மங்கல மேன்மையருளும் மாயப்பிரான்- திருப்புலியூர்

பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனால் புனருத்தாரணம் செய்யப்பட்ட கோயில் திருப்புலியூர். இருபத்தோரு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டும். இடது பக்கத்தில் பெரியதொரு கதை சிற்பத்தைக் காணலாம். பீமனால் புனருத்தாரணம் செய்யப்பட்டதன் நினைவாகவே அவனது கதை அங்கே சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

பீமனைப் போலவே, அழகாக பருத்து உயர்ந்த தூண்கள் கொண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. பிராகாரச் சுற்றில் ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் இன்னொரு சந்நதியில் சிவபெருமான், லிங்க ரூபமாக. அருகே ஒரு பலா மரம். அதனடியில் ஆதிசேஷ மஹாவிஷ்ணுவையும், வித்தியாசமாக ஆதிசேஷன் குடைபிடிக்க சிவனையும் தரிசிக்கலாம். சற்றுத் தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின் அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். பக்கத்தில் மிகப் பெரிய அன்னதானக் கூடம்.

இன்னும் கொஞ்சம் நடை பயின்றால், சற்றே பெரியதொரு சந்நதியில் நெற்றிக்கண், கண்கள், மூக்கு பதிக்கப்பட்ட முகத் தோற்றத்துடன் ஒரு லிங்கம் அருள்பாலிக்கிறது. இந்த சந்நதியை இடமாகச் சுற்றிச் சென்று கோமுகியை அடைந்து பிறகு திரும்பி வந்து சந்நதி முன் நின்று ஈசனை வணங்குகிறார்கள். வலம் வருவதில்லை. மூலக்கருவறை மண்டபத்திற்குள் நுழைய மிகச் சிறிய வழி கொண்டு ஒரு தடுப்பு இருக்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே முதலில் ஒரு காலும், அடுத்து இன்னொரு காலுமாக நுழைத்து உள்ளே செல்ல வேண்டும்.

‘ஆடு, மாடுகள் கோயிலுக்குள் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு’ என்றார்கள். கருவறைச் சுற்றில் மிகச் சிறிய சந்நதியில் பகவதியை தரிசிக்கலாம். அடுத்து சிறு அளவில் யாகசாலை. கருவறை, வட்டவடிவமாக, கேரள பாரம்பரியத்தை விளக்குகிறது. இதன் நான்கு ஆரங்களில் நான்கு சாளரங்கள். ஆனால், அவை எப்போதும் சாத்தியே இருக்கும் என்கிறார்கள். நான்கு திக்குகளிலிருந்தும் வெளியேயிருந்து வரும் பக்தர்கள் கருவறைப் பகுதியை அடைய முடிகிறது.

அபிஷேக பொருட்கள் வெளியேறும் கோமுகி வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது. தென்னாட்டில் இருப்பது போன்ற ஒரு பசுவின் முகமாக இது இல்லாமல், உள்ளிருந்து வரும் சிறு கால்வாய் அமைப்பு, சிற்ப வடிவான ஒரு தேவியின் தலைமீது வந்து முடிகிறது. இதிலிருந்து வரும் அபிஷேக தீர்த்தத்தை பக்தர்கள் கையில் ஏந்தி தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிலர் அந்த தேவியின் காதருகே போய் தம் வேண்டுகோளை ரகசியமாகச் சொல்லிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது - தமிழ்நாட்டில் சிலர் நந்தி காதில் வேண்டுகோள் விடுப்பதுபோல!

மூலவர் மாயப்பிரான் சிறு உருவினரானாலும் ஒளிமிகுந்து காணப்படுகிறார். எண்ணெய் தீபத்திலும் அழகுறப் பிரகாசிக்கும் அவர் பக்தர்களின் வாழ்க்கை மாயங்களை விலக்கி, மங்களங்களை அருளும் மாயப்பிரான். அந்தச் சிறு கருவறையிலிருந்து அவர் தீட்சண்யமாக நோக்கி நம் மனவிகாரங்களைப் போக்குவதும் புரிகிறது.

3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள். இங்கே மாயப்பிரானாகத் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டதற்கு கீழே காணும் புராண சம்பவத்தைக் காரணமாகச் சொல்கிறார்கள்:

புரவலன் வழங்கும் பரிசில்கள் புலவர்களை வேண்டுமானால் ஈர்க்கலாம்; ஆனால், முற்றும் துறந்த முனிவர்களை ஈர்க்காது என்பதற்கு திருப்புலியூர் திருத்தலம் ஓர் உதாரணமாகத் திகழ்ந்தது. மன்னன் சிபியின் புதல்வன் வ்ருஷாதர்பி. மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தலையில் கனம் ஏற்றிக்கொண்டு அறம் பிறழ்ந்து வாழ்ந்து வந்தான். இவனுக்குப் பாடம் புகட்ட விரும்பினார் பரந்தாமன். ஒரு காலகட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் கொடிய பஞ்சம் தலைவிரித்தாட, திகைத்து நின்றான் மன்னன்.

ஆனால், அப்போதும் தாகத்தைத் தணிக்க, பசியைப் போக்க தனக்கு நீரும், உணவும்தான் வேண்டும்; வெறும் பொன்னும் பொருளும் தாகத்தையோ, பசியையோ தீர்க்காது என்று புரிந்து கொள்ளவில்லை அவன். அச்சமயம் தன் நாட்டிற்கு சப்த ரிஷிகள் வருகை தந்திருப்பதை அறிந்த அவன், அவர்களிடம், தன் நாட்டின் வறுமையை அவர்கள் ஒழித்தார்களென்றால், அவர்களுக்குப் பெருஞ்செல்வத்தை வாரி வழங்குவதாகத் தெரிவித்தான்.

ஆனால், அவனை அலட்சியமாகப் பார்த்த ரிஷிகள், தாங்கள் யாரிடமும் யாசகம் பெற விரும்பியதில்லை; அதனால் யாரும் தானம் தருவதைத் தங்களால் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதோடு தாங்கள் செல்வமிகுந்த வாழ்க்கைக்கு மிகவும் அப்பாற்பட்டவர்கள், தங்களை செல்வத்தால் அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் கோபித்துச் சொன்னார்கள்.

அவர்களால் தன் நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் போக்க முடியும் என்று உறுதியாக நம்பிய மன்னன், அவர்களை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டுவர குறுக்கு வழியில் சிந்தித்தான். அவர்களுக்கு சில கனிகளை அனுப்பி வைத்தான். அவற்றினூடே சில தங்கக் கட்டிகளையும் சேர்த்து, மறைத்து வைத்தான். ஆனால், அவர்களோ தானம் என்ற பெயரில் வழங்கப்படும் எந்தப் பொருளையும் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதனால் அந்தக் கூடைப் பழங்களையும் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

அதோடு, ‘‘இப்படி எங்களுக்கு தானமளித்து, எங்கள் தவ ஆற்றலால் உன்னுடைய பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்று விரும்புவதைவிட, நீயே நேரடியாக இறைவனிடம் இறைஞ்சினால், அவர் உன் மீது இரக்கம் கொண்டு, அருள் பொழியக்கூடுமே!’’ என்று அறிவுரையும் சொன்னார்கள். இதைக் கேட்டு வெகுண்டான், வ்ருஷாதர்பி. செல்வத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற அவனது இறுமாப்பில் விழுந்த சாட்டையடி அவன் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது.

ஆனாலும், கொஞ்சமும் தன் மனதை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை. மேன்மேலும் கோபமும், அவமான பாதிப்பும் அதிகரிக்க, உடனே ஒரு தீய யாகத்தைச் செய்தான். அதில் தோன்றிய ஒரு துர்தேவதையை அந்த முனிவர்கள் மீது ஏவினான். அந்த மூடனின் அறியாமையால் வெகுண்ட சப்த ரிஷிகள், இறைவனை சரணடையச் சொன்னால், துர்தேவதையை உருவாக்கியதோடு அதைத் தங்கள் மீதே ஏவுகிறானே என்றெல்லாம் வேதனை அடைந்தார்கள். உடனே பரந்தாமனை நோக்கி ஆழ்ந்த தியானம் செய்தார்கள்.

