின் சக்தியைத் தருகிறது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.

* தேய்பிறையை விட வளர்பிறையில் வரும் முகூர்த்த நாட்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்களே, இதன் அடிப்படை என்ன?
- கனிமொழி கயல்விழி, பண்ருட்டி.

நமது மாதங்களை கணிப்பதில் சாந்திரமானம், சௌரமானம் என்று இரண்டு வகைகள் உண்டு. சந்திரனின் சுழற்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்ற மாதங்கள் சாந்திரமானம் என்றும், சூரியனின் சுழற்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்ற மாதங்கள் சௌரமானம் என்றும் அழைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்ற இந்துப் பண்டிகைகளில் பெரும்பாலானவை சாந்திரமானம் என்று அழைக்கப்படும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சந்திரனின் சஞ்சாரத்திற்கு இந்து மதம் மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் சந்திரன் வளருகின்ற வளர்பிறை நாட்களை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகிறார்கள்.

ஒரு சில ஜோதிட நூல்கள் வளர்பிறையில் வரும் நாட்களில் மட்டும்தான் சுபநிகழ்வுகளைச் செய்ய வேண்டும் என்றும் உரைக்கின்றன. ஒருசில நூல்கள் தேய்பிறை ஆயினும் பஞ்சமி திதி வரை வரும் முகூர்த்தங்கள் வளர்பிறைக்கு நிகரானவை என்றும் அறிவுறுத்துகின்றன. இன்னும் சிலர் நேத்திரம், ஜீவன் உள்ள நாட்களை மட்டுமே முகூர்த்த நாட்களாக கணக்கில் கொள்ள வேண்டும் என்று சொல்வர். அவரவர் குடும்ப ஜோதிடர்களை ஆலோசித்து முகூர்த்தங்களை வைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

* மனிதனுக்காக சர்வமும் படைத்த இறைவன் துன்பம் இல்லாத பெருவாழ்வு தர மறுப்பதேன்?
- டி.என்.ரங்கநாதன், திருவானைக்காவல்.

‘சர்வமும்’ என்ற வார்த்தைக்குள் துன்பமும் அடக்கம்தானே. இரவு-பகல், இருட்டு-வெளிச்சம், வெயில்-நிழல், வெப்பம்-குளிர், துன்பம்-இன்பம் என அத்தனையையும் தருவது இறைவனே. ஒன்று இருந்தால்தான் மற்றொன்றின் மதிப்பு புரியும். துன்பம் என்ற ஒன்று இல்லாவிடில் இன்பம் என்ற வார்த்தை எவ்வாறு உருவாகியிருக்கும்? காரணமின்றி இறைவன் எதையும் செய்வதில்லை. வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் நாம் அடைய உள்ள இன்பத்திற்கான பாதையே. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் பெருவாழ்வு என்ற வார்த்தைக்கான பொருளும் விளங்கும்.

* குரு பகவானையும், தக்ஷிணாமூர்த்தியையும் ஒன்றாக நினைத்துக் குழம்பும் பக்தர்கள் தெளிவு பெற ஒரு வழி சொல்லுங்களேன்.
- அ.குப்புசாமி, திருவண்ணாமலை.

வியாழ பகவானுக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள எளிதாக ஒரு வழி இருக்கிறது. தக்ஷிணாமூர்த்தியின் சந்நதி சிவாலயத்தில் உள்ள மூலஸ்தானத்தின் சுற்றுச்சுவரில்தான் அமைக்கப்பட்டிருக்கும். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தி சந்நதிக்கு நேர் எதிரே பிராகாரத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு வடக்கு முகமாக ப்ருஹஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவானின் சிலையை அனைத்து ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யலாம்.

அவ்வாறு ஞானகுருவாம் தக்ஷிணாமூர்த்தியின் சந்நதிக்கு நேரெதிரே வியாழ பகவானை பிரதிஷ்டை செய்யும்போது அவருக்குரிய வடக்கு திசை நோக்கி அவர் வீற்றிருப்பதும் மாறாது, அதே நேரத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தியின் பார்வையும் வியாழ பகவானின் மீது சதா விழுந்துகொண்டே இருக்கும். சதா இறைவனின் பார்வையிலேயே அமர்ந்திருக்கும் வியாழ பகவானும் முழுமையான சக்தியோடு பக்தர்களின் கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றி வைக்க இயலும்.

கொண்டைக்கடலை மாலைகளையும், மஞ்சள் ஆடையையும் வியாழ பகவானுக்கு அணிவிப்பதோடு, தக்ஷிணாமூர்த்திக்கு வெண்ணிற ஆடையை அணிவித்து அவரையும் சர்வ அலங்காரத்தோடு வழிபட இயலும். வியாழக்கிழமைகளில் செய்யப்படும் சிறப்பு பூஜைகளும், பரிகாரங்களும் நேரெதிரே அமைந்திருக்கும் இரண்டு சந்நதிகளிலும் நடைபெறும்போது பக்தர்களுக்கும் ஆனந்தம் பெருகும்.

ஒன்றாக தீபாராதனை நடைபெறும்போது பக்தர்கள் அளவிலா பரவசம் அடைவர். இரண்டு சந்நதிகளுக்கு இடையே நின்று பக்தர்கள் தரிசனம் செய்யும்போது ஒரே நேரத்தில் ஆதிகுரு, தேவகுரு இருவரின் அருளையும் பெற இயலும். வியாழ பகவானுக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் இடையே உள்ள குழப்பமும் தீரும். ஆலய நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் இதற்கான ஏற்பாட்டினை செய்து குருபகவானின் அருட்பார்வையை பக்தர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா