நாகதோஷங்கள் நீக்கியருளும் பாம்பணையப்பன்



- திருவண்வண்டூர்

நாரதருக்கு, மொத்தம் 25000 கிரந்தங்களில் இறைவனை பூஜிக்கும் முறை, துதி முதலானவற்றை பாம்பணையப்பன் பெருமாளே உபதேசித்திருக்கிறார்! இந்த கிரந்தங்களின் தொகுதி ‘நாரத புராணம்’ என்று தலைப்பு பெற்றது. இப்படி பெருமாளிடமிருந்தே நாரதர் தத்வ ஞானம் பெற்றதற்கு மூலகாரணம், அவர் தன் தந்தை பிரம்மனிடம் கொண்ட விவாதமும், கோபமும்தான்!

சாதாரணமாகத்தான் இருவருக்கிடையேயும் பேச்சு தொடங்கியது. இப்போதைய மனித இயல்பான தந்தை மகன் கருத்து வேற்றுமை அப்போதே இருந்திருக்கிறது! மகன் பேச்சால் கோபமுற்ற பிரம்மன், மகன் என்றும் பாராமல் சபித்துவிட்டார். தேவலோகத்திலிருந்து விலகி, சிலகாலம் பூலோகத்தில் அவர் வாழவேண்டும் என்பதுதான் அந்த சாபம். பொதுவாகவே மகன் மீதான தந்தையாரின் சாபம், அப்போதைய தற்காலிகக் கோபத்தால் எழுவதல்ல; அதிலும் அவனுடைய எதிர்கால நன்மை அடங்கியே இருக்கும்.

முக்கியமாக அவனுடைய நல்வாழ்வுக்கான திருப்புமுனையாகத்தான் அந்தக் கோபம் அமையும். அதுபோலவே, மகன் நாரதன், ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து தத்வஞானம் பெறுவதற்காகவே பிரம்மனின் சாபம் வழி செய்தது! தந்தையாருடன் பிணக்கு கொண்ட நாரதர், பூமியில் சிலகாலம் சஞ்சாரம் செய்தார். அந்தப் பயணத்தில், அவர் திருவண்வண்டூர் திருத்தலத்துக்கு வந்தார். இந்த இடத்தில் காலடி எடுத்து வைத்ததுமே, அவரறியாமல் மனம் பேரானந்தத்தில் திளைத்தது.

உடனே, அங்கேயே திருமாலை நோக்கி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். அவரது நீண்ட தவம் கண்டு மெச்சிய பரந்தாமன், அவர்முன் தரிசனம் தந்தார். பிரம்மன் அவர்மீது கோபம் கொண்டதை அறிந்தார். அந்தக் கோபமும் நாரதரை மேலும் நல்வழிப்படுத்தவே என்பதையும் உணர்ந்தார். அதனால், நாரதருக்கு தத்வ ஞானத்தை அளித்தார். அதன்படி, அங்கேயே நாரதர் புராணத்தை எழுதி முடித்தார் நாரதர். வண்ணமயமான அழகிய வளைவு நம்மை அன்புடன் வரவேற்கிறது. வளைவின் வலது மேல் பக்கத்தில் ‘திருவண்வண்டூர் மஹாவிஷ்ணு கோயில்’ என்று தமிழில் இந்த திவ்யதேசத்தின் பெயர் எழுதியிருப்பதைப் பார்க்கப் பெருமையாகவே இருக்கிறது.

வளைவுக்குத் தலைவணங்கி உள்ளே சென்றால் அழகிய சிற்ப கோபுரம் மிளிர்கிறது. காளிங்க நர்த்தன கிருஷ்ணன் உச்சியில் ஒற்றைக் காலில் நடனமாட, அவனுக்குக் கீழே பாகவதக் கதைகளும், தசாவதார சிற்பங்களும் அந்த கோபுரத்துக்கு மேலும் எழிலூட்டுகின்றன. கோபுரத்தையும் கடந்து உள்ளே சென்றால், இடப்புறம் பெரிய அன்னதான மண்டபத்தைக் காணலாம். இங்கே தினமும் மதிய வேளையில் அன்னதானம் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணன் தனிச் சந்நதியில் அழகாக கொலுவிருக்கிறார். கையில் வெண்ணெயுடன் காட்சி தரும் இந்த பாலகிருஷ்ணனை, நவநீத கிருஷ்ணன் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த சந்நதி அமைந்திருக்கும் மண்டபத்தில், மேலே சிறு சிறு தொட்டில்களும், மணிகளும் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மழலைப்பேறு வேண்டிக்கொண்ட பக்தர்கள், அந்தப்பேறு கிட்டியமைக்காக செலுத்திய நன்றி காணிக்கைகளாகும்.

முன்மண்டபத்தில் துலாபாரம் அமைந்திருக்கிறது. பிரார்த்தனை செய்து கொண்டவர்கள், அது நிறைவேறிய மகிழ்ச்சியை எடைக்கு எடை நேந்திரம் பழம் அல்லது அவரவர் வேண்டிக் கொண்டபடி ஏதேனும் பொருளை காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அதற்கு எதிரே ஹோம குண்டம் காணப்படுகிறது. ஒரு உயரமான பீடத்தில் நாக நாராயணன், நாகராஜன், நாக ராஜேஸ்வரி ஆகியோர் சிலைகளாக அருள் பாலிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய மஞ்சள் பூசி, பக்தர்கள் தம் பக்தியைத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சகர், அவர்கள் சார்பில் அர்ச்சனை செய்து, மஞ்சள் பொடியையே பிரசாதமாக தருகிறார். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரார்த்தனை மூலம் தோஷம் நீங்கப்பெற்று திருமணம் நடந்தேறப் பெறுகிறார்கள்; பிள்ளைப் பேறு அடைகிறார்கள்.

வெளிப்பிராகாரத்தில் கணபதிக்கென்று சிறுகோயில் நிறுவப்பட்டுள்ளது. அடுத்து கோசாலை கிருஷ்ணர். இந்த விக்ரகம், இத்தல தீர்த்தத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். ஒரு சிறு கிணறாக, கோயிலுக்குப் பின்னால் விளங்குகிறது இந்தத் தீர்த்தம். அருகில் பிரமாண்டமான அரசமரம் நிழல் தந்து குளிர்விக்கிறது; பிராணவாயு தந்து உயிருக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது. சற்றுத் தொலைவில் சாஸ்தா சந்நதி.

மூலவர் சந்நதி மேற்கு நோக்கியிருக்கிறது. பாம்பணையப்பன் என்று போற்றப்படும் இந்தப் பெருமாள், கேரள சம்பிரதாயப்படியே சிறு உருவில், பளபளவென்று ஜொலிக்கிறார். சங்கு, சக்ர கதாபாணியாகத் திகழ்கிறார். பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான நகுலனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் இவர். ஆதிசேஷனின் அரவணைப்புடன் அருள்பாலிப்பவர் என்பதால் இப்பெயர் என்கிறார்கள்.
மூலவர் பாம்பணையப்பனைத் தவிர, இங்கே சந்நதி கொண்டிருக்கும் பிற விக்ரகங்கள் எல்லாமே கோயிலைப் புனரமைக்க முயற்சித்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தவை என்கிறார்கள். இப்படி ஆலயத்தை முதன் முறையாகப் புதுப்பித்தவன் என்ற பெருமை பஞ்சபாண்டவ நகுலனையே சாரும்.

அதனாலேயே இத்தலத்தை நகுல பிரதிஷ்டை என்றும் நகுலன் அம்பலம் என்றும் போற்றுகிறார்கள். நம்மாழ்வாரால் மட்டும் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது. திருமங்கையாழ்வார் சில திவ்யதேசங்களைப் பாடும்போது தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக்கொண்டு, தாயாய், தோழியாய், காதலியாய் அந்தந்தப் பெருமாளை உருகிப் பாடியதுபோல, நம்மாழ்வாரும் தன்னைப் பராங்குச நாயகியாக உருவகித்துக்கொண்டு, இந்தப் பாம்பணையானைப் பாடிப் பரவசமுறுகிறார்.

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்
விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண் வண்டூர்
கடலின் மேனிப் பிரன் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே
- என்பது அவரது பாடல்களில் ஒன்று.

‘‘எப்போதும் இணைபிரியாது, இன்பமெனும் கடலில் நீந்தி மனமகிழும் அன்னப் பறவைகளே, எனக்காக தூது செல்வீர்களா? எப்போதும் வேதங்கள் முழங்கிக்கொண்டிருக்கும் திருவண் வண்டூர் என்ற குளிர்ச்சி மிகுந்த தேசத்துக்கு எனக்காகச் செல்லுங்கள்.  அங்கே கடல்நிற வண்ணத்தில், மிகுந்த எழிலுடன் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைக் காணுங்கள். ‘பரந்தாமா, எங்கள் இருவரைப் போலவே என்றும் இணைபிரியாது, தங்களை விட்டு நீங்காதிருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள், அவளுடைய தாபத்தைத் தீர்த்து வைக்க மாட்டாயா?’ என்று எனக்காகக் கேளுங்கள்’’ என்று நாயகி அன்னங்களை தூது விடுவதாக அமைந்திருக்கிறது இப்பாடல்.

அத்தனைப் பேரழகன் இந்த பாம்பணையப்பன்! திருச்செங்குன்றூர்-கோட்டயம் மார்க்கத்தில், மழுக்கூரை அடுத்த 2 கி.மீ தொலைவில், திருவண்வண்டூர் திவ்யதேசத்தை தரிசிக்கலாம். கோயில் தொடர்புக்கு: தொலைபேசி எண். 9446193002.