இவர்களது நிலையை அறிந்த பரம்பொருள், உடனே இந்திரனிடம், அந்த ரிஷிகளை அவர்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து காக்குமாறு உத்தரவிட்டார். இந்திரனும் புலியாக உருமாறி, துர்தேவதையைச் சிதைத்து வதைத்தான். வ்ருஷாதர்பி திகைத்து நின்றான். அவனிடம், ரிஷிகள், ‘‘செல்வம் எல்லாவற்றையும் கொடுத்துவிடாது என்பதைப் புரிந்துகொள். இணையற்ற செல்வமான மன் நாராயணனை நீ தியானித்திருந்தால், உன் நாட்டில் பஞ்சமே வந்திருக்காது.

அப்படி வந்துவிட்ட பின்னும் இறையருளை உணராது, வீம்பு பிடிவாதத்தால் எங்களையும் விலைக்கு வாங்க நினைத்த உன் ஆணவப் போக்கை மாற்றிக்கொள்’’  என்று அறிவுறுத்தினார்கள். அதேசமயம் அவர்கள் முன் காட்சி தந்தார் மன் நாராயணன். தமக்கு தரிசனம் அளித்த அந்தப் பரம்பொருளை ‘மாயப்பிரான்’ என்றழைத்துப் போற்றினார்கள்.

கூடவே, அறியாது பிழை செய்த இந்த மன்னவனை மன்னித்துவிடுமாறும் கேட்டுக்கொண்டார்கள். அவன் நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கி சுபிட்சம் உண்டாக்குமாறும் சிபாரிசு செய்தார்கள். வ்ருஷாதர்பி தன் தவறை உணர்ந்தான். அப்படியே அவர்கள் முன் தண்டனிட்ட அவன், அந்தப் பரம்பொருள் அங்கேயே கோயில் கொண்டு தன்னையும், தன் நாட்டையும் பரிபாலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். ரிஷிகளும் அதை ஆமோதிக்க, மாயப்பிரான் அவ்வாறே அங்கே அர்ச்சாவதாரம் கொண்டார்.

நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம் இது. இவர்களில் நம்மாழ்வாரின் பங்கு - 11 பாசுரங்கள்! இந்தத் திருத்தலத்தைதான் நம்மாழ்வார் எப்படி பிரமித்துப் பாராட்டுகிறார்! ‘திடவுசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தன் திருப்புலியூர், குன்ற மாமணி மாட மாளிகை, சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்.... ’ அமரர் நாடான தேவலோகத்தையே மறைக்கும் அளவு பிரமாண்டமான மாடமாளிகைகள் கொண்டிருந்தது திருப்புலியூர்!

இப்பதி எத்தகைய வளங்களைக் கொண்டிருந்ததாம்? ஊர்வளம் கிளர் சோலையும், கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து ஏர்வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் சீர்வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்  தேவபிரான் பேர்வளம் கிளர்ந்து அன்றிப் பேச்சு இலள்  இன்றிப் புனை இழையே - சோலைகள் பெருகி, கரும்பு, செந்நெல் பயிர் அபிரிமிதத்தால் வளம் கொழிக்கும் ஊர் இந்தக் குட்டநாடு (எனும் திருப்புலியூர்).

இந்த திவ்ய தேசத்தில் கல்யாண குணங்கள் அதிகம். மூன்று உலகங்களையும் பிரளய காலத்தில் உட்கொண்டு, படைப்புக் காலத்தில் வெளியிட்ட எம்பெருமானின் திருப்பெயர்களை அல்லாது வேறு பேச்சு இங்கே பேச மனம் வருமோ? திருச்செங்குன்றூர்-மாவலிக்காரா பாதையில், ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத் தலம். திருப்புலியூர் என்று கேட்டுச் செல்வதைவிட, குட்டநாடு என்று விசாரித்தால் விரைவில் வழி கிடைக்கும்.

கோயில் தொடர்புக்கு: தொலைபேசி எண். 9447800291.

தொகுப்பு: பிரபுசங்கர்